SC, ST, OBC சாதிகளைத் தவிர்த்து, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% EWS இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு ஜனவரி 7 2019 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஜனவரி 8 2019 அன்று மக்களவையில் வெறும் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே எதிர்க்க, 323 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றியது.

ஜனவரி 9 அன்று மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்த இந்த 10% EWS இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்துப் பேச, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கட்சி என்ற அறியப்பட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி, மாநிலங்களவை உறுப்பினரான பிறப்பால் பார்ப்பனராகிய மனோஜ் ஜா உயர் ஜாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேச தேர்ந்தெடுத்தது. கட்சியின் கொள்கை முடிவை ஏற்றுக் கொண்ட எம்.பி மனோஜ் 10% EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு எழுச்சிமிக்க உரையை நிகழ்த்தினார். இருப்பினும்165 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவாகவும், வெறும் 7 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்து இந்த மசோதா நிறைவேற்றியது.

அதன் பின்னர், பீகார் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும், மனோஜ் சார்ந்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவருமானதேஜஸ்வி யாதவ், 90 விழுக்காடு அரசு வேலைவாய்ப்புகளை இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பீஹார் மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஒரு இணையவழி கருத்தரங்கில் பேசிய முன்னாள் உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அரசு வேலைகளை ஜாதிவாரி அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு குறித்து Delhi School of Social Workல் பேராசிரியராக இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான மனோஜின் நேர்காணல் இங்கே நமது பார்வைக்கு

கேள்வி: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் 90 விழுக்காடாக இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று பீகார் மாநிலம் முழுவதும் சுற்று பயணம் செய்கிறார். அப்போது மீதி 10% யாருக்கு?

மனோஜ்: பகுஜன் மக்கள் (SC, ST, OBC) தான் 90% இருக்கிறார்கள் என்பதால் தேஜஸ்வி அப்படி கூறுகிறார். பகுஜன் என்பது பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களை குறிக்கும் சொல். அதனால் தான் 90% உயர்த்த வேண்டும் என்று கூறுகிறார். நரேந்திர மோடி 10 விழுக்காடு இடங்களை பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்டார்.

கேள்வி: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது உயர் ஜாதியினரையா?

மனோஜ்: ஏற்கனவே இருக்கும் (SC, ST, OBC) இட ஒதுக்கீட்டில் வராதவர்கள் அவர்கள். அவர்களை ஜாதி ஹிந்துக்கள் என்று பொதுவாக குறிப்பிடப் படுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் நிர்ணையித்த 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு, இந்த 10% EWS இட ஒதுக்கீட்டால் 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த கணக்கெடுப்பும் நடத்தாமல் உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அள்ளிக் கொடுத்த மோடி, முதலில் பகுஜன் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களிடன் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

கேள்வி: OBC மக்கள் தொகை எவ்வளவு? நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 52 விழுக்காடு இருப்பதாக குறிப்பிட்ட பிபி மண்டல், அவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தார்.

மனோஜ்: 1931 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கடைசி ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 52% இருப்பதாக மண்டல் கணக்கிட்டார். 2011 ஆம் ஆண்டில் சமூக-பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் தகவல்களை மட்டும் வெளியிடவில்லை. இந்திய மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டவர்கள் 68% இருப்பார்கள் என்றே நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.manoj jhaகேள்வி: இந்த 68 விழுக்காட்டில் OBC இட ஒதுக்கீட்டில் வராத படேல் , ஜாட் , மராத்தாக்கள் வருவார்களா?

மனோஜ்: ஆம், வருவார்கள். உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை நான் ஆய்வு செய்திருக்கிறேன். தகுந்த ஆய்வோ, கணக்கெடுப்போ இல்லாமல் உலகத்தில் எங்குமே இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதில்லை. நாங்கள் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியை, நிச்சயமாக உச்ச நீதிமன்றம் மோடி அரசிடம் கேட்கும் என்று நம்புகிறேன்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுகான 10% இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? அது மட்டுமில்லாமல் வருடத்திற்கு 8 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களையும், 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்களையும் இந்த 10% EWS இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஆதாரம் என்ன? அதனால் தான் சொல்கிறேன் 10% EWS இட ஒதுக்கீடு என்பது பகல் கொள்ளை.

