Nietzscheகடவுள் இந்தச் சொல் அறுதப் பழசானாலும் இன்று வரை புத்தம் புதுசுதான். கிறித்துவத்தில் அடித்தளமே கன்னி மரியாளுக்கு இயேசு பிறந்ததும் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததும் தான். பன்னிரு சீடர்கள் கிறித்துவத்தை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றனர்.

மனமுவந்தோ அல்லது வேறுகாரணத்தாலோ மக்கள் இயேசுவை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர். கிறித்துவம் பாவிகளுக்கான மதம் என்ற கூற்றை உடைத்தெறிந்தனர்.

கிறித்தவம் முன்பு எப்போதும் இல்லாத தேக்கநிலையை இன்று கண்டிருக்கிறது. கட்டுப்பாடற்று அனைத்தையும் அனுபவிக்கத் துடிக்கும் போக பூமியாகிய மேலை நாட்டினரை வாழ்க்கையில் ஒருமுறை கூட சிரித்திடாத இயேசு கவரவில்லை.

அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றை நிரப்பும் ஏழைகள் மிகுந்த கிழக்கு நாடுகளுக்கு சுவர்க்கத்தை பற்றிப் பேசும் துயரக்கடவுள் தேவையாய் இருக்கிறார். அதே மேற்கு நாடுகள் வாழ்க்கையை ஒரு திருவிழாவாக கொண்டாட்டமாக கருதும் கிருஷ்ணரின் பிம்பத்திற்கு மனதை பறிகொடுக்கின்றனர்.

இன்று குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் அந்த மதத்தின் புனிதநூலைத்தான் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்பதில்லை. எந்த வேதத்தில் சத்தியத்தைக் கண்டடைகின்றார்களோ எந்தக் கருத்துக்கள் நோக்கி ஈர்க்கப் படுகின்றார்களோ அப்புத்தகத்தை தங்கள் வேதமாக ஏற்றுக் கொள்ளலாம். மதம் வாழ்க்கையின் தத்துவார்த்த கேள்விகளுக்கு விடை சொல்கிறதா என்றால் இல்லை.

மதம் எப்போதும் சுயசிந்தனையாளர்களை ஏற்றுக் கொள்ளாது. அப்போதைய யூதமக்கள் தச்சனின் மகன் எப்படி தன்னை யூதர்களின் ராஜா என சொல்லிக் கொள்கிறான் என்ற வாதத்தையே முன்வைத்தனர். அப்போது அரசனை கடவுளின் பிரதிநிதியாகத்தான் மக்கள் மதித்தனர்.

பழைய ஏற்பாட்டில் கடவுள் ஆறு நாட்கள் உலகைப் படைக்க எடுத்துக் கொண்டார் ஏழாவது நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் அதுதான் ஞாயிற்றுக்கிழமை. இயேசு ஓய்வு நாளில் ஒரு வியாதியஸ்தனை சொஸ்தமாக்கினார். இதை மதத்தை அவமதிக்கும் செயல் என்றார்கள் யூதமதகுருமார்கள்.

மனித இனத்தின் தோற்றம் ஆதாம், ஏவாளுடன் ஆரம்பிக்கிறது. சாத்தானுக்கு செவி கொடுத்து அறிவுக்கனியை உண்டதால் கடவுளால் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இந்த ஆதாம் தான் முதல் இறைத்தூதராக முன்னெடுக்கப்படுகிறார்.

இறைத் தூதராலேயே மாயைக்கு ஆட்படாமல் தப்பிக்க முடியவில்லையென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். இது பொய்மான் என்று இராமனின் ஞானதிருஷ்டி கண்டு கொண்டிருந்தால் இன்று இராமாயணமே இல்லையே. மதம் எதற்காக தோன்றியிருக்கும் என்ற கேள்வியை முன்வைப்போம்.

