எல்லாக் காலங்களிலும் நாம் வியந்து பார்க்க... ஒளிந்து பார்க்க... ரசித்துப் பார்க்க.. வெறுத்துப் பார்க்க.. விரும்பிப் பார்க்க யாராவது இருந்து கொண்டேதான் இருப்பார்கள். இந்த வாழ்க்கை மற்றவர்களால் நிகழ்வது.

அப்படி நான் வியந்து... ரசித்து... அல்லது வித்தியாசமான மனிதராக இருக்கிறாரே என்று அந்த வயதில் தெரியாவிடினும் பின்னாட்களில் யோசிக்கையில் உணர்ந்த சில மனிதர்கள் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த 'பெல்ட்' என்பவர். இவரின் நிஜப் பெயர் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாரும் இவரை 'பெல்ட்' என்று தான் சொல்லிக் கொள்வார்கள்.

யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு... .என்று காட்டு விலங்குகள் நடமாடும் உருளிக்கல் (வால்பாறையில் ஒரு பகுதி) - காபிக் காட்டில் ஆச்சரிய நகர்தலைப் போல சைக்கிளில் வருவார். இந்த நேரத்துக்குத்தான் என்றில்லை. ஒரு நாள் பகலில் வருவார். ஒரு நாள் இரவில் வருவார். ஆள் கொஞ்சம் குண்டாக இருப்பார்.. காக்கி உடை அணிந்திருப்பார். பட்டையாக ப்ரவுன் பெல்ட் போட்டிருப்பார். சிவந்த மேனி.

காபிக் காட்டில் (சோலைக்குள் இருக்கும் காடு) இருந்து வருவதென்றால்.. வரும் போது பத்தாம் நம்பர் கானு (Canal) வரை இறக்கம். சல்லென வந்து விடலாம். ஆனால் அதற்கு மேல் உருளிக்கல் பாலம் வரை அவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு, தன்னையும் தள்ளிக் கொண்டு தான் வர வேண்டும். அத்தனை ஏற்றம். அந்த உடம்பை வைத்துக் கொண்டு வியர்த்தெழுக அவர் வந்ததை நிறைய முறை கண்டிருக்கிறேன். ஒரு யாத்திரை மனப்பான்மை இருந்தாலொழிய அத்தனை தூரம் அந்த மாதிரி வர முடியாது என்று நம்புகிறேன்.

அவர் அந்த வாழ்க்கை முறையை சலித்துக் கொண்டாரா... இல்லை... வாழ்வாதாரத் தேவையை ஏற்றுக் கொண்டாரா...தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அவரையும் அறியாமல் இரவை நேசித்திருக்க வேண்டும். இரவை இரவிலேயே கடப்பது ஒரு வகை தியானம். அது அவரிடம் இருந்தது என்றே யோசிக்கிறேன். ஒற்றை மனிதனின் தூரங்கள் அவர் வீட்டுக்கும், அவர் வேலைக்குமான இடைவெளியை இரவு பூசி அலங்கரித்துக் கொண்டே இருந்தது என்று ஒரு நெடுங்கவிதையாகவே காண்கிறேன்.

பெரும்பாலும் இரவில் ஒரு ஏழெட்டு மணிக்கெல்லாம்.. மாமாவுக்கு எப்படி கேட்குமோ..."ஆ.. பெல்ட் போறாப்ல..." என்பார். வேகமாய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால்..... அவர் அந்தப் பாலத்தின் வளைவில் காபிக் காட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பார். இரவை பெல் அடித்து விழிக்கவும் செய்யும் அவர் லைட் அடித்து தள்ளவும் செய்வார். ஒற்றை சைக்கிளில் இருந்து உருண்டு திரண்டு முன்னால் போகும் வெளிச்சமும்... நிழலைப் போல சைக்கிள் மேலே குனிந்து அமர்ந்திருக்கும் அவரின் உருவமும்.... ஒரு ஆயுள் பெயின்டிங் போல மனதுக்குள் காலம் வரைந்திருக்கிறது.

அவர் காபிக் காடுதானா என்ற சந்தேகம் கூட எனக்குண்டு. அவர் பத்தாம் நம்பர் போகிற வழியில் கீழே போவார். ஒவ்வொரு நாளும் ஒரு புது மனிதனாக திரும்ப அந்த பாதையில் இருந்து மேலே வருவார். வந்து செக் போஸ்ட் நோக்கி செல்வார். அவ்ளோ தான் தெரியும். எங்கு வேலைக்குப் போனார்... என்று தெரியாது. ஆனாலும் அவர் வந்து போகும் காட்சி இன்னமும் அற்புதமான ஓர் ஓவியமாக எனக்குள் மலர்ந்து கொண்டேயிருக்கிறது. காட்டு விலங்குகள் அவரை ஒன்றுமே செய்யாதா... எப்படி அந்த இருளில் அவர் மட்டும் எவ்வித சலனமும் இல்லாமல் போயும் வந்தும் கொண்டிருந்தார் என்ற பல கேள்விகள் இப்போது வருகிறது.

அந்த சைக்கிள் பெல் சத்தத்தில் காடு திறக்கும் வித்தை இருக்கிறது. அதே நேரம் காடு பூட்டும் தத்துவமும் இருக்கிறது.

அவர் சென்று பிறகு அந்த சாலை தன்னை மூடிக் கொள்ளும் கற்பனையை நான் மீறுகிறேன். கீழிருந்து மேல் எழும் திசைக்கு அவரின் திரும்ப வருதல் சொல்லி வைத்தாற் போல நிகழ்கிறது...!

- கவிஜி