தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழர்களின் பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது, நம் தமிழ் இலக்கியங்கள் ஆகும். தனி மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து, படைக்கப்பட்ட இலக்கியங்களில், நமக்குச் சாதகமானதை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். எதிர்மறையானச் சிந்தனைகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை நமக்கு நல்லது அதாவது நமக்குப் பிடித்தமானவைகளை, நமக்கு ஏற்றவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் மன எண்ணமாகக்கூட இருக்கலாம். அந்தவகையில் நாம் சங்க இலக்கியங்களில் உள்ள வாழ்க்கை அறத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் காணலாம்.

நட்பு – இவ்வார்த்தை இலக்கியங்களால் பலவகைகளில் எடுத்தாளப்பட்டு விட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசர் புலவர் நட்பு. அவர்களில் அதியமான் – அவ்வை நட்பு, பிசிராந்தையார் – கோப்பெருஞ்சோழன் நட்பு, பாரி – கபிலர் நட்பு, சேரன் இரும்பொறை - பொய்கையார், குமணன்- பெருந்தலைச்சாத்தனார் என்று அரசர் புலவர் பற்றிய நட்பினை பல பாடல்களில் நம்மால் அறிய முடிகிறது. கல்வியிற் சிறந்த புலவர் பெருமக்களை, வருமையில் வாடிய கூத்துக் கலைஞர்களை ஆதரித்து, அவர்களுக்கு வேண்டிய பரிசுப் பொருள்களைப், போதும் என்றளவிற்கு அளிப்பது அரசர்களின் பெருமை. புலமைக்கேற்ற பொன்னும் பொருளும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை நல்கிய நிலமும், பாட்டுக்கு ஒரு பொன் தேங்காயும், யானை, குதிரை, தேர்களையும், ஆயளை நீட்டிக்கும் நெல்லிக் கனியையும் கொடுத்த அரசர் பெருமக்களையும், குறுநில மன்னர்களையும், வள்ளல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.

தன்னை நாடி வந்த இரவலர்களுக்கு இல்லை எனாது பரிசில் தர வேண்டியது புரவலர்களின் கடமை. ஒருவேளை பரிசுகளை கொடுக்கவில்லை என்றால் அதற்காகவும் புலவர்கள் வருந்தியதில்லை, தங்கள் ஊழ்வினையை நினைத்தே வருந்தியிருக்கின்றனர் என்பதை கழைதின்யானையார் பாடல் உணர்த்துகிறது. சங்ககாலப் புலவராகிய கழைதின் யானையார் பெருங்கொடை வள்ளல்களில் ஒருவராகிய வல்வில் ஓரியைக் கண்டு பரிசில் பெற கொல்லிமலை செல்கிறார். வன்பரணர் போன்றோர் வல்வில் ஓரியிடம் பரிசில் பெற்று சிறப்பெய்தியவர்கள். அம்மன்னனிடம் “ஈவோர்க்கும் ஏற்போருக்கும் இடையே உள்ள உயர்வு தாழ்வுகளை எடுத்துக்கூறி உண்ணும் நீர்நிலை சேறுபட்டதாக இருந்தாலும் அதனை நாடிச் செல்பவர்கள் பலராக இருப்பதுபோல், வரையா ஈகையுடையாரை காணப் பலரும் வருவர், வருபவர்கள் நினைத்ததுபோல் பரிசுப்பொருள் கிடைக்கவில்லையாயினும் தம்மை நொந்து கொள்வார்களே அல்லாமல் கொடாதோரை நோவார். ஆனாலும் மனதார வாழ்த்திவிட்டுச் செல்வர் என்ற பொருளமைந்த பாடலைப் பாடுகிறார்.

தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீாவேட் டோரே
ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
சேறோடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்
புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழித்த பழியல ரதனாற்
புலவேன் வாழிய ரோரி விசும்பிற்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே (புற.204)

என்று பாடிச் செல்கிறார். பரிசில் பெற அரசனை நாடிச்சென்று பரிசில் பெறுவதற்கு ஒரு புலவர் பட்ட துன்பத்தையும், பரிசில் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அவரின் வருத்தத்தையும் சங்க இலக்கியப் பாடல்கள் சில வெளிப்படுத்துகிறன.

