amit shah and modi 500

எண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: காரணம் என்ன? - பகுதி 1

எண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: எதிரெதிர் திசையில் நகரும் சவுதியும் - அமெரிக்காவும்! - 2

எண்ணெய் விலை மற்றும் பங்குச் சந்தை சரிவு – 3

பகுதி – 4

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணம் என்ன?

2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இந்தியா, வங்கிகளில் இருக்கும் மக்களின் பணத்தை சாலை, துறைமுகம், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்பு வேலைகளுக்கும், பொருட்களை வாங்க வசதியற்ற மக்களுக்கு பொருட்களை வாங்க கடனாகக் கொடுத்தும் மந்தமான பொருளாதார சுழற்சியை வேகமாக சுழல வைத்தது. உள்கட்டமைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஒன்றுக்கு மூன்று பங்கு சாலை, துறைமுகங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தத் தொகையை எழுதி நமது பணத்தைக் கொள்ளையிட்டன. இதன் பக்க விளைவாக இதில் வேலை செய்த தொழிலாளிகளின் கையிலும் கொஞ்சம் பணம் வந்தது. இந்த வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், சந்தையில் உள்ள எல்லாப் பொருட்களையும் தவணை முறையில் கடனாக வாங்கிக் குவித்தார்கள் மக்கள்.

சரி அப்படியே கொள்ளை இட்டாலும் இந்த உள்கட்டமைப்பு எல்லாம் இந்தியாவின் உற்பத்தி பெருகி, அது தங்கு தடையின்றி இந்தியா முழுவதும் சந்தைப்படுத்த ஏற்படுத்தப் பட்டதா? அல்லது இந்த மக்கள் வாங்கிக் குவித்த பொருட்கள் எல்லாம் இந்தியாவில் உற்பத்தி செய்து, தொழிலாளர்கள் எல்லாம் வேலை வாய்ப்பைப் பெற்று வருமானம் பெருகி, வாங்கிய கடனை எல்லாம் அடைத்தார்களா? என்றால் இரண்டுமே இல்லை. வெறும் சேவைத் துறை மட்டும் தான் கடந்த பத்தாண்டுகளாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் பொருளாதாரம் மட்டும் வருடா வருடம் வளர்வதாக புள்ளி விபரம் வெளியிட்டார்கள். பிறகு எதற்கு இந்த உள்கட்டமைப்பு வசதிகள்?

gdp growth rateஅமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் சீனாவின் ஜிடிபி Source: worldbank.org

தொன்னூறுகளில் அமெரிக்காவுக்கான பொருட்களை உற்பத்தி செய்த சீனா மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் பெரிய அளவு உற்பத்திப் பெருக்கம் அல்லது மக்களின் வாங்கும் ஆற்றல் அதிகரித்து, அதனால் சந்தையின் தேவை அதிகரித்து, அதனை நிறைவு செய்ய உள்கட்டமைப்பு தேவை ஏற்படாத நிலையில், இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றி ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டமைக்கவே இந்த கட்டமைப்புகள் என்ற முடிவுக்கு வர வேண்டி உள்ளது. அதற்கு சாதகமாக, இங்கே எங்கெல்லாம் நிறுவனங்கள் அமைக்க விரும்புகிறார்களோ, அங்கெல்லாம் நிலம் கையகப்படுத்தவும், வேண்டுமென்றால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், வேண்டாமென்றால் வெளியேற்றவுமான சீர்திருத்தங்களை செய்யச் சொன்னார்கள். அதேபோல உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள், தொழிலாளர்கள், உற்பத்தி செய்த பொருட்கள் நாடெங்கும் தங்கு தடையின்றி செல்லத் தேவையான சாலைகள், உலகம் முழுதும் ஏற்றுமதி செய்ய விமான நிலையங்கள், துறைமுகங்கள், இதில் வேலை செய்ய தரமான தொழிலாளர்களை உருவாக்க ஒருங்கிணைந்த கல்வி ஆகியவற்றை ஏற்படுத்தச் சொன்னார்கள். இவற்றுக்கெல்லாம் மாநில அரசுகளின் சுயாட்சி தடையாக இருந்தது. இந்தத் தடைகளை நீக்கி, இவர்களின் இடையீடற்ற ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மாதிரியான கல்வியை அது கோரியது.

