kadambur raju at sathankulam

(பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்கும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் பிற அதிமுக நிர்வாகிகள்)

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை-மகன் இருவரும் நீதிமன்ற விசாரணையின் பேரில் காவல் நிலையத்திலேயே அடித்துக் கொல்லப்பட்ட செய்தியானது தமிழகத்தை அடுத்து இந்தியாவையும் கடந்து உலகம் முழுவதிலும் பேரதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய்ப் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நாடடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு மாநில அரசும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை நடைமுறைப் படுத்தியிருந்தது. அதன்படி, இரவு 8 மணிக்குமேல் வணிக வளாகங்கள் திறந்திருக்கக் கூடாது என்ற நடைமுறையைக் கடந்து சாத்தான்குளத்தில் செல்பேசிக் கடை வைத்திருந்த 32 வயது நிரம்பிய பென்னிக்சு என்பார் கடந்த ஜூன் 18 அன்று கடையைத் திறந்து வைத்திருந்தபோது, அங்கு வந்த காவலர்கள் அதனைக் கண்டித்து எச்சரிக்கும் வண்ணம் பேசியிருக்கிறார்கள். அப்போது காவல் அதிகாரிகளைக் கண்டபடி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மேலும் கோபமடைந்த காவலர்கள், மறுநாளும் அங்கு வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் மகனோடு சேர்ந்து தந்தையும் தகாத வார்த்தைகளில் பேசியதாகப் பென்னிக்சின் தந்தையான 62 வயது நிரம்பிய ஜெயராஜை காவலர்கள் கைது செய்து விசாரணையின் பேரில் சிறையில் அடைத்தார்கள். செய்தியறிந்த மகன் பென்னிக்சு காவல் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் விரைந்தார். பென்னிக்சு காவல் நிலையத்தை அடைந்தபொழுது, காவலர்கள் கைது செய்யப்பட்ட அவரது தந்தையை அடித்துக் கொண்டிருந்ததை அவர் கண்டதாகச் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன. தனது தந்தை அடிக்கப்படுவதைப் பார்த்து அதனை தடுக்கும் விதமாக கண்டித்துப் பேசிய பென்னிக்சையும் விசாரணையின் பேரில் கைது செய்து அவரையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் காவலர்கள்.

பென்னிக்சின் சட்டையைப் பிடித்துத் தூக்கி அவரை சுவற்றில் அந்தரத்தில் தூக்கி நிறுத்தினார்கள் காவலர்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்த கண்ணுற்ற சாட்சிகள் கூறுகின்றன.

காவல் உதவி ஆய்வாளர் உட்பட குறைந்தது ஐந்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றாகச் சேர்ந்து அவர்களை கண்ணு மண்ணு தெரியாமல் அடித்திருக்கிறார்கள். இவையனைத்தும் பென்னிக்சின் நண்பர்களின் கண்முன்னே நிகழ்ந்தவை. காவலர்கள் குழுவாகச் சேர்ந்து தலைகால் புரியாமல் அடித்ததில் தந்தையும் மகனும் இரத்த வெள்ளத்தில் நனைந்தனர். பென்னிக்சின் ஆசனவாயில் லத்தியை செருகியதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இரத்தம் ஒழுகிக்கொண்டேயிருந்ததாக அவரது உறவினர்கள் கூறினர். அத்தோடு பூட்ஸ் காலோடு ஜெயராஜின் நெஞ்சிலேயே மாறிமாறி உதைத்திருக்கிறார்கள் காவலர்கள். சாத்தன்குளம் காவல்நிலையத்திலேயே அவர்கள் கடுமையான இரத்த வெள்ளத்தில்தான் காணப்பட்டிருக்கிறார்கள்.

காவல் நிலையத்திலிருந்து நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னால் அவர்களை நிறுத்துவதற்கு காவல்துறை வாகனத்தில் அவர்களைக் கொண்டு செல்லும் வழியில், இரத்தப்போக்கு கடுமையாக இருந்ததனால் குறைந்தது ஏழு கைலிகள் மாற்றப்பட்டதாகக் செய்திகள் கூறுகின்றன. கொரோனாத்தொற்றின் காரணமாக சமூக இடைவெளிக் கடைப்பிடிக்க வேண்டியிருந்ததால் மாஜிஸ்திரேட்டிமிருந்து 50 அடி தொலைவிற்கு அப்பால் அவர்கள் இருவரும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததால், அவர்களை முறையாகச் சோதித்துப் பார்க்க வேண்டிய மாஜிஸ்திரேட் அவ்வாறு செய்யாமலேயே மேலும் காவல் விசாரணைக்கு உத்தரவுக் கொடுத்துள்ளார்.

