JAACT logoதமிழக அரசே! பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட, முத்துமனோ கொலைக்கு காரணமான சிறைப் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்! உடலை பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்ய உடனடி நடவடிக்கை எடு!

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகில் உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துமனோ (21) த/பெ பாபநாசம் கடந்த 22.4.2021, அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் 7 பேர் கொண்ட சக கைதி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் மெத்தனமாகவும் துணைபுரிந்தும், கொலைக்கு காரணமான பாளையங்கோட்டை மத்திய சிறை போலீசாரை கண்டிக்கின்றோம். இந்த மத்திய சிறை போலீசார் மீது தமிழக அரசே! உடனே வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடு!

வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த முத்து மனோ (21) பி.ஏ .ஆங்கிலம் முடித்துவிட்டு எல்.எல்.பி.சட்டம் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த 9.4.2021 அன்று, இரண்டு குற்ற வழக்குகள் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீ வைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது நண்பர்களான அருள்துரை சிங் (எ) கண்ணன், மாதவன், சந்திரசேகர் ஆகிய மூவரும் அவரோடு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 22.04.2021 அன்று மதியம் சுமார் 12.30, மணியளவில் ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையிலிருந்து,  அருள்துரை. சிங்(எ)கண்ணன், மாதவன், சந்திரசேகர் ஆகியவர்களோடு முத்து மனோவும் நாங்குனேரி நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு பின மேற்படி 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

அதன்பின் மத்திய சிறையில் உள்ள போலீசார் முத்துமனோவை மட்டும் தனியாக பிரித்து ஒரு பிளாக்குக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த 7 பேர் கொண்ட கைதி கும்பலால் கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கலால் தாக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

22.4.2021 அன்று ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் ஏன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு இந்த பேரையும் கொண்டு சென்றார்கள்? பாளையங்கோட்டை மத்திய சிறை போலீசார் இவர்களின் மூவரை மட்டும் தனியாக நிறுத்திவிட்டு முத்துமனோவை மட்டும் எதற்கு தனி பிளாக்கிற்கு அடைக்க வேண்டும்.

ஆகவே கொலை செய்த குற்றவாளிகளுக்கு சிறை போலீசார் மட்டும் மல்ல சில காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதனை அறிய முடிகின்றது.

முத்துமனோ கொலை வழக்கில் கொலை செயலில் ஈடுபட்ட கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கூட்டு சதி இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு எல்லைக்குட்பட்ட பெருமாள்புரம் போலீசார், இரண்டு ஆதாரங்கள் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெருமாள்புரம் காவல் நிலைய காவலர் ஆர்தர் முத்துபாண்டியன் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்த முத்து மனோவின் உடலை நேரில் பார்த்த போது இருந்த காயங்களின் அடிப்படையிலும், பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலர் பரசுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் SC/ST வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவுகள்உள்பட கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முத்து மனோவின் உடல் கடுமையாக சிதைக்கப்பட்டு இருந்தது என்பதை, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேரில் பார்த்த அவரது தந்தை பாபநாசம் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் உடலில் பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனை உடற்கூறாய்வு அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பலத்த பாதுகாப்பு நிறைந்த பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்துமனோ கொலையானது திட்டமிட்டு நடந்த படுகொலை என்றே உறுதிப்படுத்த முடி கின்றது. மேலும் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் 7 பேர் கொண்ட கைதிகள் கும்பலால் அடித்து கொலை செய்யப்படுவது சிறைத்துறை பாதுகாப்பு, கைதிகளின் நலன் போன்றவை குறித்து பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.

முத்துமனோ படுகொலை செய்யப்பட்டு 30, நாட்கள் கடந்த நிலையில் கொலைக்கு காரணமான பாளையங்கோட்டை மத்திய சிறை போலீசார் மீது இது வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால் முத்துமனோவின் உடலை முன்வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

எனவே தமிழக அரசு கொலைக்கு காரணமான பாளையங்கோட்டை மத்திய சிறை போலீசார் மீது உடனே கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதி கேட்டு போராடி வரும் முத்து மனோவின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று முத்துமனோவின் உடலை பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க கோருகின்றோம்.

தியாகு

ஒருங்கிணைப்பாளர்

மீ.த.பாண்டியன்

செயலாளர்