கேள்வி: 90% இட ஒதுக்கீட்டால் பொதுப் பிரிவு அடிபட்டு போகுமே. இந்தியாவைப் போன்ற தாராளவாத ஜனநாயக நாட்டிற்கு இது நல்லதா?

மனோஜ்: நம்மை போன்ற சமமற்ற சமூகத்தில், கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து சமத்துவத்தை பற்றியும் பொதுப்பிரிவு பற்றியும் பேசுவதால், சமமின்மையே நீடித்து நிலைத்து நிற்கும்.

கேள்வி: நிச்சயமாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கக்கூடாது. ஆனால் போட்டி போடுவதற்கான வாய்ப்பு வேண்டுமல்லவா? 50% இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழும் 50% இடங்கள் பொதுப் பிரிவாகவும் இருந்தால் சமமாக இருக்குமல்லவா?

மனோஜ்: இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு நம் மண்ணில் எந்த ஒரு மோசமான விளைவையும் ஏற்படுத்தவில்லை.ஏனென்றால் இதுவரை மற்ற ஜாதியினரை வேறு எங்கும் அனுமதிக்காத வகையில் உயர்ஜாதி ஹிந்துக்களே ஆக்ரமித்து இருக்கிறார்கள். உயர்சாதி இந்துக்கள் விளிம்பு நிலை மக்கள் மீது மிகுந்த பாரபட்சத்தை காட்டுகிறார்கள். அப்படி பாரபட்சம் காட்டுவதே அவர்களின் சித்தாந்தமாக ஆகிவிட்டது. நிறைய அரசுத் துறைகளில் நான்கில் மூன்று பங்கு இட ஒதுக்கீட்டு பிரிவு இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்று அரசு புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

என்னை கேட்டால் , 90% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கு முன்பு காலி இடங்களை நிரப்பும் முறையை முதலில் மாற்ற வேண்டும் என்று சொல்லுவேன்.

கேள்வி: என்ன சொல்ல வருகிறீர்கள்? விளக்க இயலுமா?

மனோஜ்: உதாரணத்திற்கு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் காலி இடங்களை நிரப்ப ரோஸ்டர் (13-point roster system) முறையை கொண்டு வந்தார்கள். அதை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த முறைப்படி, ஒரு காலியிடம் இருந்தால் அதை முதலில் பொதுப்பிரிவிற்கும், இரண்டாம், மூன்றாம் பணியிடங்களும் பொதுப் பிரிவிற்கும், நான்காம் காலி இடம் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், ஐந்து ஆறாம் இடம் மீண்டும் பொதுப் பிரிவிற்கும், ஏழாம் இடம் பட்டியலினத்தவருக்கும் எட்டாம் இடம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கும், ஒன்பதாம் இடம் பொதுப் பிரிவிற்கும், பத்தாம் இடம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும், பதினோராவது இடம் பொதுப் பிரிவிற்கும், பன்னிரெண்டாம் இடம் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் தரப்பட வேண்டும்.

இதெல்லாம் முடிந்து தான் பழங்குடியினருக்கான வாய்ப்பு வருகிறது. பல்கலைக்கழகங்களின் எந்த பிரிவுகளிலும் 10-12 இடங்களுக்கு மேல் இல்லை. இந்த முறைப்படி, ஒரு பழங்குடி தனக்கு வாய்ப்பு வர 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

கேள்வி: ஆகவே முதல் காலியிடம் பழங்குடி பிரிவினரால் நிரப்பப்பட வேண்டும் என்று கூறுகிறீர்களா?

மனோஜ்: ஆம். காலியிடங்களை நிரப்பும் போது, பொதுப் பிரிவிற்கு இடம் ஒதுக்குவதற்கு முன் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு தான் முதலில் இடம் கொடுக்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பதையே நாம் பிச்சையாக தான் பார்க்கிறோம். அது முறையற்றது. அரசியலமைப்பு இட ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. அது ஒரு அடிப்படை உரிமை. இட ஒதுக்கீடு அரசு மக்களுக்கு இடும் பிச்சை அல்ல. அது அவர்களின் உரிமை.

இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பத்தின் காரணமாக பகுஜன் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக அவர்கள் தான் எதையும் முடிவு செய்பவர்களாக இருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள். அதனால் தான் தேஜஸ்வி யாதவ் 90% இட ஒதுக்கீடு நமக்கு, அதாவது பகுஜன் மக்களுக்கு தரப்பட வேண்டும் என்கிறார்.

