University protestsஇந்தியாவில் மத்திய அரசின்கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27% இடஒதுக்கீடும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு முறையே 15% மற்றும் 7.5% இடஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என்று (எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் — விடுதலைக்குப்பின் 1948-ம் ஆண்டு முதலும்,எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு கல்வியில் — அரசமைப்பின் முதல் சட்டத் திருத்தத்தின்படி 1951-ம் ஆண்டு முதலும், ஓ.பி.சி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் — மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் 1992-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முதலும், ஓ.பி.சி பிரிவினருக்கு கல்வியில் – 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சட்டத்தின் படியும்) சட்டம் கூறுகின்றது.

இதனடிப்படையில் தான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தி வழங்கி வருகிறது; இருப்பினும் இத்தனை ஆண்டுகள் கடந்தப் பின்னரும், மத்திய பல்கலைக் கழகங்களில் இந்த இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக கடைப் பிடிக்கப்படவில்லை, பின்பற்ற படுவதில்லை, மேலும் ஒதுக்கப்பட்ட இடங்கள் பல நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து புகார்கள் எழும்பிக் கொண்டேத்தான் இருக்கின்றது, இந்த நிலையில் தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆதார பூர்வமாக (RTI) தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆர்டிஜ தகவலை கோரிய மாணவர் சங்கத்தின் தலைவரும், ஆய்வறிஞருமான ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரண்குமார் என்பவர் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் தற்போதுவரை நியமிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள ஓ.பி.சி பிரிவு பேராசிரியர் இடங்களின் தகவல்களை அளிக்குமாறு, (ஆர்டிஐ- சட்டத்தின்) வாயிலாக ஆகஸ்ட் மாதம் கேட்டிருந்தார்.

அதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அளித்த தகவல்களின் படி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவிப் பேராசிரியர், என அனைத்து ஆசிரிய நிலைகளிலும், ஓ.பி.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கும், தற்போது பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருப்பது உறுதியானது.

அதாவது பேராசிரியர்களுக்காக 313 இடங்கள் இடஒதுக்கீட்டின் படி வழங்கவேண்டும் ஆனால் 9 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இணை பேராசியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 735 இடங்களில் 38 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல், உதவி பேராசியர்களுக்கு 2,232 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 1,327 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களான 1,906 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 

இதன்மூலம் பல்வேறு தொடர்போராட்டங்கள், கோரிக்கைகளுக்கு பின் சட்டமியற்றப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடான 27விழுக்காட்டில் பங்கம் விளைவிக்கபடுவது கண்கூடு. இது ஒருபுறமிருக்க, கடந்த 2018-ம் ஆண்டு ‘த பிரிண்ட்’ ஆங்கில பத்திரிக்கை கேட்ட ஆர்.டி.ஐ தகவலுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-ம் ஆண்டு கணக்கின்படி 40 மத்திய பல்கலைக் கழகங்களில், 80%-க்கும் அதிகமான எஸ்.சி., எஸ்.டிகளுக்கான பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதிலும் டெல்லி, அலகாபாத் போன்ற பல்கலைக் கழகங்களில் 90%-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன என்றும் கூறியுள்ளது.

மேலும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) அளித்த பதிலில், 40 மத்திய பல்கலைக் கழகங்களில் நிரப்பப்பட்ட பேராசிரியர் இடங்களில் ஒற்றை இலக்க சதவிகிதத்திலேயே எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதும்,ஓ.பி.சி. பிரிவினருக்கு எந்த இடங்களும் ஒதுக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.

யாருக்கு செல்கின்றது இந்த இடஒதுக்கீட்டு பலன்கள்?

பன்னெடுங்காலமாக கல்வி, நிலவுரிமை , அதிகாரம் போன்றவைகள் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்றும், தங்களுக்கு கீழாக கருதும் சமுகத்தார்கள் தங்களுக்கு எப்போதும் அடிமைச்சேவகம் புரிவதற்கே ஆண்டவனால் படைக்கபட்டவர்கள் எனக் கருதும் உயர்சாதியினர் எனும் மனநிலை பிறழ்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுநாள் வரை எந்த வகையிலும் சக மிருகங்களுக்குக் கொடுக்கும் உரிமையினைக் கூட கிடைக்கப் பெறாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்களால் இடஒதுக்கீடு கிடைக்பெற்று பல ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் கல்வியிலும், வேலைவாய்பிலும் உரிமைப்பெற்று தங்கள் வாழ்வின் உயர்நிலைக்கு உயர்ந்தனர்.