அவர்கள் இருவரின் மீதும் பிரிவு 188 (அரசு அதிகாரியின் பொது உத்தரவுக்குப் பணியாமை), பிரிவு 269 (நோய் பரப்பியமை), பிரிவு 353 (அரசு அதிகாரிக்கு எதிராகச் செயல்படுதல்) மற்றும் பிரிவு 506 (இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அச்சுறுத்துதல் அல்லது மிரட்டுதல்) ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவர்களது உடல்நிலை படுமோசமான நிலையை எட்டியபோதுதான் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்குள் காலம் கடந்து விட்டது.

சூன் 22-ஆம் நாள், பென்னிக்சு கொடூரமாகத் தாக்கப்பட்டதினால் மரணித்துப்போக, அடுத்த நாள் காலையில் அவரது தந்தை இறந்துபோகிறார். தந்தை-மகன் என இருவரும் இறந்துபோக சூன் 24-ஆம் நாள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது இருவரின் உடலையும் பார்த்த பென்னிக்சின் சகோதரி பெர்சிஸ், எனது தந்தையும் சகோதரனும் காவல்துறையினரால் கொடூரமாகத் துன்புறுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்; இந்த மரணங்களுக்கு முறையான நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கொடூர மரண நிகழ்விற்குப் பிறகு சமூக வலைதளங்களில் #JusticeForJayarajAndBennix #JusticeForJayarajAndFenix என்ற தலைப்புகள் காட்டுத்தீப்போல பரவின. ஏறத்தாழ அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து, இதுபோன்ற கொடிய காவல்துறை அட்டூழியங்களுக்கு முடிவு கட்டுவதோடு, இதில் ஈடுபட்ட காவல் துறையினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென அவர்கள் வேண்டினர். அரசியல் தலைவர்களுடன் திரைப்படத் துறையைச் சார்ந்த பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் இதனை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

சமூக வலைதளங்களில் இந்நிகழ்விற்கு எதிராகவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த பிறகுதான், காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஸ்ணன், ரகுகனேஸ், மற்ற காவலர்களான முருகன், முத்துராஜ் போன்றோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சாத்தன்குளத்தில் பணிபுரிந்த அனைத்துக் காவல்துறை அதிகாரிகளும் பணியிட மாறுதலில் அனுப்பப்பட்டனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரிக்க முனைந்ததோடு காவல் துறையிடமிருந்து இச்சம்பவம் குறித்த விளக்க அறிக்கையையும் கோரியது. CCTV காமிராவில் பதிவின் தடையங்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ள காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவதற்கு போதுமான அடிப்படைகள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.

இந்தக் காவல்துறை படுகொலைக்கு எதிராக எழுந்த வலுவான நீதிக் குரல்களுக்குப் பிறகு, தமிழக அரசு இதை ஏதோ சாதாரண உடல்நிலைக் கோளாறினால் நிகழ்ந்த மரணம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும் அரசு வேலையும் தரப்போவதாகப் பிரச்சனையை அந்தப்பக்கம் திசைத்திருப்ப முயற்சித்தது. பின்பு இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க இசைந்தது. காவல்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை என அடுக்கடுக்காக ஒவ்வொரு துறையிலும் செய்தப் பிழையினாலும் அவர்களின் கூட்டு ஒத்துழைப்புடனும்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்று குற்றச்சாட்டுக்கள் நாலாவட்டத்திலும் இருந்த வந்தன. அதிகாரங்கள் மையத்தை நோக்கி குவியும்போது, ஒன்றையொன்று கண்காணித்து நெறிமுறைப்படுத்த வேண்டிய அரசியல் அமைப்பு நிறுவனங்கள் பலவீனமடைந்து அவை அதிகார பகிர்விற்கு பதிலாக அதிகாரக் குவிப்பு நடைபெறும்போது இதுபோன்ற நிகழ்வுகள் சர்வ சாதரணமாக நிகழ்கின்றன என்று மனித வள ஆர்வலர்கள் மிகக் கூர்மையாக இப்பிரச்சனையை அணுகினர்.

