தமிழ் சினிமா பேசத் தொடங்கி இன்றைக்கு முக்கால் நூற்றாண்டைக் கடந்து விட்டது. தமிழில் முதல் பேசும் படம் ‘காளிதாஸ். 1931 அக்டோபர் மாதம் 31ந் தேதி சனிக்கிழமையன்று ஜனித்தது காளிதாஸ். தமிழில் மட்டுமல்ல, அந்தப் படம் தெலுங்கிலும் பேசியது. அதாவது இரட்டை மொழிப் படம் (இப்போது வரும் இரட்டை அர்த்த வசனப் படமல்ல). ஆமாம். காளிதாஸ் படக் கதாநாயகி வித்யாதிரி தமிழில் பேசுவாள், பாடுவாள். அவளுக்கு கதாநாயகன் காளிதாசன் தெலுங்கில் மறுமொழி உரைப்பான். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசினார்களாம். அப்படியெனில் பன்மொழிப் படம்? இல்லை. இல்லை இது தமிழ்ப் படம்தான். வித்யாதரியாக வந்த இந்தப் படத்தின் நாயகி டி.பி.ராஜலட்சுமி. முதல் தமிழ் பேசும்படத்தின் கதாநாயகி. தமிழ் சினிமாவின் அந்த முதல் கதாநாயகியை அன்று ‘சினிமா ராணி’ என்று மக்கள் அழைத்தனர். இந்த ராணியின் நிஜக்கதை உண்மையில் பரிதாபத்துக்குரியது. அவர் நடிக்க வந்தது கலைச்சேவை கருதியோ, புகழ் விரும்பியோ அன்று. வறுமையும் சோகமும் சூழ்ந்து விரட்டித் துரத்தப்பட்ட அந்த அபலைக்கு நடிப்புத் தொழில் அபயக்கரம் நீட்டியதென்பதே உண்மை.

தஞ்சாவூருக்கு அருகே திருவையாறு எனும் வளமான ஊரில் பஞ்சாபகேச அய்யருக்கும் மீனாட்சியம்மாளுக்கும் பிறந்த மகள் தான் ராஜலட்சுமி. ஆச்சாரமும், பழமையும் மண்டிக்கிடந்தன அந்த நாளில். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிருக்கும்போதே திருமணமாகி விட்டது. பள்ளியில் ஒன்றிரண்டு வகுப்புகளைக் கூட அந்தச் சிறுமி முழுதாய்த் தொடவில்லை. விளையாட்டுப் பருவமென்பதை வந்தடையக்கூட அவளுக்கு வாய்க்கவில்லை. அதற்குள் அவளுக்குத் திருமணமே ஆகிவிட்டது. உச்சாணிக் கொம்பிலே உட்கார்ந்து கொண்டிருந்த உயர்சாதியிலேயே இவவ்ளவு கட்டுப்பெட்டித்தனம் என்றால் அந்த நாட்களின் - நம் மனிதர்களின் நிலைமையை என்னவென்பது?

திருமணமாகிப் புகுந்தவீடு போன அந்தச் சிறு பெண் ராஜலட்சுமியை வரதட்சணைக் கொடுமை வதைக்கத் துவங்கியது. பிறந்தகம் மீண்ட அவளுக்கு அங்கே தந்தையின் மரணம் இடியென விழுந்தது. விதவைத் தாயுடன் வறுமையும் அவளுக்கு பாரமாக, தாயும் மகளும் கால்போன போக்கில் நடக்கலாயினர். ராஜலட்சுமிக்கு ஒரேயொரு சொத்துமட்டுமிருந்தது. அது பிறவியிலேயே வாய்க்கப்பட்டு, வளர்க்கப்பட்டிருந்தது. அதுதான் இனிய குரல்வளம். அந்த ஒன்றை மட்டுமே அவர்கள் தங்கள் வழிகாட்டும் விளக்காகக் கொண்டு, நடந்தே திருச்சி வந்து சேர்ந்தனர்.

திருச்சியில் வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியின் கதவுகள் ராஜலட்சுமிக்குத் திறந்து வழிவிட்டன. தன் இனிய குரல்வளத்தால் ராஜலட்சுமிக்கு அங்கே வாய்ப்புக் கிட்டியது. ராஜலட்சுமி தனது 11 வயதில் மாதச் சம்பளத்துக்கு நடிகையானாள். வசீகரமிக்க அவளது குரலுக்கு ரசிகர்கள் உருவானார்கள். பெண்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமில்லாத கன்னய்யா நாடகக் கம்பெனி ராஜலட்சுமியை மட்டும் வெற்றிலை - பாக்கு வைத்து அழைத்துக் கொண்டது.