கேள்வி: தேஜஷ்வி யாதவின் 90% இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு மக்களிடம் இருந்து என்ன பதில் கிடைத்தது?

மனோஜ்: ஊடகங்கள் தேஜஸ்வி யாதவின் பிரச்சாரத்தை மறைத்தாலும் மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு மாநிலங்கள் அவையில் 10% EWS இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்த்த போது எங்களுடன் நட்பில் இருக்கும் கட்சிகள் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் என்னிடம் வந்து, இந்த EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றார்கள்.

கேள்வி: 10% EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று ஏன் கூறுகிறீர்கள்?

மனோஜ்: சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு தான் இட ஒதுக்கீடு என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. எனவே அவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் சட்டப்பூர்வமாக ஏற்புடையதல்ல.

கேள்வி: ஆனால் 10% EWS இட ஒதுக்கீடை ஆதரிப்பவர்கள் ஏழ்மையில் இருப்பவர்களும் சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின் தங்கி இருக்கிறார்கள் தான் என்கிறார்களே?

மனோஜ்: அதில் உண்மை இல்லை. நான் மனோஜ் ஜா. பிறப்பால் பார்ப்பனர். நான் ஏழையாக இருக்கலாம். ஆனால் என் ஏழ்மை என்பது நான் பிறந்த ஜாதியினால் வந்ததல்ல. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல. அதற்கான தீர்வு உதவித்தொகை போன்ற மற்ற வழிமுறைகள் தான்.

கேள்வி: தேஜஸ்வி யாதவின் 90% இட ஒதுக்கீட்டு கோரிக்கை மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறீர்கள். தற்பொழுது (2019) பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் மோடியும் பிஹாரில் கூட்டணி வைத்திருப்பது பகுஜன் வாக்குகளை சிதறடிக்குமே? ஏனென்றால் அவர்கள் இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் தானே.

மனோஜ்: மோடி எப்போது வேண்டுமானாலும் எதை வேணும்னாலும் கண்டுபிடிப்பார். அவர் 15 ஆண்டுகளாக குஜராத் முதலமைச்சராக இருந்த வரை அவர் என்ன ஜாதி என்று யாருக்கும் தெரியவில்லை. 2014 தேர்தலில் திடீரென்று மோடி பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என்று நமக்கு சொல்லப்பட்டது. அதுதான் மோடியின் ஸ்டைல். தேர்தலின் போது அவர் எதுவாக வேண்டுமானாலும் மாறுவார். எதையும் கண்டுபிடிக்கும் தேர்தல் நேர விஞ்ஞானியாக மாறி புதிது புதிதாக கண்டுபிடிப்பார்.

10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாங்கள் முடிவெடுத்த போது தேர்தல் வெற்றி தோல்விகளை பற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. அதை பற்றி தேஜஸ்வி யாதவ் பல முறை விளக்கிப் பேசியுள்ளார். உதாரணத்திற்கு டெல்லி அரசியலமைப்பு சங்கத்தில் (Constitution Club) பேசிய தேஜஸ்வி யாதவ், எங்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்காத அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம் என்று கூறினார்.

கேள்வி: ஆனால் நிதிஷ் குமார் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர் தானே?

மனோஜ்: நிதிஷ் குமார் குழம்பி போய் இருக்கிறார். 10% EWS இட ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வந்த போது மிக உற்சாகமடைந்தார். நாங்கள் அதற்கு எதிரான நிலைப்பாடு எடுத்த போது அச்சமடைய துவங்கினார். உடனே ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து, 50% உச்சவரம்பு உடைபட்டு போவதால் ஜாதிவாரி அடிப்படையில் வேலை வாய்ப்புகளைத் பிரித்து தரவேண்டும் என்றார். 2011 ஆம் ஆண்டு சாதிவாரி சமூகப்-பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால், அப்போதிருந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை பற்றி நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். இத்தனை வருடங்கள் கழித்து நிதிஷ் குமார் இப்போது எதற்கு அதை பற்றி பேச வேண்டும்?

