ஒரு நாட்டின் அரசு சார்பில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டியவைகளில் மிக முக்கியமானவற்;றில் கல்வியும் மருத்துவதும் சொல்லப்படுகிறது. அவற்றில் மருத்துவம் குறித்து சொல்லும் போது முதன்மையானதாக சுகாதரம் வந்து விடுகிறது. சுகாதாரமான முறையில் மக்களை பேணி காப்பதில் துப்புரவுப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது.

ஊரார் தெருவில் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி தூக்கி எறிந்துவிட்டுப் போகும் குப்பைகளை குழந்தையை தூக்கி பாவிப்பது போல அள்ளி சுமந்து ஊரையே சுத்தம் செய்துவிட்டுப் போகும் துப்புரவுப் பணியாளர்கள் சமூகத்தின் பெரும்பாண்மையான நபர்களின் மத்தியில் தீண்டத்தகாத நபர்களாகவும் மனிதர்களைவிட இழிந்தவர்களாக கருதப்படும் அவலமும் தொடர்வதற்கு அவர்களுக்குரிய அங்கீகாரத்தை அரசு நிர்வாகம் வழங்கப்படாத வரையில் யாரும் கொடுக்க முன்வரப்போவதில்லை.

இந்த இடத்தில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் எழுதிய காக்கா நாடு என்ற சிறுகதையை குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அக்கதையில் ஒரு துப்புரவுப் பணியாளருக்கு அந்நாட்டின் ஜனாதிபதியைவிட ஒரு ரூபாய் சம்பளம் அதிகம். அதேநேரத்தில் அவருக்கு வழங்கப்படும் மரியாதையோ மிக மிக அதிகம். கிட்டதட்ட ராஜ மரியாதை எனலாம். துப்பாக்கி வைத்த இராணுவ வீரர்களின் பாதுகாப்பு, அரசு சலுகைகள் என ஏராளம். அதனால் அத்தகைய பணியை பெற பலரும் நான்… நீ… எனப் போட்டிப் போடுகிறார்கள் எனக் கதையில் சொல்லப்பட்டிருக்கும். அதற்கு அடிப்படையான காரணம்? நாட்டின் ஜனாதிபதியை விட உயர்ந்தவராக துப்புரவுப் பணியாளர் கருதப்படுவதுதான்.

ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? துப்புரவுப் பணியாளர்கள் அரசு ஊதியம் பெறும் நபர்கள் என்றாலும் அவர்களை சக அரசு ஊழியர்கள் யாரும் அங்கிகரிப்பது கிடையாது. அவர்கள் மேற்கொள்ளும் பணியின் தன்மை அப்படி இருப்பதை ஒரு காரணமாக கருதும் பொதுப் புத்திதான். அதோடு அவர்களின் ஊதியம் உள்பட அரசின் கவனமும் இவர்களின் மீது அதிகம் படவில்லை என்பது உண்மைதான்.

மற்ற அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பலவும் கிடைப்பதில்லை. ஒருநாள் ஒரு துப்புரவுப் பணியாளர் பணிக்கு வரவில்லை என்றால் அவர் பணிசெய்யும் பகுதி முழுவதும் குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கும். அதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் எனச் சொல்லி பலநேரங்களில் அவர்களுக்கான விடுமுறையைக்கூட அவர்கள் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பினும் அதிகாரிகள் அதற்கு சம்மதிப்பதில்லை. அதிகாரிகளுக்கு துப்புரவுப் பணியாளார்களின் உடல் மனநலத்தைவிட, நகரங்களையும் ஊரையும் தெருவையும் சுத்தமாக வைத்திருப்பதில் எத்தனை அக்கறை என்பதை இதன் வாயிலாக நாம் அறிய முடியும்.

