sidha coronaகொரோனாவைக் குணப்படுத்த, கொரோனா வராமல் பாதுகாக்க என்று வாட்ஸப்பில் குவிந்து வரும் பெருந்தகவல் இன்று மக்களை மிகுந்த குழப்பத்திற்கும், உயிர் பயத்தில் எது சரி? எது தவறு? என்று பிரித்தறிய முடியாத ஒரு பதற்ற நிலைக்கும் தள்ளியுள்ளன.

ஒருபுறம் மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதும், சாணத்தில் குளிப்பதும் கொரோனாவை அண்ட விடாது என்பதும்; காயத்திரி மந்திரம் சொல்லி யோகாசனம் செய்தால் கொரோனா விரைவாகக் குணமாகிறதா என இந்திய அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் வழியாக ஆய்வு செய்வதும்; 'கோ கொரோனா கோ' என்று தட்டில் ஒலியெழுப்பி விளக்கு பிடிப்பதுமாக கொரோனாவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், இலவங்கம், பட்டை, தனியா, ஓமம், எலுமிச்சை, துளசி, மல்லி, வெற்றிலை போன்றவற்றில் சிலவற்றையோ எல்லாவற்றையுமோ காய்ச்சிக் குடிப்பதாலும்; ஆவி பிடிப்பதாலும்; பிரணாயாமா போன்ற யோகாசனம் செய்வதாலும் கொரோனா தொற்றாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லது கொரோனா வந்தவர்கள் இதைச் செய்தால் கொரோனா கிருமி செத்து விடும் என்பதைப் போன்ற தகவல்கள் பரப்பப்பட்டும் பின்பற்றப் பட்டும் வருகின்றன.

'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற சொலவடைக்கு ஒப்ப எதையாவது செய்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ளலாம் என்று கருதி எதையெதையோ செய்து வருகின்றனர்.

பொய் செய்திப் பரவல் கொரோனா வைரஸை விட வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனரே கூறுகிறார்.

இவற்றில் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி தேநீர் அருந்துவது பொதுவாக இருமல், சளி இருப்பவர்களுக்கும், கொரோனா காரணமாக இருமல், சளி ஏற்பட்டவர்களுக்கும் ஒரு தற்காலிக ஆறுதலைத் தரும் என்பதிலும், இது போன்ற உணவுப் பழக்கங்கள் இயல்பான நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனை வலுவாக வைக்க உதவும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இவை தொற்று ஏற்பட்டவர்களின் கொரோனா கிருமிகளை அழித்துவிடும் என்பதோ அல்லது இயல்பாக இவ்வாறு நம் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் கொரோனா தொற்றே நமக்கு தொற்றாது என்பதோ முற்றிலும் தவறான, அறிவியலுக்குப் புறம்பான, போலி அறிவியல் தகவல் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படிப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட, உடல் வலுவான நபராக இருந்தாலும், தொற்று ஏற்படக் கூடிய சூழலில் இருந்தால் அவருக்கும் கட்டாயமாக தொற்று ஏற்படத்தான் செய்யும்.

தொற்றின் பாதிப்பு வேண்டுமானால் அவருடைய இயல்பான நோய் எதிர்ப்பாற்றலால் குறைவாக இருக்கலாம், அதே போல தொற்று ஏற்பட்டவர் இவற்றையெல்லாம் சாப்பிட்டால் கொரோனா கிருமியை அழிந்து விட முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆய்வோ நிரூபனமோ இதுவரை இல்லை.

அதற்காக மூலிகைகள் பயனற்றது என்பது நமது வாதமல்ல. கொரோனா கிருமிகளை அழிப்பதில் அல்லது கட்டுப்படுத்துவதில்  மூலிகையின் பயன் நிரூபிக்கப் படவில்லை  அவ்வளவுதான்.

நவீன மருத்துவத்துக்கான மாத்திரை மருந்துகள் ஆய்வகங்களில் செயற்கையாக மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக இயற்கையான மூலிகைகளைக் கொண்டும் தான் தயாரிக்கப் படுகின்றன. அடிப்படையில் எல்லாம் கரிம, கனிம வேதிப்பொருட்கள் தானே.

இங்கு அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தளிப்பதிலும், குணப்படுத்துவதிலும், குறிப்பாக ஆய்விலும் அறிவியல் அனுகுமுறைகள் கடைபிடிக்கப் படுவதில்லை என்பது தான்.

