seeman latestவெட்கம் கெட்ட மனிதர்கள் ஒரு போதும் தங்களின் இழிவான செயல்களுக்காக வருந்துவதில்லை. மாறாக அவ்வாறு இழிவாக நடந்துகொள்வதையே அவர்கள் தங்களின் அடையாளமாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள். நாம் வெட்கம்கெட்ட மனிதர்கள் என்று சொல்வது அறியாமையால் பிறரின் வாழ்க்கையில் இடர்பாடுகளை எற்படுத்துவர்களை அல்ல நன்கு திட்டமிட்டு தன்னுடைய சுயநலனுக்காக வெறுப்பை விதைத்து பிணங்களை அறுவடை செய்ய நினைக்கும் பாசிஸ்ட்டுகளைத்தான்.

இனவாதமும், சாதியவாதமும், மதவாதமும், மொழிவாதமும் பிற்போக்கு ஆளும்வர்க்க அரசுகள் எப்பொழுதெல்லாம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அது தன்னுடைய கூலிகளை களத்தில் இறக்கி அதனால் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சக மனிதர்கள் மீது வஞ்சத்தை விதைத்து வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கின்றது.

அப்படி உழைக்கும் மக்களை பிரித்தாளும் எல்லா வகையான கோட்பாடுகளையும் அதை பரப்பும் நயவஞ்சகர்களையும் அம்பலப்படுத்த வேண்டியது வரலாற்றின் முன் தேவையாக உள்ளது.

இன்று தமிழக அரசியல் களத்தில் அப்படியான அயோக்கியத்தனமான சிந்தனையை விதைப்பதில் சீமான் முன்னிலையில் உள்ளார். சிறுபான்மைக்கு எதிராக பெருபான்மையை நிறுத்துவதன் மூலம் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்துவதோடு நீண்ட கால நோக்கில் தன்னை பெரும்பான்மையின் பிரதிநிதி என்ற முகமுடியில் தமிழக மக்களை சூழ்ந்துள்ள பார்ப்பன பயங்கரவாதம் முதலாளித்துவ பயங்கரவாதம் என்ற இரட்டை தாக்குதலில் இருந்து அவர்களின் கவனத்தை திசைத் திருப்ப முயன்று வருகின்றார்.

உண்மையில் சீமானுக்கு தமிழர் நலனில் மேல் அக்கரை இருக்குமானால் இதுவரை இருந்த அரசுகள் மக்களுக்கு செய்யத் தவறியது என்ன, தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை சொல்லி மக்களிடம் ஓட்டுக்கேட்பார்.

ஆனால் தமிழக மக்களின் சிந்தனையில் திராவிட இயக்கம் தெலுங்கர்களின் இயக்கம் அது வந்தேறிகளின் ஆதரவு அரசியலை செய்கின்றது போன்ற அற்பத்தனமான போலியான அயோக்கியத்தனமான அரசியலை மக்கள் முன் வைத்து ஓட்டுக்கேட்க துணிய மாட்டார்.

தமிழ்நாட்டில் 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் 5.65 சதவீதத்தினரும் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் 1.68 சதவீதத்தினரும், உருதுவை தாய்மொழியாக கொண்டவர்கள் 1.51 சதவீதத்தினரும் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் வெறும் 0.89 சதவீதத்தினரும் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் சேர்த்தால் கூட 10 சதவீதத்தை தாண்டவில்லை.

ஆனால் இந்தப் பத்துசதவீத பேர்தான் தமிழ்நாட்டை அழித்து சுடுகாடாக்கிவிட்டதாக மனநோயாளியைப் போல சீமான் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார். மொழிவழி சிறுபான்மையின மக்கள் என்பவர்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் குடியுரிமையோடு வாழ்கின்றார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களை பரப்பவோ இல்லை தாங்கள் வாழும் நாட்டில் அரசியலில் பங்கெடுக்கவோ எந்தத் தடையும் இல்லை.

ஏன் தமிழர்களை எடுத்துக் கொண்டால் கூட பல்வேறு நாடுகளில் பொருளாதார வளத்தோடு வாழ்வதோடு அரசியலில் முக்கியமான பாத்திரத்தைக் கூட ஆற்றுகின்றார்கள்.

