மண்ணுக்கடியில் மறைந்து கிடக்கும் வைரத்தைப் போல, பரண்களில் பதுங்கிக் கிடக்கும் பண்பாட்டுப் புதையல்போல், நீருக்குள் மின்னிக் கிடக்கும் பவளத்தைப்போல், நீல வானுக்குள் ஒளிந்து கிடக்கும் மணிகள்போல் கண்ணுக்குப் புலப்படாமலும், புலப்பட்ட சிலவும் புரியாத நிலையிலும் இருந்த அமுதத் தமிழை, இனிய தமிழிலக்கியத்தை அரச அணிமணியாகப் புலவர் பெருமக்களால் அணிவிக்கப்பட்டுவந்த அருந்தமிழை 'ஸ்ரீநமோ நாராயணா” எனும் துறக்கத்திற்கு இட்டுச் செல்லுவதாகக் கூறப்படும் சொற்கூட்டத்தை எல்லோருக்கும் அருளிச்சென்ற இராமானுசர்போல் எல்லா மக்களுக்கும் அள்ளிஅள்ளிக் கொடுத்தவர் பாரதி. அந்தப் பாரதியின் வழிநின்று உணர்வையும் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

surathaபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாட்டுப் பட்டறையில் பட்டை தீட்டிக்கொண்ட பாவலர்கள் இருவர். ஒருவர் பாட்டுக்கோட்டை எனப் புகழப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம். அவர் எழுதத் தொடங்கும் போதெல்லாம் 'பாரதிதாசன் வாழ்க' என்று எழுதிவிட்டுத் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர்.

அடுத்தவர் 'நான் ஒரு கவிஞன். அதைவிட நான் ஒரு நல்லவன்" என்று பறைசாற்றியவர். பாரதியைவிட மிஞ்சியவன். பாரதிதாசனைக் காட்டிலும் சிறந்தவன், சங்கப் புலவர்களைக் காட்டிலும் ஒருபடி மேலே சென்றவன், பெரியாரைவிட மிகுந்த பகுத்தறிவு மிக்கவன், காந்தியைவிட ஒழுக்கம் மிக்கவன் என்று தன்னைப் பற்றிய மதிப்பீட்டை உலகுக்கு அறிவித்தவர்.

உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் - இந்த
உலகத்தில் போராடலாம்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்

என்னும் பாடல் அடிகளுக்கு ஏற்பத் தன்னை அறிந்துகொண்டும் புரிந்து கொண்டும் வாழ்ந்தவர் உவமைக் கவிஞர் சுரதா.

பாவேந்தரின்பால் மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்ட சுரதா தம் பெயரைப் பாவேந்தரின் இயற்பெயரான சுப்பு ரத்தினத்துடன் 'தாசன்' எனும் பின்னொட்டைச் சேர்த்துச் சுப்பு ரத்தின தாசனாகிப் பின் சுரதா ஆனார். இவரின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டத்தில் பழையனூரில் 23.11.1921இல் பிறந்தவர். அர.திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் இவரின் பெற்றோர்.

சுரதா அவர்கள் பாவேந்தரின் தலைமாணாக்கர்களில் முதன்மையானவர். இலக்கியம் படைப்பவர், திரைப்பட உரைஞர்; மற்றும் பாடலாசிரியர், நடிகர், சிறுகதையாளர், இதழாசிரியர் எனப் பன்முக இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர்.

சாவின் முத்தம் என்னும் முதல்நூல் தொடங்கி, தேன்மழை, துறைமுகம் முதலான ஆகச் சிறந்த நாற்பது நூல்களின் ஆசிரியர்.

என்னும் சிறிய அறிமுகத்துடன், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கையாளர் பெருஞ்சிறப்பு மிக்க பாவலர் சுரதாவின் படைப்புகளில் பொதுவுடைமை என்னும் தலைப்பில் இந்தக் கட்டுரை அமைகிறது.

பொதுவுடைமை குறித்துப் பாவேந்தர்,

இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால்
அண்டை வீட்டானுக்கு ஒன்று அளித்தல் சோசலிசம்
கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக்
காளை வாங்குவது காபிடலிசமாம்
அவ்விரண்டினையும் ஆள்வார்க்கு விற்றுத்
தேவைக்குப் பால்பெறச் செப்பல் கம்யூனிசம்.

என்று பாடுகிறார்.

இரண்டு பசுக்கள்; ஒருவரிடத்தில் இருந்தால் அவற்றுள் ஒன்றை ஏழ்மை நிலையில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்க்குக் கொடுப்பது ஷஎல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்; என்று எண்ணுகின்ற சோசலிசம் என்றும்,

இரண்டு பசுக்களில் ஒன்றை விற்று, அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் ஒரு காளையை வாங்கி மாடுகளின் எண்ணிக்கையை அதிகமாக்கிப் பெரும்பொருள் ஈட்ட எண்ணுவது முதலாளித்தும் என்றும்

இரண்டு பசுக்களையும் அரசிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் தேவைக்குப் பாலைப் பெற்றுக்கொள்வது பொதுவுடைமை என்றும் பாவேந்தர் சோசலிசம்-முதலாளித்துவம்-பொதுவுடைமை ஆகியவை குறித்த எளிமையான பொருத்தமான விளக்கத்தைப் பாடல் மூலம் விளக்குகிறார்.