இந்நிகழ்வில் குற்றமறிந்து நீதி வழங்கும் முறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளையும் பிளவுகளையும் குறைபாடுகளையும் ஆராயும்பொருட்டு, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய உயர் மட்டக் குழு ஒன்று அமைப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்தது. மேலும் இதுபோன்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்களின்மீது முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய வகையில் இந்நடைமுறைகள் சீரமைக்கவும் முடிவெடுத்துள்ளது.

காவல்துறையின் அத்துமீறல்களும் அதிகாரமும் ஓங்கிய வரலாறு:

கோவிட்-19 தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது, மேலும் அண்மையில் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு எனும் கறுப்பினத்தவர் வெள்ளையாதிக்கத்தின் நிறவெறி ஆதிக்குத்திற்கு ஆட்பட்டு இறந்துபோனது ஆகியவை இந்த வழக்கின் மீது சமூகத்தின் பார்வை அதிகமாக விழக் காரணங்களாக அமைந்துவிட்டன. மேலும் தமிழகக் காவல்துறை வரலாற்றில் இதுவொன்றும் புதிய நிகழ்வொன்றும் அல்ல.

காவல்துறையின் அத்துமீறிய விலங்கினத்தன்மை கொண்ட நடவடிக்கை இது, என்ற அளவிலேயே தற்பொழுது இது பேசப்படுகிறது. ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, கேட்பார் கேள்வியற்ற ஏழை எளிய மக்களின் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை நடவடிக்கைகளே இவை என்று பார்க்கப்பட வேண்டும். விசாரணைக்கைதிகள் சிறைக்குள்ளேயே இறந்துபோவது, குற்றவாளிகளை எண்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொள்வது போன்ற காரணங்களுக்காக தமிழகக் காவல்துறையின் மீது ஏற்கனவே கறைபடிந்துள்ளது.

அத்தகைய பல சம்பவங்கள் பொதுச்சமூகத்தின் கவனத்திற்கு ஓரளவிற்கு வந்திருந்தபோதும், கவனத்திற்கு வராமல் போன, இதைவிட படுபயங்கரமான சம்பவங்களின் பட்டியலும் மிகப் பெரியது.

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினவாழ் மக்கள் வசிக்கும் வாச்சாத்தி எனும் சிற்றூரில் நிகழ்ந்த சம்பவம் இதில் குறிப்பிடத்தக்கது. அங்கு கருப்பாயி எனும் தலித் பெண்ணை காவல்துறை கொடுமைக்கு ஆளாக்கி கொன்றதோடு, மேலும் பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அவர்களது வீட்டுச் செல்வத்தை கொள்ளையடித்தது. இவையெல்லாம் சட்டத்தின் பெயரிலேயே செய்யப்பட்டன. அந்தச் சம்பவங்களில் ஈடுப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தபோதிலும் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அந்த வழக்கின் சாட்சிகளை அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி, சாட்சி சொல்ல வைத்து, பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அவ்வழக்கின் தீர்ப்பு வெளிவந்தது.

இத்தகைய மோசமான நீதி வழங்கும் முறைதான் இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது என்பதுதான் வருத்தக்குரியது.

கடந்த 2010-2015-ஆம் ஆண்டு இடைவெளிக்குள் கிட்டதட்ட 591 விசாரணைக்கைதிகள் சிறைக்குள்ளேயே மரணித்துள்ளனர் என, தேசியக் குற்ற ஆவண அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. (சிறை மரணங்கள் உண்மையில் இதை விட அதிகம் எனக் கூறப்படுகிறது). ஆனால், இந்தக்கால எல்லைக்குள் ஒரேயொரு காவல்துறை அதிகாரிக்கூட இந்தச்சிறை மரணங்களுக்காக கைது செய்யப்படவோ குற்றம் சுமத்தப்படவோயில்லை.

இந்தச் சிறை மரணங்கள் என்பது, இந்தியாவை ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைப்பு ரீதியான தோல்வி தான் காவல்துறையின் மூலம் வெளிப்படுகிறது என அந்த அறிக்கைக் முடிவுரைக்கிறது.