இந்தியா என்ற ஒரு நாடே 70 வருடங்களுக்கு முன்புதான் உருவானது என்பதை மறந்து போனார்கள். இந்த உருவாக்கம் நிலைத்திருக்க அதில் நிலவும் வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஓர் இணைவை ஏற்படுத்தினார்கள். இப்போது அதனை தலைகீழாக மாற்றி ஒற்றுமையில் வேற்றுமை என்ற கருத்தாக்கத்தைத் திணிக்க ஆரம்பித்தார்கள். இங்கே ஒற்றுமை என்று என்ன இருக்கிறது? இல்லாத அந்த ஒற்றுமைக்கு இந்தியர்கள் எல்லோரும் இந்துக்கள் என பார்ப்பனியவாதிகள் தங்களின் எஜமானர்களுக்கு வழக்கம் போல செயல்வடிவம் கொடுத்தார்கள். அது பாசிசமாகவே இருந்தாலும், தங்களுக்குத் தேவையான அந்த ஒற்றைத் தன்மையை இது வழங்குவதால் இயல்பாக இருவரும் இணைந்தார்கள். பார்ப்பனிய பாசிசமும், வரைமுறையற்ற தங்கு தடையற்ற மூலதனப் பாய்ச்சலை, சந்தையை, உற்பத்தியைக் கோரும் முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்டன.

கொஞ்சம் கொஞ்சமாக, நாம் எந்த பார்ப்பனியக் கொடுமையில் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருக்கிறோமோ, அதே சிமிழுக்குள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி சாதியை நம் மீது திணித்தார்களோ, அதே போல, முன்பு பயன்படுத்திய அதே அரச அதிகாரத்தின் வழியில், இந்துத்துவம், இந்துக்கள் என புதிய முலாம் பூசி நம்மை இந்த கூண்டுக்குள் இறுக்கமாக அடைக்க முற்பட்டார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்பும், பெரும்பாலும் பழங்குடிகளாக சாதி எனும் வடிவில் அதன் வேரைப் பற்றி வாழ்வதால், பெரும்பான்மை இந்தியர்கள் எந்த சலசலப்பும் இன்றி இதனை ஏற்கத் தயாரானாலும், இதில் குறிப்பிட்ட அளவு மாற்றமும் முன்னேற்றமும் கண்ட, காணும் வேட்கையைக் கொண்ட மக்கள், மாநிலங்கள் முன்பு வரலாற்றில் செய்தது போலவே இன்றும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றன.

பார்ப்பனிய உருவாக்கம் என்பதே அடிப்படையில் ஊழலை, சுரண்டலை தத்துவமாகக் கொண்டது. அது எல்லோரையும் ஏமாற்றி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி, அதில் தன் வயிறை வளர்த்து வருகிறது. இதுநாள் வரை எல்லா செல்வத்தையும், இந்த ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பை பயன்படுத்தி இந்த பார்ப்பனிய, பனியாக்கள் உண்டு செரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பாரம்பரிய ஊழல் தத்துவத்தைக் கொண்டு, திறந்த சந்தை, யாவரும் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு என்று வந்த உலகமயத்தையும் தனக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் வகையில் மாற்றி, மேலும் தின்று கொழுக்கவே பயன்படுத்தினார்கள். விளைவு, உள்கட்டமைப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில் வங்கிகளில் உள்ள பணம் காணாமல் போனது. உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.