அதே பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அடுத்து நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பதிலடியாக, பத்திரிகையாளர்களுடன் என் சந்திப்பின் போது 2011 ஆம் ஆண்டு எடுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பை என்ன செய்ய போகிறோம் என்று கேட்டேன். மக்களிடம் எங்கள் கருத்து சென்று சேர்ந்து விடும் என்று பயப்படுகிறார். இப்படிப் பேசுவதால், பிற்படுத்தப்பட்ட மக்களிடம் அவருக்கு இருக்கும் மிக குறைந்த செல்வாக்கையும் இழந்து விடுவார்.

கேள்வி: 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய பீகார் முதலமைச்சராக இருந்த கற்பூரி தாகூர் 26% OBC இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அதை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்தது. உயர் சாதியினர், அவர்களை எதிர்க்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்ற இருமுனை அரசியல் போக்கு வலுவடைந்தது. அதை பற்றிய உங்கள் நினைவுகள் என்ன?

மனோஜ்: அப்போது எனக்கு 11 வயது. ஆனாலும் அன்றிருந்த பதற்றம் எனக்கு இன்றும் நினைவுள்ளது. அப்போது பீகார் ஒரு நிலப்பிரபுத்துவ மாநிலமாக இருந்தது. அங்கு ஏற்கனவே வேரூன்றி இருந்த பல்வேறு சமூகக் குழுக்கள் தங்களின் உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்து விடுவோமோ என்று பயந்திருந்தார்கள். ஆனால் இப்போது பீகார் முன்பை போல இல்லை. பகுஜன் இட ஒதுக்கீட்டிற்கு எதுவும் ஆபத்து வந்தால் பகுஜன் மக்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று பீஹார் மக்களுக்கு இப்போது தெரியும்.

கேள்வி: 1978 ஆம் ஆண்டில் பீஹாரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவானது. அதில் ஒன்றாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்பது. இந்த இட ஒதுக்கீட்டு கோரிக்கையை அன்று வாஜ்பார் ஆதரித்தார். அந்த கோரிக்கையை இப்போது பிஜேபி அரசு 10% EWS இட ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றி இருக்கிறது. 40 ஆண்டுகால பிஜேபியின் இந்த விடாமுயற்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

மனோஜ்: இட ஒதுக்கீடு எதற்காக என்பதை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. உயர்ஜாதியிலும் ஏழைகள் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஏழ்மை அவர்கள் அந்த ஜாதியில் பிறந்ததினால் வரவில்லை. அதற்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததன் காரணமாகவே அவர்கள் வறுமையில் உழல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மலக்குழியில் இறக்கிறார்கள். மலக்குழியில் இறப்பவர்கள் யார்? தலித்துகள். ஜாதியை ஒழிக்க, 100 விழுக்காடு மலம் அள்ளும் வேலையும் உயர் ஜாதியினருக்கே கொடுக்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் ஒரு பார்ப்பனர். ஆனாலும் உயர்ஜாதி ஹிந்துக்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்கள். மற்ற பார்ப்பனர்கள் இதை எப்படி பார்க்கிறார்கள்?

மனோஜ்: என்னுடைய ஜாதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் என் அரசியலை நானே தேர்ந்தெடுத்தேன். நிறைய பேருக்கு என் குடும்ப பின்னணி தெரிய வாய்ப்பில்லை. என்னுடைய மாமா பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் 5 முறை MLA வாக இருந்தவர். நான் சிறுவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார். நான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக நிற்கிறேன் என்றால், அது அவரிடம் பெற்ற உத்வேகம் தான். அவர் வாழ்நாளில் பல புரட்சிகரமான செயல்களைச் செய்திருக்கிறார். உதாரணத்திற்கு அவர் எப்போதுமே பூணூல் அணிந்ததில்லை. நானும் அணிந்ததில்லை.

கேள்வி: ராகுல் காந்தி உங்களைப் போல் இல்லையே?

மனோஜ்: அது அவர் விருப்பம். மக்களை பிளவுபடுத்தும் (பூணூலைத்) நூலைத் தூக்கி ஏறிய வேண்டும்.

கேள்வி: மாநிலங்களவையில் நீங்கள் பேசியதை பார்ப்பன சமூகத்தினர் எப்படி பார்க்கிறார்கள்?

