தன் வாழ்நாளில் பகவன் புத்தர், டாக்டர் அம்பேத்கர் இருவரைத் தவிர வேறு யாருடைய சிலைகளும் என் கைகள் செய்யாது என்ற கொள்கை பிடிப்புடன் வாழ்ந்தவர் ஐயா சிற்பி சிவானந்தம். அதனால் இன்று இந்தியா முழுவதும் உள்ள சிலைகளில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலுள்ள டாக்டர் அம்பேத்கர், பகவன் புத்தர் சிலைகள் இவர் கரங்களிலிருந்து உருவானவை.

sirpi sivanandhamஇது வரை எண்ணற்ற சிலைகள் உயிர்ப்புடன் நிமிர்ந்து நிற்பதற்கு ஐயா சிவானந்தம் ஒரு காரணம். அந்த அளவிற்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்.

இன்றைய தமிழ்நாடு அரசாங்கம் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த ஏப்ரல் 14 ஆம் நாளை சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் எட்டடி உயரம் கொண்ட சிலை நிறுவப்படும் என்று ஏப்ரல் 13ஆம் நாள் 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டார்.

நள்ளிரவு 2 மணி அளவில் 8 அடி உயரத்திலும் 600 கிலோ எடையிலும் முழு உருவ வெண்கல அம்பேத்கர் சிலை மணிமண்டபத்தில் வந்து இறங்கியது. மறுநாள் காலை அந்த சிலையை முதலமைச்சர், டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ சிலையை திறந்து தமிழ்நாட்டுக்கு ஒப்படைத்தார்.

இன்று தத்ரூபமாக உயிர்ப்புடன் இருக்கும் அந்த சிலை மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது. இடது புறத்தில், தன்னுடைய கரம் ஒரு புத்தகத்தை மார்போடு அணைத்துக் கொண்டு, வலதுகரம் எல்லா விரல்களையும் மடக்கி கொண்டு ஆட்காட்டி விரலை தீட்டுவதை போலவும் மிக கம்பீரமாக அந்த சிலை நின்று கொண்டிருக்கிறது. மேலும் ஓர் அற்புதமான டைக் கட்டி, கோட் சூட் அணிந்து கொண்டு கோட்டின் மேல்புறம் திறந்தும், அதன் உட்புறத்தில் கொஞ்சம் இறுக்கமாக பிளேசர் போட்டு ஆறு பொத்தான்களை பூட்டியவாறு தங்க நிறத்திலான அந்த வெண்கல சிலை இன்று உயர்ந்து நிற்கிறது.

நெருங்கி பார்ப்போருக்கு மட்டும்தான் அது வெறும் சிலை அல்ல, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உயிருடன் ஒரு புகைப்படத்திற்காக போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்று தோன்றும். இப்படிப்பட்ட இந்த அற்புதமான சிலை ஐயா சிற்பி சிவானந்தம் கரங்களில் உயிர்பெற்று இன்று மணி மண்டபத்தில் நின்று கொண்டிருக்கிறது. இன்று பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், ஐயா சிற்பி சிவானந்தம் அவர்களும் உயிருடன் இல்லை. ஆனால் இருவரும் ஒரே சிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிற்பி சிவானந்தம் அவர்கள் 1944 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். சான்றோர்கள் பிறக்கக்கூடிய தினம் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதற்கு ஐயா சிவானந்தத்தின் பிறந்தநாள் ஒரு சான்று. பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த அதே நாளில்தான் சிற்பி சிவானந்தம் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல அயோத்திதாசர் சிந்தனையும், கொள்கையையும் உள் வாங்கியவர் என்பதும் கவனிக்க தக்கது.

சிற்பி சிவானந்தம் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டையை சார்ந்தவர். அந்தப் பகுதியில் இருந்த மக்கள் SCHEDULE CASTE FEDERATION அமைப்பில் தீவிரமாக செயல்பட்டனர். அவர் இருந்த பகுதி சீனிவாசபுரம் என்கின்ற, தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட பகுதி அது. அந்த அளவிற்கு அவர் சிறு வயதில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரும், சமுதாய தலைவர்களின் பெயரும் கேட்டு வளர்ந்தவர். அதனால் அவருக்கு இயல்பாகவே சாதி ஆதிக்கத்தால் அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்டு, அதிகாரத்தை எதிர்த்து விடுதலை உணர்வு உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி சமுதாயத் தலைவர். அவர் ஒரு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். மக்கள் செல்வாக்கு மிக்கவர். அதனால் மக்கள் பெரும்பாலும் அவரோடு நெருங்கி பழகுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதனால் இளைஞர்கள் ஓய்வு நேரங்களில் அவரை சென்று சந்திப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். ராணிப்பேட்டையில் இருந்து பள்ளிகொண்டா ஊருக்கும் தூரம் சுமார் நாற்பது மைல் தொலைவு இருக்கும். ஐயா பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி மீது அளப்பரிய மரியாதை வைத்திருப்பவர்களுக்கும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கும் அவரை சந்திப்பது பெரும் தூரம் இல்லை.

