எண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: காரணம் என்ன? - பகுதி 1

எண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: எதிரெதிர் திசையில் நகரும் சவுதியும் - அமெரிக்காவும்! - 2

பகுதி - 3

சீனாவின் வலுவான பொருளாதார அடிப்படை

அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் சவுதியின் எண்ணெய் சந்தையை பிடிப்பதற்கான தாக்குதல் தான் காரணம் என்று முதலில் கூறிய ஊடகங்கள், தற்போது கொரானா நுண்ணுயிரி தொற்று உலகம் முழுதும் வேகமாக பரவி, பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி இருக்கிறது. அதனால் நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் பங்குச் சந்தை சரிகிறது என்கிறார்கள். இந்த இரண்டுமே ஒரு குறிப்பட்ட அளவு காரணம் என்றாலும், இதே காரணத்தை சீனாவுக்குப் பொருத்தினால், அதன் பங்குச் சந்தை இந்த நுண்ணுயிரி பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போதும் சரி, அது அங்கு கட்டுப்படுத்தப்பட்டு, இன்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையிலும் சரி குறிப்பிடும்படியாக நிலையாகவே இருக்கிறது.

china and us leadersசீனாவின் நிறுவனங்கள் அமெரிக்கா அளவுக்கு எண்ணெய் உற்பத்தியில் பெருமளவு ஈடுபடவில்லை என்பதால், அதன் மீதான விளைவுகள் மட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கிறது என்று வாதிட முற்படலாம். 2008 பொருளாதார வீழ்ச்சியின் போதும் உலகின் மற்ற பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்ததை கணக்கில் கொள்ளும் போது, இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்க பங்குச் சந்தையுடனும், வங்கிகளுடனும், உற்பத்தி மற்றும் சந்தையுடனும் நெருக்கமாகப் பிணைந்திருப்பதே காரணம் எனவும் கூற முற்படலாம். ஆனால், சீனாவின் பொருளாதாரமும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நிலைத்தன்மையையும் தற்போதைய பங்குச் சந்தை சரிவையும் விளக்க இந்த தொற்று தான் காரணம் என்பது போதுமானாதாக இல்லை.

அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவு சீனாவிலேயே நடக்கிறது. உதாரணமாக, ட்ரில்லியன் டாலர் நிறுவனமான ஆப்பிள் மற்றும் 80% அமெரிக்க மருந்து நிறுவனங்களின் உற்பத்தி சீனாவிலேயே நடக்கிறது. அமெரிக்காவில் பெருமளவு நடப்பது, இந்த உற்பத்திப் பொருட்களின் விற்பனையில் இருந்து வரும் லாபம் சார்ந்த பங்கு வர்த்தகம். அதனாலேயே சீனாவில் நோய்த்தொற்று பரவினால், அமெரிக்க சந்தை வாந்தி, பேதிக்கு உள்ளாகிறது. ஆனால் உற்பத்தி, சந்தை ஆகிய இரண்டுமே சீனாவில், அதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த நிதி நிறுவனங்கள் மற்ற நாடுகளிலும் சென்று முதலிட்டு, லாபம் ஈட்டி வந்திருக்கின்றன. அதனாலேயே எல்லா நாடுகளையும் எங்களுக்கு முதலிட திற, திற என்று வற்புறுத்துகிறார்கள். எல்லா தொழில்களையும் தனியார் மயமாக்கு, எல்லாவற்றிலும் எங்களை முதலீடு செய்ய அனுமதி கொடு என்கிறார்கள். அப்படி திறந்து விட்டதும், லாபம் ஈட்ட விலையை ஏற்றி குறிப்பிட்ட காலம் நன்றாக விற்பனை ஆகும் வரை காசு பார்த்து விட்டு, எல்லோரும் வாங்கி முடித்து, இனியும் வாங்க ஆள் இல்லை எனும் நிலை வரும்போது, போட்ட முதலை எல்லாம் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். அதனால் உற்பத்தி நின்று, வேலை இழப்பு ஏற்பட்டு, பொருளாதாரம் முடங்கி மந்த நிலையை அடைந்து விடுகிறது. அதாவது சுற்றிச் சுழலும் பொருளாதார சக்கரத்தின் இன்றியமையாத உறுப்புகளான முதலீடு, பொருள் உற்பத்தி, வேலை வாய்ப்பு, மக்களின் வாங்கும் திறன், சந்தை ஆகியவை பழுதுபட்டு அது சுழலும் வேகம் மந்தமாகிப் போகிறது. இந்தியாவில் இருந்து தற்போது இப்படி வெளியேறி பங்குச் சந்தை சரிந்து வருவதைக் காணலாம். இதனாலேயே, சீனாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டுமெனில் உற்பத்தியில் பங்கெடுக்கும் துறைகளிலும், அதுவும் ஓர் உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்தே செய்ய வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கிறது.

