cameraநினைப்பை கூட போட்டோவாக எடுத்து விட முடியும் என்கிறார் "டெஸ்லா".

போட்டோ என்பது அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மனிதனின் உணர்வுகளோடு கலந்த ஒன்றாகவே தெரிந்தோ தெரியாமலோ இருந்து கொண்டேயிருக்கிறது.

நவீன கால தொழில் நுட்பம்.. நின்றால் செல்பி... நடந்தால் செல்பி... படுத்தால் செல்பி... சாப்பிட்டால் செல்பி... பயணித்தால் செல்பி என்று போட்டோவின் வரையறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி விட்டதை வேறு வழியே இல்லை... ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

விசேஷ வீடுகளில் செல்பிக்கென்றே ஒரு செஸ்ஸன் ஒதுக்கப்படுகிறது.
காலத்தோடு ஒன்றாதவனை காலமே கை விடும். எல்லார் கையிலும் கேமரா இருக்கிறது. எல்லாருக்குள்ளும் ஒரு புகைப்படக்காரன்
இருக்கிறான்.

இன்ப துன்பங்களை சுக துக்கங்களை புகைப்படமாக்கி கொள்வதில் ஒரு வித திருப்தி நம்மில் மேலோங்குவதை நாம் மறுக்க இயலாது.

ஆனால்.. முன்னொரு காலம் இருந்தது.

ஒரு புகைப்படம் என்பது கொம்புத்தேன் மாதிரி. எப்போதாவது தான் நடக்கும். அதற்கும் வால்பாறை 'கணாரீஸ்' ஸ்டுடியோவுக்குத்தான் வர வேண்டும். கிளிக் சத்தம் கேட்கும் வரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த கருப்பு வெள்ளை சாட்சியங்கள் இன்னமும் வால்பாறை காற்றில் அலைந்து கொண்டிருக்கும் என்று தான் நம்புகிறேன். அன்பை உணர்ச்சி வயப்படுபவனே காலத்துக்கும் காத்துக் கண்டிருக்கிறான். போட்டோக்கள் என்பது உணர்ச்சி வயப்படுதலின் உன்னதம்.

சிலபோது எஸ்டேட்டுக்கு கேமராவோடு ஒருவன் எங்கிருந்தோ வந்து போட்டோ எடுத்து இத்தனை காப்பி தருகிறேன். இத்தனை காசு என்று யாரிடமாவது பேசி.. அது அப்படியே பரவி... ஆளாளுக்கு காத்திருந்து... மரத்தடியே... வீடு முன்பிருக்கும் தோட்டத்தில்... என்று நமக்கு பிடித்த இடத்தில்... நின்று போட்டோ எடுத்துக் கொள்வார்கள்.

அப்படி நானும் என் அம்மாவும் உருளிக்கல் பள்ளிக் கூடத்தின் பக்கவாட்டில் இருக்கும் மரத்தின் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படம் இன்றும் என் 7 வயதை காலத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. பள்ளி விட்டு வந்ததும் "போட்டா வந்துருச்சா போட்டா வந்துருச்சா" என்று அந்த வாரமே நச்சியவனுக்கு 15 நாட்களுக்குப் பின் கவருக்குள் ஃபிரேம் செய்து வந்த அந்த போட்டோவை... அன்றிரவு எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்பது என் தூக்கமும் அறியாததது.

ஒரு முறை பக்கத்து வீட்டு அக்காவுக்கு திருமணத்துக்கு போட்டோ பிடித்துக் கொண்டிருந்தார்கள். வாசலில் நின்று பார்த்துக் கொண்டே இருந்த நான் வீட்டுக்குள் ஓடி அம்மாவிடம் ஒரே அழுகை. என்னையும் போட்டா பிடிக்க சொல்லுங்க என்று ஏக கலாட்டா. அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அது கல்யாண வீடு.

பெண்ணும் மாப்பிளையையும் பந்தல் வாசலில் மாலையும் கழுத்துமாக நின்றிருக்க வேண்டப்பட்டவர் மட்டும் போட்டோவுக்கு அழைத்து எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (பிலிம் ரோல்... கல்யாண பட்ஜெட்டில் கணக்கு வைக்கப்படும்)

எனக்கா உள்ளிருக்க முடியவில்லை. போட்டோவின் வசீகரம் என்னை இம்சித்துக் கொண்டிருந்தது.

இயலாமை.. அமைதியாகி... அமைதி விசும்பலாகி... விசும்பல் கேவி கேவி அழவும் செய்து விட்டது. அந்த திருமண வீட்டில் போட்டோவுக்கு அழும் பக்கத்து வீட்டு சிறுவன் பற்றிய அக்கறை யாருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லைதானே. யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் புகைப் படத்துக்கு ஏங்கும் மனதை என்ன செய்வது.

வீட்டுக்குள் தரையில் படுத்து காலை உதைத்துக் கொண்டு ஒரே அழுகை. அம்மாவுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. எப்படிசென்று கேட்க முடியும் - என்று தயக்கம் அம்மாவுக்கு. நானோ அழுகையை நிறுத்தியபாடில்லை.

மைக் செட்டில் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறது. 'மானுப்பா' காக்கா பிரியாணி... ஒரு பக்கம். 'உருளிக்கல் (எஸ்டேட்) மக்கள் வருவதும் போவதுமாக கல்யாண வீடு ஜெகஜோதியாக இயங்கிக்
கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்குமே கிளிக் கிளிக் என்ற போட்டோ சத்தம் தான் சாட்சி. முகம் வீங்கி.. கண்கள் சிவந்து... இன்னமும் அழுகை நிற்கவில்லை. சங்கோஜம் விட்டு... வேறு வழியே இன்றி.. கிட்டத்தட்ட கெஞ்சுவது போலத்தான்.. அம்மா போட்டோகாரனிடம்...' தம்பி இவனையும் ரெண்டு போட்டோ எடுங்களேன்' என்று கேட்டார். எங்களை ஏற இறங்க பார்த்தார் புகைப்படக்காரர்.

பின் கிட்டத்தட்ட 10,15 போட்டோவில்... நான் ஓரமாக பிரேமில் நிற்க வைக்கப்பட்டேன். முதல் போட்டோவுக்கு அழுது வடிந்த முகம் அப்படியே இருந்தது. அதன் பிறகு... அழுகை அப்படியே சிரிப்பாக மாறி... முகம் வெட்கத்தால் பூரிக்க... சிரித்தபடியே நின்று கொண்டிருந்தேன். போட்டோவுக்குள்ளும் என் சிரிப்பு சத்தம் எனக்கு மட்டும் கேட்டது.

பிறகு ஒரு நாள் பள்ளி விட்டு வருகையில்... ஆல்பத்தை மடியில் வைத்து பெண் வீட்டார் பார்த்துக் கொண்டிருக்க... சுற்றி நின்று எட்டிப் பார்க்கும் கூட்டத்தோடு நானும் சேர்ந்து கொண்டேன். அவர் அடுத்தடுத்த போட்டோவைத் திருப்பிக் கொண்டே வந்தார்.

அழுது வடிந்த ஓரமாய் தனித்து நின்றிருந்த அந்த முதல் போட்டோவில் மட்டும் தான் நான் இருந்தேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மற்ற எதிலுமே நான் இல்லை. வேகமாய் வீட்டுக்குள் ஓடி விட்டேன். அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் கூட ஆல்பம் பார்த்தார்கள். நான் அவர்கள் அருகே செல்லவேவில்லை.

எடுத்த புகைப்படத்தில் இல்லாமல் போன காரணம் இன்று நான் அறிந்தாலும்... அறியாத வயதின் ஆசையில் இன்னமும் அந்த இல்லாத புகைப்படங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

- கவிஜி