2022 மே மாதம் கடைசி வாரத்தில் மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். யாரும் பணிக்குச் செல்லவில்லை. குப்பைகள் மலைபோல் தேங்கவும் மாநகராட்சி நிர்வாகம் பேச்சு வார்த்தையின் வாயிலாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது அவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

மதுரை மாநகராட்சி தொழிலாளர்களின் போராட்டம்

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000 க்கும் மேற்பட்டோர் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Waste in Maduraiதினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகையாக 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், துப்புரவுப் பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டது. மதுரை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 800 டன் குப்பைகள் அள்ளப்பட்டு வந்த நிலையில், 2 நாட்களாக துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு சுமார் 1,600 டன் குப்பைகள் தேங்கியுள்ளது. இதன் வாயிலாக துப்புரவுப் பணியாளர்கள் தங்களின் போராட்டத்தின் மீது வெகு மக்களின் கவனத்தை திருப்பியிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணி

ஏற்கனவே, வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மாநகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக, மே மாதம் 24 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் பேச்சு வார்தையானது நடைபெற்றிருக்கிறது. எனவே முதல்கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையானது 25 ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவிடம் நடைபெற்றது.

அதுவும் தோல்வியில் முடிந்தததால் 3 ஆம் கட்ட பேச்சு வார்தையானது மே 28 ஆம் தேதி மேயர் இந்திராணியிடம் நடைபெற்ற நிலையிலும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்ற காரணத்தால், திட்டமிட்டபடி அவர்களுடைய 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.

தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் போராட்டக்குழுவிடம் நான்காம் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் 100 வார்டுகளில் சுமார் 17 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய மாநகராட்சியில் அவர்கள் பயன்படுத்தி கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி அப்படியே கிடக்கும் போது மக்கள் கூடும் பொது இடங்களில் கழிவு நீர் தேங்கி, குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டது. மேலும், அனைத்து வீடுகளின் வாசல்களிலும் குப்பை வாலிகள் வைக்கப்பட்டு, அகற்றப்படாமல் காத்து கிடக்கின்றன. ஒரு பக்கம் குப்பை மேடாகவும், மறுபக்கம் கழிவு நீர் தேங்கி மதுரையே தூர்நாற்றம் வீச தொடங்கிவிட்டது.

பிரதான கோரிக்கைகள்

துப்புரவுப் பணியாளர்களின் 28 அம்ச கோரிக்கைகளில் மிக முக்கியமானதாக, தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும்.

கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும்.

துப்புரவுப் பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும்.

விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் துப்புரவுப் பணியாளர்கள் உள்பட பலரும் அறவே அவர்களின் பணியை புறக்கணித்து ஒற்றுமையாக போராட்ட களத்தில் பங்கேற்றதன் விளைவாக இனி இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டிய நெருக்கடிக்கு மாநகராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டதும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒருசில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இதனிடையே தொழிலாளர்களின் 28 கோரிக்கைகளில் 24 கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைந்து நிறைவேற்றப்படும் எனவும் மீதியுள்ள 4 கோரிக்கைகள் மாநில அரசுக்குட்பட்டவை என்பதால் அதனை நிறைவேற்றவும் பரிசீலனை செய்துள்ளதாகவும் மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்ததும் இப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பணியாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பு

இந்தப் போராட்டம் குறித்து வெவ்வேறு சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சியின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆள் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்புக்கு வழிவகுக்கும் தனியார்மய நடவடிக்கையை தீவிரப்படுத்தும் நகராட்சி ஆணையரக சுற்றறிக்கை உத்தரவை திரும்பப் பெறவேண்டும். சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 7வது ஊதியக்குழு பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் பாதாளச் சாக்கடை பணியாளர்களை கணக்கெடுத்து 2013 ஆம் ஆண்டு சிறப்புச் சட்டத்தின் படி அவர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரம் செய்திட 03.09.2015 அன்று உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) பிறப்பித்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தெருவிளக்கு ஒப்பந்த பணியாளர்கள் 18 பேருக்கும், பம்ப்பிங் ஸ்டேசன் ஒப்பந்த பணியாளர்கள் 25 பேருக்கும் உடனடியாக மீண்டும் பணி வழங்கிட வேண்டும். மதுரை மாநகராட்சியில் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள 1400 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் பண்டிகை காலங்கள் உட்பட எந்தவித விடுப்பும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கிட வேண்டும் .