1929லேயே ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஏ.நாராயணன் ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில் மாதவியாக நடிக்க வைத்தார். அதாவது தமிழில் பேசும்படத்தின் முதல் கதாநாயகி நடித்த முதல் ஊமைப்படம் இந்தக் ‘கோவலன்’. இதனைத் தொடர்ந்து ‘உஷா சுந்தரி’ முதலான ஊமைப்பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. சினிமாப் புகழும் சேர்ந்து கொண்டதால் ராஜலட்சுமியின் ஸ்பெஷல் நாடகங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கியும், மரியாதையும் கூடியதாம்.

1929 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் முதன் முதலில் ஒரு பேசும்படம் வந்து சேர்ந்தது. அது ‘மெலடி ஆஃப் லவ்’ எனும் ஆங்கிலப் படம். அது கல்கத்தாவில்தான் முதன் முதலில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பம்பாய், சென்னை போன்ற நகரங்களில் பேசும்படங் களைத் திரையிடும் ‘டாக்கீஸ்’கள் உருவாகின. அவற்றில் மேல்நாட்டுப் படங்களே காட்டப்பட்டன. இந்த அதிசய சினிமாவைப் பார்த்த ‘பம்பாய் இம்பீரியல் மூவி டோன்’ நிறுவனர் அர்தேஷிர் இரானி இந்த சினிமா பிலிம் வெறும் ஆங்கில பாஷையைத்தான் பதிவு செய்யுமா அல்லது நம் இந்திய மொழிகளையும் இதில் பதிவு செய்யலாமா என்று பலத்த சந்தேகம் கொண்டார்.

விளைவு? 1931 ஜூனில் ‘ஆலம் ஆரா’ எனும் படம் பிறந்தது. இந்தியாவின் முதல் பேசும்படமாகும் இது. அது மட்டுமல்ல. இந்தியில் முதல் பேசும்படமும் அதுதான். அதே அர்தேஷிர் இரானிக்கு இந்த பிலிமில் இந்தியைப் பதிவு செய்தது போலவே தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளையும் பதிவு செய்து பார்த்திட ஆசை. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களை பம்பாய் அழைத்தார் இரானி. சோதனை ஒலிப்பதிவுக்காக கே.சுப்பிரமணியம் பரிந்துரை செய்து பம்பாய்க்கு அனுப்பப்பட்டவர் டி.பி.ராஜலட்சுமி. அவரின் மதுர இசை இரானியை யும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படக் கதாநாயகியானர் ராஜலட்சுமி.

முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் தியேட்டரில் திரையிடப்பட்டது. ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’. இது அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட வளம்பர வாசகம்.

அது மட்டுமல்ல. அதே சுதேசமித்திரனில் 1931 அக்டோபர் 29ந்தேதியே இந்தப்பட விமர்சனம் வெளிவந்துவிட்டது. அதில், ‘தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ் டி.பி.ராஜலட்சுமி முதன் முறையாக சினிமாவில் தோன்றுவதை, இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கர தாசுக்கு இதனால் கிடைத்தது.

டி.பி.ராஜலட்சுமி காளிதாசைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1936ல் ‘மிஸ் கமலா’ படத்தினை அவரே சொந்தமாகத் தயாரித்தார். அதனால், தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. அந்தப் படத்தை அவரே இயக்கினார். தமிழின் முதல் பெண் இயக்குநர் எனும் பெயரும் அவரையே வந்து சேர்ந்தது. ‘மிஸ் கமலா’ படத்தின் பிரதான பாத்திரத்திலும் அவர் நடித்தார்.

1956ல் தமிழ் இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார் டி.பி.ராஜலட்சுமி. “இப்போது பாடுவதற்கு ஒரு ஆள். பேசுவதற்கு ஒரு ஆள். ஒத்திகைக்கு ஒரு ஆள். இறுதியில் தானே நடிகைகள் வருகிறார்கள். அப்போதெல்லாம் நாங்களே பாடவேண்டும். அதே நேரத்தில் நடிக்கவும் வேண்டும். நாங்களே பவுடரை அள்ளிப்பூசிக் கொள்வோம். 1956லேயே நிலைமை மாறிவிட்டதென்பது அவரது கூற்றிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. இன்றயை நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். டி.பி.ராஜலட்சுமி எனும் அந்த சாதகபட்சி நடித்தது வெறும் 14 படங்களில்தான். 1931 தொடங்கி 1943ல் நிறைவடைந்துவிட்டது அவரின் கலைப்பயணம்.

ஆனால் தமிழ் சினிமா தன் வரலாற்றில் முதல் சாதனைப் பெண்ணென்று அவரை அழுத்தமாகக் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

- சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)