kamal rajiniகடும் முதலாளித்துவ நெருக்கடியும், அதை ஒட்டி தவிர்க்க முடியாத விளைவாக ஏற்பட்டிருக்கும் மக்கள் போராட்டங்களும் ஒவ்வொருவரின் நிகழ்ச்சி நிரலையும் பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ‘முதலாளித்துவம் உன்னால் முடிந்தால் வாழ்ந்துகொள்’ என சவால்விட்டு ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தையும் பறித்து அவனை நிர்கதியாய் வீசி எறிந்திருக்கின்றது.

கடைந்தேற வழியில்லாமல் ஏதாவது ஒரு பிடிப்பு மனதளவிலாவது கிடைக்காத என சாமானிய மக்கள் பறிதவித்து கிடக்கின்றார்கள். அப்படியான சூழ்நிலையில் ஒரு சாமானிய மனிதன் தான் ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மாயையான விடுதலை தத்துவத்திற்கு தன்னை ஆட்படுத்திக்கொள்வது ஒன்றும் அரிதான செயலல்ல.

இருப்பினும் அதை வைத்துக்கொண்டு இழப்பதற்கு ஏதுமற்ற அந்தச் சாமானிய மனிதன் மாயைகளின் பின்னால் மட்டுமே அணிவகுப்பான் என நினைப்பது ஆன்மீகவாதிகளின் கருத்து முதல்வாதத்தை போலவே அடிப்படை ஆதாரமற்ற நம்பிக்கையாகும். எப்படி பொய்மைகளின் மீதும் புரட்டுகளின் மீதும் கருத்துமுதல்வாதிகளின் கோட்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றதோ அதே வகையில்தான் அவர்களின் அரசியல் கோட்பாடும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

ஆன்மீகவாதிகளையும், ஆன்மீகத்தை ஒரு அரசியல் கோட்பாடாக முன் வைப்பவர்களையும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆன்மீகவாதி தன்னளவில் ஒரு முதலாளித்துவ ஆதரவாளனாகவோ இல்லை சாதி, மதவெறியனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

கூலி உயர்வுக்காக போராடுபவர்களும், அடிப்படை வசதிகள் செய்துதரச்சொல்லி போராடுபவர்களும், இன்று மோடி அரசை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் விவசாயிகளும் உண்மையில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கிடையாது. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது.

ஆனால் தங்களுடைய வாழ்வாதாரம் பெருமுதலாளிகளுக்காக திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என்பதை தெளிவாக உணரும்போது, அவர்கள் ஒரு அமைப்பாக ஒன்று திரண்டிருக்கும் போது போராடினால் மட்டுமே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நடைமுறை அனுபவத்தின் மூலம் தெளிவாக உணர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள்.

ஆனால் ஆன்மீகத்தை ஒரு அரசியலாக முன்னெடுப்பவர்கள் ஆன்மீகவாதிகள் போன்று தங்களின் பிரச்சினைகளுக்கான காரணத்தை அறியாதவர்கள் அல்ல. காரணம் ஒரு கருத்தியலை, சித்தாந்தத்தை அரசியலாக முன்னெடுக்கும் போது அந்தக் கருத்தியலோ சித்தாந்தமோ சமூக பிரச்சினைகளை தீர்க்க தன்னிடம் உள்ள தீர்வுகளை முன்வைத்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.

சமூகத்தில் நிலவும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தன்னிடம் தீர்வு இல்லை என்று சொல்லும் கருத்தியலோ, சிந்தாந்தமோ மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு காலப்போக்கில் அழிந்து போகின்றது.

அந்த வகையில் ரஜினி முன்வைக்கும் ஆன்மீக அரசியல் என்பது இன்று சமூகம் சந்திக்கும் எந்தப் பிரச்சினைக்குமான தீர்வையும் முன்வைக்காத அரசியலாகும். விவசாயிகள் பிரச்சினைக்கோ, தொழிலாளர்களின் பிரச்சினைக்கோ ரஜினியின் ஆன்மீக அரசியலில் எந்தத் தீர்வும் இல்லை.

