நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும், மதச்சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்துவரும் கேடுகளுக்கும், தொல்லைகளுக்கும் அளவேயில்லை.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கிச்சீரழிந்து periyar_330சுயமரியாதை, மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற நாம் பிரயத்தனப் படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா இருந்தோமேயானால் நம் கதி யென்னவாகும்? அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோயிலுக்குள் நீ வரவேகூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள்.

தெலுங்கில் ஒரு பழமொழியுண்டு. காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு என்பார்கள். அதன் அர்த்தம் 10க்கு அடிபோட்டால் 5 க்கு வருவான் என்பது; அது போல் கோவிலுக்குள் வரவேண்டாம் என்பதாகவே சொல்லி விட்டால் கும்பிட்டு விட்டாவது போய்விடுகிறேன் என்று சொல்ல வருவான்; இல்லாவிட்டால் சம உரிமை கேட்பான் என்று நினைத்து போகிறபட்சமெல்லாம் கதவைச் சாத்துகிறார்கள். கோவிலுக்குள் போக உரிமை கிடைத்தவருக்கு சுவாமி கும்பிட உரிமை உண்டா இல்லையா? சுவாமி கும்பிட உரிமையுள்ளவனுக்கு சுவாமிக்கு தேங்காய் பழம் உடைத்து வைக்க உரிமை உண்டா இல்லையா? இந்த உரிமைகளைக் கூட இப்பார்ப்பனர்கள் அபகரிப்பார்களேயானால் இவர்களை விட வெள்ளைக் காரர்கள் எந்த விதத்தில் கெட்டவர்கள்? நமது நாட்டுப் பார்ப்பனர்களை விட தென் ஆப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் ஆயிரமடங்கு யோக்கியர்கள் என்று சொல்லுவோம். இந்தப் பார்ப்பன ஆட்சியிலும், அடக்கு முறையிலும் இருப்பதைவிட அந்த வெள்ளையர்கள் ஆட்சியே மேலென்பதாகக்கூடச் சொல்லி விடலாம். வரவர இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு அக்கிரமங்கள் செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது நமது ரத்தம் கொதிக்கின்றது!

குலை நடுங்குகின்றது! பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக் காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள், இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு சாத்தவும் உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால், நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்? சுவாமியைத் தொட்டுக் கும்பிடுவதும் சுவாமி பக்கத்தில் போய் கும்பிடுவதும், பார்ப்பனரும் தாமும் சரி சமமாய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்கட்டும்; வெளியிலிருந்து தேங்காய் பழம் உடைத்து வைத்துக் கும்பிடுவதில் இந்தப் பார்ப்பனர்களுக்கிருக்கும் ஆட்சேபனை என்ன?

இது பார்ப்பனர்களின் எந்த வேதம், சாஸ்திரம் ஆகமங்களுக்கு விரோதம் என்று சொல்லக்கூடும்? கை வலுத்தவன் காரியமாயிருக்கிறதேயல்லாமல் இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நாம் தேங்காய் உடைப்பதால் கோவிலின் வரும்படி குறைவதா யிருந்தால் அவர்கள் கேட்பதைத் தரத் தயாராயிருக்கிறோம். பார்ப்பனர்களின் வரும்படி குறைந்துபோகும் என்று சொல்வதானாலும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கத் தயாராயிருக்கிறோம். மற்றபடி இவர்கள் ஆட்சேபிக்கக்காரணம் என்ன?

மதுரைக்கோவிலில் ஸ்ரீமான் இராமநாதனை உள்ளே வைத்தடைத்ததும் அவரைத் தேங்காய் உடைக்காமல் தடுத்ததும் எதைக் காட்டுகின்றன? திருவண்ணாமலைக் கோவிலில் ஸ்ரீமான் கண்ணப்பரையும் மற்றவர்களையும் உள்ளே விடாமல் கதவை மூடிய விஷயம் கோர்ட்டிலிருப்பதால் அது முடியட்டும், மற்றபடி மதுரை விஷயத்தைப்பற்றி நமக்கு ஏற்பட்ட அவமானம் பொறுக்கக் கூடியதல்ல. இதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் தென்காசி கோவிலிலும் தேவாரம் படித்த பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு அவமானம் என்பதாகக்கருதி அங்குள்ள பார்ப்பனர்கள் கோவிலைவிட்டு போய்விட்டதுமல்லாமல், சுவாமி எழுந்தருளும் போது கதவை மூடிக்கொண்டார்களாம். தேவாரம் படிக்கக் கேட்பதும் அதன் பிறகு பிரசாதம் வாங்குவதும் இந்தப் பார்ப்பனர்களுக்கு அவமானமாய்த் தோன்றினால் நம்மைத் தேங்காய் பழம் உடைத்து வைத்து சுவாமி கும்பிட வேண்டாம் என்றால் அது எவ்வளவு பெரிய இழிவு என்பதை அவர்களே சொல்லட்டும். ஒவ்வொரு அர்ச்சகனுக்கும் சுவாமி பூஜை செய்ய சம்பளம் உண்டு. அது கோவில் கட்டினவர்களே இத்தனை வேளை பூஜையென்றும் அதற்கு இன்ன சம்பளம் என்றும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மற்றவர்கள் செய்யும் பூசைக்கும் இவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அநேக இடங்களில் பக்தர்களே பூஜை செய்கிறது இன்னும் வழக்கமாகத்தான் இருக்கிறது.