குறைந்தபட்ச ஊதியக்குழு பரிந்துரையின் படி, தமிழக அரசு 11.10.2017 அன்று பிறப்பித்த அரசாணையின்படி, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.625, பாதாளச்சாக்கடை பணியாளர்களுக்கு ரூ.625 வழங்கிட வேண்டும்.

மாநகராட்சியில் சில அதிகாரிகள் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்த போலியான கணக்கு காண்பித்து சம்பளத்தை பெற்று பணியாளர்களுக்கு மிகவும் சொற்பமான ஊதியத்தையே வழங்கியுள்ளனர். குறிப்பாக பாதாளச்சாக்கடை பணியாளர்களுக்கு ரூ.13500க்குப் பதிலாக ரூ.11500 மட்டுமே கொடுத்து வந்துள்ளனர். இவ்வாறான செயல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் ஊழல் நடவடிக்கையாகும். எனவே, வருகைப் பதிவேடு முறை கேட்டிலும், நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி ஊழலிலும் ஈடுபட்டுள்ள அனைத்து உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் மற்றும் மின் கண்காணிப்பாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். உடனடியாக அனைவரையும் பணியிறக்கம் செய்து முழுமையான உயர்மட்ட விசாரணை நடத்திய பின் உரிய பணியிடத்தில் அமர்த்திட வேண்டுகிறோம் என்கின்றனர்.

உண்மையாகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைள் பல தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பணபலன்கள் உள்பட அவர்களின் உரிமையை நிலைநாட்டும் விதமாகவே இருக்கிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

துப்புரவுப் பணியாளர்கள் என்றாலே அலட்சியம்

               இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் சுகாதரம் மிக முக்கியமானதொரு வளர்ச்சியின் அறிகுறியாகப் பார்க்கப்படும் சூழலில் அதற்கான முக்கியத்துவத்தை படிப்படியாக ஆளுகின்ற அரசுகள் குறைத்துக் கொண்டே வருவது ஏற்புடையதல்ல. சுகாதரப் பணியில் மருத்துவம் நோய் வந்த பின்பு அவர்களுக்கான மருத்தும் செய்து நோயை குணமாக்கும் பணியை செய்கிறது என்றால் அத்தகைய நோய் எதுவும் பொதுமக்களை தாக்கிவிடாமல் அன்றாடம் நகரங்களை தூய்மை செய்யும் பணி எத்தனை முக்கியமானது. அதை இன்னும் அரசுகள் உணர்ந்தது போல தெரியவில்லை. ஒருவேளை அப்படி உணர்ந்து செயல்படுமாயின் துப்புரவுப் பணியை இன்னும் செழுமைப்படுத்தி இன்றைக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நவீன தொழிற்நுட்பங்களை இறக்குமதி செய்து துப்புரவுப் பணியை நவினப்படுத்தியிருக்கும். ஆனால் இன்றும் பல இடங்களில் மனிதர்களை கொண்டே பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதை அன்றாட செய்திகளில் பார்க்கும் அவலம் தொடரத்தான் செய்கிறது.

               சட்டத்திற்கு முரணான பாதாள சாக்கடை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை அரசு அதிகாரிளே செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் போது அப்பணியாளர்கள் என்னதான் செய்வார்கள். அவர்களால் தங்களின் மேலதிகாரியை பகைத்துக் கொள்ள முடியுமா? அப்படியே இப்பணி சட்டத்திற்குப் புறம்பானது எனச் சொல்லிவிட்டு அதேஇடத்தில் அப்பணியாளர் பணிசெய்துவிட முடியுமா? அப்படிப்பட்ட சூழலில் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பலரை வேலையை விட்டு அற்புறப்படுத்தும் தொழிலாளர் விரோத போக்கை செய்வதனால் வேறு வழியின்றி அவர்கள் அடிபணிந்து அதிகாரிகள் சொல்லும் வேலையை செய்ய நேர்கிறார்கள்.

ஆட்சியாளர்களின் மனநிலை

இந்தியா முழுவதும் 1993 ஆம் ஆண்டு முதல் கடந்த 2019 ஆம் ஆண்டில் வரை விஷவாயு தாக்கியும், மலக் குழியில் மண் சரிந்தும் பல்வேறு பாதிப்புகளினால் 620 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி ஒன்று வெளியானது.

