நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்பது பழமொழி. ஆனால், அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு இதுபோன்ற எத்தனை செருப்படி பட்டாலும் திருந்த வாய்ப்பில்லை.

bushஈராக்கில் போரினால் அனாதையாக்கப்பட்டு தவித்துக்கொண்டிருக்கின்ற குழந்தைகளும் சிறுவர்களும் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை, கணவனை இழந்த விதவைகள் நினைத்துக் கொண்டிருந்ததை, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருந்ததை, சக உறவினர்களை இழந்த உறவினர்கள் நினைத்துக் கொண்டிருந்ததை, ஒட்டுமொத்தமாக ஈராக் மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததை அந்த பத்திரிகையாளரான முன்டாடர் அல் ஜெய்டி செய்துள்ளார் என்பதுதான் உண்மை.

அமெரிக்க அதிபரான புஷ் திருட்டுத்தனமாக யாரிடமும் சொல்லாமல் தனது இறுதிப்பயணமாக ஈராக்கிற்கு சென்றார். தலைநகர் பாக்தாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகியுடன் கைக்குலுக்கும் போது முன்டாடர் அல் ஜெய்டி என்ற பத்திரிகையாளர் "நாயே! இதுதான் உனக்கு கிடைக்கும் கடைசி முத்தம், ஈராக்கில் கொல்லப்பட்டவர்கள், அனாதையானவர்கள், விதவைகள் அளிக்கும் இறுதி மரியாதை" என்று கத்தி தனது காலிலிருந்து காலணிகளை கழற்றி அமெரிக்க ஏகாதிபத்திய அதிபரான புஷ்ஷின் மீது எறிந்தார். எதற்குமே குனிந்து கொடுக்காத புஷ், பத்திரிகையாளரின் காலணிகளுக்கு குனிந்து கொடுத்து தன்னை காப்பாற்றிக்கொண்டார். காலணிகளுக்கு குனிந்து கொடுத்தது புஷ் மட்டுமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியமும்தான்

அந்த சக பத்திரிகையாளரை சர்வதேச பத்திரிகைச் சமூகம் எப்படி உயிரோடு காப்பாற்றிக்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை. இந்த செருப்படியைப் பற்றிக் கேட்டால், "நான் அதிபராக இருந்த 8 ஆண்டுகாலத்தில் இதுபோன்ற எத்தனையோ சம்பவங்களை பார்த்து விட்டேன், இதெல்லாம் எனக்கு சகஜம்தான்" என்று சினிமாவில் வடிவேலு "இதெல்லாம் எனக்கு ரொம்ப சர்வசாதாரணம்" என்று கூறுவது போல் கூறுகிறார் சுரணை கெட்ட புஷ். அதுசரி, அவருக்குத் தெரியுமா மனிதனென்றால் சூடு சுரணை வேண்டுமென்பது.

அமெரிக்க ஏகாதிபத்திய புருஷனான புஷ் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டில் உள்ள மக்கள் எங்கள் நாட்டினுள் நுழையாதே என புஷ்ஷின் வருகைக்கு எதிராக கர்ஜனைக்குரல் எழுப்பி போராட்டங்களை நடத்துவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இது போன்ற அவமானங்களையும், போராட்டங்களையும் இதுவரை எந்த நாட்டுத் தலைவர்களும் சந்தித்ததில்லை.

ஈராக்கின் எண்ணெய் வயல் கண்ணைப் பறிக்க, உலக நாடுகள் முழுவதும் தங்களது எதிர்ப்புக் குரலை உயர்த்தியபோதும், பலகோடி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தியபோதும் ஈராக்கின் மீது அணு ஆயுதம் என்ற பொய்க் குற்றச்சாட்டைக்கூறி அந்நாட்டின் மீது படையெடுத்து பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த புஷ்ஷுக்கு கிடைத்த சரியான தண்டனைதான் இந்த செருப்படி.