தற்பொழுது நிகழ்ந்துள்ள பென்னிக்சு மற்றும் ஜெயராஜ் சிறை மரணங்களிலும் இதே நிலையே தொடர்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் நீதி விசாரணை வேண்டுவதை நீர்த்துப் போகச் செய்யும்படியும், உண்மையில் என்ன நடந்தது என்பதனையும் காவல்துறையின் உண்மையான முகம் வெளிப்படாதவாறும் இருப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தனிமனிதர்களுக்கு எதிராக மட்டும் இதுபோன்ற குழப்படி வேலைகள் செய்யப்படுவதில்லை. மாறாக, சமூகக் குழுக்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைகளிலும் இதே பாணி பின்பற்றப்படுகிறது. சான்றாக 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டுமெனப் போராடிய ஒட்டுமொத்த கிராம மக்களையும் காவல்துறை இதேபோன்றதொரு அடக்குமுறையைக் கையாண்டதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு 102 நபர்களுக்கும் மேலானோர் காயமுற்றனர். அதேபோன்று பென்னிக்சு மற்றும் ஜெயராஜ் விசயத்திலும் காவல்துறை முறையான சட்ட நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் அவர்களது மனம்போனபோக்கில் செயல்பட்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளை பற்றி ஆய்வு செய்வதற்கென்று ஒரு நபர் குழு அரசால் அமைக்கப்படுகிறது. ஆனால், காவலர்கள் போராட்டக்காரர்களை வேட்டை நாயைப்போல வேட்டையாடிக் கொன்ற நிலையிலும்கூட, ஒரு நபர் குழுவின் அறிக்கையின் பேரில் ஒரு காவல்துறை அதிகாரிகூட இதுநாள்வரை கைது செய்யப்பட்டதில்லை.

சாதாரண, அதிகாரமற்ற, அடித்தட்டு மக்களிடமிருந்ந்து எதிர்ப்புக் குரலையோ தீவிர நடவடிக்கைகளையோ அரசு எதிர்கொள்ளும்போது அச்சயமங்களில் அரசின் அக்கறையின்மை தொலைந்துபோய் அதற்கு பதிலாக அரசு மேலும் எரிச்சலடைகிறது.

2011-ஆம் ஆண்டு பரமக்குடி கலவரத்தின்போது ஆயுதமற்று நின்று கொண்டிருந்த தலித் கலவரக்காரர்களில் 11 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றது. ஆனால், அந்த இரத்தக்கறை காய்வதற்குள்ளாகவே அதில் ஈடுபட்ட காவல் துறையினரை அன்றைய முதலமைச்சர் காப்பாற்றினார்.

 இந்தச் சம்பவத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சம்பத் குழு முதலமைச்சர் எடுத்த அதேநிலையில் நின்று அறிக்கை சமர்ப்பித்தது. தங்களைத் தாக்கிய கலவரக்காரர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவே காவல் துறையினர் செயல்பட்டனர். ஆனால், காவல்துறை கைதிகளை இரக்கமின்றி தாக்கியதோடு மட்டுமல்லாது, தங்களுக்கு பணிக்கப்பட்ட உத்தரவுகள் படியும் அவர்கள் நடக்கவில்லை என்று அந்த அறிக்கையில் காவல்துறையின் மீது பழி சுமத்தப்பட்டிருந்தது.

இது ஏற்றுக்கொள்ள முடியாத அறிக்கை என்றபோதிலும்கூட, மாநில அரசு, காவல்துறையின் மீது அறிக்கையில் குறிப்பிடப்பிட்டிருந்த அந்த பழி சுமத்தும் வரிகளை நீக்கியது.

இதுபோன்ற அநீதியான காவல்துறை அடக்குமுறைளுக்கு குறிப்பாக தலித் மக்களும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய உள்ளூர் வாசிகளும் தான் இதுபோன்ற சமூகச் சித்திரவதைகளைக்கு அதிகம் ஆளாகிறார்கள்; என்று சமூக வதைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் கூறுகிறார்கள்.