தாழ்த்தபட்டவர்கள் என்றுமே வாழ்வில் உயர்ந்திடவே கூடாது என கருதும் உயர்சாதியினர் இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் உயர்வடைவதை சகித்துக் கொள்ள முடியாமல் தங்களின் புத்தியினை இவற்றிலும் புகுத்தி லாவகமாக இத்தகைய ஒடுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திட விடாமல் பார்த்துக் கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் “பதவி உயர்வைத் தீர்மானிக்கும் இடங்களில் பொதுவாக உயர்சாதிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் நிர்வாகிகளுமே இருப்பதால், வெகுசிலரே பதவி உயர்வு அடைகின்றனர்” என்று கூறும் கிரண், “பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வை இன்னும் சாதியவாதமே தீர்மானிக்கும் அவலநிலையில் நாம் இருப்பதையே இது காட்டுவதாக” வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் ஒரு முக்கியமான ஒரு கருத்தை அவர் முன் வைத்தார் அதில் இடஒதுக்கீட்டினை புறந்தள்ளிட இவர்கள் கையாழும் முறையானது; “குறிப்பிட்ட பல்கலைக்கழகம் பதவி உயர்வுக்ககான ஆசிரியர் இடங்களுக்கு மூன்று முறை வரை அறிவிப்பு செய்யும், அப்போது அந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு போதுமான அளவில் ஆட்கள் வராத பட்சத்தில், அவ்விடங்கள் பொதுப் பிரிவிற்கு மாற்றப்படும்; இதை நாம் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மத்திய பல்கலைக் கழகங்களிலும் உயர்சாதியினர் செலுத்தும் ஆதிக்கத்துடன் பொருத்திப் பார்க்கலாம். இவ்வாறாக ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களும் வாய்ப்புகளும் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன” என ஆணித்தரமாக குற்றம் சாட்டுகிறார் கிரண்குமார்.

இந்த குற்றச்சாட்டை எளிதாக கடந்துவிட முடியாது ஏனெனில் மேற்குறிப்பிட்ட ஆர்.டி.ஐ. தகவலில் மத்திய அமைச்சகமே 90%-க்கும் அதிகமான மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் இடங்களில் பொதுப் பிரிவினரே இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக, கடந்த ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், “மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் 6%-க்கும் குறைவான பேராசிரியர் இடங்களிலேயே ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் 3%க்கும் குறைவான இடங்களிலே எஸ்.டி., எஸ்.டி. பிரவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட துறையிலும் சரி, கல்வி நிறுவனத்திலும் சரி, எந்த அளவிற்கு பன்முகத் தன்மை உள்ளதோ அந்தளவிற்கே அது செழுமையாக மேம்படும். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும், தங்களின் வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் அதிகாரப் பரவலிலும் உயர் பொறுப்புகளையும் அடையவேண்டும் என்பதை உறுதி செய்யவே இடஒதுக்கீடு நடைமுறை பல்வேறு தடைகளை தாண்டி, பேராட்டத்தின் மூலம் பெறப்பட்டது.

ஆனால் மத்திய கல்வி நிறுவனங்களைப் பொருத்த வரையில் அது குறிப்பிட்ட பிரவினரின் ஏகபோக கூடாரமாகவே காலங்காலமாக இருந்து வருகிறது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. அது அன்றுமட்டுமல்ல இன்றும் தொடர்கிறது, அதையே இத்தகைய தரவுகளும், கருத்துக்களும் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன.

என்னத்தான் போராட்டங்களின் மூலம், சிந்தனை வளர்த்தலின் மூலம் நாம் இங்கே இடஒதுக்கீட்டு முறையினை அனைத்து முறைமைகளில் நடைமுறைபடுத்திட முயன்றுக் கொண்டிருந்தாலும் அதனை தடுத்திடவும் ஆரமர்ந்து சதிதிட்டம் நிகழ்த்தப்பட்டே வருகின்றது. கல்வியும், வாழ்வும் கிடைத்திட ஒருவருக்கு முழுத்தகுதியான (திறமை மற்றும் கடின உழைப்பு) உரிமை இருந்தும் பிறப்பின் அடிப்படையில் மறுப்பது என்பது இனி என்றுமே நிகழக்கூடாது.

அப்படி நிகழவே திரும்பத் திரும்ப பலவகைகளில் (உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும்) உளவியல் தாக்குதல் செய்கின்றனர். அதனை அறிந்து, புரிந்து நாம் சிந்தனை செய்திட வேண்டும், எழவேண்டும், போராட வேண்டும்.

உரிமை நம் கரத்தில்.

- நவாஸ்