அதுமட்டுமல்ல, இப்படி முதலீடு செய்த நாடுகளின் அரசுகள் இவர்களுக்கு ஒத்துழைக்காத போது, அங்கிருந்து பெருமளவு வெளியேறி, அதன் சந்தையை செயற்கையாக விழ வைப்பார்கள். 2015- ல் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடி சீனாவின் பங்குச் சந்தையை தாக்கி நிலைகுலைய வைத்தார்கள். அதன் நாணயத்தை வீழ்ச்சி அடைய வைத்தார்கள். விழித்துக் கொண்ட சீனா, சட்டங்களை கடுமை ஆக்கியது. முதலீடு செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட முதலீட்டு நிறுவனங்களின் சீன உறுப்பினர்கள் கம்பி எண்ண வைக்கப்பட்டார்கள். அதுமுதல், அதன் சந்தையும், நாணயமும் நிலைபடுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பிறகே 2018- முதல் அமெரிக்க-சீன வர்த்தகப் போர் தொடங்கியது. இதுவரை எல்லோருடைய சந்தையையும் திற, திற என்று தாராள சந்தையை முன்னிறுத்தியவர்கள் இப்போது தங்களது சந்தையை மூடிக் கொண்டு உள்ளே விட மாட்டேன் என சொல்ல ஆரம்பித்தார்கள். காரணம் வேறு ஒன்றுமில்லை. உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேலாண்மை செலுத்தியவரை, போட்டியில் தன்னை வெல்வதற்கு யாருமில்லை என்று இருக்கும் போது எல்லோருடைய சந்தையையும் இவர்களுக்கு வேண்டும். உள்ளூர் போட்டியாளரை இவர்கள் நசுக்கி, தங்களது பொருளை விற்பார்கள். இன்று சீனா, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு, மின்னணு நாணயம் உருவாக்கும் blackchain, மருத்துவம், ஆளில்லா விமானம் (drone), சேமக்கலங்கள் (batteries) என அனைத்திலும் முன்னோக்கி சென்று விட்டது. சீன சந்தையை மட்டுமல்ல உலக சந்தையையும் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களோடு அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையை அடைந்திருக்கின்றன.