அதில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் போது அதிக உயிரிழப்பு நடந்த மாநிலங்களில் தமிழகம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்த போது இது அனைவருக்கும் தலைகுனிவு என அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்ததில், “கழிவுகளை அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோரில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு. இதில் தி.மு.க. ஆட்சிக்காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை. நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

எல்லாம் சரிதான்… அப்போதுதான் அவர் எதிர்கட்சித் தலைவர். ஆளுகின்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்கத்தான் முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லையோ… அவர் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் அதற்குரிய ஆணையை பிறப்பிக்க அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் போது மேற்கண்ட விசயங்களை சரிசெய்ய என்ன திட்டம் வைத்திருக்கிறார்? அவருடைய ஆட்சியில்தானே மதுரை உள்ளிட்ட இன்னும் எத்தனையோ பெருநகரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டாத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான பதில் என்ன வைத்திருக்கிறார் இப்போதைய முதல்வர்?

குறைந்தபட்சம் துப்புரவுப் பணியாளர்களை அரசு ஊழியளர்களா நியமனம் செய்ய உத்திரவாதப்படுத்தலாம். அல்லது அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை முறையாக வழங்குவதோடு துப்புரவுத் தொழில் நவினமயமாவதற்கு ஏதேனும் புதிய திட்டங்களை முன்னெடுக்கலாம். அவற்றை செய்யாமல் விட்டுக் கொண்டிருக்கும் போது வெறுமனே பேசிவிட்டு போகக்கூடிய நபர்களாகவே எல்லா ஆட்சியாளர்களைப் போலத்தான் இப்போதுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினும் என்று புரிந்து கொள்ளவதைவிட வேறு என்ன சொல்ல முடியும்?

தொழிலாளர் விரோத வழக்கு தள்ளுபடி

மதுரை மாநகராட்சியில் 2006 முதல் 2007 வரை தினக்கூலி அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 389 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 2010 இல் தொழிலாளர் ஆய்வாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தொழிலாளர் ஆய்வாளர் 309 பேரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி சார்பிலும், தொழிலாளர் ஆய்வாளர் உத்தரவை அமல்படுத்தக்கோரி துப்புரவுப் பணியாளர்கள் சார்பிலும் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மாநகராட்சி மனுக்களை தள்ளுபடி செய்தும், துப்புரவுப் பணியாளர்களின் மனுக்களை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்யவும்•ஏப்ரல் 22, 2022 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தார்.

இதனை நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "மத்திய, மாநில அரசுகள் தங்களை மக்கள் நல அரசுகள் எனச் சொல்லி வருகின்றன. ஆனால் அதற்கு மாறாக அரசு துறைகள், மாநகராட்சிகளில் நிரந்தர பணியாளர்கள் பார்க்கும் பணிகளில் தற்காலிக பணியாளர்களை நியமித்து தொழிலாளர்கள் விரோத நடவடிக்கை மேற்கொள்கின்றன. அதிலும் பெரும்பாலான நேரங்களில் தற்காலிக நியமனங்கள் பணியாளர் சட்ட விதிகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பொது வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை தடுக்க வேண்டும்.

பணி நியமனங்களுக்கு தனி விதிகள் உள்ளன. இருப்பினும் உத்தரவுகள் பிறப்பித்த இதுபோன்ற பின்வாசல் நியமனங்களும் நடைபெறுகின்றன. எதிர்காலத்தில் நிரந்தர பணியாளர்களை மேற்கொள்ளும் பணியிடங்களில் குறைந்த ஊதியத்துக்காக தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் போக்கை அரசு நிறுத்தும் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு தொழிலாளர்களுக்கு ஆதரவானதே. ஆனாலும் மாநகராட்சி நிர்வாகம் அரசுத் தரப்பில் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்களோ அதைத்தானே செய்வார்கள். இதுபோன்ற போக்குகளை ஒட்டுமொத்த அரசின் கொள்கை முடிவாகத்தான் நாம் பார்க்க வேண்டியது இருக்கிறது. அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முறையாக பணியாளர்களை நியமனம் செய்வதும், அவர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றை உரிய முறையிலும் உரிய காலத்திலும் கிடைக்க வழிவகை செய்யாவிடில் இன்னும் துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடரத்தான் செய்யும்?