2003-04 வாக்கில் இந்திய ஜிடிபியில் ஏற்றுமதியின் பங்கு 10% ஆக இருந்து, 2013-14இல் 18% ஆக உயர்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்தப் பங்களிப்பு பெரும்பாலும் மென்பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தவைவே அன்றி, மற்ற உற்பத்திப் பொருட்களால் வந்தவை அன்று. இந்தியாவின் ஜிடிபியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு இதே காலகட்டத்தில் 2.8% ல் இருந்து 8.1% ஆக வளர்ச்சி கண்டதே ஒழிய உற்பத்தித் துறை பெரிய மாற்றத்தைக் கண்டுவிடவில்லை. சரி, குறைவான அளவே ஏற்றுமதி வளர்ச்சி கண்ட, மென்பொருள் தவிர்த்த பொருட்கள் என்னவென்று பார்த்தால், 2013-2014 ஆண்டில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணையும் (20%), ஆபரணங்கள் (13%), வேளாண்பொருட்களின் (10%) பங்களிப்பே 43% (2013-2014) வருகிறது. மற்றைய உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பு வெறும் 30%.

வெளியில் கச்சா எண்ணையை வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்யவும், கணினி கொண்டு மென்பொருட்களை உருவாக்கி ஏற்றுமதி செய்யவும் எதற்கு இத்தனை சாலைகளும், விமான நிலையங்களும், துறைமுகங்களும்? இந்த சாலைகளும், துறைமுகங்களும் அமைப்பதற்கு ஒன்றுக்கு மூன்று பங்கு பணத்தை வங்கிகளிடம் வாங்கி பொய்க் கணக்கு எழுதி, ஊழல் செய்தது ஒருபுறம், இப்படி போட்ட சாலைகள் பெரிய அளவு பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படாமல் போனது மறுபுறம் என இரண்டும் சேர்ந்து போட்ட முதல், வட்டியுடன் திரும்ப வராமல் வாராக்கடன் ஆகிப் போனது. இதனை சரிகட்ட பல சுங்கச்சாவடிகளை அமைத்து மக்களிடம் இருக்கும் கொஞ்சப் பணத்தையும் உருவுவது தான் நடந்தது.

exports as a ratio of GDPThanks:eepcindia.org

அமெரிக்காவிற்கு மென்பொருட்களையும், அதன் அணி நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆபரணங்களையும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. 2007க்குப் பிறகு சீனாவின் உற்பத்தி பெரும் எழுச்சி கண்டு அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவு வளர்ந்திருந்த நிலையில், அதன் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய ஆரம்பித்திருந்தது. அமெரிக்க-சீன நாடுகளுடனான இருதரப்பு வர்த்தகத்தைப் பொருத்தவரை இந்தியா, இருவருடனும் சமமான அளவே வர்த்தகம் செய்கிறது. சீனாவின் எழுச்சியைத் தொடர்ந்த அமெரிக்க-சீன வர்த்தகப் போட்டியும், இந்தப் போட்டியினால் பலகீனமடைந்த உலகமயத் தரப்பிற்கு எதிராக அமெரிக்காவில் தேசியவாதத் தரப்பும் தத்தமது நலன் சார்ந்து மோதிக் கொள்ள ஆரம்பித்தன. இரு நாடுகளுடனும் சமமான அளவு வர்த்தகம் செய்யும், குறிப்பிட்ட அளவு சந்தையும், அது மேலும் வளரும் வாய்ப்பும் கொண்ட இந்தியாவை இருதரப்பும் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சித்தன. இருதரப்பிலும் லாபமடையும் வகையில் பல்முனை வெளியுறவுக் கொள்கையை இந்தியா அறிவித்தது.