மிக இளம் வயதில் சிவானந்தம் அவர்களும் ஒரு நாள் ஐயா பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியைப் பார்ப்பதற்காக நண்பர்களுடன் மிதிவண்டியில் சென்றிருக்கிறார். அவரிடம் உறவாடிய பிறகு, வீட்டுக்கு செல்லலாம் என்று நினைத்தபோது மாலை நேரமாகி விட்டது. அதனால் தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அந்த அன்பு கட்டளையை ஏற்று அன்று இரவு அங்கே தங்கி விட்டனர். அன்றுதான் சிவானந்தம் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அந்த சிறு வயதில் பசுமரத்து ஆணி போல் ஆழமாக பதிந்தது. அன்று இரவு கொஞ்சம் நெருப்பை மூட்டி எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொண்டு பேசும் பொழுது, தளபதி கிருஷ்ணசாமி அவர்கள் சிவானந்தத்திடம் ஒரு வார்த்தையைச் சொல்கிறார். அந்த ஒத்த வார்த்தை தான் அவர் திசைவழிப் பயணத்தை மாற்றி அமைத்தது. இதுவரைக்கும் எண்ணற்ற தலைவர்களை உருவாக்குவதற்கும், சிலைகளாக செய்வதற்கும் நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் சிலையை வடிப்பதற்கு தான் இங்கு ஆட்கள் இல்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த ஒரு சொல் தான் அவரை உயிர்ப்போடு வைத்திருந்தது. தான் இறக்கும் தருவாயில் வரை டாக்டர் அம்பேத்கர் சிலையையும், பகவன் புத்தர் சிலையையும் தவிர வேறு யாருடைய சிலைகளும் என்னுடைய கரங்கள் செய்யாது என்ற உறுதியான கொள்கையோடு பயணித்தவர்.

சிற்பி அவர்கள் சிலை வடிக்கும் அழகைப் பார்த்த பலரும் அவரிடம் காமராஜர் சிலை, அண்ணாதுரை சிலை, எம்ஜிஆர் சிலை, உள்ளிட்ட சிலைகளை செய்வதற்கு நிறைய பேர் அணுகினார்கள். மட்டுமல்ல கடவுள், தெய்வங்கள் சிலைகளையும் செய்வதற்கு வாய்ப்புகள் ஏராளம் ஏராளம் அவருக்கு கிடைத்த வண்ணம் இருந்தன. கிடைத்த அந்த வாய்ப்புகளை எல்லாம் மிகச் சாதாரணமாக கடந்து விடுவார். தனக்கு நேரமில்லை, என்னால் அந்த சிலைகளை செய்ய முடியாது என்று புறங்கையால் அந்த வாய்ப்புகளை தட்டிக்கழித்து விடுவார். சமயத்தில் வீட்டில் உள்ளவர்கள் ஏன் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று ஆலோசனை சொல்லும் பொழுது நாம் அம்பேத்கர், புத்தர் சிலைகள் மட்டும் செய்வோமே என்று எடுத்துச் சொல்லி அவர்களையும் தன்வசப்படுத்தி விடுவார். அந்தளவிற்கு தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியின் வார்த்தை அவர் உயிரிலும் உடலில் இரண்டரக் கலந்துவிட்டது.

Parry ware companyயில் பணிக்காக நேர்காணலுக்கு சென்றார். மிகக்கடுமையான சிலை ஒன்றை செய்யச் சொல்லி தேர்வு நடத்துகின்றனர். ஒரு ஃபாரின் குழந்தை, ஃபிராக் அணிந்து, காலில் சரியாக பொருந்தாத பெரிய அளவில் ஒரு க்ஷு அனிந்து கொண்டிருக்கும். அந்த தலையில் ஒரு பெரிய தொப்பியும், அந்த தொப்பியைத் தாண்டி தலை முடி நீண்டு கொண்டிருக்கும். அந்த முடியில் ரிப்பன் கட்டப்பட்டு இருக்கும். அந்தக் குழந்தையின் கால் பகுதியில் ஒரு வாத்து வந்து முட்டிக் கொண்டிருக்கும். அதை அந்த குழந்தை மிக ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும். இவ்வளவு நிகழ்ச்சிகளையும் ஒரு சிலையாக செய்ய வேண்டும். அதை மோல்ட் எடுத்து Productக்காக மாற்ற சொல்லி இருந்தார்கள். ஒரு நேர்காணலில் மட்டுமே இவ்வளவு கடுமையான தேர்வு. இவை அனைத்தையும் இயல்பாகவும் சிறப்பாகும் செய்து முடித்தார். இதனால் அவரை அந்த கம்பெனி பணியில் அமர்த்தியது.