காரணம் ஆன்மீக அரசியல் என்பது முதலாளிகளின் சுரண்டலையும், சமூகத்தின் அடித்தளமாகவும் மேற்கட்டுமானமாகவும் இருக்கும் சாதியை ஒழிப்பது பற்றி எந்தப் பிரகடனத்தையும் செய்யாதது. இவற்றை தனது சதிகளால் மூடிமறைப்பது. அதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் உயிர்பிழைத்து வாழ்வது.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சாதியையோ, மதவாதத்தையோ, முதலாளித்துவ பயங்கரவாதத்தையோ ஒழிப்பதை வெளிப்படையாக பிரகடனம் செய்து மக்களிடம் அரசியல் பணி செய்கின்றது. அது ஒருபோதும் தனது கொள்கைகளை மூடிமறைத்து மக்களை ஏய்க்க நினைத்தது கிடையாது. காரணம் கட்சி பட்டாளிவர்க்கத்தின் சமூக பொருளாதார விடுதலையை பிரகடனம் செய்கின்றது.

ஆனால் ரஜினி…? முதலாளித்துவத்தை பற்றிய அவரின் பார்வை என்ன? சாதியைப் பற்றிய பார்வை என்ன? பார்ப்பனியத்தை பற்றிய பார்வை என்ன? சமூகத்தை சீரழிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் அவரின் பார்வை என்ன? சொல்வதற்கு ரஜினிக்கு அறிவிருக்கின்றதா? தைரியம் இருக்கின்றதா? சொன்னால் தெரிந்துவிடும் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது சாதிய மதவாத முதலாளித்துவ சாக்கடையில் இருந்து பிறந்தது என்பது.

மேலும் ரஜினிக்கு முன்பே அரசியலில் களம் கண்ட கமலின் ‘மய்யமும்’ கூட ஆன்மீக அரசியல் எந்தச் சாக்கடையில் இருந்து உருவானதோ அதே சாக்கடையில் இருந்து உருவானதுதான். 'தான் இடதும் அல்ல, வலதும் அல்ல; மய்யம்' என்றும் 'சித்தாந்தங்கள் தேவையில்லை' என்றும் சொல்லும் கமலும் ஆன்மீக அரசியலின் கொள்கை என்ன என்று கேட்டதற்கு, ‘கொள்கையா எனக்கு, தலையே சுத்திடுச்சு’ என்று சொன்ன ரஜினியும் அடிப்படையில் ஒரே புள்ளியில் இருந்துதான் தங்களின் அரசியலை முன்னெடுக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

கமல் சொல்வதுபோல் எல்லாம், சித்தாந்தங்கள் அற்ற அரசியல் சாத்தியமே அல்ல. உலகில் இருப்பது இரண்டே அரசியல் தான். ஒன்று முதலாளிவர்க்க அரசியல், இன்னொன்று பாட்டாளிவர்க்க அரசியல். இதில் இரண்டிலும் சேராத முன்றாவது அரசியல் என்று எதுவுமே உலகில் இல்லை. அப்படி சொல்லிக் கொண்டு அரசியல் களத்திற்கு வரும் நபர்கள் முதலாளி வர்க்கத்தின் கைக்கூலியாகவும், முதலாளித்துவத்தின் சேப்டி வால்வாகவுமே உலகில் இருந்திருக்கின்றார்கள். மார்க்ஸ் காலத்தில் இருந்து இன்றுவரை அதுதான் நிலைமை.

மக்கள் தங்கள் மீது முதலாளிகளால் நிகழ்த்தப்படும் கொடும் சுரண்டலில் இருந்து விடுபடவே விரும்புகின்றார்கள். அவர்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட விரும்புகின்றார்கள். தரமான கல்வியையும், மருத்துவத்தையும், தண்ணீரையும் இன்னும் பிற மனித வாழ்வுக்கான தேவைகளையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதை எல்லாம் மக்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள நிர்பந்திக்கும் அரசு ஒரு கையாலாகாத முதலாளித்துவ அடிவருடி அரசு ஆகும். இன்று மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இது போன்ற கையாலாகாத அரசுகள் தான் காரணம்.