தொன்னூறுகளில் அமெரிக்காவின் உற்பத்திக்கு பங்காற்றுவதன் மூலம் முதலில் உதிரி பாகங்களையும், அதன் அனுபவ அறிவுத் (know how) தொடர்ச்சியில் முழு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிலையையும் அடைந்தது சீனா. சீன மாதிரியைப் பயன்படுத்தப் போவதாக சொன்ன இந்தியா, சீனாவிற்குத் தேவையான அதிக உழைப்பாளர்களைக் கோருகின்ற மூலப்பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்த நிலையில், அதன் பொருட்களுக்கான முக்கிய சந்தையாக விளங்கும் இந்திய சந்தைக்குப் பதிலாக, வேகமாக வளர்ந்து வரும் சீன உற்பத்தியில் பங்கும், அதன் தொழில்நுட்ப அறிவையும் அதற்கு ஈடாக கேட்டுப் பெற்றிருக்க முடியும். அப்படி சீன சார்பை எடுக்கும் பட்சத்தில், தற்போதைய அமெரிக்காவுக்கான மென்பொருள் ஏற்றுமதி, வாகன உற்பத்தி சார்ந்த சந்தையை இழக்க நேரிடலாம். அதனை விட இந்திய முதலாளிகள் தயாராக இல்லை.

சீனா, இந்தியாவின் ஆபரணங்கள், மென்பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆடைகளுக்கு தமது சந்தையை திறந்து விடவும், உற்பத்திக்குத் தேவையான முதலிடவும் முன்வந்தது. ஆனால், இந்திய முதலாளிகள் உலகமயம் தொடங்கிய முதலே தொழில்நுட்ப இறக்குமதி செய்து மற்றவர்களுக்கு உற்பத்தி செய்யும் இடைத்தரகர்களாகவே இருந்து பழகிப் போனவர்கள். அதோடு, சீனப் பொருட்களுடன் போட்டியிட்டு வெல்லும் தொழில்நுட்ப வலிமையை இதுவரையிலும் பெருக்கிக் கொள்ளவில்லை. ஆதலால், இவர்களுக்கு சீனப் பொருட்களுடன் போட்டியிட்டு வெல்லும் வல்லமை இல்லை. ஆதலால், அமெரிக்க-சீன வர்த்தகப் போட்டியில், அங்கு நடைபெறும் அமெரிக்க உற்பத்தி இந்தியாவுக்கு வரும். தொழில்நுட்பத்தோடு, அமெரிக்க சந்தையும் சேர்த்து கிடைக்கும். ஆதலால், இதுவரையிலும் பார்த்து வந்த இடைத்தரகு வேலையை சிரமம் இன்றி தொடரலாம் எனக் கணக்கிட்டார்கள்.

எந்த லாபமும் எதிர்பார்க்காமல் இவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்க அமெரிக்கன் என்ன அவ்வளவு கிறுக்கனா? அதற்குப் பதிலாக இந்தியாவின் சில்லறை வணிகத்தில் ஈடுபடவும், அதற்கு இந்திய சந்தையை ஒருமுகப்படுத்தவும், எல்லா வணிகமும் சீனாவில் நடைபெறுவதைப் போல மின்னணு பரிமாற்ற முறையில் இயங்கவும் செய்யுமாறு மாற்றக் கோரினார்கள். அமெரிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொருட்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மென்பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. அந்த நிறுவனங்கள் மேலும் வளர இந்திய சில்லறை சந்தை தேவை.

மின்னணு பரிமாற்ற முறைக்கு மாறுவதன் மூலம், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் விசா போன்ற நிதிநிறுவனத்துக்கு 5% சேவைக்கட்டணம் செல்லும். சீனாவில் இந்தப் பரிமாற்றத்தை அலிபெ, டென்சன்ட் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் கைப்பற்றி விட்டன. அந்த சந்தை இழப்பை அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சரிசெய்து கொள்ளும். இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்த அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுக்கும். இதனால் உள்ளூர் சாதாரண சிறுகுறு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவர்களே... அதில் வேலை செய்பவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்களே என்று நாம் கேட்கலாம். அதனால் பெருநிறுவனங்கள் பாதிக்கப்படாதே.... பிறகென்ன கவலை?