மனோஜ்: நிறைய பேர் என்னை அழைத்து திட்டினார்கள். ஒருவர் 'நீ நாயைப் போல் நாதியற்று சாவாய்' என்றார். பரசுராம சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு பாட்னாவில் என் உருவப்படத்தை எரித்தது. அங்கு வெறும் 9 பேர் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னார்கள். எனக்கு நிஜமாகவே வருத்தமாக இருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் 100 அல்லது 200 பேர் கூடி எனது உருவப் படத்தை எரித்திருக்க வேண்டும். (சிரிக்கிறார்)

கேள்வி: உங்கள் பெற்றோர்கள் உங்கள் மேல் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்?

மனோஜ்: என் அப்பா ஒரு கல்லூரி பேராசிரியர். அம்மாவும் ஒரு கல்லூரி பேராசிரியர். மைதிலி மொழிப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் பல முற்போக்கு சிந்தனைகளை என்னுள் விதைத்தார்.

கேள்வி: உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த ஒரு சந்தர்ப்பத்தை பற்றி விவரிக்க முடியுமா?

மனொஜ்: என்னுடைய பெற்றோரின் வளர்ப்பு தவிர்த்து, ரஹி மஸூம் ராஸா (Rahi Masoom Raza) எழுதிய டோபி ஷுக்லா (Topi Shukla,) என்ற நாவல் என் சிந்தனையை தூண்டியது. அந்த நாவல் தான் என் அரசியலை தேர்ந்தெடுக்க வைத்தது. அதுதான் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று உந்தியது. அந்த நாவலை படிக்கும் போது நான் 12 ஆவது வகுப்பில் இருந்தேன்.

கேள்வி: நீங்கள் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவர். அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் சரியான விகிதாச்சாரத்தில் இல்லை என்பதை பார்ப்பனர்களும் மற்ற உயர் சாதியினரும் பார்க்கத் தவறுவது ஏன்? அதை பற்றிய அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்களா அல்லது பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கிட்டால் உயர்சாதியினரின் பங்கு குறைந்துவிடும் என்று எண்ணுகிறார்களா அல்லது அவர்கள் உயர்ந்த ஜாதியில் பிறந்ததால் இந்த நாட்டை ஆளும் தகுதி தங்களுக்கு இருக்கிறது என்று அவர்கள் எண்ணுகிறார்களா?

மனோஜ்: நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று காரணங்களுமே தான். இதில் முக்கியமான ஒன்று, அவர்கள் உயர் ஜாதியில் பிறந்தவர்கள் என்பதால் அவர்களின் சமூகப் பழக்கவழக்கங்களும் உயர் ஜாதியினரும் இணைந்தே இருக்கிறது. உயர்சாதியினரால் உயர்சாதியினரை விதந்தோதி எழுதப்பட்ட இலக்கியங்களையே உயர்சாதியினர் படிப்பார்கள். உயர்சாதியினர் முன்னெடுக்கும் உலகப்பார்வையையே அவர்கள் நம்புவார்கள். அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். அவர்களுக்கு உலகைப் பற்றிய எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அண்ணல் அம்பேத்கர் எழுதிய 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' நூலை அவர்களில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைப் படிக்காமல் ஒடுக்குமுறையைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவே முடியாது.

கேள்வி: உயர்சாதியினர் அம்பேத்கரை படிக்கும் போது மேலும் ஆத்திரம் அடைகிறார்களே?

மனோஜ்: அது வெள்ளையர்களுக்கு உள்ள இனவாத ஆதிக்க உணர்விற்கு ஒப்பானது. உதாரணத்திற்கு நான்கு வெள்ளையர்களுக்கு சிலவற்றைப் பற்றி ஏறக்குறைய ஒரே கருத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கறுப்பின மக்களின் மேல் நடத்தபடும் ஒடுக்குமுறையை பற்றிய ஒரு நூலினைப் படிக்கிறார்கள். அந்நூலைப் படித்துவிட்டு அவர்கள் இரண்டு விதமான கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்புண்டு. ஒன்று ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பார்கள் அல்லது அந்நூலில் குறிப்பிடப்பட்டவை எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை என்பார்கள். ஏனென்றால் அதை ஒப்புக்கொண்டால் தங்கள் மேலாதிக்கம் பறிபோய்விடும் என்ற அச்சம். துரதிர்ஷ்ட வசமாக இரண்டாவது பதிலையே நிறைய உயர் ஜாதியினர் இரண்டாம் நிலையையே எடுக்கிறார்கள்.