ஆய்விற்கு இன்று வழியில்லாமல் இல்லை.முன்பாவது ஆய்வுகளில் அரசு ஒத்துழைப்பு  குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

அதற்கென்றே ஆயுஷ் போன்ற அரச அமைப்புகளும் உள்ளன. ஆனால் இவையெல்லாம் எந்த அளவிற்கு நோயியலை ஆய்வுப் பூர்வமாக அனுக ஏற்பாடுகள் செய்துள்ளன என்பதெல்லாம் பெரிய கேள்வி.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண பட்டினம் என்ற கிராமத்தில் ஆனந்தையா என்பவர்  கொரோனாவுக்காக நாட்டு மருந்து அளித்து பதினைந்தே நிமிடத்தில் குணப்படுத்துகிறார்.

தினமும் 500 பேருக்கு அவர் இலவசமாக வழங்கி வருகிறார் என்று செய்தி. இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு 3 நாட்களுக்குத் தடை விதித்ததுடன் ஆயுஷ் அமைச்சகத்திற்கு சோதனைக்காக சேம்பிளை அனுப்பியுள்ளனர்.

ஆய்வு முடிவில் அந்த மருந்து கொரோனாவைக் குணப்படுத்துமா குணப்படுத்தாதா என்பது குறித்த விளக்கம் எதுவும் இல்லை. ஆனால் அந்த மருந்து சாப்பிடுவதால் ஆபத்து எதுவும் வராது என்று கூறியுள்ளதாம்.

ஆகவே திரும்பவும் மருந்து வழங்க அனுமதி அளித்ததுடன் போலீஸ் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.

பின்னர் பத்து பதினைந்தாயிரம் பேர் வரை ஒரே இடத்தில் கூடியதால் மீண்டும் தடை விதித்ததையடுத்து, ஆந்திர மாநில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆனந்தையாவை சந்தித்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு கண்ணில் ஆயுர்வேத சொட்டு மருந்து விட்டு ஐந்தே நிமிடத்தில் எழுந்து நின்று நன்றாக சுவாசிப்பதை டெமொ செய்து காட்டுகின்றனர்.

உடனே அங்கிருந்த சோமிரெட்டி என்கிற எம்எல்ஏ "ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரித்துள்ள இந்த நாட்டு மருந்தை உடனடியாக எல்லாருக்கும் இலவசமாக வழங்க ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேட்டியளிக்கிறார்.

உண்மையில் ஆயுஷ் அமைச்சகம் இதுவரை அது போன்ற அங்கீகாரம் எதையும் வழங்கவில்லை. மாறாக ஆணையர் ராமுலு, "இதனை ஆயுர்வேத மருந்து என அழைக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். ஆய்வு முடிவு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் எதற்காக இத்தகைய அவசரம் காட்டப்படுகிறது?

பாரம்பரியமாக வைத்தியங்களைப் பார்த்து வரும் வைத்தியர்களில் பலர் போலியாக பணம் பறிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அடிப்படை சித்த, ஹோமியோ, ஆயுர்வேத மருத்துவப் படிப்பைப் படிக்கவில்லை என்பது மட்டுமல்ல. (சொல்லப்போனால் அப்படியெல்லாம் படிக்காதவர்களால்தான் காலங்காலமாக சித்த, ஆயுர்வேத மருத்துவ முறை வளர்ந்து வந்தது.)

காலத்துக்குத் தகுந்த எந்தவிதமான முன்னேற்றத்தையும் அவர்கள் கைக்கொள்ளாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றனர் என்பது தான் இங்கு சிக்கலாக உள்ளது.

மேற்கத்திய மருத்துவம் புதிய புதிய நோய்களுக்கு புதிய புதிய மருந்துகளைத்தான் கண்டறிந்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் உட்பட எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எல்லா நோய்களுக்கும் சேர்த்து ஒரே அருமருந்தாக அகஸ்திய ரசாயனம் உள்ளது என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுவடிகளில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் அனைத்து நோய்களுக்கும் பாரம்பரிய முறையில் தீர்வளிக்க முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுவடிகளில் எழுதப்பட்டிருக்கிறது, கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் தீவிரமாக நம்புபவர்களில் எத்தனைப் பேர் எல்லாவற்றுக்கும் பாரம்பரிய மருத்துவத்தை நாடுகின்றனர் என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும்.

எப்படி எவ்வளவு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும், நோய் வந்தால் சாமியை மட்டும் கும்பிட்டு சரி செய்து கொள்ள முடியாது என்று பகுத்தறிவுடன் சிந்தித்து மாத்திரை, மருந்துகளை எடுத்துத் தன்னைக் குணப்படுத்திக் கொள்கின்றரோ, எப்படி சாமிக்கு அருகில் நின்று பூசை செய்பவராக இருந்தாலும், பள்ளிவாசல், தேவாலயங்களில் வழிபடுவோராக  இருந்தாலும் வைரசுக்குப் பயந்து முகக் கவசம் அணிகின்றனரோ, அப்படியேதான் ஒரு விபத்து நேரிட்டால் அல்லது தீவிரமான உடல் உள்ளுறுப்புக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் பாரம்பரிய மருத்துவத்தின் தீவிர பற்றாளர்கள் எவரும் நவீன மருத்துவத்தை நாடாமல் இருப்பது இல்லை.