இந்த வலைப்பின்னலை ஏற்படுத்த இந்தியா முழுக்க இணைய வசதி சென்றடைய வேண்டும். அதோடு, எந்த தயவு தாட்சண்யமும் பார்க்காமல், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும், கோடிக்கணக்கான மக்கள் வேலை செய்து பிழைக்கும் இந்த அமைப்பை மாற்றி, இந்த மக்கள் எல்லாம் பாதிக்கப் பட்டாலும், இந்த நோக்கத்திற்கு இசைவாக இதனை ரத்தம் சொட்ட சொட்ட வெட்டிக் கூறுபோடும் ஒரு கசாப்புக் கடைக்காரன் வேண்டும். மெல்ல மெல்ல ஒவ்வொரு இறகாகப் பிடுங்கும் மன்மோகன் ஓரம் கட்டப்பட்டு, வளர்ச்சி நாயகன் பிம்பம் கட்டப்பட்டு, மோடி 2014ல் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ஏற்கனவே இருக்கும் முதலாளிகளை ஓரம்கட்டி, இந்திய அரசின் முழு ஆதரவுடன், 2015 டிசம்பரில் அம்பானி Jioவைத் தொடங்கி களத்தில் இறங்கினார்.

2016 செப்டம்பரில் Jio சந்தையில் நுழைந்ததும், அதே ஆண்டு நவம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் தற்செயலானதா என்ன? முறைசாரா வர்த்தகத்தை இந்த வலைப்பின்னலுக்குள் கொண்டு வரும் வகையிலும், அவர்களின் பணத்தைப் பிடுங்கி வாராக்கடன்களை சரிசெய்யும் வகையிலும், மின்னணுப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அமைப்பின் மீதான கருணையற்ற தாக்குதலைத் தொடுத்தார் மோடி.

இன்று கொரோனா நுண்ணுயிரியினால் ஏற்படும் உயிரிழப்பை விட, இது பரவாமல் தடுக்க எல்லா பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திருப்பதனால் ஏற்படப் போகும் வேலை இழப்பு, நாடுகளின் பொருளாதார இழப்புகள் தான் உலக நாடுகளை அதிகம் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்கனவே இயல்பாக சென்று கொண்டிருந்த முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளை பெருமளவு நிறுத்தி விட்டு இருந்தது. இது ஏன் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு மோடி அரசு இன்றுவரை தெளிவான பதிலை சொல்லாத நிலையில், இந்தியாவின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் உலகமய தரப்பு பன்னாட்டு நிதிநிறுவனங்களின் கோரிக்கை என்றே முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட சில நாட்கள் கழித்து நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில், இந்தியாவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தேசியமய தரப்பின் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரின் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து உலக நாடுகளே குழம்பி இருந்த சமயம், இந்தியா தொடர்ந்து இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தது.

ஏற்கனவே பணமதிப்பிழப்பில் நொடிந்து போயிருந்த முறைசாரா பொருளாதாரம், அடுத்த அவசர கதியில் செய்யப்பட்ட ஒரே நாடு, ஒரே வரி என்ற ஜிஎஸ்டி அமலாக்கம் அதன் மீது இடியாக இறங்கியது. இந்தியாவின் நுகர்வு சந்தை இந்த முறைசாரா பொருளாதாரத்தில் ஈடுபடும் பெரும்பான்மை தொழிலாளர்களினால் இயங்குகிறதே ஒழிய, முறையான பொருளாதாரத்தில் வேலை செய்யும் வெறும் 3% தொழிலாளர்களால் அல்ல. அப்படி என்றால், எந்த சந்தையை ஈடாக வைத்து பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்களோ, அதன் இதயத்தில் கத்தியை சொருகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

நண்பன், எதிரி, கூட்டணி நாடு என்ற எந்த பேதமின்றி அனைத்தையும் அமெரிக்க வர்த்தகத்திற்கு சாதகம், பாதகம் என்ற america first ஒற்றை அளவுகோலில் ட்ரம்ப் அணுகினார். சீனாவுடன் மட்டுமல்ல, எல்லா நாடுகளுடனும் ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கினார். அது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை பிரதிபலித்தது மட்டுமல்லாமல், பலகீனமடைந்திருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை சுட்டுவதாகவும் இருந்தது.