தண்டனை கலாச்சாரம்:

காவல்துறையின் அடக்குமுறைகள், வதைகள், விரும்பியரை தன்னிச்சையாக சிறையிலடைத்தல் போன்ற முறையற்ற நடவடிக்கைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தொடர்ச்சியாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. காவல்துறை குடிமக்களை தவறாக நடத்துவதை அரசுகள் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை; அதனால் தான், இதுபோன்ற தவறுகள் திரும்பத் திரும்ப அரசின் அனைத்து மட்டங்களிலும் நிகழ்கிறது; இதன் விளைவாகத் தண்டனைக் கலாச்சாரம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது. இது, சித்திரவதைகளுக்கு எதிரான உலக நாடுகளின் உடன்படிக்கையில் (Convention Against Torture) இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை என்பதோடு தொடர்புடையது.

உண்மையாகச் சொல்லப்போனால் அரசு தரப்பினரோ அதிகாரிகளோ இதனை முக்கியப் பொருளாகப் பேசுவதைக் காட்டிலும் இதனை கடந்து செல்லவே விரும்புகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் நிறவெறித் தாக்குதலுக்கு ஆளாகி மரண்மடைந்த ஜார்ஜ் பிளாய்டின் கொடூர மரணத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு, ”அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிடுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த எதிர்ப்பு போராட்டங்களைப்போல, இந்தியாவில் உள்ள தலித், இசுலாமியர்கள், பெண்கள், பழங்குடியினர்கள், ஏழை எளிய மக்களிடமிருந்து இதனையொத்த போராட்டங்கள் வெளிப்பட வேண்டும்” என்று தனது கீச்சக பக்கத்தில் பத்திரிக்கையாளர் ஆகர் பட்டேல் (Aakar Patel) கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு கருத்து தெரிவித்ததற்காக, பெங்களூரு காவல்துறை அவர் மீது குற்றப்பதிவு செய்தது.

கருத்துரிமைக்கு வழங்கப்பட்டிருக்கும் இத்தகைய மிகக்குறைந்த சட்டப் பாதுகாப்புகளும் நடைமுறைகளும்தான் காவல்துறையின் அதிகப்படியான செயல்களை நிலைத்திருக்கச் செய்கின்றன. முறையான சட்ட சீர்திருத்தங்கள் உள்ளும் புறமும் கொண்டு வந்தால் ஒழிய இந்நிலைமைகளை மாற்ற முடியாது.

மேலும் காவல்துறையின் வன்முறைகள் ஒரு வகையான கலாச்சார ஏற்பை பெறுவதிலிருந்து தடுப்பதற்கும் அதன் மீது கேள்வி எழுப்புவதற்கும் இதுபோன்ற சட்ட சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. காவல்துறையின் அத்துமீறிய அராஜக வன்முறைகள் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ரகசியம் என்பதோடு மட்டும் நிற்கவில்லை. மாறாக, இவை தென்னிந்திய, வட இந்திய திரைப்படங்களில் ஒரு தவிர்க்க முடியாத வியாபாரச் சரக்காகவும் இடம்பெறுவதோடு வெள்ளித்திரைகளிலும் இதுபோன்ற காட்சிகள் மெருகூட்டிக் காட்டப்படுகின்றன.

சில திரைப்பட நடிகர்களும் இயக்குநர்களும் தங்கள் திரைப்படங்களில் இடம்பெற்ற வன்முறைமிக்க காவலர் பற்றிய சித்தரிப்பிற்காகவும் அவை கொண்டாடப்பட்டதற்காகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களை ‘என்கவுண்டர்’ (சட்டத்திற்கு புறம்பாக விசாரணைக் கைதிகளை சுட்டுக்கொல்லுதல்) மூலம் சுட்டுக் கொன்ற காவலர்களை அரசியல்வாதிகள் பாராட்டும்போது, அது சமூகத்தின் பொதுப்பண்பாடாக மாறி, சமூகம் முழுவதுமே அத்தகைய காவல்துறை வன்முறைகளைக் கொண்டாடத் துவங்குகிறது. இதன் உச்சமாக, “காவல்துறையின் வன்முறைகளை பொதுச்சமூகம் ஆதரிப்பதோடு அவற்றை வரவேற்க வேண்டும்” என்று சுபங்கி மிசுரா (Shubhangi Misra ) கூறுவதை இங்கே கவனத்தில் கொண்டால் பிரச்சனையின் வீரியம் விளங்கும்.

