பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தவிர்த்துவிட்டு, பொருளாதாரத்தில் நலிந்த உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க, 2019 ஜனவரியில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட 103ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை செல்லும் என உறுதி செய்யும் உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மைத் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிரானதாகும். பிஜேபி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கொண்டாடி, தங்களுக்குச் சொந்தமான வெற்றியென ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர். ஆனால், இந்தத் தீர்ப்பு அநீதியானது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை ஆரம்பத்திலேயே கூறுவது அவசியமாகிறது.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விலக்கப் பட்டிருப்பதால், EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும். சாராம்சத்தில், EWS இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஏழ்மையை ஒழிப்பதல்ல. மாறாக முழுக்க முழுக்க உயர்சாதி நலனைச் சார்ந்தது. இன்று மனுதர்ம அடிப்படையில் ஆர்எஸ்எஸ் உருவாக்கும் புதிய பாசிசக் கருத்தியலோடு இணக்கமான உறவைக் கொண்டுள்ளது.supreme court 309தற்போதைய அரசியல் சூழல் மிகவும் முக்கியமானது. ஏனெனில், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசின் பொதுத்துறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சிக் கொள்கை என்பதைக் கைவிட்டு, தனியார்மயத்தை அடிப்படையாக கொண்ட புதிய தாராளவாதத்தைத் தழுவிய நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1991-ல் ஒரு அரசாணையின் மூலம் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை அறிமுகப் படுத்தியது. சாதிக்கும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பைப் புறக்கணித்து, சாதியை வெறும் மேல் கட்டுமானம் எனக் கருதும், ஆளும் அமைப்பின் அங்கமாக இருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் இயந்திரத்தனமான அணுகுமுறையுடன், 1990 நவம்பர் 4 இல் இயற்றிய மத்திய குழு தீர்மானத்தில், அரசு வேலைகளில் 10% பொருளாதார இட ஒதுக்கீடு கோரியது.

இருப்பினும், 1993 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு எந்த தயக்கமும் இல்லாமல், பொருளாதார அளவுகோல் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை என்று கூறி நரசிம்ம ராவ் அரசின் அரசாணையை ரத்து செய்தது. மறுபக்கம், தீவிர வலதுசாரியான, பாசிச மோடி அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ தன்மையைத் தெளிவாக மீறும் வகையில், 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முற்றிலுமாக, விலக்கி, ஏழைகள் என்று கூறப்படும் தெளிவான, உயர் சாதி, மனுவாத நோக்கத்துடன் EWS இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வந்தபோது, ​​உச்சநீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 3:2 விகிதத்தில் பிளவுபட்ட தீர்ப்பாக இருப்பினும், அதை நிலைநிறுத்த எந்தத் தயக்கமும் காட்டவில்லை. நீதித்துறையின் இந்த குட்டிக்கரணம், இந்தியாவில் இன்று இந்துத்துவ பாசிச சித்தாந்தமான மனுவாதம், மற்ற அரசு நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து, தனது கொடூரமான பரிமாணங்களுடன் ஆட்சி அதிகாரத்தின் அனைத்துத் தளங்களிலும் உறுதியான பிடியை நிலைநிறுத்தியிருப்பதன் தெளிவான வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இடஒதுக்கீடு என்பது ‘வறுமை ஒழிப்புத் திட்டமாக’ அல்லது சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்கான வழிமுறையாக ஒருபோதும் இருந்ததில்லை. மற்ற நாடுகளில் நிலவும் இட ஒதுக்கீடுகள் போலவே, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, 'தீண்டத்தகாத', ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் உழைக்கும் பாட்டாளி மக்கள் பெரும்பாலோரைக் கொண்ட இந்தியாவில், ஒட்டுமொத்த பொருளாதார வளங்கள், அரசியல் அதிகாரம், கலாச்சார, அறிவுசார் தளங்கள் போன்றவற்றை உயர்சாதியினரின் ஏகபோகத்திலிருந்து தடுத்து நிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதற்காக சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. சாதியால் சீரழிக்கப்பட்ட இந்தியாவில், பார்ப்பன உயர் சாதியினரால் இழிவாக நடத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சாதியினர் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வரலாற்று ஒடுக்குமுறையை ஈடுசெய்யவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இடஒதுக்கீட்டை அதன் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது. இவ்வாறு, இடஒதுக்கீட்டின் நோக்கம் என்பது, நிர்வாகம், கல்வி, பொதுத் துறைகளில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சாதியினர் நுழைவதற்கு செய்யப்பட்ட வழியாகும்.