முதலில் பல்முனை வெளியுறவுக் கொள்கையை அறிவித்து அமெரிக்க-சீன நாடுகளுடன் இணைந்த போக்கை கடைபிடிக்க முயன்ற இந்தியா, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இசைந்து முற்றுமுழுதான அமெரிக்க சார்பை எடுத்தது. ரசிய ஆயுதங்களுக்குப் பதிலாக அமெரிக்க ராணுவத் தளவாடங்கள், ஈரான்-வெனிசுவேலா எண்ணெய் இறக்குமதிக்குப் பதிலாக அமெரிக்க எண்ணெய் என அமெரிக்க நலன் சார்ந்து செயல்பட்டு தனது சார்புநிலையை பறை சாற்றியது.

இந்த அடையாளப் பூர்வமான நடவடிக்கைகளில் அமெரிக்கா திருப்தி அடையவில்லை. அவர்கள் கோருவது முழுமையான சரணடைவு. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய-அமெரிக்க திறந்த சந்தை (free trade) ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்துக் கொண்டிருந்தது. அமெரிக்க சார்பின் காரணமாக சீனாவுடனும், இந்தியா அது போன்ற எந்த ஒப்பந்தத்தையும் எட்ட முடியவில்லை. அமெரிக்க சார்பெடுத்த அம்பானி, சவுதியுடன் இணைந்து ரத்னாகிரியில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க ஒப்பந்தமிட்டார். இன்றுவரை அது காகிதத்தில் தான் இருக்கிறது, செயல்பாட்டுக்கு வரவில்லை.

அமெரிக்க-சீன வர்த்தகப் போருக்குப் பின்னர் வெளியேறிய நிறுவனங்கள் கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சென்றனவே ஒழிய, இந்தியாவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்திய ஜிடிபியில் ஏற்றுமதியின் பங்கு சரிய ஆரம்பித்தது. (2019-20இல் 11% ஆக சரிந்திருக்கிறது)

அதுமட்டுமல்ல, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவும் வர்த்தகமும் சீர்கெட்டு வந்திருக்கிறது. அமெரிக்காவுடன் இணைந்து சீன ஆதரவு ராஜபக்சேவை ஆட்சியில் இருந்து இந்தியா விரட்டியது. ராஜபக்சே சகோதரர்கள் இன்று மீண்டும் இலங்கையில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். இப்போது இந்தியா கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. தனக்கு சார்பாக சட்டவரைவைக் கொண்டு வர நேபாளத்தின் மீது கருணையற்ற, வர்த்தகத்திற்கான எல்லை மூடலை மேற்கொண்டது. நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட நேபாளம், இன்று சீனாவுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவின் தடையை முறியடித்து சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது.

டாக்லோம் எல்லைப் பிரச்சனைக்குப் பிறகு பூட்டான் இந்தியாவுடன் இடைவெளியைப் பேண ஆரம்பித்திருக்கிறது. CAA சட்டத்தின் மூலம் பங்களாதேஷ் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிடம் இருந்து இந்தியா பெருமளவு விலகி இருக்கிறது. அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்து, விலை குறைவான, இரண்டு மாதத் தவனையில் கிடைத்து வந்த இரானின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி, இந்திய எண்ணெய் தேவைக்கு முழுவதுமாக விலை அதிகமான அமெரிக்க-சவுதி எண்ணையை சார்ந்து இருக்கும் நிலையை இந்தியா எட்டி இருக்கிறது. அதோடு இரானில் இந்தியா, ஜப்பார் துறைமுகத்தைக் கட்டி, அதன் வழியாக ஆப்கானிஸ்தானுக்கும், அதன் வழியாக மத்திய ஆசியாவுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆரம்பித்தது. இன்று ஜப்பார் துறைமுகப் பணிகள் பாதியில் நிற்கின்றன. அமெரிக்கா பாகிஸ்தான் ஆதரவு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கானிஸ்தான் போரில் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் அங்கே மூக்கை நுழைத்த இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது மட்டுமல்ல, இரானில் முதலிட்ட ஜப்பார் துறைமுகம் தனது தேவையை இழந்திருக்கிறது. இப்படி உலக அரசியலில் மட்டுமல்ல, பிராந்திய ரீதியிலும் இந்தியா தோல்வியைத் தழுவி இருக்கிறது.

ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள், அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட make in india உற்பத்தியைத் தொடங்காமலேயே நின்று போனது ஒரு புறமும், அந்த வாய்ப்புக்கு மாற்றாக செய்த பணமதிப்பிழப்பு ஏற்கனவே நடந்து கொண்டிருந்த உற்பத்தியை நிறுத்தியது மறுபுறமும் சேர்ந்து இந்திய ஜிடிபி மதிப்பை சரியச் செய்தது மட்டுமல்ல, வங்கிகளின் வாராக்கடன்களையும் அதிகரித்தது. மக்கள் இருந்த வருமானத்தை மட்டும் இழக்கவில்லை, கூடவே கடனாளியாகவும் காலம் தள்ள நிர்பந்திக்கப் பட்டார்கள்.

இதுவரை கடன்கொடுத்து வந்த நிதி நிறுவனங்கள் திவாலான நிலையில் புதிய கடன் சுழற்சியும் நடைபெற வாய்ப்பில்லை. வாங்க ஆளின்றி வாகனங்கள் தேங்கின. உலக நாடுகள் எல்லாம் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது இந்தியப் பொருளாதாரம் நோய் வாய்ப்பட்டது. 2008 பொருளாதார மந்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்படாத இந்திய வங்கித் துறை, அப்படி எந்த நிகழ்வும் இல்லாத நிலையிலேயே நலிவடைந்தன. ஆறு மாதங்களுக்கு முன்பே தர குறியீட்டு நிறுவனங்கள் இந்திய வங்கித் துறையின் தரத்தைக் குறைத்தன. இந்த வைரஸ் பிரச்சனைக்கு முன்பாகவே வங்கிகள் ஒவ்வொன்றாக திவாலாகின. வாகன நிறுவனங்கள், வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

கொரோனா வைரஸ் சீனாவில் நிலைகொண்டிருக்கும் போதே, சவுதியின் எண்ணெய் சந்தை தாக்குதலில் உலக எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் மட்டுமல்ல, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் 18% வீழ்ச்சி கண்டது. கொரோனா வைரஸ் அமெரிக்காவை அடைந்ததும், இங்கே இன்போசிஸ் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. இப்படி உள்நாட்டுக் காரணிகளால் வாகன, வங்கிகளின் பங்கு வீழ்ந்தது என்றால், வெளிநாட்டுக் காரணிகளால் எண்ணெய், மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்தன.

கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார - அரசியல் - ராணுவ - வர்த்தகத் தோல்விகளால் துவண்டிருந்த அமெரிக்கா, சவுதியின் எண்ணெய்த் தாக்குதல், அதன் உற்பத்தி நடைபெற்ற சீனாவில் உற்பத்தி நிறுத்தம், அதனைத் தொடர்ந்த வைரஸ் தாக்குதலினால் ஏற்பட்ட பொருளாதார செயல்பாடுகள் நிறுத்தத்தினால் அதன் பங்குச் சந்தை மார்ச் 12 வரை 28% வீழ்ந்தது என்றால், அதன் வழியைப் பின்பற்றிய, அந்நாட்டு சார்பெடுத்த, அதனைச் சார்ந்து இயங்கிய இந்தியா, கிட்டத்தட்ட அதே காரணத்திற்காகவே (20%) வீழ்ந்திருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, ரசிய (36%), பிரேசில் (36%), பிரான்ஸ் (30%), ஜெர்மனி (29%), இங்கிலாந்து (28%) என எல்லா நாடுகளின் பங்குச் சந்தைகளும் வீழ்ந்திருக்கின்றன. எனில் இந்திய பங்குச் சந்தை மற்றவர்களை விட குறைவாகவே வீழ்ந்திருக்கிறது.

