corona gdp copyகோவிட் - 19 கிருமி தொற்றின் பாதிப்பை தனியாகவும், அரசின் பொது முடக்க பாதிப்பைத் தனியாகவும் பிரித்தே பார்க்க வேண்டும். அரசின் பொது முடக்கம் 5 மாதத்திற்கு மேலாகத் தொடர்வதால் ஏற்பட்ட பாதிப்பு என்பது உற்பத்தி - வழங்கல் - தேவை மூன்றிலும் இருக்கிறது. கீழுள்ள மாற்றங்கள் சில ஏற்கனவே நிகழ்திருந்தாலும் கடந்த 5 மாதங்களில் அதிகரித்திருக்கின்றன:

விவசாயி தான் விளைவித்ததை தானே விற்கும் வியாபாரியாக மாறியிருக்கிறார். அதாவது சிறு விவசாயிகளின் "உழவர் சந்தை முறை", பெரு விவசாயிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது. தெருவோர மற்றும் தெருதோறும் நடமாடும் கடைகளாக "உழவர் சந்தை முறை" விரிவடைந்திருக்கிறது.

இரும்பு வணிகம் செய்தவர் காய்கறி வணிகம் செய்கிறார்.

பழைய கார் வணிகம் செய்தவர் முக கவச மொத்த வணிகராக மாறியிருக்கிறார்.

தொழிற்சாலைகள் சில தமது மூல - முதன்மைப் பொருளுக்கு தொடர்பில்லாத பொருள் உற்பத்தி செய்கின்றன.

எலெக்ட்ரானிக் பொருளுற்பத்தி செய்த நிறுவனம் மாஸ்க் தயாரிக்கிறது.

பல மளிகை பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் சோப்புநீர், சானிடைசர் தயாரிக்க வந்துவிட்டன. பெரிய தனியார் வளாக (Mall) பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று, மளிகைப் பொருள் பாக்கெட்டுகளை வேனில் அள்ளிப்போட்டு நடமாடும் விற்பனையை முச்சந்திகளில் நடத்துகிறது.

இரு சக்கர மெக்கானிக் வருட மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்கும் கடையைக் கூடுதலாகப் போட்டிருக்கிறார்.

ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் கூடுதலாக ஜூஸ் வணிகம் செய்கிறார்.

ஒரு மென்பொருள் தயாரிக்கும் ஐ.டி. நிறுவனத்தில் வேலையிழந்தவர் நடமாடும் உணவகம் நடத்துகிறார்.

ஒரு பெட்டிக்கடைகாரர் நாட்டு மருந்து விற்பனையையும் கூட்டி கொண்டார்.

துணி தைப்பாளர் மாஸ்க் தயாரித்து தெருவோர வியாபாரியாகவும் ஆகியிருக்கிறார்.

மெசின் கான்கிரீட், போர்வெல் போன்றவற்றில் வெளி மாநில உழைப்பாளர்கள் இல்லாததால் கட்டிட வேலையில் சிரமம் அல்லது மேனுவல் முறைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை.

கட்டிட வேலைகளுக்கு அருகிலுள்ள ஒரு குடும்பத்தினரையோ அல்லது உறவினரையோ ஒரே இடத்தில் வேலைக்கு அமர்த்துவது முன்பு விரும்பாதவர்களும் இன்று விரும்பி செய்வது; கூலியுழைப்பாளர்களும் அதே மனநிலைக்கு மாறியிருப்பதும் பார்க்க முடிகிறது.

ஆட்டோ - டாக்சி டிரைவர்களை பால் விற்பனை செய்ய சொன்னது அரசின் ஆவின் நிர்வாகம்.

சில வாகன உரிமையாளர்கள் வேறு தொழிலுக்கு மாறியிருக்கிறார்கள். ட்ரக் - கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நட்டத்தால் அவற்றை வங்கிக்கே திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தொலைதூரப் பகுதிகளின் பொருள் விநியோகம் மேலும் பாதிக்கலாம்.

பல துறையிலிருந்த நிறுவனங்கள் உணவு - மருந்து - சுகாதாரம் தொடர்பான உற்பத்தி, வணிகத்திற்கு மாறியிருக்கின்றன.

இப்படி வேறு வேறு தொழிலுக்கு மாறிச் சென்றவர்கள், தொழிலையே இழந்தவர்கள் மீண்டு வரமுடியாதோ என அச்சமுறுகிறார்கள்.

மேலுள்ள வாழ்வியல் மாற்றங்களுக்கு முதலாளியம் - ஏகாதிபத்தியம் புதிய இயல்பு வாழ்க்கை (New Normal Life) என பெயரிடுகிறது.