இருப்பினும், தீவிர வலதுசாரி புதிய தாராளவாத பாசிச தன்மையுடன் 2014 ல் ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து எதிர்மறையான உரையாடல்கள் பொது அரங்குகளில் நடைபெறத் தொடங்கியது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடை ஒழிக்கும் நோக்கில் இவ்வகையான விவாதங்களை மோடி ஆதரவாளர்கள் நடத்தினர். மோடியின் காவி, கார்ப்பரேட், பாசிச ஆட்சியின் கீழ், இந்திய சமுகத்தின் அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் ஆகிய இரண்டையும் பாதிக்கும் மனிதாபிமானமற்ற சாதி அமைப்பு, புத்துணர்ச்சியும் புதுவேகமும் பெற்றுள்ளது. இந்துத்துவா தத்துவம் உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களிலும், ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்திலும் பாதுகாப்பாக உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கிறது. இந்துத்துவ ஆட்சியில் சாதிய அட்டூழியங்களும் பாகுபாடுகளும் கூடுதல் வீரியத்துடன் மீண்டு எழுச்சி பெற்று வருகின்றன. இந்த பிண்ணனியில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை இழிவுபடுத்தும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு என்ற போர்வையில் 10% உயர் சாதி சார்ந்த இடஒதுக்கீட்டையும், அதை செல்லும் எனத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் புகழ்வது மிகவும் பிற்போக்குத்தனமாகவும், சாராம்சத்தில் பார்ப்பனிய ஆதரவு நிலைப்பாடாகவும் பார்க்க வேண்டும். மேலும், இது பல போராட்டங்கள் மூலம் உயிர்த்தியாகம் செய்து நிலைநாட்டிய, ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கார்ப்பரேட் மயமாக்கலுக்கு இணையானது.

இத்தகைய சாதி ஆதிக்கச் சூழலில், பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதிகளில் ஒருவரான பேலா திரிவேதியின் இட ஒதுக்கீடு குறித்த கருத்து வெளிப்படையானது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் கால வரம்பு குறித்த விவாதத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளின் முடிவில், ஒட்டுமொத்த சமூகத்தின் பரந்த நலனுக்காக, இடஒதுக்கீட்டின் தேவையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி பேலா திரிவேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15, 16 ல் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடும் பிரதிநிதித்துமும் காலவரையறைக்குள் கொண்டுவரப்பட்டால், "சமத்துவமான, சாதியற்ற, வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வழிவகுக்கும்" என்றும் கருத்துரைத்தார். பேலா திரிவேதியின் இந்த அணுகுமுறையில் மறைமுகமாக தொக்கி நிற்பது, இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள, அனைத்து நிலைகளிலும் பரவியுள்ள சாதி அமைப்பின் தீவிரத்தன்மையை முழுமையாக புறக்கணிக்கும் மனநிலை என்பது வெளிப்படை. சாதியைக் குறைத்து மதிப்பிடும் போக்கு திடீரென ஏற்பட்டது அல்ல. மாறாக இது இந்திய நீதித்துறையில் நீண்ட காலமாக நீடித்திருக்கும் நடைமுறையாகும். உதாரணமாக, ஒட்டுமொத்த வரலாற்றிலும் மிகவும் மனிதாபிமானமற்ற அமைப்புகளில் ஒன்றான சாதியை மற்ற தீமைகளில் ஒன்றைப் போலக் குறைத்து மதிப்பிடுவது அல்லது கருதுவது முன்னரும் காணக்கூடியதாக இருந்தது. உதாரணமாக, நீதிபதிகள் கோகோய், நாரிமன் ஆகியோர் 2015 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், "பின்தங்கிய நிலையை எளிதாக நிர்ணயிப்பதற்கு” புதிய நடைமுறைகளையும், வழிமுறைகளையும் அளவுகோல்களையும் முன்மொழிந்தனர். சாதியுடன் வருவாய், குடும்பச் சூழல், கல்வி, படிநிலை போன்ற பல்வேறு காரணிகளையும் இணைத்து, இவை அனைத்தும் இடஒதுக்கீட்டிற்கான அளவுகோல்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு எதிராக, பார்ப்பன உயர் சாதியினரால் இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளை சரி செய்வதற்கும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை நிர்வாகத்திலும் பொதுத்துறை நிறுவனங்களில் உறுதிப்படுத்துவதற்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டிருப்பது வெளிப்படை. ஆனால் அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் போது, ​​ஆர்எஸ்எஸ் அதைக் கடுமையாக எதிர்த்தது, உயர்சாதியினரின் நலனுக்கு எதிராகக் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் அனைத்து சாதியினருக்கும் சம உரிமை வழங்க விவாதித்த நிலையில், அதற்கு பதிலாக, பெண்களையும் சூத்திரர்களையும் இழிவானவர்களாக கருதும் சதுர்வர்ண அல்லது நால்வர்ண அமைப்பின் 'புனித நூலான' 'மனுஸ்மிருதி'யை இந்திய அரசியலமைப்பாகப் பரிந்துரைத்தது. சாதி ‘இந்து தேசத்தின்’ பிரிக்க முடியாத பெருமை என்ற கோல்வால்கரின் கூற்றுக்கு இணங்க ஆர்எஸ்எஸ்ஸின் இந்நிலைப்பாடு இருந்தது. பாசிச மனுஸ்மிருதியை அரசியலமைப்புச் சட்டமாக முன்மொழிந்து ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்புர்வ பத்திரிக்கையான ஆர்கனைசரில் 1949, நவம்பர் 30 அன்று ஒரு தலையங்கம் வெளியிட்டது. அது மீண்டும் 1950 ஜனவரியில் ஆர்கனைசரில் வெளியானது. உண்மையில், பல ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின், ஆர்எஸ்எஸ் தனது நிகழ்ச்சி நிரலை சாத்தியப்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது.