'போலி அறிவியல், மாற்று மருத்துவம் மற்றும் மூடநம்பிக்கை - ஒரு விஞ்ஞான உரையாடல்' நூலின் ஆசிரியரும் மயக்கவியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் சட்வா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணையவழிக் கூட்டத்தில் பேசும்போது, "எல்லா நோய்களையும் மாற்று மருத்துவத்தால் குணப்படுத்திவிட முடியும் என்று கூறுபவர்கள், காசநோய், மலேரியா, தொழுநோய், யானைக்கால் நோய் போன்றவற்றை என்றைக்காவது குணப்படுத்தியிருக்கிறார்களா? என்றால் இல்லை.

மாறாக, மருந்து கண்டறியப்படாத சில நோய்களை எடுத்துக் கொண்டு அதற்கு மாற்று மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சிலர் மக்களை நம்பவைக்க முயல்கின்றனர்.

ஆனால் ஒரு வியாதிக்கு மருந்து கண்டறியப்படாமல் இருந்தால், அதற்கு 'மருந்து இல்லை' என்று வெளிப்படையாகச் சொல்வது விஞ்ஞான மருத்துவம்தான்" என்கிறார்.

மேலும் அவர், "உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொன்று குவித்த பெரியம்மை போன்ற நோய்களை விஞ்ஞான மருத்துவத்தின் கொடையான தடுப்பூசியின் உதவியால்தான் வென்றிருக்கிறோம்.

நோய்களைத் தீர்க்கும் ஆயுதம் விஞ்ஞான மருத்துவம் தான். பண்டைய ஓலை சுவடிகளில் உள்ளது; நமது வீட்டு சமையலறையில் உள்ளது போன்ற முன் முடிவுகளின்படி கொரோனாவை அணுகக் கூடாது.

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்" என்றும் எச்சரிக்கிறார். 

இதன் பொருள் பாரம்பரிய மருத்துவமே முற்றுமுதலாகத் தவறானது என்றோ, நவீன மருத்துவம் மட்டுமே மனித குலத்தைக் காக்க வந்த விடிவெள்ளி என்றோ வாதிடுவதல்ல.

அலோபதி மருத்துவமுறை அறிவியல் அனுகுமுறைகளை பின்பற்றினாலும்கூட இன்றும் சில மருந்துகள் எதிர்ப்பார்க்கும் பலனை எல்லாவிதமான நோயாளிகளுக்கும் அளித்து விடுவதில்லை.

ஆனால் பெரும்பான்மையாக அவற்றின் பலன் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.  ஒன்று சரி என்றால் அது மிகப் பெரும்பான்மையானவர்களுக்குச் சரியாக இருக்க வேண்டும். தவறு என்றால் அது மிகப் பெரும்பான்மையானவர்களுக்குத் தவறாக இருக்க வேண்டும். புள்ளிவிவர அடிப்படையிலான ஆய்வுதான் எது சரி, அது எந்த அளவிற்கு சரி, ஒரு மருந்தை ஏற்கலாமா? கூடாதா? என்பதையெல்லாம் தீர்மானிக்கிறது.

இன்றைக்கு கொரோனாவிற்கு  சிகிச்சையளிக்க மீத்தைல் பிரெட்னிசலோன் போன்ற ஸ்டெராய்டுகளை அதிகமாகவும் நீண்ட காலமாகவும் பயன்படுத்துவதால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தி கருப்பு பூஞ்சை எனப்படும் மியூக்கோர்மையோஸிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது என்று  மருத்துவர்கள் சொல்வதாக செய்திகள் வருகின்றன.

நாட்பட்ட சளித்தொல்லை, தும்மல், இருமல் ஒவ்வாமை, கடி எனப்படும் தோல் நோய் போன்ற பரவலாக சமூகத்தில் இருக்கும் சில நோய்கள் எந்த மருத்துவ முறையிலாவது யாருக்காவது  நிரந்தரமாகக் குணமாகியிருக்கிறதா? என்றால் பெரும்பான்மையாக இல்லை.