எதிரிகளிடமிருந்து தன் இனத்தாரைக் காப்பாற்ற, இக்கட்டான சூழ்நிலையில் குழுத் தலைவரையே கடவுளாக நம்பி அவர் எடுக்கும் முடிவை ஏற்பது இது தான் பதிலாக இருக்கும். வாழ்க்கைக்கு பின்னாலுள்ள மறைபொருளை அறிவது.

இதுவும் மதத்தின் தோற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கும். இப்படி பல குழுக்கள் உருவானது. அவர்களுக்கென்று ஒரு கடவுள், வாழ்க்கை முறை இதெல்லாம் உருவானது. இது என்மதமா உன்மதமா? என் கடவுளா உன் கடவுளா? என்ற மதப்போரில் மனித குலத்தை கொண்டுபோய்விட்டது.

மதம் என்ற மூன்றெழுத்தால் பலகோடி பேர்களின் குருதி இந்த மண்ணில் சிந்தப்பட்டது. எல்லா மதங்களுமே கிணறுகள் தான். இன்னும் அடியாழத்தில் பூமிக்கடியிலுள்ள மதம் கடந்த கடலிலிருந்தே அவைகள் தண்ணீரை எடுத்துக் கொள்கின்றன. வேறு வேறாக தோன்றினாலும் அறுதி நிலைப்பாடு ஒன்று தான் இதை நீங்களும் நானும் ஏற்றுக் கொண்டால் நாடு, மொழி, இனத்தால் உலகம் இவ்வளவு பிளவுபட்டு நிற்காது.

பாதை தான் வெவ்வேறு முடிவு ஒன்றே. கூத்து முடிந்ததும் மேடையின் பின்புறத்தில் இராமனும், இராவணனும் எதிரெதிரே அமர்ந்து சிகரெட் பிடிப்பார்கள். ஊர்கதை பேசி வம்பளப்பார்கள். இது தெரியாத நம் ஆட்கள் தான் கொடிபிடிப்பதும் கோஷமிடுவதும். மதம் வாழ்க்கை நெறியை பின்பற்றுவதில் தோல்வி கண்டுள்ளது.

பாமர ஜனங்கள் மதத்துக்கு உண்மையாய் இருந்தாலே போதும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். பூமிக்கு அத்தனை இறைத்தூதர்கள் வந்துசென்றும் இன்னும் மனிதகுலம் ஏற்றம் பெறவில்லை. உலகத்தை மதக்கண்ணாடி வழியாக பார்க்கும் வரை பேதங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். பலகிளைகளுக்கு காரணமாக இருப்பது வேர்கள் தான் என்றுணர வேண்டும்.

கடவுள் இந்தப் புதிருக்கு விடைகாண புறப்பட்டவர்கள் ஏராளம். எல்லோரையும் போலத்தான் இயேசுவும் வானத்தைப் பார்த்து புலம்பினார் ‘பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்’ என்று. அவருக்கு பதிலொன்றும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்ற பின்பு மூன்றாண்டுகள் ஆங்காங்கு மக்களிடையே தோன்றி பிரசங்கம் செய்தார்.

கடவுளைப் பற்றி, பரலோக ராஜ்யம பற்றி கடைசியில் அவருக்கே மெளனம் தான் பதிலாகக் கிடைத்தது. வேறென்ன செய்ய முடியும் எல்லாம் முடிந்துவிட்டது. ‘பிதாவே உம் விருப்பம் அதுவானால் அப்படியே ஆகட்டும்’ என தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

இயேசு சிலுவையில் மரித்தவுடன் அது கிறித்தவ மதத்தின சின்னமானது. யூதர்களின் ராஜாவா நீ என அவர்மீது காறி உமிழ்ந்தவர்கள் இன்று அவரை கடவுளாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். காலமும், இடமுமே மனிதனை அடிமைப்படுத்துகிறது. காரல் மார்க்ஸ் மதம் ஒரு போதை மருந்து என்றார். பெரியார் மதத்தை சமூக விரோத அமைப்பு என சாடுகிறார்.