கேள்வி: எனக்கு தெரிந்த நிறைய பார்ப்பனர்கள் தங்களை இந்தியாவின் யூதர்கள் என்கிறார்களே? அதாவது ஹிட்லரால் யூதர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டது போல் இந்தியாவில் தாங்களும் ஒதுக்கப்படுகிறோம் என்கிறார்கள்.

மனோஜ்: நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். அவர் மனிஷ் திவாரி. ட்விட்டர் நிறுவனத் தலைவர் ஜாக் டோர்சி 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்த போது "பார்ப்பன ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குவோம்" என்று பதாகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட போது காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி இந்த கருத்தை தெரிவித்தார்.

கேள்வி: அவர் மட்டுமில்லை. நிறைய பார்ப்பனர்கள் தாங்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறோம் என்று கூறுகிறார்கள்.

மனோஜ்: ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெர்மனியில் மட்டுமல்லாமல், ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிராக இருந்த மனப்பான்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் ஹிட்லர். ஹிட்லருக்கும் முன்பே 19 ஆம் நூற்றாண்டிலும் யூதர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். யூதர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதைப் போல பார்ப்பனர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டனவா?

இந்தியாவில் அனைத்து துறைகளும் பார்ப்பனர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. மோடியின் அமைச்சரவை பார்ப்பனர்களால் நிரம்பி வழிகிறது. ஒரு கற்பனாவாதம் மட்டுமே பார்ப்பனர்கள் இந்தியாவின் யூதர்கள் என்று நம்ப வைக்கும்.

கேள்வி: பார்ப்பனர்களின் கருத்தில் நியாயம் இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?

மனோஜ்: அவர்களின் மேலாதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுவதால் அவர்கள் அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். அனைத்து துறைகளையும், அறிவுத்தளங்களையும் நீங்கள் ஆள நினைத்தால், அந்த மேலாதிக்கத்தை எதிர்த்து உருவாகும் அலையை பார்த்து நீங்கள் அச்சமடைவது உறுதி.

கேள்வி: தங்கள் குழந்தைகளுக்கு உலகைப் பற்றிய தங்கள் பார்வையை கதைகள் மூலம் திணித்து, அதன் மூலம் பெரியவர்கள் ஆகும் அந்த குழந்தைகள் அந்த கருத்திற்கு ஆட்படுகிறார்களே? உதாரணத்திற்கு தாஜ் மஹால் ஒரு கோவிலாக இருந்தது என்பதை போல...?

மனோஜ்: மண்டல் அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் பெருபான்மையான பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துத்துவாவில் கருத்தாக்கத்தில் விழுந்திருப்பார்கள். மண்டல் அறிக்கையின் மூலம் பல ஜாதியினர் மதச்சார்பற்றவர்களாக ஓர் இரவில் மாறி இருக்கிறார்கள். RSS பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வேலை செய்தனர். உதாரணத்திற்கு பார்ப்பனர்கள் பல கலவரங்களை உருவாக்க திட்டமிட்டார்கள். ஆனால் கலவரங்கள் நடத்த அவர்கள் முன் வரவில்லை. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை வைத்து தங்கள் கலவரத் திட்டத்தை நிறைவேற்றி கொண்டார்கள்.

கேள்வி: SC, ST, OBC இட ஒதுக்கீட்டின் மூலம் தங்கள் மேலாதிக்கம் பறிபோகிறது என்று பார்ப்பனர்கள் கருதுகிறார்களா?

மனோஜ்: ஆம். அவர்களின் மேலாதிக்கம் தகர்வதாக அவர்கள் உணருகிறார்கள். 10% EWS இட ஒதுக்கீடை எதிர்த்து மாநிலங்களவையில் நான் பேசிய போது பல கதைகள் சொன்னேன். அவை அனைத்தும் 'ஒரு ஊரில் ஒரு ஏழை பார்ப்பனர்' என்றே துவங்கும். ஆனால் நாம் என்றைக்காவது ஒரு ஊரில் ஒரு ஏழை தலித் என்ற கதைகளைப் படித்திருக்கிறோமா? பார்ப்பனர்கள் மற்ற ஜாதினர்களில் ஏழைகள் இருப்பது சகஜம் என்று எடுத்து கொள்கிறார்கள். அதுதான் வாழ்க்கை முறை என்று எண்ணுகிறார்கள். தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் விதி ஏழ்மை என உயர்சாதியினர் நம்புகின்றனர். இந்திய யதார்த்தத்தை கற்பனாவாதமாக மாற்றியிருக்கிறார்கள். கற்பனையை யதார்த்தமாக்கியுள்ளனர். தலைகீழ் மாற்றம் இது.