குடநாட்டுத் தலைவனாய் விளங்கியவன் குடக்கோச் சேரலிரும்பொறை. பொறையர் நாட்டை ஆட்சி செய்ததால் பொறையன் எனப்பட்டான். செல்வக் குறைபாடு இல்லாதவனாயும், புலவரைப் போற்றும் வேந்தனாய் விளங்கியதைக் கேள்வியுற்ற பெருங்குன்றூர்க்கிழார் தன் வறுமையைப் போக்கிக் கொள்ள சேரலிரும்பொறையை நாடுகிறார். தனது வறுமை நிலையைப் பலவகைகளிலும் எடுத்துரைக்கிறார். பரிசிலை அள்ளிக் கொடுப்பவன் போல பாவனை செய்கிறான். ஆனால் எந்தப் பரிசிலையும் கொடுக்கவில்லை. அவனது இந்தச் செயலைக் கண்ட பெருங்குன்றூர்க்கிழார் மனம் உடைந்து “தோன்றலே உன்னை நினைத்து நீ தரும் பரிசிலை வேண்டிவந்த பரிசிலருள் நானும் ஒருவன். இரவலர்க்கு அள்ளித் தரும் உன் வள்ளன்மையையும் அன்பையும் கண்டு எமக்கும் அருள்வாய் என்று நினைத்தேன். முன்னர் நீ செய்த குறிப்பால் பரிசில் என் கைக்கு வந்துவிட்டதென்றே நான் கருதச் செய்தாய். பின்னால் அது குறித்து ஏமாந்து வருந்துமாறு என்னைச் செய்தாய். என் வருத்தம் கண்டு நீ நாணவில்லை. ஆனால் நான் நீ நாணுமாறு என் நாவால் பலமுறைப் புகழ்ந்து பாடினேன். என் பாடுபுகழை நீ ஏற்றுக் கொண்டாய் உண்ண உணவின்மையின் என் மனையில் வாழும் எலி தானும் பசித்து மடிந்து கிடக்கும் சுவரைச் சார்ந்து என் மனைவி மெலிந்திருக்க, பாலின்மையால் மார்பிற் பால் சுவைத்து அது பெறாது பாலுண்டலையே மறந்தொழிந்த நிலையிலிலுக்கும் பிள்ளையையுடைய அவளை நினைத்துக் கொண்டு செல்கிறேன். செல்லும் யான் நின்னைத் தொழுது விடைபெற்றுப் போகிறேன்" (புற. பா.எண் 211) என்று கூறி விடை பெறுகிறார். இப்பாட்டைப் பாடிய இரண்டொரு நாள் கழித்து பின்னரும் சேரமான் பரிசில் நீட்டித்தானாக, ‘மன்பதை காக்கும்’ (புற. பா.எண் 211) என்று தொடங்கும் பாட்டைப் பாடி நீங்குகிறார் பெருங்குன்றூர்க்கிழார்.

“இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை
விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வனிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறுத்தே” (புற. பா.எண் 211) 

புலவரின் பரிசில் பெறாத தன்னிரக்க நிலையை இப்பாடலில் காண முடிகிறது.

பெருங்குன்றூற்கிழாற்கு மட்டுமல்ல, இன்னொரு புலவர்க்கும் இதே நிலைதான்.

கோடைமலையின் (இன்று கொடைக்கானல்) அடிவாரத்தில் கடியம் என்னும் ஊரின் தலைவன் கடியவேட்டுவன். “தன்னை நாடிவந்தார்க்கு பரிசில் நல்குபவன் என்று புரவலர்களால் போற்றப்பட்டவன். பகைவர்களின் வலிமையை கருத்தழிவிக்கும் காட்டாண்மையுடையவன். கடலுக்குச் சென்ற முகில் நீரின்றி பெயராது என்பது போல் நெடுவேட்டுவனைக் காணச்செல்லும் புலவர் அவனது கொடைநலத்தைப் பெறாமல் சென்றது கிடையாது என்று புகழப்படுபவன்”. இத்தகையப் புகழ் கொண்ட கடியவேட்டுவனைக் காண பெருந்தலைச்சாத்தனார் செல்கிறார். ஆனால் என்ன காரணத்தாலோ சாத்தனார்க்கு வேண்டிய பரிசிலைத் தராது நீட்டிக்கிறான். அவனது கருத்தைத் தெரிந்து கொள்ள முடியாத சாத்தனாருக்கு வருத்தம் ஏற்படுகிறது. ஆனாலும் அவனை மனதார வாழ்த்தி விட்டுச் செல்கிறார். கடலுக்குச் சென்ற முகில் நீரின்றி திரும்பாது. ஆதுபோல உன்னை நாடி வந்தவர்கள் களிறுடனும், தேருடனும் செல்ல நான் மட்டும் ஒன்றும் இல்லாதவனாய்ச் செல்கிறேன். ‘நீ நோயின்றி நீண்டநாள் வாழ்வாயாக’ என்று வாழ்த்தி விடைபெறுகிறார்.

“நோன்சிலை வேட்டுவ நோயிலையாகுக
ஆர்கலி யாணர்த் தரீ இய கால்வீத்துக்
கடல்வயிற் குழீ இய வண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா வாங்குத் தேரொ
டொளிறுமருப் பேற்திய செம்மற்
களிறுமருப் பேந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே” (புறம் -205)

புரவலர்களிடம் பொருள்பெற்று மகிழ்ச்சியாய்ச் சென்றவர்களை மட்டுமே நாம் இலக்கியங்களில் படித்திருக்கிறோம். ஆனால் புரவலர்களிடம் பொருள்பெறாது சென்றவர்களையும் காண முடிகிறது. அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும். மனிதர்களி்ன் இன்னொரு முகத்தைக் காண்பதற்கு இலக்கியங்கள் உதவியாய் இருக்கின்றன.

- முனைவர் தி.பரிமளா
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
பசுமலை. மதுரை