அரசு விழாக்கள், குடும்ப விழாக்கள், நிறுவனங்களின் விழாக்கள் மற்றும் இலக்கிய விழாக்கள் என்று எத்தனையோ விதமான விழாக்களை நாம் காண்கிறோம். செய்தி அறிவிப்பது, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஒன்று கூடுவது, தொடர்புடையவர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்வது என்கின்ற மூன்று அம்சங்களே பொதுவாக விழாக்களின் நோக்கமாகும். விழாவாக அல்லாது புதிய கருத்துக்களைத் தரும் வகையிலும் தொடர்புடைய செய்திகள் குறித்துச் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் இலக்கியக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

அரசு, குடும்பம் மற்றும் நிறுவனங்களின் விழாக்கள் எல்லா வகையிலும் கட்டுப்பாட்டிற்கும் நேரம் உள்ளிட்டப் பல்வேறு வரையறைகளுக்கும் உட்பட்டு நிகழ்த்தப்படுகின்றன. 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்ளாக என்று அழைப்பிதழில் காணப்பட்டால் அவ்வாறே திருமணம் நிகழும். அரசு விழாக்களும் பெரும்பாலும் அவ்வாறே நிகழ்த்தப்படுகின்றன.

எந்த விழாவாக இருந்தாலும் நேரம், பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வருகை, விழாத் தொடக்கம், நிறைவு ஆகியவை திட்டமிடப்பட்டுத் தெளிவாக அமைக்கப்பட வேண்டும் என்பதே விழா நியதி. அந்த நியதி நம்மிடையே எத்தனை விழாக்களில் - மிகவும் குறிப்பாக இலக்கியக் கருத்தரங்குகள் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்களில்- கடைப்பிடிக்கப்படுகிறது< ;/span>? என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.

பல இலக்கிய நிகழ்வுகள் சலிப்பையும் சோர்வையும் உண்டாக்குகின்றன. இலக்கு, இலக்கியம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டாலும் எந்த இலக்கினையும் எட்டாமல் பல விழாக்கள் நன்றி கூறி நிறைவடைகின்றன. 5.00 மணிக்கு என்று குறிப்பிட்டிருந்தாலும் 5.30 மணிக்கு மேல்தான் விழா தொடங்கப்படும். பெரும்பாலான பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் இப்படிக் கணக்குப் போட்டுக்கொண்டுதான் விழாவிற்கு வருகிறார்கள். மாலை ஐந்து மணியளவில் என்று சொல்லி அழைக்கிறார்களென்றால் விழா எத்தனை மணிக்குத் தொடங்கும் என்பது அமைப்பாளர்களுக்கே தெரியாது என்று அர்த்தம். எதன் பொருட்டும் காலந்தாழ்த்த மாட்டோம் என்றும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவோம் என்றும் அழைப்பிதழிலேயே அறிவிப்புச் செய்வதுபோல மிகச் சரியாக மாலை 6.03 மணிக்கு என்று நேரம் குறிப்பிட்டு அவ்வாறே தொடங்குவோரும் உண்டு. காலதாமதமாக வரும் பேச்சாளர் அவசர வேலையிருப்பதாகக் கூறி, கூட்டம் நிறைந்திருக்கும் நேரத்தில் பேச அனுமதி கேட்டு நீண்ட நேரமும் பேசி மற்ற பேச்சாளர்களின் நேரத்தைப் பறித்துக்கொண்டு போய்விடுவதும் உண்டு.

கடைசியாக வந்து முதலிலேயே பேசிவிட்டு இடையிலேயே எழுந்து ஓடுவதும் ஒரு வகையான அநாகரிகம் என்பதையும், அவ்வாறு செய்வது நூற்றுக்கணக்கான பார்வையாளர்களையும் சக பங்கேற்பாளர்களையும் அவமதிப்பது போலாகும் என்பதையும் நமது பேச்சாளர்கள் சிலர் உணருவதேயில்லை. நூல் வெளியீட்டு விழா என்றால் வெளியிடப்படுகிற நூலைப் பற்றி எத்தனை பேர் எவ்வளவு செய்திகளைப் பேசுவார்கள் என்பதும், நூல் தொடர்பான வேறு செய்திகளையாவது முறையாகப் பேசுவார்களா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறிதான்.

