gurumoorthyதுக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசியவைகளை அப்படியே விட்டுவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை!

காரணம் அவர் ஒன்றும் வாய்க்கு வந்தவைகளை உளறிக் கொண்டு சென்றுவிடக் கூடியவரல்ல! அதற்காக நாம் அவரின் பேச்சுக்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அல்ல! என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா? நாம் உரையாடவிருப்பது துக்ளக்கை குறித்தல்லவோ! இங்கு ஒரு சிலவைகளை மட்டும் விவாதிக்கலாம்.

துக்ளக் 51வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி தலைமையில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் நடைபெற்றது.

அதில் வாசகர்களின் கேள்விகளுக்கு தனது பதிலை குருமூர்த்தி அளிக்கையில், அவ்வப்போது தன் பேச்சுகளின் ஊடே சில தரவுகளையும் தேவையுடனே விட்டுவிட்டுச் சென்றார்.

குறிப்பாக பார்ப்பனியம் தன்னுடைய இந்துராஷ்ரா அஜண்டாவிற்கு எதிராக நின்ற நேரு குடும்பத்தின் வாரிசுகளை இந்திய அரசியலிலிருந்தே விலக்கிட வேண்டும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருந்திருக்கிறது என்பதையும், அதற்காக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும், வெளியேயும் அவர்களுக்கு எதிராக யார் எழுந்தாலும் அவர்களை உயர்த்திப் பிடித்திடவும், அவர்களை தங்களின் ஆட்டிவைப்பு ஆடுபவர்களாகவும் மாற்றிக் கொள்ள செய்த தகிடுத்தத்தங்களையும் புரிந்து கொள்ள முடியுமாறு சொல்லியே சென்றார்.

காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுருவிக் கொண்ட So called secularlist - களால் தன்னை உருவகப்படுத்திக் கொண்ட ஜனசங்கம், அதன் நீட்சியாக உருவகப்படுத்திக் கொண்ட பாஜக, இன்று அவர்களையே (காங்கிரஸ் உட்பட பல மாநிலக் கட்சிகளை) காணாமல் ஆக்கிவிட்டது, இன்னும் சிலரை அவர்களின் உட்கட்சிக்குள்ளேயே குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 1987ல் போபர்ஸ் பேர ஊழல் வழக்கைத் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவே சந்திரசாமியை பயன்படுத்திக் கொண்டதையும், (பின்னாளில் ராஜிவ்காந்தி கொலையின் முக்கியக் குற்றவாளியாகவும் சந்திராசாமி கருதப்பட்டார்) அவரும் வேறுபல நோக்கங்களுக்காக தங்களுக்கு உதவினார் என்பதையும் குருமூர்த்தி பேசியுள்ளார்.

பாஜகவோடு வி.பி.சிங் கூட்டணி சேர்ந்திடவும், ராஜிவ்காந்தி மூலமாகவே சந்திரசேகரை வைத்து வி.பி.சிங் அரசைக் கவிழ்த்திடவும், பல்வேறு நகர்வுகளை நிகழ்த்தியதாக வெளிப்படுத்தியுள்ளார். இவைகள் எல்லாவற்றிக்கும் ஒரே காரணம் காங்கிரஸை நீர்த்துப்போகச் செய்து, பாஜகவை (பார்ப்பனியத்தை) ஆட்சியில் அமர வைப்பதே!

காங்கிரஸ் இல்லா இந்தியா! என்பதைப் போல

கழகங்கள் இல்லா தமிழ்நாடு!!

எனும் (பார்ப்பனியத்தின்) முழக்கத்தினை பாஜக கையிலெடுக்கும் அளவிற்கும் தமிழகம் மிகப்பெரும் சவால்களைத்தான் பா(ர்ப்பனியத்திற்கு)ஜக-விற்கு கொடுத்திருக்கின்றது.

தமிழகமானது இவர்களின் அனைத்து சால்ஜாப்புகளுக்கும் மசியாத மாநிலமாகவே இல்லை! தமிழ்'நாடாக'வே இன்றும் திகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது.

பல்வேறு மாநிலங்கள் பார்ப்பனிய அரசியலை பதவி அரசியலாக, வேறுவித ஆதாய அரசியலாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கையில், தமிழகமானது சித்தாந்த ரீதியாகவே எதிர்ப்புகளை பார்ப்பனியத்திற்கு கொடுத்து வருகின்றது, பெரியாரும் - அண்ணாவும் இதற்கான பங்களிப்புகளைக் கொடுத்தே சென்றிருக்கின்றனர்.

அண்ணா பெரியாருடன் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட மனப் பிசக்குகளிலும் கூட 1967 ல் தம் திமுக ஆட்சியை அமைத்துவிட்டு 'இவ்வாட்சியை பெரியாருக்கு காணிக்கையாக்குகிறோம்!' என்றே கர்ஜித்தார். இன்னும் சொல்லப் போனால் ராஜாஜியின் எண்ணவோட்டங்களை தன் அறிவைக் கொண்டு முறியடித்தார் அண்ணா.