பல நாடுகளில் பார்க்கலாம் மத அமைப்புகள் அரசைவிட அதிக அதிகாரம் பெற்றவையாக இருக்கின்றன. மத அமைப்புகளில் அரசின் சட்டம் செல்லுபடியாகாது. மத அமைப்பைச் சார்ந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கேள்ளி கேட்க தயங்கும் முதுகெலும்பில்லாத ஓர் அமைப்பாகத்தான் அந்நாட்டு காவல்துறை செயல்படுகிறது. மதம் என்பது கடவுளின் பெயரால் குற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அமைப்பாகவே இன்று இருந்து வருகிறது.

இன்றைய மதங்கள் கொள்கைகளை அடித்தளமாக கொண்டதல்ல. Born with silver spone என்று சொல்கிறோமே இவர்களுக்கெல்லாம் மதம் என்பது கழற்றி மாட்டும் சட்டையைப் போன்றது. மதம் மேல்தட்டு வர்க்கமான இவர்களின் வாழ்க்கை முறையை சிறிதும் மாற்றாது.

ஏழைகளுக்கு பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லாம் மதம் தான். இவர்களது எதிர்பார்ப்பு தங்களை மீட்க இரட்சகர் ஒருவர் வருவார் என்பது. இவர்கள் மதத்தை தத்துவ ரீதியாக அணுகுபவர்கள் கிடையாது. சலுகைகளும், வசதிவாய்ப்புகளும் கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் வேறு மதத்துக்கு தாவுவதும் நடக்கத்தான் செய்கிறது.

நீட்சேவின் தாய் அவனை பாதிரியாராக்கத்தான் ஆசைப்படுகிறார். நீட்சே சிறுவனாய் இருந்தபோதே தந்தையை பறிகொடுத்தார். நீட்சேவின் இளமைப் பருவத்தில் அவர் ஒரு மத நிராகரிப்பாளராக உருவெடுப்பார் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் தென்படவில்லை.

தத்துவ இயல்மீது நீட்சேவிற்கு ஆர்வம் அதிகம். ஜெர்மானிய நாடக இசைக் கோர்ப்பாளராக விளங்கிய வாக்னரை நீட்சே தன் முன்மாதிரியாகக் கொண்டார்.

நீட்சேவின் ஆதர்சன நாயகன் நெப்போலியன் போனபார்ட். அதனால் தான் நீட்சேவின் எழுத்து ஹிட்லருக்கு வழிகாட்டியது. உலகில் நடப்பவைகளெல்லாம் அதிமனிதனின் வரவுக்காகவே என்கிறார் நீட்சே.

இயற்கையின் விதிகளைத் தவிர்த்து கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளாதவர் நீட்சே. சூரியன் மேற்கில் உதிக்கட்டும் நான் ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறேன் என்றவர்.

மதம் வாழ்க்கையை நீ மட்டும் தனியே எதிர்கொள்ளப் போவதில்லை கடவுள் இருக்கிறார் என்கிறது. இது மனிதனுக்கு வசதியாகப் போய்விட்டது. தான் முடிவு செய்வது இருக்கட்டும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பாரத்தை இறக்கி வைக்க முடிகிறது. இதற்காக மட்டுமே மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.

விதிப்படிதான் நடக்குமென்றால் எதிரிகாலத்தை துல்லியமாக கணிக்க முடிந்திருக்க வேண்டும். மதம் என்பது சுவர்க்கத்தின் கடவுச் சீட்டைப் பெற்றுத் தரும் கேந்திரமாக விளங்குகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் உண்மைகளை முனை மழுங்கச் செய்திருப்பதும் மதம் தான். இன்றும் ஜோதிடத்தில் சூரியனை கோள் என்கிறார்கள்.