ஈராக்கின் மீது போர்தொடுத்து அந்நாட்டு அதிபரான சதாம் உசேனை சிறைபிடித்து, போலியான விசாரணை நடத்தி மூன்றாம் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவரைத் தூக்கிலிட்டதை அனைத்து ஊடகங்களிலும் காட்டவைத்து மகிழ்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கிடைத்தது தான் இந்த செருப்படி. தன்னுடைய தாய் நாட்டை காப்பதற்காக போரிட்ட ஆண், பெண் போர்க் கைதிகளை அபுகரிப் சிறையில் அம்மனமாக வைத்து உலக மனித இனமே கூனிக்குறுகி வெட்கித் தலைக்குனியுமளவிற்கு செய்த கொடுமைகளுக்கானது இந்த பரிசு.

மூன்றாம் உலக நாடுகளில் தனது சிஐஏ உளவு அமைப்பினை அனுப்பி அந்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளை உருவாக்கி அதன் மூலம் உருவாகும் அமைதியின்மையை பயன்படுத்தி அந்நாட்டிற்குள் நுழைந்து தனது பொம்மை அரசை உருவாக்கி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற எத்தனிப்புக்கு இந்த செருப்படி கிடைத்ததாக கருதிக்கொள்ளுங்கள்.

ஏதாவது இரு நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டிருந்தால்தான் தனது ஆயுதங்களை உலக நாடுகள் வாங்குவது சாத்தியப்படும் என்பதற்காக அந்நாடுகளுக்குள் தனது சாதுர்யத்தால் சண்டை மூட்டி தனது காயலாங்கடை ஆயுதங்களை விற்று தனது செல்வச் செழிப்பை பெருக்கிக் கொண்டிருக்கின்ற கெடுமதிக்கு கிடைத்த பரிசுதான் இந்த செருப்படி. ஈராக் போரைத் தொடர்ந்து ஈரான், சிரியா, வடகொரியா போன்ற நாடுகளை போர் தொடுக்கப் போவதாக மிரட்டிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த செருப்படிக்குப் பிறகாவது திருந்துமா?

முஸ்லீம்களின் எதிரி நான்தான் என்று கூறிக்கொள்ளும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்து ஆப்கானிச்தான் மீது படையெடுத்து அந்நாட்டு மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ஏகாதிபத்தியத்திற்கு கிடைக்கவேண்டிய பாடமிது. உள்ளே கிழிந்துபோன சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே பகட்டாக கோட் அணிந்து கொண்டு உலக பொருளாதார வல்லரசு நான்தான் என்று தம்பட்டமடித்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரம் இன்று பாதாளத்தை நோக்கிப் பாய்ச்சல் வேகத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவின் முதலீட்டை நம்பி தனது நாட்டின் பொருளாதார கட்டமைப்பை கட்டிய நாடுகளின் கதி, பிணம் தூக்கப்போனவனும் பிணமான கதையாக ஆகிவிட்டது. தனது பொருளாதார கட்டமைப்பை அண்டை நாடுகளின் மீது திணிப்பதற்கு கிடைத்த பரிசாகவும் இதை நாம் கருதிக்கொள்வோம்.

புதிதாக பதவி ஏற்கப்போகும் ஒபாமா, புஷ்ஷிற்க்கு விழுந்த செருப்படியை கவனத்தில் கொண்டு தனது ஏகாதிபத்திய கொள்கையை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்காமல் ஆட்சியாளட்டும்! அமெரிக்காவின் அனைத்து கொள்கைகளுக்கும் ஆதரவு அளித்துக்கொண்டு அமெரிக்க அடிவருடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசு, உலகமே எதிர்த்துக்கொண்டிருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கிடைக்கத் துவங்கியுள்ள இந்த செருப்படியை கவனத்தில் கொண்டு அணுசக்தி உடன்பாடு உட்பட அனைத்திலும் அமெரிக்காவுடன் உறவு தேவைதானா என்பதை பரிசீலிக்கட்டும்.

பாஜக ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டசை ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்த அமெரிக்க அரசின் கொடுமையைவிட, அமெரிக்க அதிபர் புஷ்ஷிற்க்கு கிடைத்த செருப்படி கொஞ்சம் அதிகம்தான்!

- இரா.சரவணன்