சீனாவின் அரசியல் ரீதியான வெற்றி

இதற்கான உதாரணம் அனைவரும் அறிந்த ஹுவாவெய். அது அதிகவேக இணையத் தொலைத்தொடர்புக்கு (5G) தேவையான பொருட்களை உருவாக்கி உலகம் முழுவதும் சந்தைப் படுத்த ஆரம்பித்தது. அமெரிக்க நிறுவனங்களால் இந்த வேகத்தையும், இதற்கான பொருட்களையும் உருவாக்க முடியவில்லை. நோக்கியா போன்ற நிறுவனங்கள் இந்த வேகத்தை சாதித்தாலும், சீன நிறுவனத்தோடு ஒப்பிடும் போது அவைகளின் விலை அதிகம் மட்டுமல்ல தரமும் குறைவு. நேர்மையாக சந்தையில் மோதி வெல்ல முடியாத அமெரிக்கா, இதனை வளர விடாமல் தடுக்க தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி தடுக்க எல்லா முயற்சிகளையும் செய்தது. ஆனால் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட அமெரிக்க அணி நாடுகள் இவர்களின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் சீன நிறுவனத்தை தங்கள் நாட்டில் அனுமதித்தன. இப்படி பல முட்டுக்கட்டை போட்டும் எல்லாவற்றையும் சீன அரசின் உதவியுடன் அந்த நிறுவனம் தகர்த்தெறிந்து, உலகிலேயே சாம்சங் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிகம் கைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனமாக வளர்ந்து, லாபகரமாகவே இயங்கி வருகிறது. இது சீனாவிற்கு உலக அரங்கில் கிடைத்த அரசியல் ரீதியான வெற்றியாகும்.

வர்த்தகப் போரில் சீனாவின் தற்காலிக வெற்றி

அதோடு சீனா பணப்பரிமாற்றங்கள் அனைத்தையும் மின்னுமயமாக்கி வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இதில் அமெரிக்காவின் விசா கார்டு போன்ற நிறுவங்களை அனுமதிக்காமல், சீன நிறுவனங்களான அலிபே, டென்சென்ட் போன்றவையே கட்டுப்படுத்துகின்றன. இவற்றில் அமெரிக்க நிதி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். கூடவே, சீனாவில் உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து தான் உற்பத்தி செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் பொருட்களின் மீது அளவு கடந்த வரிவிதித்து விற்பனையாகாமல் செய்வோம் என அறிவித்து வர்த்தகப் போரை துவக்கினார் ட்ரம்ப். அமெரிக்கா மிகப் பெரும் சந்தை, சீனா வேறு வழியின்றி அடிபணியும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தும் வர்த்தகப் போர் தொடர்ந்தது. அமெரிக்காவின் கைபேசிகளை உருவாக்கப் பயன்படும் பாகங்களை, ஆண்ட்ராய்டு கூகிள் சேவைகளை, சீன நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என தடை விதித்து நெருக்கினார்கள். அவர்கள் வெற்றிகரமாக இவற்றுக்கு எல்லாம் மாற்றுகளை உருவாக்கி மேற்கொண்டு போய்க் கொண்டே இருந்தார்கள். இழப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் அதிக இழப்பு ஏற்பட்டது. அதோடு சீனாவின் எதிர்த் தாக்குதல்கள், அமெரிக்காவின் வேளாண்துறையை கடுமையாகப் பாதித்தது.

தற்போது எப்படி இழப்பை தாங்கிக் கொண்டு சவுதி-ரசிய நாடுகள் அமெரிக்க ஷெல் எரிபொருள் உற்பத்தி நிறுவனங்களை தாக்கி சந்தையில் இருந்து வெளியேற்றப் போரிடுகிறார்களோ, அதே போல அமெரிக்க-சீன வர்த்தகப் போர் நடந்தது. இறுதியில் வேறு வழியின்றி ட்ரம்ப் போர் நிறுத்தம் செய்ய வேண்டிய நிலையை அடைந்து, சமீபத்தில் தற்காலிக ஒப்பந்தம் செய்து கொண்டார். ஹுவாவெய் நிறுவனத்துக்கு அமெரிக்க நிறுவனத்தின் சிப்களை தொடர்ந்து விற்க அனுமதிக்கப்பட்டது. வர்த்தகப் போரில் தற்காலிக வெற்றியை சீனா தனதாக்கிக் கொண்டது.