கிறித்துவுக்கு முன்னூறு ஆண்டுகள் முன்பே அரிஸ்டார்கஸ் என்ற அறிஞர் சூரியனை மையப்படுத்தியே பூமி உட்பட கோள்கள் சுழலுகின்றன என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதை திருச்சபை ஏற்றுக் கொள்வதற்கு எத்தனை நூற்றாண்டுகளானது தெரியுமா? கடவுள் ஆறு நாட்கள் உலகைப் படைத்தார் ஏழாம் நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்றால் அதற்கு பிறகு என்ன செய்தார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? தான் படைத்த உலகத்தை பேணிக்காத்தார் என பதில் வருகிறது.

சரி இது ஆயத்தமாக ஆத்திகர்கள் வைத்திருக்கும் பதில். உலகைப் படைப்பதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார் உங்கள் கடவுள். கடவுள் தனிமையை வெறுத்தார் என்றால் ஒரு பெண்ணைப் படைத்திருக்கலாம். ஏதோ வீட்டுக் கொல்லையில் கத்திரிக்காய் விதைப்பதை போல உலகைப் படைத்தார் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

ஒன்றுமில்லாததிலிருந்துதான் உலகம் வந்தது. பெரு வெடிப்பு(Big bang)க்கு பிறகுதான் காலமே தோன்றி இருக்க வேண்டும். இழப்பதோ அடைவதோ அல்ல காலம் ஒன்றிலிருந்து மேலான மற்றொன்றுக்கு கடந்து செல்வதே அது. சூரியனைப் போன்றே பல கோடி நட்சத்திரங்கள் பேரண்டத்தில் உள்ளது. எத்தனையோ சூரிய குடும்பங்கள் இருப்பதாக இன்று பல்லண்ட கோட்பாடுகூட முன்வைக்கப்படுகிறது.

கோள்கள் எவ்வாறு ஒன்றையொன்று ஈர்க்கின்றனவோ அவ்வாறே ஒன்றையொன்று விலக்கவும் செய்கிறது. இதனால் அண்டம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்படி விலகிச் செல்வது Blak Hole எனப்படும் கருந்துளையின் ஈர்ப்பு சக்தியினால் கூட இருக்கலாம்.

காலமற்றதுக்கு செல்வதென்பது மனித இனத்துக்கே வைக்கும் முற்றுப்புள்ளி. நீர் ஆவியாவதும் சூரியன் உதிப்பதும் யாருடைய கட்டளைகளையும் கேட்டு நடைபெறும் காரியமல்ல. உன் வசதிக்காக நீ ஏற்படுத்திக் கொண்டதே கடவுளே தவிர அப்படி யாரும் இருக்கவில்லை.

பேரண்டத்தின் நிகழ்வை மாற்றியமைக்கக்கூடிய சக்தியை கடவுள் என்றால் அதற்கு நூறு விழுக்காடு சாத்தியமில்லை என்றே கொள்ளவேண்டும்.

இயற்கையான நிகழ்வுகளில் தலை நுழைக்கக் .கூடிய சக்தி வெறும் கற்பனாவாதமே தவிர நிரூபணம் செய்ய முடியாது. நீட்சேவின் அதிமனித கோட்பாடு கடவுளை நிராகரித்தது. இங்கிருந்து சொல்லலாம் தொடுவானம் உண்டென்று யார் போய் தொட்டது அதை.

புத்தரின் சூன்யவாதம் அதாவது சூன்யத்திலிருந்து வெளி வந்து திரும்பவும் சூன்யத்துக்குள்ளே புகுவது. இறப்புக்கு பிறகான வாழ்க்கை இல்லை. உடல் மண்ணுக்கு எருவாகப் போவதைவிட வேறு வழி இல்லை. ஆத்மா என்பதெல்லாம் வெறும் கனவு. எந்த ரூபத்திலாவது வாழலாம் என தான் நித்யமானவன் என்றும் அழியாதவன் என்று மனிதன் தன்னைத் தானே வசியம் செய்து கொள்வதே அது.