முடிவின்றி தொடரும் காவல்துறையின் அட்டூழியங்களின் மீது நமக்கு கோபம் வராமல் மங்கிப் போவதற்கு, காவல்துறையின் அத்தகைய போக்குகளுக்கு பொதுச்சமூகத்தின் ஆதரவும் இருப்பதை எடுத்துக்கூறினால் இப்பிரச்சினையை விளங்கிக் கொள்ளலாம். இது அதிகாரிகளுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை.

”சமூகத்திடமிருந்து அன்னியபட்டு நிற்கும் பிரித்தானிய அரசின் அதே சட்டதிட்டங்களைத்தான் விடுதலைப் பெற்ற இந்தியாவும் கைக்கொண்டது. தற்போதைய இந்திய காவல்துறை அமைப்பானது, அயர்லாந்து இராயல் காவல்துறை அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த அமைப்பானது சமூகத்துடன் இசைந்து செயல்படுவதற்கு மாறாக கட்டுப்பாடுகளையும் அதிகாரத்தையும் கொண்டு செயல்படுவது. அதன் விளைவுகளைத்தான் இன்று நாம் பார்க்கின்றோம்” என்று கே.எஸ். சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

உத்திரப் பிரதேச மாநில காவல்துறையின் நடவடிக்கைகளை இனவரைவியல் அடிப்படையில் நுட்பமாக ஆய்வு செய்துள்ள அவர்தம் அறிக்கையில், காவல்துறை தமது சேவையின் மூலம் சமூகத்தில் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளன என்பதனை எடுத்தியம்புகிறது. சமூகத்துடன் இணங்கி சேவையாற்றுவதைக் காட்டிலும் பெரும்பாலான சமயங்களில் காவல் துறையானது சமூகத்திடமிருந்து விலகியே நிற்கின்றது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் மரணத்தின் பின்புலத்தில் சாதியம் இருப்பதாக சில சபைக்கு வராத தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான சமயங்களில் காவல்துறையின் அத்துமீறலும் அடக்குமுறைகளும் சிறுபான்மை மக்களின் மீதுதான் நிகழ்த்தப்படுகின்றன. சாத்தான்குளம் வழக்கைப் பொருத்தவரை அதில் உட்சாதிப்பூசல் இருப்பதாக ரவிசங்கர் குறிப்பிடுகிறார்.

இரவிசங்கரின் இந்தத் தகவலானது, காவல்துறை அமைப்பானது சாதியத்தோடும் மதக் குழுக்களோடும் பின்னிப் பிணைந்திருப்பது என்பது, வழக்குகளை முன் அனுமானங்களோடு அணுகுவதற்கு வழிவகுக்கின்றது என்பதனை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. 1995-1998-ஆம் ஆண்டு கால இடைவெளியில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிய மோதல்களுக்குப் பின் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில், கலவரம் நிகழ்ந்த அந்தப் பகுதிகளில் ஆதிக்கச் சாதியாக இருக்கக்கூடிய இடைநிலைச்சாதியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையில் அதிகமாக இடம் பெற்றிருந்தனர் என்பதனைக் கண்டறிந்தது. மேலும் இதுமாதிரியானப் பணியமர்த்தலை அரசு கைவிட வேண்டும் என்றும் அந்த ஆணையம் ஆலோசனை வழங்கியது.

காவல்துறையின் அதிகாரம் தவறாகக் கையாளப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கலவரம் நிகழ்ந்த பகுதியில் காணப்படும் மூன்று முக்கியச் சாதியக் குழுக்களைச் சேர்ந்தவர்களை அப்பகுதியில் பணியமர்த்தக்கூடாது என்றும், வேறுபகுதிகளில் காணப்படும் சாதியக்குழுக்களைச் சேர்ந்தவர்களை அங்கு காவல் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அந்த ஆணையம் அரசுக்கு ஆலோசனை வழங்கியது.

காவல்துறைக்கு இதுபோன்று வழங்கப்பட்டுள்ள எண்ணற்ற ஆலோசனைகளை அரசு கடைப்பிடித்திருக்குமேயானால், விசாரணைக் கைதிகள் மரணமடைவது பற்றி நாம் மேலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

மக்களாட்சி காவல் பணியை நோக்கி..?

