ஒற்றை பொத்தான் கையில் கொண்டு சதுர பூமியை நொடிக்கொரு தரம் லெப்ட்... ரைட்... கீழ... மேல என்று புரட்டி எடுக்கும் காலம் அல்ல அது. அது கேபிள் டிவியைக் கூட சன் டிவி என்ற காலம். என்ன நிகழ்ச்சி போடுகிறார்களோ அது தான் என்டர்டைன்மெண்ட். நேரத்துக்கு நேரம் மாறும் புத்தி இல்லை என்று தான் நினைக்கிறேன். அதுவா இதுவா எனும் போது மீண்டும் குரங்கு வனம் தான் மனதுள். சாய்ஸ் இல்லாத போது மனத்தில் சாந்தம் இருந்தது.

அதற்கும் சற்று முந்தைய சாய்ஸ் இல்லாத சட்டில்டு கால கட்டத்தில்..... ஆன்டெனா என்றொரு வஸ்து இருந்தது. செம்பு கம்பியில் சற்றே பெரிய சீப்பு போல ஒற்றைக் காலில் டிவி உள்ளோர் வீட்டு வாசலில் தவம் இருக்கும். வாசலில் ஆன்டெனா இருப்பது கூட ஒரு வகை பெருமை தான். கலர் டிவியா கருப்பு வெள்ளை டிவியா என்பது விஷயம் இல்லை. வெளியே பற்களைக் காட்டிக் கொண்டு ஆன்டெனா வரவேற்க வேண்டும். உறவினர்கள் மத்தியில் ஆன்டெனா சக அந்தஸ்து.

காற்றடித்தால் கண்கள் மூடிக்கொள்ளும் அதன் ஒவ்வொரு விரலும் கண்ணாமூச்சி காட்டும். ஒருவர் வெளியே சென்று ஒற்றை இரும்பு காலை வழுக்காமல் பிடித்துக் கொண்டு திருப்பி திருப்பி அட்ஜஸ்ட் செய்ய... டிவிக்கு அருகே உள்ளவர் "ஆஹ்.... ஓகே... இன்னும் கொஞ்சம் இந்த பக்கம்.. இந்த பக்கம்... போதும் போதும்... இல்ல இல்ல அந்த பக்கம்... திரும்பவும் இடது பக்கம் லைட்டா...ம்ம்ம்ம்.. ஓகே ஓகே விட்ரு" என்று கத்த வேண்டும். அதில் இருக்கும் ஆனந்தம் அப்பப்பா அதுவரை நெளிந்து நெளிந்து பாம்பு வால் ஆட்டிய பட சுருள்கள் நேராக வந்து டிவி திரையில் அமர்ந்து விடும் அந்த நொடி... "கடவுளைக் கண்ட கணமே..." என்றாகிப் போகும்.

பெரும்பாலும் வால்பாறையில் தமிழ் சேனல் எடுக்காத காலம் அது. காலை மாலை மதியம் நள்ளிரவு எப்போதுமே மலையாளம் தான். மாலை நேரங்களில் மலையாள செய்திகள்.. மலையாள நாடகங்கள்... சனி ஞாயிறுகளில் மலையாள சினிமாக்கள். அப்படி தான் மோகன்லாலும் மம்மூட்டியும் பழக்கமானது. மலையாள மொழியில் இருக்கும் குழைவும் ஆச்சரியமும் எப்போதும் விசித்திரத்தை உள்ளே நிரப்பிக் கொண்டே இருக்கும். அதுவும் பெண்கள் பேசுகையில் வரும் அந்த "அய்யடா...." அடடா. சமையல் குறிப்புகளில் வரும் சேச்சிகளின் பேச்சு வெளியே அடிக்கும் மழைக்கு சுட சுட கமகமக்கும் போண்டா பஜ்ஜி.

கம்பளிக்குள் சுருண்டமர்ந்து காணும் டிவியில் மலையாள வாசம் மழைக்கு நேசம் தான் போல என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

பிறகு கேபில் டிவி வர... தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தமிழ் படம் போட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு டெக் எடுத்து நாமே படம் பார்த்துக் கொள்ளும் காலமும் வந்தது. அதுவும் டெக் எடுத்து படம் போடுகையில்... படம் ஆரம்பிக்கும் முன் வரும் வண்ண கோடுகள் சினிமாவின் கலர் கனவுகளை கண் முன்... நொடி நேரம் காட்டி போகும்.

பிறகு சன் டிவி வந்தது. தொலைக்காட்சியில் நாகரீக வளர்ச்சி. பரிணாமம் பெட்டி பெட்டியாய் வளர்ந்தது...அதன் பிறகு தான்.

கடலுக்குள் இருந்து சூரியன் எழும்பி சுழன்று சில சித்து வேலைகளை காட்டி விட்டு நின்ற பிறகு "நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" என்று கம்பீரமாய் ஒரு குரல் ஒலிக்கும். கண்களில் புன்னகை பொங்க பார்த்திருக்கிறேன். ஆவி பறக்கும் கருப்பு தேநீரோடு ஸ்வெட்டெர் சகிதம் குல்லாவோடு கன்னம் புடைக்கும் சிரிப்புக்கு சமம் வேறொன்று இல்லவே இல்லை.

நிம்மதி நம் சாய்ஸ் தான் என்பது போல சில்லென்று பெட்டில் அமர்ந்து டிவியை குடும்பத்தோடு கண்டதெல்லாம் கனவு காட்சி போல இருக்கிறது.

ம்ம்ம்ம்....பெரும்பாலும் 80 களில் பிறந்தவர்களுக்கு தான்...MSV யையும் உள் வாங்க முடியும். ராஜாவையும் உணர்ந்து கொள்ள முடியும். ரஹ்மானையும் புரிய முடியும். அனிருத்தையும் ஆளாவ முடியும். அந்த வகையில் ஆன்டெனாவில் அமர்ந்திருக்கும் தூரத்து நினைப்பை கையாட்டி ஓட்டி விடாத மனமே இந்த வரிகளில் காகத்தின் கழுத்தாய் திரும்பி திரும்பி யோசித்துக் கொண்டிருக்கிறது.

- கவிஜி