கேள்வி: அதாவது ஜாதிய அமைப்பு நல்லது, அது தேவை என்று தங்கள் குழந்தைகளுக்கு கதைகள் மூலம் உயர்சாதி குடும்பங்களில் சொல்லி கொடுக்கப்படுகிறதா?

மனோஜ்: எங்கள் குடும்பத்தில் அப்படி நேரவில்லை. ஆனால் பார்ப்பன குடும்பங்கள் தாங்கள் தூய்மைவாதிகள் என்று தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்கள். ஆனால் வெளியில், தங்களுக்கு தலித் நண்பனாக இருக்கிறான், முஸ்லீம் தனக்கு நண்பனாக இருக்கிறான் என்று சொல்லிக் கொள்வார்கள். இது பார்ப்பனர்களின் மேன்மையையே திரும்பத் திரும்ப நிலை நிறுத்துவதற்கான செயலாகும்.

கேள்வி: SC, ST, OBC இட ஒதுக்கீடு குறித்து உயர் ஜாதியினரிடம் பெரும் மனக்கசப்பு இருக்கிறது. ஒரு பார்ப்பனராக அந்த மனக்கசப்பை எப்படி நீக்கலாம் என்று கருதுகிறீர்கள்? எந்த பிரிவினரிடையே மனக்கசப்பு இருந்தாலும் அது இந்த சமூகத்திற்கு நல்லதில்லையே.

மனோஜ்: மற்ற எந்த ஜாதியினரை விடவும், உயர் ஜாதியினருக்கு தான் ஒழுங்கான அறிவியல் பூர்வமான கல்வி தேவை. அவர்களின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் பிற்போக்குத் தனமானவை. அவர்கள் வரலாற்றை நவீன சிந்தனையுடன் அணுக வேண்டும். அவர்களின் அறிவின் மூலம் அறியாமையை நிலைநிறுத்த முயற்சிக்க கூடாது.

இதுபோன்ற ஒரே மாதிரியான பிற்போக்குச் சிந்தனையை உடைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. பொதுப் பள்ளிக்கூடங்கள் நம் இந்திய மாற்றத்தை உருவாக்கும் புரட்சியை உண்டாக்கும் என்று கருதுகிறேன். எல்லா எதிர்க்கட்சிகளும் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

கேள்வி: அடிப்படையாக கல்வித்துறையில் தனியாரை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படித்தானே?

மனோஜ்: ஆமாம். நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் போன்ற நார்டிக் நாடுகள் இந்த பொதுப்பள்ளி முறையைத் தான் பின்பற்றுகிறார்கள். கல்வியில் தனியார் துறை இருப்பதால் பாகுபாடுகள் மேலும் மேலும் வளர்கின்றன. கீழ் ஜாதி என்று நாம் குறிப்பிடும் போது, அது பிறப்பையோ அடையாளத்தையோ குறிப்பிடுவதில்லை. அவர்களுக்கு வாய்ப்புக கிடைக்காததையே குறிப்பிடுகிறோம்.

நம்முடைய பாடத்திட்டங்களையும் மாற்ற வேண்டும். எத்தனை பாட நூல்கள் பெரியாரைப் பற்றியோ ஜோதிராவ் பூலே பற்றியோ நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன? அவை எல்லாம் அடிக்குறிப்புகளாக சுருக்கப்பட்டுவிட்டன. பார்ப்பனர்களும் மற்ற உயர் ஜாதியினரும் விளிம்புநிலை மக்களின் இலக்கியம் என்றழைக்கப்படுகிற பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியங்களை படிக்க வேண்டும். உண்மையில் பகுஜன் இலக்கியங்களே பொது இலக்கியமாக இருக்க வேண்டும். உயர்ஜாதி ஹிந்துக்களின் இலக்கியம் விளிம்பு நிலை இலக்கியமாக இருக்க வேண்டும்.

மனோஜ் ஜா

நன்றி: scroll.in (2019, பிப்ரவரி 15 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா