ஷேக்ஸ்பியருக்கு வேண்டுமானால் இந்த உலகம் நாடக மேடையாக இருக்கலாம். எனக்கு இந்த உலகம் ஃபிரேம்களால் ஆனது.

நகர்ந்து கொண்டே இருக்கும் காட்சி படிமங்கள் தான் காணுபவையெல்லாம். அவ்வப்போது நின்று நகர்ந்து கொண்டே இருக்கும் தன் காட்சிகளை தானே காணுதல் உள்ளிருக்கும் எழுதுபவனுக்கு வாய்த்திருக்கிறது. இவ்வாழ்வில் நிகழ்வது எல்லாமே ஒரு சினிமா மாதிரி தான். அவரவர் கண்களின் விரிதலுக்கு தக்க வெளியே திரை இருக்கிறது. நகரும் வேகத்தில் எல்லா ஃபிரேம்களும் கண்களில் பதிவதில்லை. காலத்தில் பதிந்த சில ஃபிரேம்களை கண்களும் பொத்தி வைத்திருக்கும். அவ்வப்போது காலமும் கொத்தி பார்த்துக் கொள்ளும்.

வழக்கமான சிமிட்டல் இல்லாத நாளில் மீண்டும் ஒரு முறை வாழ்ந்து தான் பார்க்கிறது வரிசைகளற்ற நினைப்புகள்.

மீண்டும் மழை பெய்ய காத்திருக்கும் தலை கீழ் குடையாகத்தான் முப்போதும் இந்த மனது. கிட்ட பார்வைக்குள் தூரத்து பறவை ஒருவேளை சிறகடிக்க மறக்குமோ. நிறுத்தி நிதானமாக நிகழும் ஸ்தம்பித்தல் ஆழ் மன சதுரத்தில் இருக்கிறது. பிரியங்களின் வழியே நிகழும் ஃபிரேம்கள் புத்திக்குள் பூத்துக் கொண்டேயிருக்கும். மிக மெல்லிய கோட்டில் முன்னுமற்ற பின்னுமற்ற சமதளத்தில் இன்று நினைவில் நிழலாடிய ஃபிரேமை சொல்கிறேன்.

படிக்கட்டுகள் நிரம்பிய பழைய கருப்பு வெள்ளை காட்சி அது. பூவாசம் வீசும் புதிர் தேசம் போல மினுமினுக்கிறது இன்று. மனம் சுழன்று நினைப்பில் நீந்தி ஃபிரேம்க்கு முன் நிற்க கண்கள் மூடி இன்னொரு முறை காண்கிறேன்.

இரண்டாம் படியோ மூன்றாம் நான்காம் படியோ என்று நினைக்கிறேன். என் நிற வண்ணத்தில் புடவை. பொன்னிற வண்ணத்தில் புன்னகை. பெண்ணின் நளினத்தில் அமர்வதெல்லாம் பேரின்பம் காண்போருக்கு. உள்ளே இதயத்தில் வெற்றிலை வடிவமோ என்னவோ. முதல் முறை வெட்கப்பட்டவளின் வேதாந்தம் கன்னம் உப்பி காட்டிக் கொடுத்தது. வயலின் யார் வாசிக்க வாக்கியம் தான் சுவாசிக்கும். இடைவெளியில் இசைவெளி கண்டதெல்லாம் இனிது இனிது எங்கோ இனிது. இதழ் வழியே விரியும் ரசனை வார்த்தைக்கு வார்த்தைக்கு விஜி என்றது. மொழியற்ற எனக்கோ முகம் காணும் போது வார்த்தை தான் எதற்கென்றது.

கால் முட்டி... நெஞ்சை மறைக்க... கைகள் முட்டியோடு அணை கொடுத்து படிக்குள்ளிருந்து பூத்து விட்ட பெண் புத்தரோ என்று கூட இன்று தோன்றுகிறது. கருப்பில் மினுங்கும் காற்றின் இயக்கம் சிரிக்க... சிரிக்க நான் படிக்கட்டுகளின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடி கம்பிகளில் சாய்ந்து நிற்கிறேன். இடது கால் மேல் படிக்கட்டில் இருக்க வலது கால் கீழே இறங்கும் படிக்கட்டில் இருக்க... சமதளமாக சரிந்து தான் நின்றிருக்கிறேன். இரு கைகளும் சிலுவையைப் போல கம்பிகளில் சரிந்திருக்க... ஒரு இளம் காதலனின் காவிய தோற்றம் அது. முதல் மாடி என்றதால் மூச்சு முட்டி ஜன்னல் புகும் காற்றெல்லாம் என் கேசம் கலைக்க... அவள் பார்க்க பார்க்க வளர்ந்து விட்ட ஆணோவியம் நானானேன்.

என்ன பேசினோம் என்று மறந்து விட்டேன். ஏதாவது பேசினோமா என்றும் மறந்து விட்டேன். புன்னகை தவழும் இடைவெளியெல்லாம் நின்றுகொண்டே நகரும் எஸ்கலேட்டர் தான். வயசாகாத வாடைக்காற்று வனத்திலிருந்து நேராக வந்திருக்கிறது போல.... சரிந்து நின்ற நானோ இடது புறம் அவளை பார்த்துக் கொண்டே நிற்கிறேன். அமர்ந்திருந்த அவளோ நிமிர்ந்தபடி நிற்கும் ஜீன்ஸ் ஜீசஸ் என எனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். காதலின் வேண்டுதல் அங்கே சரிந்தபடி வரைந்திருந்தது.

அது ஒரு தோழியின் அக்காவின் திருமணம். நண்பர்கள் அரங்கில் இருக்க... நாங்கள் மொட்டைமாடி செல்லும் படியில் இருந்தோம். ஓவியத்துள் நுழைந்து விட்ட அக்கா ஒருத்தி...." அடேய்.. விஜய்யா..... என்னடா நடக்குது" என்று இடையில் நின்று இருவரையும் மாறி மாறி பார்த்து தலையாட்டி போனாள். காதலை தாலாட்டி போனது போல தான் உணர்ந்தேன். நாங்கள் சொல்லாத எங்கள் காதலை எங்களுக்கு சொல்லி போன போது ஓவியம் கலைந்திருந்தது. காதலின் ஓவியம் கலைகையில் தான் கவர்ச்சி கூடுகிறது.

ஒளி கூடி ஃபிரேம் ஆன சதுரம் உள்ளே காட்சியாகி காலம் சுமக்கிறது. காதலால் ஆனவனுக்கு காதல் தான் காலம். நினைத்ததும் நெற்றிக்கு நடுவே நிறுத்தி காணும் அந்த ஃபிரேம் மீண்டும் தன்னை சுருக்கி புள்ளியாகி நினைப்புக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் அற்புதம் அன்றும் இன்றும் என்றும் ஆயுசுக்குமான கிளிக்.

இன்றும் எட்டிப்பார்க்கிறேன். மனதுக்குள் பேரொளி. மௌனத்தில் அந்த தூரத்து ஃபிரேம் துளி.

- கவிஜி