குறிப்பாக மோசஸ் வீராசாமி நாகமுத்து என்பவர் 2015ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கயானாவின் பிரதமராக இருந்துள்ளார். செல்லப்பன் ராமநாதன் என்ற தமிழர் 1999 முதல் ஆகஸ்ட் 2011 வரை 12 ஆண்டுகளில் இரண்டு முறை சிங்கப்பூர் ஜனாதிபதியாக இருந்துள்ளார். இது தவிர சிங்கப்பூரில் 10 தமிழ் எம்.பி.க்களும், கனடாவில் 2 தமிழ் எம்.பி.க்களும், மொரிஷியஸில் 3 தமிழ் எம்.பி.க்களும், கயானா மற்றும் பப்புவா நியூ கினியில் தலா ஒரு தமிழ் எம்.பி.யும், மலேசியாவில் 15 தமிழ் எம்.பி.க்களும், 6 செனட்டர்களும் பதவியில் இருக்கிறார்கள்.

இது எல்லாம் சீமான் அறியாதது அல்ல. ஆனால் எதை செய்தாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அதிகார அரிப்புதான் சீமானை சிறுபான்மை மொழியின மக்களுக்கு எதிராக விஷத்தை கக்க வைக்கின்றது.

எப்படி பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் 80 சதவீதம் உள்ள இந்துக்களுக்கு எதிராக 14 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களும் 2.3 சதவீதம் உள்ள கிருஸ்தவர்களும் சதி செய்கின்றார்கள், அவர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்கள் கிடையாது, வந்தேறிகள், மீலேச்சர்கள் என்று நச்சுக் கருத்துக்களை விதைத்து தன்னை இன்று ஆட்சி அதிகாரத்தில் தக்கவைத்துக் கொண்டிருகின்றார்களோ அதே போல மொழிவழி சிறுபாண்மையின மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தனக்கு எப்படியாவது ஆட்சி அதிகாரம் கிடைக்காத என நாக்கில் எச்சில் ஒழுக சீமான் காத்திருக்கின்றார்.

இந்த உலகில் யார் ஒருவரும் இந்தச் சாதியில், இந்த மதத்தில், இந்த மொழியில், இந்த இனத்தில் பிறக்க வேண்டும் என முன் முடிவு செய்துகொண்டு பிறப்பது கிடையாது. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சனாதன பார்ப்பன பாசிசத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாததுதான் சீமானின் இனவாதம்.

அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே காறி உமிழப்பட்ட ஒன்றைதான் சீமான் போன்ற சீக்கு மூளைக்காரர்கள் தற்போது எடுத்துக்கொண்டு பரப்புரை செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

எப்படி தெலுங்கு, மலையாளம்,கன்னடம் போன்றவற்றை பேசும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளார்களோ அதே போல தமிழ்பேசும் மக்களும் இந்தியா முழுவதும் விரவி வாழ்ந்து வருகின்றார்கள்.

ஜம்மு காஷ்மீரில் 14728, இமாச்சல் பிரதேசத்தில் 1038, பஞ்சாப்பில் 10389, சண்டிகரில் 5579, உத்தரகாண்ட்டில் 2584, ஹரியானாவில் 12658, டெல்லியில் 82719, ராஜஸ்தானில் 8939, உத்தரபிரதேசத்தில் 14444, பீகாரில் 986, சிக்கிமில் 762, அருணாசலப் பிரதேசத்தில் 1246, நாகலாந்தில் 1127, மணிப்பூரில் 1657, மிசோரமில் 306, திரிபுராவில் 929, மேகாலயாவில் 913, அஸ்ஸாமில் 5229, மேற்கு வங்கத்தில் 15930, ஜார்க்கண்ட்டில் 10061, ஒடிஷாவில் 6155, சத்தீஸ்கரில் 10334, மத்திய பிரதேசத்தில் 20544, குஜராத்தில் 40072, டையூ டாமனில் 320 ,தத்ரா நாகர் ஹைவேலியில் 739, மகாராஷ்டிராவில் 509887, ஆந்திராவில் 713848, கர்நாடகாவில் 2110128, கோவாவில் 6947, லட்சத்தீவுகளில் 364, கேரளாவில் 502516, புதுச்சேரியில் 1100976, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 57830 பேரும் வசிக்கின்றார்கள்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்தம் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 பேர் உள்ளார்கள். ஆனால் உலகம் முழுவதும் சுமார் 13 கோடியே 60 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும். இதுதான் உண்மை நிலவரம்.