பல விழாக்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடமிருந்து நிகழ்ச்சியைக் காப்பாற்ற முடியாமற் போய்விடுவதும் உண்டு. கலைவாணர் அரங்கில் நடந்த சமூக சேவை நிறுவனமொன்றின் விழாவில் பார்வையார்களும் பங்கேற்பாளர்களும் ஒருங்கிணைந்து நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுங்கூட அவரை ஒன்றும் செய்ய முடியாமற் போய் விட்டது. ஒரு விழாவில் நேர வரையறை குறித்துக் கவலைப்படாமல் ஒரு பேச்சாளர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். வெறுத்துப் போய் ஒலிபெருக்கியைப் பிடித்த விழா அமைப்பாளர் சிறந்த பேச்சாளர்கள் குறைவாகப் பேசி அதிகமாகச் சிந்திக்க வைப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. எனவே அடுத்து வருகிற ஒவ்வொரு பேச்சாளரும் உங்களை அதிகமாகச் சிந்திக்க வைப்பார்கள் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று புண்பட்ட குரலில் சொல்லிவிட்டுப் போனார்.

தமக்குச் சரியாக, சரளமாக, தெளிவாகப் பேச வராது என்கிற உண்மை தெரிந்தும் பல பேச்சாளர்கள் நீண்ட நேரம் பேசுவதையும் காண முடிகிறது. ஒலிபெருக்கியைப் பிடித்தவர்கள் ஒழுங்காகப் பேசாதபட்சத்தில் பார்வையாளர்கள் குழு குழுவாகத் தமக்குள் பேசிக்கொள்வதும், பேச விருப்பமற்றவர்கள் எதையாவது படிப்பதும், ஒரு சிலர் உறங்கவே செய்வதும்கூட காண முடிகிற காட்சிதான்.

ஒரு விழாவிற்கு வரும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் நேரம் மிகவும் மதிப்பு மிக்கது. அவ்வளவு பேரும் தமது பணிகளில் இருந்து விடுவித்துக் கொண்டு வந்தே விழா அரங்கில் அமருகிறார்கள். ஆனால் நிகழ்வுகளின் வாயிலாக அவர்களது நேரம் பயனுள்ள முறையில் கௌரவிக்கப்படுவது எத்தனை விழாக்களில் நிகழ்கிறது?

வி.ஐ.பி.களுக்காகக் காத்திருந்து காத்திருந்தே விழாவைத் தாமதமாகத் தொடங்கும் கலாச்சாரம் அரங்க நிகழ்வுக்கு வரும் பார்வையாளர்களையும் (வி.ஐ.பி.-யைவிட) தாமதமாக வருவதற்குப் பழக்கிவிட்டிருக்கிறது. அதே போல எதிர்பாராத சில வேலைகள் குறுக்கிட்டதன் வாயிலாகத் தாமதமாக வந்து அடுத்துச் செய்தாக வேண்டிய அவசர வேலையின் காரணமாக நிகழ்வின் இடையிலேயே விரைந்து வெளியேறுகிற வி.ஐ.பி.க்கள், மற்றவர்கள் வேறு வேலைகளே இல்லாத நிலையில்தான் வந்து அமர்ந்திருக்கிறார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும். சமூகத்தில் மேடையேறி உரையாற்றத் தெரியாமல் இருப்பவர் களின் பணிகளும் மிக முக்கியமானதே என்பது உணரப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலைப் போல பேச்சாளர்களை அச்சடித்து அழைத்துவிட்டு கூட்டத் தலைவரிடம் சொல்லி பேச்சாளர்களுக்கு நெருக்கடி தந்து, “விரைந்து முடிக்க வேண்டுகிறேன்என்று துண்டுச் சீட்டுத் தருவது நிறையவே நடக்கிறது. ஒரு கூட்டத்தில், நேரமில்லை குறைவான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று விழாத் தலைவர் ஜெயகாந்தனிடம் சொல்ல, “என் நேரத்தை எடுத்துக் கொண்டவருக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள்? நான் பேசுவேன். உங்களுக்கு நேரமில்லையென்றால் எழுந்து போய்விடலாம்என்று தமது பாணியில் பதிலடி கொடுத்தார் அவர்.

தான் பேசுகின்ற அவைக்கும், உடன் அமர்ந்திருக்கும் சக பேச்சாளர்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டுப் பேச்சைத் தொடங்குவது என்பது ஒரு அவை நாகரிகம்தான். ஆனாலும் அவர்களே... இவர்களே...என்று பெயர்களை விளிப்பதிலேயே பெரும் பகுதி நேரம் போய்விடுகிறது பல பேச்சாளர்களுக்கு. அனைவரது பெயரையும் சொல்லி அவர்களை மகிழ்விக்க வேண்டிய, அங்கீகரிக்க வேண்டிய கடமை கட்சி சார்ந்த அரசியல் தலைவர்களுக்கு இருக்கலாம். கருத்தரங்கில் ஒரு கருத்தை முன்வைக்க வருவோருக்கும் அந்த முறை தேவைதானா?

திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு

கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

என்றான் மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அப்போதே பாதிக்கப்பட்டு விட்டான் போலிருக்கிறது.

-ஜெயபாஸ்கரன்