நம்பிக்கை ஏற்படுத்திய சீனாவின் போர்க்கால நடவடிக்கை

இந்நிலையிலேயே உலகின் உற்பத்தி மையமாக விளங்கும் சீன உற்பத்தியின் இதயமாக விளங்கும் உஹான் நகரில் கொரானா நுண்ணுயிரித் தாக்குதல் தொடங்கியது. இந்த நோய்த்தொற்று, சீனாவில் உருவானது என்று அமரிக்காவும், கூட்டுப் பயிற்சிக்கு வந்த அமெரிக்க இராணுவத்தினர்தான் பரப்பினார்கள் என்று சீனாவும் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. யாரும் பரப்பினார்களா? அல்லது இயல்பாக பரவியதா? என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கொரானா நுண்ணுயிரித் தாக்குதல் சீனாவில் தீவிரமானதும், அந்நாட்டு அரசு அதற்கு எதிரான மக்கள் போரை அறிவித்து, ஒரு வாரத்தில் மாபெரும் மருத்துவமனைகள் கட்டுதல், மின்னணு தொழில்நுட்ப உதவியுடன் மருத்துவம், ட்ரோன் மூலம் கண்காணிப்பு என கட்டுக்குள் கொண்டு வந்தது மட்டுமல்ல, இன்று உலகமே இதன் பரவலை தடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் போது, எல்லா செயல்பாடுகளையும் நிறுத்தி இருக்கும் போது, சீனாவிலோ பெரும்பாலோனோர் குணமடைந்து மீண்டும் தமது வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் கட்டுக்குள் கொண்டு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார் ட்ரம்ப்.

இப்படி அரசியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, பொருளாதார ரீதியாக, சந்தை ரீதியாக முதலீட்டாளர்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. சந்தையில் பல்வேறு பொருளாதார அடிப்படைகள் முக்கியம் என்றாலும், நிலைத்தன்மை, நம்பிக்கை இரண்டும் முதலீடுகளை ஈர்க்க பெரும் பங்கு வகிக்கும். இன்று நட்டத்தை சந்தித்தாலும், எதிர்காலத்தில் சீனாவின் நிறுவனங்கள் நிச்சயம் லாபமீட்டும் என்ற நம்பிக்கையே முதலீட்டாளர்கள் அங்கிருந்து வெளியேறாமல் இருக்கக் காரணமாகும். நாசகார வேலைகள் செய்து, உண்மைக்குப் புறம்பான தகவல் தொடர்புப் போரை தொடுத்து, இந்த நம்பிக்கையினை தகர்க்கச் செய்த அத்தனையையும் தகர்த்து, வெற்றிகரமாக தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வந்து, சீனா தனது பொருளாதாரத்தை, சந்தையை நிலைப்படுத்தி சாதித்திருக்கிறது. அப்படி என்றால் அமெரிக்காவின் மீதான நம்பிக்கை தகர்ந்திருக்கிறதா?

அவநம்பிக்கையை ஏற்படுத்திய அமெரிக்காவின் அரசியல் – ராணுவ – பொருளாதார - பூகோள அரசியல் தோல்விகள்

அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள், வாகன உற்பத்தி, வேளாண் பொருட்களின் உற்பத்தி, மருந்துப் பொருட்கள், விமான உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், நிதி, காப்பீடு போன்றவைகளாகும். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை சீனா. வர்த்தகப் போரில் அது பெரிதும் பாதிக்கப்பட்டிருகிறது. ட்ரில்லியன் டாலர் நிறுவனமான போயிங், சமீபத்திய max737 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி, அதன் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளும் இந்த விமானங்களை வாங்கப் போட்டிருந்த ஒப்பந்தங்களை திரும்பப் பெற்றதால் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்தது. இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.5% வரைக்கும் குறைக்கும் என அப்போது கூறினார்கள்.

சிரியாவில், ரசியாவின் ராணுவத் தளவாடங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு அதற்கான வரவேற்பு சந்தையில் கூடி, அமெரிக்காவின் தளவாடங்களை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. சவுதி எண்ணெய் உற்பத்தி நிலையத்தின் மீதான தாக்குதல், அமெரிக்க சாதனங்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்து, அதற்கான சந்தையைக் குறைத்திருக்கிறது. அந்நிறுவனங்கள் பெரும் லாபமீட்ட வசதியாக சமீபத்தில் பெரும் போர் எதுவும் வெடிக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியில் சீனா இவர்களைப் பின்னுக்கு தள்ளி சந்தையைப் பிடித்து விட்டது.