1991ல் திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மண்டல் கமிஷனைக் கொண்டுவந்த விபி.சிங் உடைய அரசை திமுகவினர் ஆதரவளித்தார்கள் என்பதும் தான். ஆனால் அன்று அண்ணா செய்த சாதுர்யத்தை கலைஞர் செய்திடவில்லை என்றும் கூறலாம், ஆனால் குருமூர்த்தி ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருந்தார்.

இங்கே சோ ராமசாமியைக் குறித்து நான் எதுவும் பேசவில்லையே எனக் கருதலாம்!

சோ அவர்கள் வெளிப்படையாகச் செய்த அரசியல் தரகு வேலையினை 'அன்று' மறைமுகமாக சோவின் மனச் சாட்சியாகவே டெல்லியில் இருந்து கொண்டு செய்த குருமூர்த்தி, 'இன்று' வெளிப்படையாகச் செய்கின்றார் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

சோவிற்கு - ஜெயலலிதாவிற்கும் இடையே இருந்த சாதிய உறவுகள் திராவிடத்தினை அதிமுகவிலிருந்து கழட்டிவிட உறுதுணையாக இருந்தது. பல்வேறு நேரங்களில் சோவுடைய ஆலோசனை கேட்டே திமுகவை எதிர்கொண்டார் ஜெயலலிதா.

ஆனால் பாஜகவின் வெளிப்படை அரசியல் மறைமுகத்தைவிட வேறுவிதமானது. தங்களின் கூட்டணி கட்சியை துவம்சம் செய்தே தாங்கள் வளர்வது என்கிற பாலிசியைக் கொண்டவர்களாவர். இதனையே அதிமுகவிற்குள்ளும் நடைமுறைப்படுத்திடவே முயற்சிக்கின்றனர்.

சசிகலாவின் அதிகாரவரம்பு அதிமுகவுக்குள் முழுமையாக எழும்பியபின் ஜெயலலிதாவின் மரணமும், அடுத்த நாளிலேயே சோவின் மரணமும் நிகழ்கின்றது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இவ்விரு மரணங்கள் குறித்தான முடிச்சுகள் குருமூர்த்திக்குத் தெரியாமல் இருக்காது. ராஜிவ்காந்தியின் படுகொலையினை சுப்பிரமணிய சுவாமி முன்னமே அறிந்திருந்ததைப் போல இவரும் அறிந்திருக்கலாம்.

தற்பொழுது திராவிட சித்தாந்தத்தை வெறும் பெயரளவில் மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ள அதிமுகவானது சசிகலாவின் அதிகார வரம்பிற்குள் முழுமையாக வருவதை விரும்பாத குருமூர்த்தியும் அவர் தம் வகையறாக்களும், ஒபிஎஸ்ஸிற்கு கொம்பு சீவிவிட்டு அதிமுகவை பிளவுபடுத்திட எத்தனித்து, சசிகலா - தினகரன் குடும்பத்தை ஓரங்கட்டிட வைத்து ஈபிஎஸ் உடன் ஒபிஎஸ் கரம் கோர்த்துவிட்டு ஒட்டுமொத்த அதிமுகவையும் பாஜகவின் அடிமையாக மாற்றிவிட்டது.

ரஜினியை எப்படியாவது அரசியல் களத்தில் இறக்கி அதிமுகவிற்கு இருக்கும் வாக்குகளைப் பிரித்து தனக்கானதாக மாற்றுவது என்ற, பீகார் பார்முலாவை (நிதிஷ்குமாரை பலவீனப்படுத்தி பாஜக அரிதாரம் பூசிக் கொண்ட பார்முலாவைப் போல) தமிழகத்திலும் அமைத்திடலாம் என்ற பாஜகவின் எத்தனிப்புகளை தன் நண்பர் அர்ஜுனமூர்த்தியை வைத்து ஏவிவிட்டு பல்புக்கள் தாம் பெற்றுள்ளார் குருமூர்த்தி.

அதிமுகவை வலிமை குன்ற செய்ய வேண்டும், அதன் முதுகில் தாங்கள் சவாரி செய்திட வேண்டும் என்ற அஜண்டா குருமூர்த்தி வகையினருக்கு ஒருபுறம் இருந்தாலும், திமுக தான் Main Target.

ஆம் அத்தகைய டார்கெட்டை குருமூர்த்தியின் வார்த்தைகளில் கூறுவதானால் (மன்னிக்கவும்) : "சசிகலா எனும் சாக்கடையினை அதிமுக இணைத்துக் கொள்ள வேண்டும்" அப்போது தான் திராவிடம் அழியும், அதன் பின் அதிமுகவை நசுக்கித் தன் அகண்ட பாரதத்தின் கனவை தமிழகத்திலும் பேசு பொருளாக்கிவிட வேண்டும் என்பது நினைவாகும்.

இதனைத் தடுத்திட மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகளான நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் "நாம் ஒன்றிணைவதே"!!

- நவாஸ்