ஒரு நல்ல நிறுவனத்தில் பயின்றவர். நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர். கடுமையான போட்டிக்கு பிறகு வெற்றி பெற்றவர். இப்படிப்பட்ட திறமைசாலியாக இருந்த அவருக்கு அந்த நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்க வேண்டும். நிச்சயம் வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு அந்தப் பதவி வழங்கி இருப்பார்கள். ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவருக்கு எப்படி உயர் பதவியை வழங்க முடியும்? என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்து விட்டனர். அதனால் அந்த நிறுவனத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக தான் அவர் தன்னுடைய பணியைச் செய்வதற்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இந்தத் தகவல் அவருக்கு தெரிந்தபோது பெரிய வருத்தத்தை தந்தது. அந்த வருத்தம் தான் ஒரு சாதாரண தொழிலாளி என்பதனால் அல்ல. மாறாக இது போன்ற பதவிகளுக்கு உண்டான தகுதியைக் கொண்டிருந்த போதிலும், போயும் போயும் சாதியைக் காரணம் காட்டி தனக்கு கிடைக்க வேண்டிய அதிகாரமிக்க பதவியை கொடுக்க மறுத்து விட்டார்கள் என்பதனால் அவருக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அப்பொழுது அந்த நிர்வாகத்தின் கீழ் பணி செய்த கடைநிலை ஊழியர் ஒருவர் இதை உறுதிப்படுத்தினார். அந்த நேர்காணல் முடிந்த பிறகு அவர்கள் பேசிய வார்த்தையும், எடுத்த முடிவும், உறவாடிய சுடு சொற்களும்…. போயும் போயும் ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு உயர் பதவியை எப்படி கொடுக்க முடியும்.

எந்த பாரிவேர் நிருவாகம் உயர் பதவியை வழங்க மறுத்ததோ, அதே நிறுவனத்திற்காக தென் ஆப்பிரிக்கா வரை சென்று போராடி நீதிமன்றத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வாகைச் சூடி வந்தார்.

EID Parry Company என்பது பிரிட்டிஷ் நிர்வாகத்தைச் சார்ந்தது. தற்போது அதை முருகப்பா கம்பெனிக்கு விட்டு விட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்று. அது ஒரு வாஸ்பேஷன் போல சிங்க் போல இருக்கும் மாடல். அந்த மாடலை இஐடி பாரி கம்பெனி பயன்படுத்துவதை எதிர்த்து மற்றொரு கம்பெனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அது தென்னாப்பிரிக்காவில் நடந்த வழக்கு. நீதிமன்றம் இரண்டு நிர்வாகத்திற்கும் போதுமான கால அவகாசம் கொடுத்து அவரவர்களுடைய மோல்டை நேரடியாக நீதிமன்றத்திற்கு ஒப்படைக்குமாறு கூறியது. தொடர்ந்து 10 நாட்களாக அவர்கள் செய்யும் இந்த மாடலை காணொலிக் காட்சி மூலமாக பதிவு செய்து, அவர்கள் செய்த அந்த வீடியோக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சிற்பி சிவானந்தம் அவர்கள் பேட்டனை முறையாக வரைந்து, மோல்ட் எடுத்து உருவாக்கி அதன் பிறகு அந்த பொருளை செய்து முடித்தார். இதை பார்த்த நீதிமன்றம் இஐடி பாரி கம்பெனி செய்தது தான் உண்மை என்று தீர்ப்பு அளித்தனர்.

எந்த நிறுவனத்தில் தகுதியும் திறமையும் இருந்த பிறகும் முறையாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவியை வழங்க மறுத்தார்களோ அந்த நிறுவனத்தின் பெருமையையும், சிறப்பையும் உலகறிய செய்தவர். ஒரு கடைநிலை ஊழியராக சேர்ந்தவர் மிக உயர்ந்த பதவியாக சீஃப் டிசைனர் என்கின்ற பதவி வரை தன்னுடைய தகுதியால் உயர்வு பெற்றவர் ஐயா சிற்பி.

இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனாலும் அவர் செய்த சிலைகளில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பகவான் புத்தரும் உயிர் பெற்று நிற்கிறார்.

பேரா. எ.பாவலன்