பாவேந்தரின் இந்தக் கூற்றும்,

எல்லோரும் ஓர் நிறை
எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்

என்ற பாரதியின் பாடல் அடிகளும் பொதுவுடைமைக்கான சரியான விளக்கத்தைத் தருகின்றன. உவமைக் கவிஞர் சுரதாவும் பொதுவுடைமைக்கான விளக்கத்தை,

சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோசியலிசம் - நாட்டைச்
சுரண்டும் கூட்டந்தான் கேபிடலிசம் - ஏழை
துடித்தெழுந்தால் வரும் சமரசம்.

என்னும் பாடல் மூலம் தருகிறார்.

கதிரொளி, மழை, காற்று முதலானவை போன்று இந்த உலகத்தின் இயற்கை வளங்கள் அனைத்தும் அனைவர்க்கும் உரிமையானவை. இவை போன்ற நாட்டின் வளங்களைச் சுரண்டிக் கொழுப்பதுதான் முதலாளித்துவம். உரிமை பறிக்கப்பட்ட ஏழைகள் துடித்தெழுந்தால் பிறப்பதே பொதுவுடைமை என்று சத்தியம் தவறாதே என்னும் திரைப்படத்திற்காகத் தீட்டிய பாடல் அடிகளில் பொதுவுடைமைக்கான விளக்கத்தை உவமைக் கவிஞர் தருகிறார்.

பாவலர் சுரதாவின் இப்பாடலடிகள்,

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ

என்னும் பாவேந்தரின் உலகப்பன் பாட்டையும், பாண்டியன் பரிசில் வருகின்ற

எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்ப தான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்
பொருளுடையோன் திருட்டை வளர்க் கின்றான்
பொதுவுடைமை யோன்திருட்டைக் களைவிக் கின்றான்

என்னும் பாடல் அடிகளையும் நினைவுபடுத்துகிறது.

பாவலர் சுரதா

ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி செய்யக்கூடாது
மக்களின் எண்ணங்கள்தான் ஆள வேண்டும்

என்னும் உரையாடலை மங்கையர்க்கரசி திரைப்படத்தில் எழுதியுள்ளார். இந்த உரையாடல் சுரதாவை ஒரு பொதுவுடைமைப் பாவலராக அடையாளப்படுத்துவதை அறிய முடிகிறது.

சுரதா ‘நிபந்தனை’ என்னும் நாடகத்தில், ஏழைக்கொரு சட்டம், செல்வர்க்கு ஒரு சட்டம் என்றிருப்பதைச் சுட்டிக்காட்டும்,

ஏழை என்றால் நீதி மாறுதே - பணம்
இருப்பவரை உலகம் தேடி ஓடுதே
நெடுஞ்செழியன் ஆட்சிசெய்த நாட்டிலே - இன்று
நீதியெல்லாம் தூங்குவது வெள்ளை ஏட்டிலே

என்னும் பாடலை எழுதியுள்ளார். இப்பாடலின் மூலம், பாண்டியன் நெடுஞ்செழியன், கண்ணகி தன் சிலம்பைக் காட்டி அறத்தை நிலைநாட்டப் போர்க்குரல் எழுப்பியபோது தான் தவறு செய்துவிட்டோம் என்று உணர்ந்த அக்கணமே தன் உயிரை மாய்த்துக்கொண்டான். அதுபோன்ற அறம் மேலோங்கிய நாட்டில் இன்று பணமே ஆட்சிசெய்கிறது என்பதைச் சாடுகிறார். மேலும்,

ஆயுதத்தால் பிறநாட்டை அழவைத்து வசமாக்கி
ஆளநினைக்கும் ஆட்சி நெடுநாளைக்கு நில்லாது,
அடக்குமுறையால் மாந்தர் மனநிலை மாறாது - விளக்கு
ஏற்றாமல் இருளைக் கையால் ஒதுக்கினால் போகாது

என்றும் பாடியுள்ளார். வலிமையுள்ளவன் எளியவரை அடக்கியாளுதல் நீண்ட காலம் நிலைக்காது என்றும், அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் ஒருநாள் அதாவது ஏழைகள் எழுச்சிபெறும் நாள் அன்று புரட்சியின் மூலம் தகர்க்கப்படும் என்றும் பாடுகிறார். அதற்காக, போராட வேண்டும் என்பதை 'விளக்கு ஏற்றாமல் இருளை அகற்ற முடியாது" என்னும் அழகான உவமையின் மூலம் உணர்த்துகிறார்;.

