corona virus muslimsகொரோனா வைரஸ் என்ற கொடிய நோய்த் தொற்று உலகின் பல பகுதிகளை மரண ஓலமாக்கியுள்ளது.

உலகம் முழுமைக்கும் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் சீனாவில் தொடங்கி, உலகத்தின் நாட்டாமையாக வலம் வரும் அமெரிக்கா வரை அனைவரையும் கொரோனா குலைநடுங்க வைத்துள்ளது..கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.!

சீனாவிலும், இத்தாலியிலும் மக்கள் கொத்துக் கொத்தாக பலியாகும்போதே, இந்தியா தனது பாதுகாப்பை பலப்படுத்தி உறுதி செய்திருக்க வேண்டும்.

இந்தியா இவ்விடயத்தில் மிகுந்த அலட்சியப் போக்கை கடைபிடித்தது. வெளிநாட்டிலிருக்கும் இந்தியர்களை தனி விமானத்தில் அழைத்து வந்ததில் தொடங்கி, பாப் பாடகி கன்னிகா கபூருடன் பாஜகவினர் பார்ட்டி நடத்தியது வரை அனைத்தையுமே இந்தியா தவிர்த்திருந்தால் இந்தளவிற்கான நெருக்கடியை நாம் சந்தித்திருக்க வேண்டியதில்லை..

வல்லரசு நாடுகளே வறண்டு போயிருக்கும் சூழலில், இந்தியா தனது வெற்று வீராப்பிலிருந்து சற்று நிதான நிலைக்கு வந்திருக்கலாம்.

திடீரென ஒரு நாள் ஊரடங்கு. அன்று மாலையே மொட்டை மாடிக்கு வந்து கைதட்டச் சொன்னது... பிரதமரின் பேச்சை சரியாகப் புரிந்து கொள்ளாமல், வடக்கர்கள் மொத்தமாய் வீதிக்கு வந்து கும்மாளமிட்டது... இதுபோன்ற கூத்துக்களை எல்லாம் தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை மத்திய அரசு கடைபிடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மார்ச் 23ம் தேதி திங்கள் மாலை தலைநகரத்தின் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விசாலமாய்த் திறந்துவிட்டு மக்கள் கூட்டம் அலைமோதிய சூழலைத் தவிர்த்து, ஒழுங்கு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். இவை எதையுமே மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை! இன்னொரு உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டுமானால், மார்ச் 20 வரை கொரோனா வைரஸ் பற்றிய விரிவான பார்வையே இந்திய அரசுக்குக் கிடையாது என்பதே நிதர்சனம். இவைகளெல்லாம் அரசு நிர்வாகத்தின் முழுமையான தோல்விகள்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாய், மொத்த பழியையும் டில்லி நிஜாமுத்தீன் மர்க்கஸில் கூடிய தப்லீக் ஜமாஅத்தினரின் மீது சுமத்துவது பாசிச அரசின் அயோக்கியத்தனமாகும்.

கொரோனா வைரஸ் பற்றிய விரிவான பார்வை அரசிற்கு இருந்திருந்தால், தலைநகரில் அவ்வளவு பெரிய கூட்டத்தை அவர்கள் அனுமதித்திருப்பார்களா? இல்லை, அரசின் கவனத்திற்கு எட்டாமலேயே அவ்வளவு பெரிய கூட்டம் கூடிவிட்டதா? அல்லது இவ்வளவு பெரிய கூட்டத்தை அனுமதித்துவிட்டு மொத்த பழியையும் இஸ்லாமியர்கள் மீது சுமத்த ஏற்கனவே திட்டமிட்டு விட்டார்களா? மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் இந்த வினாவிற்கெல்லாம் விடையளிக்க வேண்டும்.

மார்ச் 22 மத்திய அரசு திடீர் ஊரடங்கை அறிவித்து, பிறகு மறுநாள் அதை நீட்டித்தவுடனேயே டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத்தினர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு செல்ல ஆயத்தமாகி விட்டார்கள். மத்திய அரசு இன்னும் முன்கூட்டியே அறிவித்திருந்தால் அவர்கள் கூடியிருக்கவே மாட்டார்கள். திடீரென இரயில் சேவையும் ரத்தாகி விட்டது.

கொரோனா பற்றிய அச்சம் இரண்டு மாதங்களுக்கு முன்பே வலம் வரத் தொடங்கி விட்டது. வைரஸ் என்னவோ திடீரென பறந்து இந்தியாவைத் தாக்குவது போன்ற பிம்பத்தை உருவாக்கி, அப்பாவி மக்களை அலைக்கழித்து விட்டார்கள்.

டெல்லி நிஜாமுத்தீன் மர்க்கஸ் தப்லீக் தலைமை நிர்வாகம், வெளிமாநிலங்களிலிருந்து வந்த மக்களின் பாதுகாப்பான பயணம் பற்றியும், முறையான பேருந்து அனுமதியை வழங்கிட டெல்லி காவல் துறையிடம் கோரிக்கையாக முன்வைத்தும், அனைத்தையுமே அலட்சியமாகக் கருதி புறக்கணித்து விட்டது டெல்லி காவல் துறை. பாவம் அம்மக்கள்(தப்லீக் ஜமாஅத்தினர்)... இவ்வளவு பெரிய வரலாற்றுப்பழி நம்மீது சுமத்தப்படும் என்று கனவா கண்டிருக்கப் போகிறார்கள்? ஒரு வழியாக அனைவரும் அவரவர்கள் மாநிலம் திரும்ப, தமிழகம் வந்திறங்கிய மொத்த மக்களையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி விட்டார்கள். (இன்னும் சிலரை தேடிக் கொண்டுமிருக்கிறார்கள்!)

இச்சம்பவங்களெல்லாம் அரங்கேறுவதற்கு முன்பே தினமலர் என்ற பார்ப்பனப் பத்திரிக்கை, லவ்ஜிஹாத் போன்று, வைரஸ் ஜிஹாத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபடுகிறார்கள் என்று எழுதித் தீர்த்துவிட்டது. இவ்வளவுதான் இந்த தேசத்தின் நான்காவது தூணின் இலட்சணம்!

இந்திய விடுதலைக்காக இஸ்லாமியர்கள் இரத்தம் சிந்தினார்கள், உயிர்த் தியாகம், பொருட்தியாகம் செய்தார்கள். இம்மண்ணைப் பாதுகாக்க ஆங்கிலேயர்களை எதிர்த்து வலிமையாய்ப் போராடினார்கள் என்ற வரலாறுகளை எல்லாம் பேசிய காலம் கடந்துபோய், "அய்யோ..! எங்களால் இந்திய தேசத்திற்கு எந்தப் பாதிப்புமில்லை.. எந்த தீங்கையும் இம்மண்ணிற்கு நாங்கள் இழைக்க மாட்டோம்" என்று மார்பில் அடித்துக் கதறும் சூழலுக்கு இஸ்லாமியர்களை, பாசிசவாதிகளின் பரப்புரை கொண்டு நிறுத்தி இருக்கிறது. பொதுச் சமூகத்திடமும் ஒரு மயான அமைதி நிலவுகிறது. பொதுச் சமூகத்தின் அமைதியினாலேயே, பாசிசத்தின் கூச்சல் இன்னும் சத்தமாகிறது.

கொரோனாவை கொடிய நோயாகத்தான் உலகம் பார்க்கிறது. என் இந்திய தேசம் மட்டும்தான் அதை ஒரு மத நோயாகப் பரப்புகிறது.

- ஆழ்வை சம்சுதீன்