இவ்வாறாக, 103 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மோடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் அதற்கு உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய ஒப்புதலையும் மனுவாத இந்துத்துவா இந்திய அரசின் மீது முழு அளவிலான கட்டுப்பாட்டை நிறுவியுள்ள சூழலில் பார்க்க வேண்டும். மேலும், ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமத்துவத்தை கருத்தில் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை, அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உயர்சாதி அடிப்படையிலான பொருளாதார இட ஒதுக்கீட்டின் ஊடாக வலுவிழக்கச் செய்திருப்பது, இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸின் புதிய பாசிசவாதத்தின் கருத்தியல் அடிப்படையான மனுதர்ம இந்துத்துவாவின் பிரிக்க முடியாத பகுதியாகவே கருத வேண்டும்.

இந்த நெருக்கடியான காலத்தில், ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரும், அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், அனைத்து பாசிச எதிர்ப்பாளர்களும், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பாசிச, மனுதர்மவாதிகளின் நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைய கடமைப்பட்டுள்ளன. ஆனால் இன்று நாம் காண்பது வெட்கக்கேடான காட்சியாகும். பிஜேபி, ஆர்எஸ்எஸ் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியின் EWS இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. மேலும் EWS இட ஒதுக்கீட்டின் முன்னோடி நாங்களே என்ற பெருமையைப் பெறவும் காங்கிரஸ் கட்சி கடுமையாக முயற்சி செய்கிறது. அதன்படி, பாசிச ஆட்சியின் இந்த பிற்போக்கு பாசிச EWS இட ஒதுக்கிட்டு நடவடிக்கையை முழு மனதுடன் ஆதரிக்கும் அதே வேளையில், பல ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியால் தொடங்கப்பட்ட பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக மோடி அரசைக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விமர்சிக்கிறார். "மென்மையான இந்துத்துவா", "கடினமான இந்துத்துவா" ஆகியவற்றுக்கு இடையேயான எல்லைக் கோடு மிகவும் மெல்லியதாகும். முந்தையது பிந்தையதுக்கு வழிவிடுகிறது, இறுதியில் அதன் திசையிலேயே செல்கிறது என்பதைச் சொல்ல கூடுதல் விளக்கம் தேவையில்லை.

துல்லியமாகச் சொல்வதானால், 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான' , வெளிப்படையான உயர்சாதிகளுக்கான இந்த 10% EWS இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மாறாக மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்டு இந்துராஷ்டிராவை நோக்கிய இழிவான நகர்வின் ஒரு பகுதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிப்பதற்கான முன் நகர்வாக கருத வேண்டும்.

- பி ஜெ ஜேம்ஸ், பொதுச்செயலாளர், சிபிஐ எம்எல் (ரெட் ஸ்டார்)

நன்றி: CounterCurrent.Org இணையதளம் (2022, நவம்பர் 12 வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: மயிலை பாலு