ஐரோப்பியர்களின் வரவுக்குப் பிறகு தகவல் தொடர்பின் ஒரு கூறாக உருவானது அச்சுப் பண்பாடு. அதன் துணை விளைவாக உருவாகிச் செழுமைப்பட்டது ‘வாசிப்பு’. அதற்கு முன்னால் ‘வாசிப்பு’ என்பது ஜனநாயகமாக இருக்கவில்லை. கோயில்களில் மட்டும் தான் வேதங்களும் மந்திரங்களும் வாசிக்கப்பட்டன. வாசிப்பு என்பது பல நூற்றாண்டு காலமாக கோயிலுக்குள்ளேயே தான் இருந்தது. கோயில் கல்விக்கூடமாகவும் இருந்த காரணத்தால் கோயில் நுழைவு மறுப்பு என்பது வாசிப்பு அல்லது கல்வி மறுப்பு என்பதாகவும் இருந்தது. பிறகு மெல்ல மெல்ல கோயிலின் பிற பணியாளர்களுக்கு ‘வாசிப்பு’ கிடைத்தது. வாசிப்பைக் கோயிலை விட்டு வெளியே கொண்டுவர நீண்ட காலம் பிடித்தது. அரசியல் சூழல் மாற வேண்டியிருந்தது. அதற்குப் பிறகே கல்வியை விரும்புகிற அனைவருக்கும் வாசிப்பதற்கான, வாசிப்பதைக் கேட்பதற்கான கல்விச்சூழல் உருவானது.

book reading‘வாசிப்பு’ புத்தகமாக மட்டுமில்லை. எல்லா நிலைகளிலும் வடிவங்கொண்டு இருந்தது. ஒருமணி நேர சாலை வழிப் பயணத்தில் சாலையின் இருபக்கமும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் வழியாக உள்ளூர் அரசியல், பண்பாடு முதல் தேசிய அரசியல், பண்பாடு வரை வாசித்தறிய முடியும். தினசரி காலண்டரில் கிழிக்கும் தாளில் வாசிக்கச் செய்திகள் இருந்தன. காலை, மாலை நல்ல நேரம், ராகு காலம், அழகுக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள், பொன்மொழிகள் வழி வாசிப்பை அது கடத்திக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு வீட்டின் நல்ல, கெட்ட காரியங்களுக்கு நாளும் பொழுதும் குறிப்பதில் அந்த ‘வாசிப்பு’ பெரும்பங்காற்றியது.

திருமண அழைப்பிதழ்களில் ஒரு ‘வாசிப்பு’ இருந்தது. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது, ஒவ்வொரு சாதியும் நுணுக்கமான வேறுபாட்டை கொண்டிருக்கிறது என்பதை அந்த ‘வாசிப்பு’ உணர்த்தியது. ஒரு நூறாண்டு கால திருமண அழைப்பிதழ்களின் உள்ளடக்கங்களை வைத்துக்கொண்டு காத்திரமான சமூக வரலாற்றை எழுதிவிட கூடிய அளவுக்கு அதில் ‘வாசிப்பு’ இருந்தது. மத நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கின. அது ஒரு விதமான வாசிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தது. ‘படித்துவிட்டு பக்கத்தில் இருப்பவருக்குக் கொடுத்தால் 24 மணி நேரத்தில் உங்களுக்கு நல்ல சேதி வரும்’ என்று அதில் இருக்கும் ‘கடைசி வரி’ வாசிப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக எளிதாகக் கடத்தியது. அந்தத் துண்டு பிரசுரங்களின் நோக்கம் வேறொன்றாக இருந்தாலும் அதற்குள்ளாக ஒரு வாசிப்பு இருந்துகொண்டு இருந்தது. இடதுசாரி இயக்கங்கள் கொடுத்த துண்டு பிரசுரங்கள் சாமானிய மக்களிடம் உலக அரசியல் குறித்த பார்வையை வளர்த்தெடுத்தது. அச்சுத்துறையின் அதீத வளர்ச்சியால் பத்திரிகைகள் ஏராளமாக வெளிவந்தன. ஒவ்வொரு பத்திரிகைக்கும் தனித்தனி வாசகர் உலகமும் ரசிகர் மன்றமும் இருந்தது.

1950 களுக்குப் பிறகு திராவிட இயக்கத்தில் பற்றுக் கொண்டிருந்த சில தனியார் பஸ் முதலாளிகள் தங்கள் பஸ் பயணச்சீட்டின் பின்புறத்தில் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாசகங்களை அச்சிட்டிருந்தனர். அதுவும் கூட நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகளின் கைகளில் ஒருவித வாசிப்பை உருவாக்கி இருந்தது. 1990க்குப் பிறகான காலங்களில் அறிவொளி இயக்கம், இரவுப் பள்ளிகள் வழியாக பள்ளிக்கூடம் செல்ல வாய்ப்பற்றவர்களுக்கு ஒரு ‘வாசிப்பு’ உருவாகி இருந்தது. இது சின்னங்களைப் பார்த்து மட்டுமே வாக்களித்த பலரை, வேட்பாளரின் பெயரைப் படித்துப் பார்த்து வாக்களிக்க வைக்கும் அளவுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அரசு வழங்கும் அடையாள அட்டைகளில், சொத்து ஆவணங்களில் எதிர்பாராமல் நிகழும் எழுத்துப் பிழைகளைக் குறைத்தது.