எத்தனையோ பேரரசர்களும், பேரழகிகளும் மண்ணுக்கு எருவாய்த்தான் போனார்கள். இன்று கோவில்களில் கூட்டம் குவிகிறதென்றால் அதற்கு மரண பயமே மூலகாரணம். நீட்சே சொல்லும் அதிமனிதன் பரிணாம வளர்ச்சியால் மனிதன் அடையும் நிலையாகக் கூட இருக்கலாம். வாழ்க்கை நீட்சேவின் வேர்களை ஆட்டிப்பார்த்தும் அவர் இறைமறுப்பு கொள்கையை கைவிடவில்லை.

கடவுளுக்கு இங்கு என்ன வேலை? இயற்கையின் வெல்லப்பட முடியாத விதி கடவுளை நிராகரிக்கின்றது. Law என்னும் விதி சரிவர இங்கு செயல்படும்போது கடவுளுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. காலமும், இடமும் தான் உலகத்தை இயக்குகிறது.

அனைத்தையும் உள்ளடக்கிய கடவுள் என்பவர் காலமும், இடமும் உள்ள சிறைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் ஏன் பிரவேசம் செய்கிறார் என்ற கேள்விக்கு பதில் இருக்கின்றதா? மனிதனுக்கு ஆயுட்காலம் அறுபது ஆண்டுகள் என்றால் அவனால் உருவாக்கப்பட்ட கடவுள் பன்னெடுங்கால் பிரபஞ்சத்தை ஆளுகிறார் என்ற கருத்தை எப்படி அவர்கள் முன்வைக்க முடியும்.

எதிர்ப்பிலேயே வாழுங்கள் விதை முதற்கொண்டு எல்லா உலக ஜீவராசிகளும் எதிர்ப்பிலேயே தான் வாழுகின்றன. கடவுள் எல்லையற்ற சுதந்திரம் உடையவர் என்றால் அவரால் விதியின் மீது கைவைக்க முடியும் என்றாகிறது. அவரால் அப்படி குறுக்கிட முடிந்தால் அது விதியாகவே இருக்க முடியாது.

நீட்சேவின் கேள்விகளுக்கு புனிதநூல்களில் பதில் இல்லை. மதத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் கிளிப்பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். அவர்கள் சுயஅறிவை அடகு வைத்தவர்கள். எதையும் கேள்வி கேட்காமல் தலையாட்டிக் கொண்டனர். எள் என்றால் எண்ணெய்யாக வந்து நின்றனர்.

அங்கு சத்துக்கு கட்டுப்படாத மதம் பிடித்த யானையானது மதம். கேட்பவருக்குத்தான் நீதி நியாங்களே தவிர போதிக்கின்றவர்களுக்கு இல்லையென்றானது. நான் தான் கடவுள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் பின்னால் மக்கள் அணிதிரள ஆரம்பித்தார்கள். வாழ்க்கை அர்த்தமிழந்தது. ஜனத்தொகை பெருகுவது போல கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தது.

மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் எதிர்க்க முன்வரவில்லை. மேலும் மேலும் தாங்கள் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொண்டனர். நீட்சே மதஅமைப்புகள் மக்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது உண்மை இயேசுவை அல்ல என்றார்.

ஒருவன் கீழ்மைகளிலிருந்து முயற்சி செய்து முன்னேறி மேலே வருவதற்கு கடவுள் தேவையில்லை நன்கு உழைத்தாலே போதும். புனித நூலில் சொல்லப்பட்டு இருப்பதற்காக விசுவாசிக்க வேண்டாம் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்த்தாலேயானால் மதம் உன் கைகளில் விலங்கிட்டு இருப்பதை அறியலாம்.

கடவுளே என்று இருக்காதே உனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு அதை பயன்படுத்திக் கொள். வேலை செய்துவிட்டு காத்திருப்பாயேயானால் ஒரு நாள் உலகம் உன் காலடியில் வந்து விழும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பது அய்யன் திருவள்ளுவனின் வாக்கு.

- ப.மதியழகன்