ஏறக்குறைய தாயகத்தில் வழும் தமிழர்களின் அளவைபோல மற்றொரு பங்கு தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழ்கின்றார்கள். ஆனால் சீமான் போன்ற பித்துக்குளிகளுக்கு அதைப்பற்றிய எந்த உணர்வும் எப்போதும் இருப்பதில்லை. சீமானின் இனவாதத்தால் முதலில் பாதிக்கப்படப் போவது அவர்களாகத்தான் இருக்கப் போகின்றார்கள்.

சீமான் ஸ்டாலினுக்கு எதிராக நிற்பதைப் பற்றியோ இல்லை அவர்களின் கட்சி திமுகவை எதிர்த்து மட்டுமே களப்பணி ஆற்றப் போவதை பற்றியோ நமக்கு எந்த கருத்தும் இல்லை. ஒரு தொகுதியில் யார் வெற்றி பெறப்போகின்றார்கள் என்பது அந்தத் தொகுதி மக்களின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தது. ஒன்றுமே செய்யாத வெட்டிப் பயல்களுக்கும், வாயால் மட்டுமே வடை சுடும் அட்டை கத்திகளுக்கும் மக்கள் எப்போதுமே வாக்களிப்பதில்லை என்பதால் நமக்கும் அதைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லை.

ஆனால் திராவிடமா, தமிழ்தேசியமா மோதிப் பார்போம் என சம்மந்தமே இல்லாமல் இல்லாத ஒரு எதிரியை மக்களிடம் காட்டி அந்த எதிரியிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றக்கூடிய நாயகன் தான்தான் என்பது போல சீமான் உதார் விடுவதைத்தான் நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

பெரியாரையோ, கலைஞரையோ, ஸ்டாலினையோ தெலுங்கர்கள் என்று சீமானும் அவரது அடிபொடிகளும் சொல்வார்களானல் சீமானைவிட ஒரு கடைந்தெடுத்த பொய்யன் வேறு யாராக இருக்க முடியும். சீமான் செய்வதற்கு பெயர் அரசியலா? இல்லை சித்தாந்த விபச்சாரமா?.

எப்படி நாடு பிரிவினை அடைந்த போது இந்தியாவை தங்களின் நாடாக ஏற்றுக்கொண்டு பெரும்பாலான இஸ்லாமியர்கள் இங்கேயே இருந்தார்களோ அதே போலத்தான் மாநில எல்லைகள் பிரிக்கப்பட்ட போது பல நூறு ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்த மற்ற மொழி பேசும் மக்கள் இருந்துகொண்டார்கள்.

பிஜேபி இங்கிருக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு போ என சொல்வதும் சீமானும் அவரது பக்தகோடிகளும் மற்ற மொழி பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கையை முடக்க முற்படுவதும் கேடு கெட்ட பாசிசமே அன்றி வேறல்ல.

திராவிடமா தமிழ்த்தேசியமா என்ற சீமானின் சவால் உண்மையில் பார்ப்பனியத்தின் பாதம் தாங்கிகளுக்கும் அதற்கு எதிரான சித்தாந்தத்திற்குமான சவாலாகும். இது இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டு கட்சி ஆரம்பித்து தமிழ்த்தேசியம் என்று ஊரை ஏமாற்றும் கோமாளிக்கும், இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தியக் கூட்டாட்சிக்குள் தமிழர்கள் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்த்தவும் நாடெங்கிலும் இந்தியத் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்ற தமது போராட்டத் திட்டத்தை அறிவித்த உண்மையான சித்தாந்தத்துக்குமான போராட்டமாகும்.

சீமான் போன்ற சீக்கு மூளைக்காரர்கள் திமுகவோடும், அதிமுகவோடும் திராவிடம் என்ற சித்தாந்தத்தை திட்டமிட்டே முடிச்சுபோட்டு மக்களை குழப்ப முயற்சிக்கின்றார்கள். திராவிடம் என்பது சாதிக்கு எதிரானது, பார்ப்பன இந்துமதத்திற்கு எதிரானது, அது கட்டமைத்து வைத்திருக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிரானது. ஆனால் சீமான் அதை குறிப்பிட்ட மொழி பேசும் மக்களோடு சுருக்கி தனது சில்லரை தனத்தை காட்டுகின்றார்.

இனவாத அரசியலை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் தமிழ்நாட்டு மக்கள் பாசிசமயமாக மாறவில்லை என்பதால் இந்தத் தேர்தலில் சீமானுக்கும் அவரது வாட்ஸ் அப் கட்சிக்கும் ஏற்படும் நிலை இனவாத வெறியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நிச்சயம் இருக்கும்.

- செ.கார்கி