பொதுவுடைமையின் இன்றியமையாக் கொள்கை போராடுவது. போராடாமல் எதுவும் கிடைக்காது. அப்படிக் கிடைக்கின்ற எதுவும் உரிமையாக நிலைக்காது. வெறும் சலுகையாகவே இருக்கும். சலுகையைப் பெற நாம் ஒன்றும் கையேந்திகளோ அல்லது மடியேந்திகளோ அல்ல. உரிமையுடையவர்கள். எனவே, போராட்டம் என்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கொள்ளவேண்டும் என இப்பாடல் மூலம் வலியுறுத்துகிறார்.

1950களில், ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரத்தைப் பிரித்துத் தனி மாநிலமாக்க வேண்டும் என்ற போராட்டம் நீண்டகாலம் நடந்தது. போராட்டத்தின் விளைவாக, ஆந்திர மாநிலத்தை உருவாக்க அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு அவர்கள் ஒப்புக்கொண்டார். இதைச் சுரதா,

'வடமும் அடியும் இன்றேல் தேரும் அம்மியும் நகருமோ?'

என்றெழுதினார். வடம் பிடித்து இழுக்காவிட்டால் தேரை நகர்த்தி ஊர்வலம் கொண்டுசெல்ல முடியாது. அதுபோல, அடிஅடி அடித்தால்தான் அம்மியும் நகரும். எனவே, எந்த ஒன்றையும் அடைய வேண்டுமானால் முறையான நெறியான போராட்டம் தேவை என்பதை மேற்கண்ட பாடலடிகள் மூலம் உணர்த்துகிறார்.

ஆமைதியாக இருக்கும் மக்கள் கூடப் போராடத் தயங்கமாட்டார்கள் என்பதை,

நெருப்பில் வீழ்ந்த உப்பைப்போல வெடித்தே தீரும்

என்னும் பாடலடிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, தம் சொந்த நலனை மட்டும் செய்துகொண்டு இருக்கும் அரசியல் வாணர்களை,

காட்டின் சிறுநெருப்பு காந்தள் மலர்ச்சிரிப்பாம்
நாட்டின் பெருநெருப்பு - கிளியே
நம்பிக்கை மோசமடி

என்ற பாடல் மூலம் கண்டிக்கிறார். இதுபோன்ந நம்பிக்கை மோசடிகளைச் செய்தால் நாடெங்கும் பெருநெருப்புப் பற்றிக்கொண்டு அழிந்துபோகும் என்பதையும் உணர்த்துகிறார்.

சுரதா அவர்கள் பாவேந்தரைப் பாடும்போது,

பங்காருப் பத்தரிடம் பயின்று, மீசைப்
பாரதியைப் பின்பற்றி நடையை மாற்றிச்
சிங்கார வேலவனைப் பாடிப் பின்னர்
சீர்திருத்தத் துறைகண்டு …..

என்று பாடிச் செல்கிறார். பாவேந்தரைப் பாடும்போது இந்திய நாட்டின் முதல் பொதுவுடைமைத் தலைவர் சிங்காரவேலரை இணைத்துப் பாடுகிறார். மேலும்,

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

என்னும் திரைப்படப் பாடல் அடிகள் மூலம் வாழ்க்கை நிலையற்றது என்பதை மட்டுமல்ல, பொய் சொல்லல், திருடுதல், ஏமாற்றுதல், ஏய்த்தல், கையூட்டு-ஊழல் என ஊர்ப் பணத்தைக் கொள்ளையடித்தல், அதிகாரத்தைப பயன்படுத்தி ஏழை எளிய மக்களை வாட்டிவதைத்தல் என எக்கச்சக்க வாழ்வை வாழ்ந்தாலும், இல்லாதவனுக்குக் கிடைப்பதுபோல் உனக்கும் ஆறடி நிலமே கிடைக்கும் என்ற பொதுவுடைமைச் சிந்தனையையும் இப்பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

இதை,

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா

சாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு

உலகினிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி
ஸ்ரீங்கார போகி

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே

உண்மையிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

என்னும் அரம்பையின் காதல் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற மருதகாசியின் பாடல் அடிகள் உணர்த்தும்.

உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் ஓர் இயற்கைப் பாவலர். ஓர் அழகியல் பாவலர். ஒரு காதல் பாவலர். ஒரு திரைப்படப் பாவலர். ஒரு கடவுள் மறுப்புச் சிந்தனைமிக்க பகுத்தறிவுப் பாவலர். இவையெல்லாவற்றையும் தாண்டி அவர் ஒரு மக்கள் நலம்விரும்பும் பொதுவுடைமைப் பாவலராகவும் திகழ்ந்தார் என்பதை மங்கையர்க்கரசி திரைப்படத்தில் அவர் எழுதிய

ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி செய்யக்கூடாது
மக்களின் எண்ணங்கள்தான் ஆள வேண்டும்

என்னும் வரிகளே உணர்த்தும். உவமைப் பாவலர் சுரதாவின் புகழ் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழட்டும்

- புதுவை யுகபாரதி,
தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்,
சாகித்திய அகாதெமி