news18 tamilநியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து பத்திரிகையாளர் ஹாசிப் முகமது வற்புறுத்தல் காரணமாக பதவி விலக வைக்கப் பட்டதாகவும், குணசேகரன் அவர்களின் அதிகாரம் குறைக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஊடகத்துறை என்பது நாட்டின் நான்காவது தூண் என்றும், அது நாட்டில் நடக்கும் அநீதிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துறை என்றும், அந்தத் துறையில் பணியாற்றினால் ஊழல்வாதிகளையும், சாதிவெறியர்களையும், மதவெறியர்களையும் அம்பலப்படுத்தி, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படும் ஜனநாயக விரோத சக்திகளை தண்டித்து விடலாம் எனவும் நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு ஊடகங்கள் என்பது சாதியவாதிகள், மதவாதிகள், கார்ப்ரேட்கள் போன்றோரின் ஏவல் நாய்கள் என்பது இன்று அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கின்றது

இருக்கும் சமூக அமைப்பு பற்றிய ஒரு தெளிவான பார்வை நம்மிடம் இருக்குமென்றால் இது போன்ற கார்ப்ரேட் ஊடகங்களின் எல்லை எது என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கார்ப்ரேட் ஊடகங்களால் ஒரு நாளும் சாதி, மத, சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் சமூக மாற்றம் என்னும் பெரும் பணியில் சிறு பங்களிப்பைக்கூட செலுத்த முடியாது என்பதுதான் உண்மை. கார்ப்ரேட் ஊடகங்கள் அனைத்துமே தன்னுடைய உள்ளடக்கத்தை இருக்கும் சமூக அமைப்பிற்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வைத்துக் கொள்வதில்லை.மூளைக்கு வேலை தராத, சோம்பேறித்தனமான, அற்பத்தனமான, பொழுதுபோக்குவதற்கான அம்சங்களை மட்டுமே அவை உள்ளடக்கமாக வைத்துக் கொள்கின்றன. அவை செய்திகள் என்று மக்களுக்கு தருபவை அனைத்துமே பெரும்பாலான நேரங்களில் வெறும் குப்பைகளைத்தான்.

தினம் தினம் சமூகத்தில் சாதியவாதிகளாலும், மதவாதிகளாலும், கார்ப்ரேட்டுகளாலும் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு கொதிக்கும், சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள இளைஞர்கள் ஊடகங்கள் ஏன் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவில்லை, அந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவில்லை என்று அங்கலாய்ப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. ஊடகங்களை யார் நடத்துகின்றார்கள், அவர்களின் அரசியல் பின்புலம் என்ன என்று தெரிந்து கொள்ளும்போதுதான் நம்மால் ஏன் ஊடகங்கள் மொக்கையாக செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மக்கள் எதை செய்தியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை ஊடக முதலாளிகள் தீர்மானிக்கின்றனர். ஊடக முதலாளிகள் எதை செய்தியாக வெளியிட வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்கின்றார்கள். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை கார்ப்ரேட்டுகளும், சாதியவாதிகளும், மதவாதிகளும் கட்டுப்படுத்துகின்றார்கள். சமூகத்தின் சிந்தனையை வடிவமைப்பதில் இவர்கள் செலுத்தும் பங்களிப்பு என்பது ஊடகத் துறையைத் தாண்டி கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் வரை நீண்டுள்ளது. மனதளவில் முதலாளித்துவத்தின் அடிமைகளை உற்பத்தி செய்வதில் அரசு, ஊடகம், கார்ப்ரேட் என்ற இந்த முக்கூட்டு பெருமளவு முனைப்பு காட்டி வருகின்றன. இதை எல்லாம் கடந்து ஒருவன் இடசாரி பார்வையில் இந்த உலகை பார்க்க கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு சாமான்யமான ஒன்றல்ல.

ஆனால் அப்படி அரிதினும் அரிதாக இந்தச் சமூகம் கற்பித்த அடிமைத்தனத்திற்கு எதிராக சிந்திக்கும் இளைஞர்களை பின்னோக்கி இழுக்கவும், அடிபணியாத போது அச்சுறுத்தவும் எல்லா வகையிலும் அதன் அடிமைகள் முயற்சிப்பார்கள். ஒன்று நீங்கள் இந்த அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட வேண்டும், இல்லை என்றால் அடிபணிந்துவிட வேண்டும். வேறு மூன்றாவது மாற்று என்று எதுவுமே கிடையாது.

இன்று ஊடக முதலாளிகளால் முற்போக்கு சிந்தனை கொண்டவர் வெளியேற்றப்படுவது வெறும் அச்சுறுத்தல் மட்டுமல்ல, இதன் மூலம் அவர்கள் தெளிவான சமிக்ஞைகளை நமக்கு வழங்கி இருக்கின்றார்கள். அது இனி ஊடகங்களில் முற்போக்கு கருத்துக்களுக்கு இடமில்லை என்பதுதான். ஊதியத்துக்கு வழியற்று தொடர்ந்து வேலை செய்ய விரும்பினால் ‘சாதி அமைப்பின் மகத்துவத்தைப் பற்றியும், சூத்திரப் பட்டத்தின் உயர்வைப் பற்றியும், அம்பானிகளின், அதானிகளின், டாட்டாக்களின் கடின உழைப்பைப் பற்றியும், இந்துக் கோயில்களின் தல புராணங்களையும், ஜோசியத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல், புராணங்கள் கூறும் நன்னெறிக் கதைகள் , எச்.ராஜா, எஸ்.வி. சேகர் போன்ற புனிதர்களின் தத்துவ உபதேசம்’ போன்றவற்றையும் நீங்கள் இடைவிடாமல் பரப்புரை செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் ஒரு ரங்கராஜ் பாண்டேவாகவோ, மதனாகவோ, அர்னாப் கோசாமியாவோ மாற வேண்டி இருக்கும்.

