ஈழத்தின் பிரச்சினையால் ஈழத்து தமிழன் மட்டுமல்ல தமிழக மற்றும் உலகத் தமிழனும் மனக்கலக்கமும் மன உளைச்சலும் அடைந்துள்ளான் என்பதையே காட்டுகிறது, முத்துக்குமாரின் உயிர் தியாகம்.

இனியாவது ஒரு விதி செய்வார்களா தமிழக அரசியலாளர்களும் மக்களும். முத்துக்குமாரின் உயிர் தியாகத்திற்கு முன் நாம் எவ்வளவு எழுதினாலும் அஞ்சலி செலுத்தினாலும் ஈடாகாது, என்றாலும் தமிழர்களான நாம் அனைவரும் ஒன்று பட்டு ஒருங்கிணைந்து உள்ளூர் அரசியலை மறந்து குரல் கொடுத்தால் வழி பிறக்காமல் போகாது.

டெல்லிக்காக வக்காலத்து வாங்கும் தமிழக காங்கிரசார் இனியேனும் தமிழகத் தமிழனின் மனமறிந்து செயல்பட முன்வர வேண்டும். தமிழ் தாய் ஈன்ற மகனானால், இனியும், ராசீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஒட்டுமொத்த தமிழர்களின் ஏக பிரதிநிதிபோல் வாய் சவடால் பேச மாட்டார்கள். இல்லையென்றால் அவர்களை விடுதலைப் புலிகளே மன்னித்தாலும் தமிழக மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நடப்பது தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் தமிழின அழிப்பு என்பதை இனியாவது புரிந்து கொண்டு காங்கிரசார் செயல்பட வேண்டும். அவர்கள் ஏற்கனவே புரிந்துதான் வேடம் போடுகிறார்கள் என்றாலும், அந்த வேடத்தை இப்பொழுதாவது களைய வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழர்களின் உணர்வு மற்றும் பேரவா என்பதை உணர்ந்து தமிழர் அனைவரும் ஒன்று பட்டு தமிழின ஒழிப்புக்கு துணை போகாமல் இருக்க வேண்டும்.

அக்கம் பக்கத்து மாநில காங்கிரசாரைப் பார்த்தாவது தமிழக காங்கிரசார் மாநில மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டுமேயல்லாது டெல்லியின் குரலையல்ல. இல்லாது போனால் நம்மால் ஈழத்துத் தமிழனை அழிவிலிருந்து தடுக்க முடியாமல் போவதைப் போல் முத்துக்குமார் போன்ற தமிழகத்து தமிழனையும் தடுக்க முடியாமல் போய்விடும்.

இந்த நடுநிலை என்ற சொல்லை அரசியல்வாதிகள்தான் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நியாயம், அநியாயம் என்ற இரண்டுக்கு நடுவில் நடுநிலை என்பது என்ன? மதில் மேல் பூனையா? எந்தப் பக்கம் அனுகூலம் உளதோ அங்கு குதித்திட ஆயத்தமாகும் தந்திரமா? அப்படித்தான் தோன்றுகிறது நமது தமிழக நிதியமைச்சரின் கூற்று. அதாவது புலிகளை ஆதரிக்கவும் இல்லையாம் எதிர்க்கவும் இல்லையாம். இப்படி வார்த்தை ஜாலத்திலேயே நாட்களை கடத்த நினைக்கிறார்கள் போலும், தி.மு.க. அமைச்சர்கள். இப்படிப் பேசினால் இதுதான் சந்தர்ப்பம் என்று உடனே செயலலிதாவுக்கு ஆதரவு பெருக்க கிளம்பிவிடுகிறார்கள். அப்பப்பா, தமிழன்தான் என்ன செய்வான் இந்த அரசியல் ஆட்டங்களுக்கு நடுவில்.

கருணாநிதியே ஆட்சியில் இல்லையென்றாலும் தமிழகத்தில் இந்தளவுக்கு உணர்ச்சி அலையும் எழுச்சி அலையும் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. உணருமுன் உணர்ச்சியை நசுக்கவும் எழுவதற்குமுன் எழுச்சியை அடக்கவும் செய்திருப்பார்கள் செயலலிதா ஆட்சியாக இருந்திருந்தால். இப்படிக் கூறுவதனாலேயே, தி.மு.க.வின்பால் மக்களுக்கு அனுதாபம் உண்டென்று தப்புக்கணக்கு போடாமல் விரைந்து காரியமாற்றினால் நல்லது. இன்று பார்ப்பனியத்திற்கு எதிராக மிகப்பெரிய பிம்பம் உண்டென்றால் அது கலைஞரைத்தவிர வேறுயாருமில்லைதான். அவரைக் கண்டு பார்ப்பனியம் இன்றும் அஞ்சத்தான் செய்கிறது. ஆனால் அவரது போர்க்குணமில்லாத அதிமிதவாத போக்கானது தமிழனின் அழிவுக்கு காரணமாகிறது என்றாலும் மிகையாகாது.

தமிழகத் தமிழர்களை இன்று தமிழக அரசியல்வாதிகள் மிகவும் குழப்படித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களும் தாம் சார்ந்த கட்சிகளின் கண்ணோட்டத்துடனேயே இப்பிரச்சினையை அணுகுகிறார்கள். தங்களின் சுயசிந்தையை தட்டிப் பார்ப்பதில்லை. கட்சியின் பக்கம் நிற்பதைக் காட்டிலும் உண்மையின் பக்கம் நின்றால் கட்சியும் நியாயத்தின் பக்கம் தானாக வந்துவிடும். ஆளாளுக்கு ஒரு கருத்தினைக்கூறி குட்டையை குழப்புவதை விட்டு விட்டு ஒத்த கருத்தினைக்கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.

விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்தால் ராசீவ்காந்தியின் படுகொலைக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ஏதாவது பெரிய அசம்பாவிதம் நடந்தேறியதா? சரி புலிகளின் செயல்பாடுகளை தமிழகத்தில் அனுமதிக்கத் தேவையில்லை. ஈழத்தமிழருக்காகவாவது ஆதரிக்கலாமில்லையா?

நான் முன்னொரு கட்டுரையில் கூறியதைப்போல் இன்னும் நம்மிடையே தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது. முத்துக்குமார் எடுத்து வைத்த அனைத்து 14 அம்ச கோரிக்கை அனைத்து தமிழர்களுக்கும் உடன்பாடானாதாகவே இருக்கும்.

தமிழர்கள் வேண்டுவதெல்லாம் போர்நிறுத்தம் என்று தெரிந்திருந்தும் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்த மையப் பிரதிநிதிகள் அதைப்பற்றி பேசாமல் வந்ததில் வியப்பொன்றும் இல்லை. எவ்வளவு எழுச்சிகள் வந்தாலும் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் திறமை, அனைத்து தமிழக கட்சிகளுக்கும் கைவந்த கலையென்று தெரியுமென்பதால்தான் இவ்வளவு தடித்தனமும் மெத்தனமும் அவர்களுக்கு.

தமிழக மக்களைப்போல் தமிழக ஆட்சியாளர்களும் குழம்பாமல் உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் தருணம் இது. தேர்தல் அரசியலை மனதில் கொள்ளாமல் கலைஞர் காரியமாற்ற வேண்டுமென்பதே தமிழக தமிழர் மட்டுமல்லாது உலக தமிழர்களின் ஆவலும் கூட.

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)