பிள்ளையார், மாரியம்மன், காளியம்மன் மற்றும் ரதோற்சவ காலங்களில் ரதத்தில் சுவாமி இருக்கும்போதும், கோவிலிலும் பக்தர்கள் தாங்களே தேங்காய் பழம் உடைத்து பூசை செய்வதும் வழக்கமாகவே இருந்துவருகிறது. இதுவரையில் இவ்வித வழக்கத்தை யாவரும் ஆட்சேபித்ததே கிடையாது. இதை இப்படியே விட்டுவிட்டால் பம்பாயில் புரோகிதர் சட்டம் வந்ததுபோல் அதாவது பார்ப்பானுக்கு பணம் கொடுத்துத்தான் திதிசெய்ய வேண்டும் என்று சொன்னது இங்கும் ஆகிவிடுமென்றே சொல்லலாம். அங்காவது பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துவிட்டுத் தாங்களாகவே திதி செய்துகொள்வதில் ஆட்சேப மில்லை என்பதாக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இங்கு பார்ப்பானுக்கு பணம் கொடுத்தாலும் நாம் செய்து கொள்ள பாத்தியமில்லை என்கிற சட்டம் இருக்கிறதுபோல் இருக்கிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டு மதுரைத் தலைவர் ஸ்ரீமான் ஆ.கூ. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் மறு உத்தரவுவரை தேங்காய் உடைக்கக்கூடாது என்று பொது ஜனங்களுக்கு 144 உத்தரவு போட்டாரோ தெரிய வில்லை. ஒரு சமயம் இதனால் கலகம் உண்டாகுமென்று நினைத்து மறு உத்தரவு வரை யாரும் கோவிலுக்குப் போகாதீர்கள் என்று உத்தரவு போட்டிருந்தால் அது சுயமரியாதையைக் காப்பாற்றப்போட்ட உத்தரவாகும். அதில்லாமல் பார்ப்பனருக்குப் பயந்துகொண்டு போட்ட உத்தரவானது நமது சுயமரியாதையை பாதிக்கத்தக்கதென்றே சொல்லுவோம். இதனால் என்ன கலகம் எப்படி நடந்து விடக்கூடும். நாம் தேங்காய் உடைத்தால் மீனாட்சியம்மனும் சொக்கலிங்க சுவாமியும் கோவிலைவிட்டு ஓடிவிடுவார்களா? அல்லது உலகம் முழுகிப் போகுமா? அல்லது பாவமூட்டை ஏற்பட்டுவிடுமா? என்பது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லா மக்களுக்கும் சமத்துவ உரிமை வேண்டுமென்றும் யாவரும் கோவிலுக்குள் போய் சுவாமி தரிசிக்கும் உரிமை வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்குமிக்காலத்தில் ஏற்கெனவே உரிமையுள்ள காரியங்களையும் விட்டுக்கொடுப்பதானால் நாம் சம உரிமை அடைய யோக்கிய முடையவர்களா வோமா? தேங்காய் உடைப்பதால் என்னதான் ஏற்பட்டுவிடும்? பார்ப்பனர்கள் சர்க்காரிடம் போய்த்தான் 144 உத்தரவு வாங்கி வரட்டுமே அதையும் பார்த்துவிட்டிருக்க வேண்டுமே அல்லாமல் அதைத் தடுத்தது நமக்குத் திருப்தி யளிக்கவில்லை.

கலகம் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நாம் சொல்ல வரவில்லை. நாம் சரியென்று நமது மனப்பூர்வமாய் யோசித்து தீர்மானித்துச் செய்யும் காரியங்களுக்கு ஒரு சிறு தடை ஏற்பட்டால் உடனே பின்வாங்கிக் கொள்கிறதென்று ஆரம்பித்து விட்டால் எப்படி முன்னேற முடியும்? நமக்குப் பின்னால் யாராவது பிரயத்தனப்படுபவர்களுக்கு இது பெருத்த குந்தகமாய் வந்து முடியும் என்றுதான் பயப்படுகிறோம். ஒரு காரியத்துக்குப் போகக் கூடாது. சிரமம் என்று நினைத்து தலையிட்டு விட்டால் அதை சுலபத்தில் விட்டு விட்டு ஓடவும் கூடாது; ஆதலால், ஸ்ரீமான் முதலியார் அவர்கள் யோசித்து சீக்கிரத்தில் ஏதாவது ஒரு வசதி செய்யக் கோருகிறோம். இன்னும் மற்ற ஊர்களிலும் இவ்விதமான தடைகள் இல்லாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறோம்.

தந்தை பெரியார் “ குடிஅரசு” தலையங்கம் 13-02-1927

Pin It