மத்திய கிழக்கில் ஈரான் - சீன- ரசிய கூட்டணி கை ஓங்கி, அமெரிக்காவின் ஆதிக்கம் குறைய ஆரம்பித்து இருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் கடல்வழி மேலாண்மை, சீனாவின் belt and raod initiative (BRI) முன்னேடுப்பினால் கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. அதோடு, மிகக் குறுகிய காலத்தில் சீனா இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கட்டி முடித்து, மூன்றாவது கப்பலையும் கட்டத் தொடங்கி, அமெரிக்க கடற்படைக்கு எதிரான தனது வலிமையை வெளிப்படுத்தி, கேள்விக்கிடமற்ற மேலாண்மையை கேள்விக்கு உள்ளாக்க ஆரம்பித்து இருக்கிறது. சீன - ரசிய நாடுகளின் அதிவேக hypersonic ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தும் தொழில்நுட்பம் தன்னிடம் இல்லை என அமெரிக்க ராணுவத் தலைமையகம் பெண்டகன் கூறியதன் மூலம், அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் பொருளாதாரத் தடை என்று டாலரையும், டாலர் பரிமாற்றத்தையும் ஆயுதமாக்கியதன் விளைவாக பல்வேறு நாடுகளும் டாலர் தவிர்த்த சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. மின்னணு நாணயங்கள் உருவாக்கப்பட்டு சீனா, ரசியா, வெனிசுவேலா, ஈரான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் அதனைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. ட்ரம்ப்பின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியைத் தவிர்த்த சொந்த ராணுவத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

பெட்ரோடாலரை உலகப் பணமாக நிலைநிறுத்த முக்கிய பங்கு வகிக்கும் சவுதி, அராபிய நாடுகள் சீனாவின் நாணயத்திலும் எண்ணெயை விற்க ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகின்றன. 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின் சீனா கட்டுப்படுத்தப்பட்ட அளவு பணத்தை அச்சிட்டு சந்தையில் விட்டு நிலைமையை சமாளித்தது. இப்படி வெளியிடப்பட்ட பணம் நேர்மறையில் ஒரு பொருளாதார சுழற்சியையும், மறைமுகமாக டாலருக்கு எதிரான நகர்வுகளையும், போட்டியையும் உருவாக்கி இருக்கிறது. அதோடு இந்தப் பணம் பெருமளவு அதிக செலவில் உற்பத்தியாகும் ஷெல் எரிவாயு உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டது. இதுவரை எண்ணெய் விலை இந்த உற்பத்தி செலவை விட அதிகமாக இருந்து வந்ததாலும், சவுதி அதற்குத் துணையாக இருக்க வைக்கப்பட்டதாலும், இவை வெற்றிகரமாக இயங்கி வந்தன. அந்த சவுதியே எண்ணெய் சந்தை தாக்குதலை அறிவித்ததால்தான் இன்று அமெரிக்க பங்குச் சந்தை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதோடு, கடந்த பத்தாண்டுகளில் பொருளாதாரம் – வர்த்தகம் – அரசியல் - ராணுவம் என எல்லா வகையிலும் பின்னடைவை சந்தித்து வந்த அமெரிக்க பங்குச் சந்தை கடும் அழுத்தத்தை சந்தித்து, வெடிக்கக் காத்திருந்தது. கொரானா நோய்த்தொற்று அந்த பலூனை வெடிக்க வைத்த ஊசி அவ்வளவே. அப்படி என்றால், அமெரிக்க சந்தையைப் போன்றே அதல பாதாளத்திற்க்கு சென்று கொண்டிருக்கும் இந்திய சந்தையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

(தொடரும்)

- சூறாவளி