இவை பருவ காலங்களில் வரும், போகும். நவீன அல்லது பாரம்பரிய மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது சற்று தணியும். ஆனால் நிரந்தரமாகத் தீர்ந்தது கிடையாது என்பதே பெரும்பான்மையோரின் அனுபவமாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு போன்றவற்றுக்காக தொடர்ந்து எடுக்கும் மருந்துகளாலும் உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாகவும்; எந்தவொரு நோய்க்கும் நெடுநாள் எடுக்கப்படும் மருந்தால் ஒருவித மருந்தடிமைத் தனம் ஏற்படுவதாகவும் சொல்கின்றனர். 

நோய்களைக் குணப்படுத்துவதற்கு மாறாக கட்டுக்குள் வைப்பதையே இந்த மருத்துவம் செய்கிறது. இதன்வழி நோயாளி - மருந்து - வணிகம் என்ற சங்கிலி அறுபடாமல் இருக்கவே நவீன மருத்துவம் உதவுகிறது என்கிற குற்றச்சாட்டும் இதன் மீது உள்ளது. இதுபோன்று நவீன மருத்துவ முறையாலும் முழுமையாக சரியாகக் கையாள முடியாத போதாமைகள் இல்லாமல் இல்லை.

ஆனால், குழந்தையின்மையைத் தீர்க்க சாதாரண மருந்து மாத்திரைகள் முதல் செயற்கைக் கருத்தரிப்பு, வாடகைத் தாய் முறை வரை நவீன மருத்துவம் கண்டறிந்துள்ள படிப்படியான தீர்வுகள் ஏராளம்.

சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளையே மாற்றும் அறுவை சிகிச்சை முதல் டெலிமெடிசின், ரோபோட்டிக் மருத்துவ சிகிச்சை வரை நவீன மருத்துவத்துறையின் சாகசமான சாதனைகள் ஏராளம்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் 1921-இல் 24 ஆண்டுகள் என்றிருந்தது 1990-இல் 59.6-ஆகவும் 2019-இல் 70.8-ஆகவும் உயர்ந்துள்ளது. இது மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது குறைவுதான் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த அளவிற்கு சராசரி ஆயுள் வளர்ந்ததற்கு நவீன மருத்துவமே காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

எல்லாவற்றையும் விட குறிப்பிட்ட எந்தவொரு நோய்க்கும் ஏற்றுக் கொள்ளப்படும் மருந்து எதுவும் முறையான மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்ட பின்பே பயன்பாட்டுக்கு வருகின்றன. நிரூபிக்கப்படாத ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை. இது தான் எப்போதைக்கும் அவசியமான அறிவியல் அனுகுமுறை.

இயற்கையான சரியான உணவுப் பழக்கவழக்கத்தின் மூலமே நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சரியாக நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அதில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் குறைகள் வருகின்றனவோ அவ்விடத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் வழிகாட்டுதலை நமது நோய்த்தடுப்பாற்றலை திடப்படுத்திக் கொள்ள சிறப்பாகக் கைக்கொள்ளலாம்.

ஆனால், இந்த இரண்டாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் நிரூபிக்கப்படாத மருந்துகளை, நமது பாரம்பரிய பெருமைக்காக நம்பிக்கையின் அடிப்படையிலும், வாட்ஸப் பகிர்வின் அடிப்படையிலும் சுயமாக எடுத்துக் கொள்வதும், பின்பற்றுவதும் அதை மற்றவர்களுக்கும் பரப்புவதும் தவறானது என்பது மட்டுமல்ல. அதுவே உயிரிழப்பு போன்ற தீவிர சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆவி பிடிப்பதால் கிருமியை அழித்து விடமுடியாது என்றும் பொது வெளியில் கூட்டம் கூட்டமாக ஆவி பிடிப்பது மேலும் மேலும் தொற்றுக்கே வழி வகுக்கும் என்பதால் அதைத் தடை செய்தும் சமீபத்தில் வெளியான அறிவிப்பைப் போல, பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கையாள்வதில் மேலும் சில அறிவிப்புகளும், சரியான வழிகாட்டுதல்களும் மக்களுக்கு உடனடித் தேவையாக உள்ளது. 

சித்த மருத்துவர் கு.சிவராமன் போன்ற சிலர் சரியான புரிதலுடன் இரண்டு மருத்துவ முறைகளையும் இணைத்து இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ளலாம் என்றும், நோயின், நோயாளியின் அகப்புற சூழலுக்குத் தக்கபடி தேவையான மருத்துவத்தைக் கையாளலாம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

எந்த சூழலில், எந்த அளவில், எந்த முறையில் சிகிச்சை அளிப்பது என்பதையெல்லாம் உரிய மருத்துவ நிபுனர்களும் அரசும் பேசி சரியானதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

- மாணிக்க முனிராஜ்