ஆனால், மேலுள்ள வாழ்வியல் மாற்றங்கள் வேறு ஒன்றை உணர்த்துகின்றன. முதலாளியம் - ஏகாதிபத்தியத்தின் தோல்வியையும், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தில் நிலக்கிழாரிய முறை தற்காலிகமாக மாற்றாக வந்து அமர்ந்து ஈடு செய்ய முயல்வதும் நடக்கிறது. அதன் வெளிப்பாடு இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் அதிகமாக உள்ளது.

நிலக்கிழாரிய "உழவர் சந்தை முறை", வேறு துறை பொருள் உற்பத்தி - வணிகம், ஒரு குடும்பம் ஒரு பொருள் உற்பத்தி - வணிகத்திற்கான பல வேலைகளைச் செய்வது, வெவ்வேறு வேலைக்குச் சென்ற ஒரு குடும்பத்தினர் ஒரே வேலையைச் செய்வது, ரத்த உறவினர்கள் பற்று போன்றவை கொரோனா பொதுமுடக்க காலத்தில் நடுக்கடலில் தத்தளிப்பவனுக்குப் பற்றிக் கொள்ளக் கிடைக்கும் மரக்கட்டையாக உதவுகின்றன. முன்னேறிய முதலாளிய பாணி உற்பத்தி - வணிகத்திலிருந்தவர்கள் பின்தங்கிய நிலக்கிழாரிய பாணி உற்பத்தி - வணிக முறைகளை கைகொள்கிறார்கள்.

முதலாளியத்தின் தோல்வி பல்லிளிக்கிற சமயத்தில் வேறு மாற்றில்லாத போது பழைய சமூக முறைகள் மாற்றாக வந்து நிற்கவே செய்யும். ஒவ்வொரு தொற்று நோய் காலத்திலும் ஆங்கில நவீன மருத்துவ முறை, மருந்தில்லாமல் சவாலை எதிர் கொள்ளும் போதும், பழைய மரபு வழி மருத்துவம் முன்னுக்கு வந்து மாற்று முறையாகப் பேசப்படுகிறதோ அதைப் போன்றது இது.

என்றைக்கும் மரபு வழி மருத்துவங்கள் இன்றைய நவீன சமூகத் தேவைக்கு எப்படி அப்படியே மாற்றாக விளங்க முடியாதோ, அதைப் போல முதலாளிய தோல்வியின் இடத்தை நிலக்கிழாரியம் இட்டு நிரப்ப முடியாது; இட்டு நிரப்புவதும் தற்காலிகமானதே.

ஏற்கனவே வீழ்ந்து வந்த இந்தியாவின் பொருளாதாரம், கோவிட்-19 பொது முடக்கத்தால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உற்பத்தியில் விவசாயம் தவிர மற்ற தொழில், சேவை துறைகள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. பல சிறு - குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. வழங்கலில் 50% செயல்பட இயலா நிலை. GDP -23.9% (நெகட்டிவ்) என்றளவிலிருக்கிறது. 50 விழுக்காட்டிற்கு மேல் வீட்டிற்கு ஒருவர் வருமானமிழந்துள்ளனர். மக்களிடம் அடிப்படை தேவை அதிகம் இருந்தும் அவர்களிடம் வாங்கும் ஆற்றல் இல்லை.

அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் இதை ஒத்த பொருளாதார வீழ்ச்சி - வாழ்வாதாரம் இழப்பு நேரிட்டு "பொதுமுடக்கத்தை நீக்கு" என மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஆனால் அதுபோல் இந்தியாவில் போராட்டமில்லையே ஏன்?

இதற்குரிய காரணமும் முதலாளிய முறை தோல்வியின் இடத்தில் பழைய நிலக்கிழாரிய முறை வந்து தற்காலிகமாக அமர்ந்து கொள்கிறது என்பதும் ஒன்றாகும். முதலாளியம் வளராத இந்தியா போன்ற நாடுகளில் நிலக்கிழாரிய உற்பத்தி முறை அக்கம் பக்கமாக நிலவுவதால்... இவை தற்காலிகமாக பஞ்சம் - பசி - பட்டினியை தள்ளிப் போடுகிறது.

புதிய இயல்பு (new normal) என்று ஆளுங்கும்பல் குறிப்பிடுவன மக்களுக்கானது என்பதைவிட அவர்களுக்கே அது அதிகம் பொருந்தக் கூடியது. அவர்களால் பழைய முறையில் தமது சுரண்டலை தொடர முடியாத நெருக்கடி உருவாகி, புதிய முறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேவையானபடி உலகை ஒழுங்கமைக்க நாவல் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி திட்டமிடுகிறார்கள்.

- ஞாலன்