1990 களில் தைப் பொங்கலை ஒட்டி வாழ்த்தட்டைகள் அனுப்புவது உயர்ரகக் கலாச்சாரச் செயல்பாடாக இருந்தது. வாழ்த்தட்டைகளின் வாசகங்களை குடும்பத்துடன், நண்பர்களுடன் சத்தமிட்டு வாசித்தது கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியது. அது ஒருவிதமான வாசிப்புச் சூழல்.

கடைகளில் வாங்கும் பொருள்களைப் பொட்டலமாகக் கட்டித்தரப் பயன்பட்ட செய்தித்தாள்கள், பத்திரிகைகள் ஒரு வாசிப்புத் தளமாக இருந்தது. ஒரு விளம்பரத்தையோ, தகவலையோ, நகைச்சுவையையோ அதில் இருந்து பெற முடிந்தது. இன்று பேப்பர் பொட்டலங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவதற்காகவே செய்தித்தாள் வாங்கிய டீக்கடைகள் உண்டு. செய்தித்தாள் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தவர்கள் பேசிய ‘டீக்கடை அரசியல்’, ஒவ்வொரு கட்சியிலும் கீழ்மட்டத் தொண்டர்களை தீவிரமாக பணியாற்ற வைக்கும் அளவுக்கு விசுவாசத்துடனும் வீரியத்துடனும் வைத்திருந்தது. பல இடங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு அந்த வாசிப்பின் வீச்சு இருந்தது.

இது போன்ற வாசிப்பு முறைகள் கல்விப்புலத்திற்கு வெளியில் அனைவரையும் வரையறுக்கப்படாத ஒரு சட்டகத்திற்குள் இருத்திவைத்து வாசிப்பை உயிரோட்டமாக வைத்திருந்தது. அந்த வாசிப்பு முறை கல்விப்புலத்திற்குள்ளும் ஆரோக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. அப்போதெல்லாம் ‘வாசிப்பு’ மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் இன்று மக்களுக்கு வாசிக்கக் கிடைக்கும் வாய்ப்புகள் அழிவின் விழிம்பில் இருக்கின்றன. சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் வாசிப்புச் சூழல் போதிய கவனம் பெறுவதில்லை. உதாரணமாக அச்சு வடிவில் இருக்கும் திருவிழா அழைப்பிதழை விட காட்சியாகச் சித்திரித்து வெளிவரும் காணொலி வடிவிலான அழைப்பிதழ் அதிகம் பார்க்கப்படுகிறது; பரப்பப்படுகிறது. திருமண அழைப்பிதழ்கள் தொடங்கி பாடப் புத்தகம் வரை அனைத்தும் காட்சி வடிவத்தில் வர ஆரம்பித்துவிட்டன. இதைக் காகிதமில்லா பண்பாடு (Paperless Culture) என்கிறார்கள்.

 அச்சு வடிவங்கள் அனைத்தும் காட்சி வடிவங்களாக மாறுவது வாசிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் அசமநிலையை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் கூட வாசிப்பின் தன்மை மாறியிருக்கிறது. நிறைய தடுமாறுகிறார்கள், சொற்களின் உச்சரிப்பில் தயக்கம் கூடியிருக்கிறது. காரணம் அவர்கள் நாளொன்றுக்கு சாராசரியாக 15 மணி நேரம் காட்சி வடிவத்தோடு தொடர்பில் இருக்கிறார்கள். வாசித்து அறிவதை விரும்பாத, கண்டு அறிவதை மட்டுமே விரும்புகிற இன்றைய தலைமுறை காட்சி வடிவத்தில் வரும் எழுத்துத் தகவல்களைக் கூட வாசிக்கத் தயாராக இல்லை.

இது, தகவல் தொடர்பில் காலந்தோறும் நேர்ந்து வரும் மாற்றங்களை ஒத்ததுதான் என்றாலும் வாசிப்புச் சூழல் உருவாக்கி வைத்திருந்த பண்பாட்டு வெளிக்கும் காட்சிச் சூழல் உருவாக்கிக் கொண்டிருக்கும் பண்பாட்டு வெளிக்குமான அடிப்படைப் பண்பு முற்றிலும் வேறுபட்டது. இந்த வேறுபாடு ‘வாசிப்பு’ உருவாக்கி வைத்திருந்த ‘பிழையற எழுதும் பழக்கத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. வாசிப்பில் இருந்து அந்நியப்படுதலும் பிழையோடு எழுதுதலும் அறிவுச் சமூகத்தை முழுமைப்படுத்தாது.

- ஞா.குருசாமி