மனவளர்ச்சி குறைபாடு காரணமாக ஆட்டிசம், கவனக்குறைவு மற்றும் கற்றல் குறைபாடு கொண்டவர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதற்காக, நாட்டிலேயே முதன்முதலாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பெங்களூர் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் விஞ்ஞான நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி கலையரங்கில் அக் 31 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் பேசியதாவது:

டாக்டர். பி.ராமமூர்த்தி 1981-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 17 சதவிகிதம் பேர் மனவளர்ச்சி குறைவாக உள்ளவர்களாக இருப்பதைக் கண்டறிந்தார். 2000 ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரையிலான காலத்தில் தமிழகத்தில் 5 சதவிகித குழந்தைகளுக்கு வளர்ச்சிக் குறைபாடு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வளரும் பருவத்திலேயே ஆட்டிசம், டிசலக்சியா, பெரிபெரல் டிஸ்எபிலிட்டி போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் அது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். இதனால் தாழ்வு மனப்பான்மை, நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணங்கள் இவர்களது ஆளுமையில் அதிக இடம் பிடிக்கிறது. மேலும் சிறு குற்றங்கள் புரியும் குற்றவாளிகளாகக் கூட மாறுகின்றனர் என்பதை மேலைநாட்டு ஆய்வுகள் தெளிவாக்கி உள்ளன.

இக்குறைபாடுகள் உள்ள குழந்தைகள் லண்டனில் 5 சதவிகிதமும், அமெரிக்காவில் 11 சதவிகிதமாகவும் உள்ளனர். இருப்பினும் அந்நாடுகளில் இக்குறைபாடுகளைப் போக்க தேசியக் கொள்கைகள் வகுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான சடடங்களும், நடைமுறையில் உள்ளன. இதுபோன்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து,, வழக்கமாகச் செயல்படும் பள்ளிகளிலேயே சேர்த்து படிக்க வைக்கின்றனர்.

நம்நாட்டில் இக்குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறியவும், போக்கவும் முறையான திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மன வளர்ச்சி குறைபாடு காரணமாக கவனக்குறைவு மற்றும் கற்றல் குறைபாடுகள் கொண்டவர்களை சிறுவயதிலேயே கண்டறிவது அக்குழந்தைகள் வாழ்வை வளமாக்கும். எனவே இதுபோன்ற குறைபாடுகளைக் கண்டறிய அரசுத்துறை மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இருவட்டங்களில் பைலட் திட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக அங்கன்வாடி, ஆசிரியர்கள் ஆகியோருக்கு 6 மாதப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மனநலமே மனித வாழ்வின் அடித்தளம் என்பதால் இக்குறைபாடுகள் குறித்துப் பெற்றோர், மருத்துவர்களிடையே விழிப்புணர்வை அதிகமாக்கி இதை ஒரு தேசிய கொள்கையாக்கிட வேண்டும் என்ற நோக்கில் முதன்முதலாக திண்டுக்கல்லில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

பெங்களூர், தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் விஞ்ஞான நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நிறுவனத்தலைவர் டாக்டர் நாகராஜா பேசுகையில்,

இந்தியாவிலேயே முதன் முதலாக இக்குறைபாடுகளை கண்டறிவதற்கு அரசுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இதுதான்.

யார் வேண்டுமானாலும் இக்குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறியமுடியும்.

வளரும் பருவத்திலேயே கண்டறிய வேண்டும் என்பதற்காக அங்கன்வாடிப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

Pin It