இல்லை, தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ வேண்டும் என முற்போக்கு சிந்தனை கொண்ட எந்தப் பத்திரிகையாளனாவது நினைத்தால் அதற்கான இடம் நிச்சயம் கார்ப்ரேட் ஊடகங்களில் கிடையாது. பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பன மற்றும் பனியாக்களின் கைகளில் உள்ளதாலும் அதில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருப்பதாலும் நம்மால் நிச்சயமாக அங்கு சாதி மத கார்ப்ரேட் பாசிசத்துக்கு எதிரான குரலை உரத்துச் சொல்ல முடியாது.

பனியாவல் நடத்தப்படும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 93 சதவீதமும், டைம்ஸ் ஆப் இந்தியாவில் 73 சதவீதமும், பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆங்கில இந்துவில் 97 சதவீதமும் பார்ப்பனர்கள்தான் பணிபுரிகின்றார்கள். அதுமட்டுமல்ல, இந்தியாவிலுள்ள செய்தித்தாள்கள், செய்திச் சேனல்கள், இணையதள ஏடுகள், தினசரி, வார, மாத ஏடுகள் ஆகிய அனைத்திலும் முக்கிய பொறுப்புகளை பார்ப்பனர்களே கைப்பற்றி வைத்திருக்கின்றார்கள். ஆங்கில செய்தி ஊடகங்களான சிஎன்என், நியூஸ் 18, இந்தியா டுடே, என்டி டிவி, டைம்ஸ்நவ், ரிபப்ளிக் டீவி போன்றவற்றில் தலைமைப் பொறுப்புகளில் 89 விழுக்காட்டுக்கும் மேல் பார்ப்பன பனியா கும்பலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

தென் இந்தியாவைப் பொருத்தவரை ஈ நாடு, சன் குழுமம், கலைஞர் குழுமம் போன்றவை சூத்திர சாதிக்காரர்களால் நடத்தப்பட்டாலும் அவை பார்ப்பன பனியா கும்பலால் நடத்தப்படும் ஊடகங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் பார்ப்பனியத்தைப் பரப்புபவைதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்று பத்திரிகையாளர்கள் சமூக மாற்றத்திற்கான தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இன்று ஒட்டுமொத்தமாகவே அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் பெரும் சரிவை சந்தித்து இருக்கின்றன. அதற்கு மாறாக சமூக வலைதளங்கள் போன்றவற்றின் மூலம் இன்று லட்சக்கணக்கான மக்களுடன் நேரடியாக உரையாட முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இடதுசாரி சிந்தனை கொண்ட பல பேர் வெற்றிகரமாக யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றார்கள். அவை பல லட்சம் பேர் வரை பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. அதுவும் இந்த கொரோனோ காலத்தில் ஜூம், கூகுல் மீட், பேஸ் புக் லைவ் போன்றவற்றின் மூலம் பெரிய அளவு செலவு இல்லாமல் தினம்தோறும் பல கருத்தரங்கங்களை நமது தோழர்கள் வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள். இனி ஊடக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துத்தான் நமது கருத்துக்களை மக்கள் மன்றத்தில் சொல்ல முடியும் என்ற நிலை இல்லை. அறிவியலின் வளர்ச்சியானது பார்ப்பன ஆதிக்க சாதிகளின் பிடியில் இருந்து சிந்தனையை மீட்டெடுத்து இருக்கின்றது.

சமூக மாற்றத்தில் அக்கறை உள்ள பத்திரிகையாளர்கள் தனியாக யூடியூப் சேனல்கள் போன்றவற்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவதற்கும் தங்களின் கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பத்திரிகையாளர்களிடம் இருக்கும் ஒற்றுமையின்மைதான் இன்று நேர்மையான பத்திரிகையாளர்கள் கூட பொய்க் காரணங்களைக் கூறி வேலையைவிட்டு வெளியேற்றப்படும்போது கண்டனம் தெரிவிக்க முடியாத கையாலாகாத நிலைக்குக் காரணமாகும். ஒப்பீட்டளவில் பத்திரிக்கையில் பணியாற்றும் பல பேர் கவர் வாங்கும் பேர்வழிகள்தான் என்பதால் நிச்சயமாக அங்கு முற்போக்கு சிந்தனை கொண்ட நபர்கள் பணிபுரிவது சிரமமானதுதான்.

எனவே இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சமூக மாற்றத்திற்கான பணியை நாம் தொடர வேண்டி இருக்கின்றது. சங்கிகளின் அழுத்தத்திற்கு பணிந்து ஹாசிப் முகமதுவை வெளியேற்றிய நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல, நாளை எந்த காட்சி மற்றும் அச்சு ஊடகத்தில் இருந்தும் முற்போக்கு சிந்தனை கொண்ட நபர்கள் வெளியேற்றப்பட்டால் நாம் அந்த அச்சு ஊடகத்தையும், காட்சி ஊடகத்தையும் புறக்கணிக்க வேண்டும். மாற்றாக சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட நபர்களால் நடத்தப்படும் மாற்று ஊடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை வளர்த்து விடுவதற்கு உதவ வேண்டும். அது ஒன்றே ஊடக பாசிசத்திற்கு முடிவு கட்டும் நிரந்தரத் தீர்வாகும்.

- செ.கார்கி