காவல்பணியே ஒரு நாட்டின் மதிப்பை அறிவதற்குரிய முக்கிய வழியாகும் என்று இயான் லோடர் (Ian Loader) குறிப்பிடுகிறார். எல்லிசனும் சுமித்தும் வடக்கு அயர்லாந்து நாட்டு காவல்துறையைப் பற்றிக் குறிப்பிட்டதைப்போல, “காவல் துறையானது நாட்டில் உள்ள மக்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரியதாகவும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால், அது பெரும்பாலன மக்களின் ஏற்பை பெற தவறிவிடும்”. இந்தியக் காவல்துறையில் நிலவும் சாதிய ரீதியான காவல்துறை அணுகுமுறைகளை வைத்துப் பார்க்கும்பொழுது, மேற்கண்ட இந்த விமர்சனம் இந்தியச் சூழலுக்கு மிகவும் பொருத்தமுடையதே.

”சாதியானது இந்தியப் பொதுச்சமூகத்தின் பொதுமைப் பண்புணர்ச்சியைக் கொன்றுவிடும்” என்றும் சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் 1936-ஆம் ஆண்டுகளில் எழுதினார். சாதி பொதுச்சமூகத்தின் இரக்ககுணத்தையும் தொண்டுள்ளத்தையும் சேர்த்தே அழித்துவிடும். இந்து மதத்தின் பொதுப்பண்பு என்பது சாதிதான். இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களைச் சாதிய ரீதியாகவே அடையாளப்படுத்திக் கொள்வார்கள். சாதிக்கே அவர்கள் கடப்பாடு உடையவர்களாய்த் திகழ்வார்கள். உள்ளூர் காவல்துறையானது எவ்வாறு சாதியத்தால் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகளின் வாயிலாகவும் நம்முடைய நேரடி அனுபவங்களின் வாயிலாகவும் அறிந்து வருகிறோம். சாதிய முரண்பாடுகளின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில், விசாரணைக் கைதிகள் பலர் மரணமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

 விசாரணையின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் மரணத்திற்கு காவல் துறை பொறுப்பல்ல என்ற தொனிதான் திரும்ப திரும்ப ஒலிக்கிறது. தங்களுக்கு வகுக்கப்பட்ட சுய நெறிமுறைகளை மீறி காவல் அதிகாரிகள் நடந்து கொள்வது, ஜனநாயக நாட்டின் காவல் துறை மீதான நம்பிக்கையை அழிப்பதற்கே வழிவகுக்கும். இது, சட்டத்தை மக்கள் தாங்களே கையில் எடுத்துக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக்கி விடும். மேலும், ”சித்திரவதைகளை இந்தியப் பொதுச்சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வது என்பது நடைமுறையாகி விட்டது” என்று Economic and Political Weekly இதழில் பல்ஜீத் கவுர் (Baljeet Kaur) கூறுவது இங்கே குறிப்பிடத் தக்கதாகிறது.

சிறையில் கொல்லப்பட்ட தந்தை-மகன் மரணமானது, உலகம் முழுவதிலும் கவனம் பெற்றிருப்பது என்பது இந்த மரும உலகத்தின் மீது ஒரு புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒட்டுமொத்த காவல்துறை நடவடிக்கைகளையும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்குரிய சீர்திருத்தங்கள், மனித உரிமைகளை பற்றி பழுதற கற்பித்து அவற்றை வலியுறுத்தக்கூடிய பயிற்சி பட்டறைகள், தண்டணைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதற்கான முனைப்புகள் ஆகியவற்றை அரசுகள் மேற்கொள்ளாவிட்டால் மேலும் பல ஜெயராஜ்களும் பென்னிக்சுகளும் சிறைக் கைதிகளாகக் கொல்லப்படுவர் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்கள்:

  1. முனைவர் ஊகோ காரிஞ்ச் (Hugo Gorringe), தெற்காசிய ஆய்வு மைய இணை இயக்குநர், எடின்பர்க் பல்கலைக்கழகம். Untouchable Citizens (Sage, 2005) மற்றும் Panthers in Parliament (OUP, 2017) ஆகிய நூல்களின் ஆசிரியர்.
  2. முனைவர் கார்த்திகேயன் தாமோதரன், தலித் அரசியல், திரைப்பட ஆய்வுகள், திராவிட அரசியல் ஆகியவை குறித்து ஆயும் வல்லுநர்.

மூலம்: https://thewire.in/rights/jayaraj-bennix-custodial-deaths-impunity

தமிழில்: ப.பிரபாகரன்