இதுதான் அடிப்படையானதும், பிரதானமானதுமான பிரச்சினை. யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கு இந்தப் பிரச்சினைகளின் மீது என்ன கருத்து இருக்கின்றது என்பதைப் பொறுத்துதான் அவர்கள் சாமானிய மக்களுக்காக கட்சி நடத்த வருகின்றார்களா அல்லது கார்ப்ரேட்டுகளின் ஏவல் நாய்களாக இருக்க கட்சி நடத்த வருகின்றார்களா என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் கமலுக்கும் ரஜினிக்கும் இந்தப் பிரச்சினைகளின் மீதெல்லாம் எந்தக் கவனமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அதை அவர்களே வெளிப்படையாக சொல்லி இருப்பார்கள்.

மாறாக நான் இடதுமல்ல, வலதுமல்ல, மய்யம் என்று சொல்லுவதும், ‘கொள்கையா எனக்கு, தலையே சுத்திடுச்சு’ என்று சொல்வதும் ஏற்கெனவே இருக்கும் பல முதலாளித்துவ அடிவருடி கட்சிகளில் தங்களுடைய கட்சியும் ஒன்று என்பதைத்தான் காட்டுகின்றது. அது மட்டும் அல்லாமல், வலது என்பது முதலாளித்துவ ஆதரவு என்பதையும் தாண்டி, மக்களை வர்க்க அடிப்படையில் இணையாமல் தடுத்துப் பாதுகாக்கும் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சக்திகளின் அரசியலாகும்.

கமலுக்கு இடது அரசியலைப் பற்றியும் தெரியவில்லை, வலது அரசியலைப் பற்றியும் தெரியவில்லை அல்லது இரண்டையும் தெரிந்துகொண்டு ஓட்டரசியலில் வெற்றிபெற மற்ற பிற்போக்கு கட்சிகளின் அரசியலையே தானும் கையில் எடுக்க நினைக்கின்றார். ரஜினியும் பிசிறு தட்டாமல் அதையே ஆன்மீக அரசியல் என்ற பெயரில் முன்னெடுக்கின்றார்.

ரஜினியும் கமலும் தங்களை திரையில் வேண்டுமென்றால் சகலகலா வல்லவர்களாக காட்டிக் கொள்ளலாம். திரையில் கதாநாயகன்தான் எல்லாமும். ஆனால் அரசியலில் தனிமனிதர்கள் கதாநாயகர்கள் கிடையாது. அவர்கள் முன்னிலைப்படுத்தும் சித்தாந்தம்தான் கதாநாயகன்.

கதாநாயகன் இல்லாத சினிமா கூட வெற்றி பெற்றுவிடும் ஆனால் சித்தாந்தம் இல்லாத கட்சி ஊர் சிரித்து, அசிங்கப்பட்டு, அம்பலப்பட்டுப் போவது உறுதி. அரசியல் என்பது வெற்று வார்த்தைகள் அல்ல. அது செயல்பாட்டுக்கான களம். எந்த ஒன்றைப்பற்றியும் தெளிவான பார்வை இல்லாத, சாமானிய மக்களுக்கு என்ன தேவை என்பதுகூட புரியாமல் பொத்தாம் பொதுவாக 'நான் வந்தால் அனைத்தையும் மாற்றிவிடுவேன்' என்று சொல்வது காற்றில் கம்பு சுற்றும் வீரர்களின் செயல்பாடாகும்.

மக்களிடம் இருக்கும் அரசியல் விழிப்புணர்வற்ற நிலைதான் எவன் கட்சி ஆரம்பித்தாலும் சில சதவீதம் ஓட்டு கிடைக்கும் என்ற நிலைக்கு காரணமாக உள்ளது. களத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் யார்? குரல் கொடுப்பவர்கள் யார்? தங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் யார்? தங்களுக்காக அடி வாங்கியவர்கள் யார்? உதை வாங்கியவர்கள் யார்? சிறை சென்றவர்கள் யார்? என்று அறிந்து அவர்களை மக்கள் தங்களுக்கானவர்களாக அடையாளம் கண்டு அரவணைக்கும் போதுதான் ரஜினி, கமல் போன்ற சொம்பைகள் எல்லாம் அரசியல் களத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படுவார்கள்.

- செ.கார்கி