நிரந்தர தீர்வு

துப்புரவுப் பணியாளர்கள் சக அரசுப் பணியாளர்களாக மதிக்கப்படாமல் காலந்தோறும் புறக்கணிக்கப்படுவதை தடுப்பதற்கான சில முன்னெடுப்புகளை அரசு செய்ய முன்வந்தால் இந்நிலை கட்டாயம் மாறும். ஆனால் அதற்கு அரசும் அரசு அதிகாரிகளும் சம்மதிப்பார்களா என்பதுதான் பெருத்த சந்தேகம்?

அனைத்து சாதியிலும் அர்ச்சகர் ஆகும் சட்டம் கொண்டு வந்தது போல அனைத்து சாதியிலும் துப்புரவுப் பணிகளில் இதுவரை துப்புரவுப் பணியை மேற்கொள்ளாத சமூகத்தினருக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி அவர்களை நியமனம் செய்ய வேண்டும். இவற்றை தீவீரமாக அமல்படுத்த ஏற்கனவே துப்புரவுப் பணிகளில் எந்தச் சமூகத்தினர் எல்லாம் அதிகளவில் இடம்பெற்று பணிசெய்கிறார்களோ அச்சமூகத்தை சார்ந்தவர்களை மறுபடியும் துப்புரவுப் பணிக்கு எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதன் வழியாக அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களுக்கும் துப்புரவுப் பணியில் சமவாய்ப்பினை வழங்க முடியும்.

வருவாய் துறை எத்தனை முக்கியமானதாக அரசுக்கு இருக்கிறதோ அதேபோல்தான் நாட்டு மக்களின் சுகாதரத்தை பேணி காக்கும் பணியும். ஆகவே துப்புரவுப் பணியை வருவாய் துறையை போன்று அரசு பேணி காக்க உத்திரவாதப்படுத்த வேண்டும். அப்போது துப்புரவுப் பணி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வழங்கல், சுகாதரப் பணி போன்றவற்றில் பணிபுரியும் பணியாளர்களை எக்காரணம் கொண்டும் தற்காலிக பணியாளர்களாக நியமனம் செய்யாமல் அவர்களை நிரந்திர பணியாளர்களாக பணியமர்த்தும் போதும், மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான படிகள், சம்பள உயர்வு உள்ளிட்ட இதர சலுகைகளை அரசு வழங்க முன்வரும் போது அவர்களுக்கான பணி பாதுகாப்பு உத்தரவாதப்படும். அப்போது எந்த சமூகத்தினரும் இப்பணியை செய்ய மறுக்கமாட்டார்கள். வருவாய் துறைக்கு அடுத்தப்படியாக இத்துறை முக்கியத்தும் பெற்றதாகவும் மதிக்கத்தக்கதாகவும் அரசு உத்திரவாதப்படுத்தினால் இன்று யாரெல்லாம் துப்புரவுப் பணியை நாம் மேற்கொள்வதா? என ஒதுங்கி நிற்கிறார்களோ அவர்கள் எல்லாம் கண்டிப்பாக எங்கள் சமூகத்திற்கான இடஒதுக்கீடு எங்கே எனக் கொடிப் பிடிப்பார்கள்.

ஆகவே இப்போது ஆட்சியில் இருக்கும் அரசு சமூக நீதிக்கான அரசு. மக்கள் நல அரசு. சமத்துவத்தை போதிக்கும் அரசு என அறிக்கை விடுவதோடு நின்றுவிடாமல் மேற்கண்ட செய்திகளை உள்வாங்கி துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களை எல்லா அரசுகளைப் போன்றுதான் நாங்களும் பேச்சோடு இருந்து கொள்வோம் என இனியும் இருந்தால், தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்ததையும், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்ததையும் தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்!

- மு.தமிழ்ச்செல்வன்