இந்தியா, சீனா தவிர்த்த அனைத்து நாடுகளின் பொருளாதாரம் வளராது என்று உலக வங்கி கூறி இருப்பதைக் கொண்டு பார்க்கும்போது, இந்தியா மற்ற நாடுகளை விட நல்ல நிலையில் தான் இருக்கிறது என்று முடிவுக்கு வர முற்படலாம். பங்குச் சந்தை சரிவு என்பதை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் வீழ்ச்சியை அளவிட முடியாது. இது விழுவதும், எழுவதும் இயல்பானதே. அப்படி எழுவதற்கான அடிப்படை இருக்கிறதா? இப்படி விழும்போது ஏற்படும் வேலை இழப்பும், வீழ்ந்து விடும் மக்களின் வாழ்க்கை குறித்துமே நமது கவலை.

மற்ற நாடுகள் எழுவதற்கான தொழில்நுட்பம், உற்பத்தித் திறன், சந்தை, முதலீடு என எல்லா அடிப்படைகளையும் கொண்டிருக்கின்றன. அங்கே வேலை இழந்த ஒரு தொழிலாளி குறைந்தபட்ச வாழக்கை நடத்த அரசு பணம் தரும். ஆனால் இந்தியாவில்? ஜிடிபியில் ஒரு விழுக்காடு வீழ்ச்சி பல லட்சம் வேலை வாய்ப்பிழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். தற்போது விழப் போகும் பல விழுக்காடு வீழ்ச்சி எத்தனை கோடி வேலை இழப்பை ஏற்படுத்தும்?

இந்த கொரோனவிற்குப் பிறகான உலகம் வேறாக இருக்கும் என்கிறார்கள். ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட மென்பொருள் துறை என்னவாகும், எண்ணெய் விலை வீழ்ந்து சரிவைச் சந்தித்திருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் பல லட்சம் இந்தியத் தொழிலாளர்களின் வேலை என்ன ஆகும், ஏற்கனவே திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கிகள், தற்போதைய வேலை இழப்பினால் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே, அதனை எப்படி சமாளிப்பார்கள்?

ஏற்கனவே மத்திய வங்கியில் இருந்து 1.73 லட்சம் கோடியை எடுத்து விட்டார்கள். மத்திய கிழக்கில் இருந்து வரும் அந்நிய செலாவணி குறைந்து, நமது ஏற்றுமதியும் குறைந்து, டாலர் வரத்தும் குறைந்து, எண்ணெய் உற்பத்தி நாடுகள் சேர்ந்து எண்ணெய் விலையை ஏற்றினால் இந்தியா எப்படி டாலர் தேவையை சமாளிக்கும், மீண்டும் இரானுடனும், வெனிசுவேலாவுடனும் பேசி சொந்த நாணயத்திலோ, பண்டமாற்று முறையிலோ எண்ணெய் வாங்குவார்களா? இல்லை அமெரிக்கா இவர்களுக்கு துணை நின்று இதனைத் தீர்க்க உதவுமா? வேலை வாய்ப்பை எப்படி பெருக்குவார்கள், முதலீடு எங்கிருந்து வரும், அமெரிக்கா இங்கும் உதவுமா இல்லை கைவிடுமா, இந்தியா சீனாவின் காலில் விழுமா? விடை தெரியாத கேள்விகள் நீள்கின்றன.

- சூறாவளி