சவுதி - ரசிய மோதலா? சவுதி - அமெரிக்க கூட்டணியில் பிளவா? கொரானா நுண்ணுயிரி தொற்றின் விளைவா?

trump and saudi kingசவுதியின் சந்தைப் போர் பிரகடனம்

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பும் (OPEC), அதற்கு வெளியில் உள்ள ரசியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தியாளர்களும் (OPEC+) கூடிய கூட்டத்தில் எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தடுக்க உற்பத்தியை மேலும் குறைத்துக் கொள்வதில் உடன்பாடு ஏற்படாததால், கூட்டம் முடிந்து வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 1 முதல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் உற்பத்தியை இனி குறைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் பொருள் அவரவர் சக்திக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்பத்தி செய்யலாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விற்றுக் கொள்ளலாம். இதில் என்ன இருக்கிறது? இது வியாபாரத்தில் எங்கேயும் உள்ள நடவடிக்கைதானே.. இதனால் ஏன் பங்குச் சந்தை மிகப் பெரிய அளவு சரிவடைந்துள்ளது எனத் தோன்றலாம்.

இதோடு நிறுத்தி இருந்தால் இது பெரிய அளவில் வெடித்திருக்காது. சவுதி தனது எண்ணெய் உற்பத்தியை தற்போதைய உற்பத்தி அளவான ஒரு நாளைக்கு 9.7 மில்லியன் பீப்பாயில் இருந்து 10 மில்லியன் பீப்பாய்களாவும், தேவைப்பட்டால் 12.3 மில்லியன் பீப்பாய்கள் வரையும் அதிகரிக்கும் எனவும், அதோடு ஒரு பீப்பாய்க்கு ஆசிய சந்தைக்கு 2-4 டாலர்கள் வரையும், அமெரிக்க சந்தைக்கு 7 டாலர்கள் வரையும், ஐரோப்பிய சந்தைக்கு 10.25 டாலர்கள் வரையும் தள்ளுபடி அறிவிப்பதாகவும், வாடிக்கையாளர்கள் சவுதியின் ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் செய்தி வெளிட்டது. இதன் பொருள் எல்லோரும் என்னிடம் வாருங்கள், மலிவான விலையில் எண்ணெய் தருகிறேன் என்று கூறி ஏற்கனவே விற்றுக் கொண்டிருப்பவர்களை சந்தையில் இருந்து விரட்டி, அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வது - அதாவது சந்தைப் போட்டி. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை... சந்தையில் தேவைக்கு அதிகமாக எண்ணெயைக் கொண்டு வந்து நிரப்புவேன் எனப் பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் அதன் விலையை விழச் செய்து, அதில் முதலிட்டவர்களை எல்லாம் நட்டமடையச் செய்து சந்தையை விட்டே வெளியேற்றப் போகிறேன் என சவுதி கூறி இருக்கிறது.

oil production costஇது என்னடா புதிதாக இருக்கிறது? அப்படி என்றால் முதல் போட்ட இவனும்தானே நட்டமடைவான் என்று தோன்றும். மேலே உள்ள அட்டவணையைக் கொண்டு பார்த்தால், எண்ணெய் உற்பத்தியாளர்களிலேயே மிகக் குறைவான செலவில் ஒரு பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடு சவுதி தான். மலிவான விலையில் எண்ணெய் தருகிறேன் என கூவிக்கூவி அழைப்பதோடு நில்லாமல், குறைந்த செலவில் உற்பத்தி செய்த எண்ணையை சந்தையில் கொட்டி சக போட்டியாளர்களை நட்டமடைய வைத்து, சந்தையை விட்டே வெளியேற்றப் போகிறேன் என அறிவிப்பது சந்தைப் போட்டி அல்ல, போர். சக உற்பத்தியாளர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல். அந்த நிறுவனங்களில் முதலிட்டவர்களுக்கு விடப்படும் மிரட்டல். உடனே ஊடகங்கள் எல்லாம் போர், போர் என முழங்க, முதலிட்டவர்கள் எல்லாம் பதைபதைத்துப் போய் போட்ட பணத்தை வெளியில் எடுக்க, உலகம் முழுதும் உள்ள பங்குச் சந்தை சரிவை சந்தித்திருக்கிறது. நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து போய் இருக்கிறது. அப்படி என்றால் இது திட்டமிட்டு சக உற்பத்தியாளர்களின் மீதும், உற்பத்தி செய்யும் நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். ஏன் சவுதி இந்தத் தாக்குதலை தொடுக்க வேண்டும்?

தாக்குதலுக்கான காரணம் என்ன?

OPEC+ கூட்டத்தில் சவுதி தற்போது இருக்கும் உற்பத்தி அளவை விட ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் பீப்பாய்கள் குறைக்க வேண்டும் எனக் கூறியதாகவும், ரசியா இதனை மறுத்ததாலேயே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே ரசியாவின் சந்தையைப் பிடிக்கும் நோக்கில் சவுதி இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. உண்மைதான். ரசியா ஐரோப்பிய எரிவாயு எண்ணெய் சந்தையையும், ஆசியாவின் மிகப் பெரிய எண்ணெய் சந்தையான சீனாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆசியாவுக்கும், ஐரோப்பாவிற்கும் தள்ளுபடி விலையை அறிவித்திருப்பதன் மூலம் சவுதி, ரசியாவின் சந்தையைக் குறி வைத்திருக்கிறது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. சரி சந்தையைப் பிடிப்பதுதான் நோக்கம் என்றால், தள்ளுபடி அறிவித்ததோடு நிறுத்திக் கொள்ளலாமே! ஏன் மலிவான எண்ணையைக் கொண்டு சந்தையை நிரப்புவேன் என்று மிரட்ட வேண்டும்? இதற்குக் காரணம் எண்ணெய் வருமானத்தை பெரிதும் சார்ந்திருக்கும் ரசியப் பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்து மண்டியிடச் செய்யவே என ஊடகங்கள் வாதிடுகின்றன.

oil price crisisஇதற்கும் முகாந்திரம் இல்லாமல் இல்லை. இதுபோன்று பலமுறை சவுதி அவ்வாறு செய்திருக்கிறது (படம் காண்க). 1973ல் அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேலை ஆதரித்ததற்காகவும், 1986 மற்றும் 1990 ஆகிய வருடங்களில் ரசியாவின் எண்ணெய்ச் சந்தையை பிடிக்கவும், சவுதியின் எண்ணெய் ஆதிக்கத்திற்கு ரசியா தடையாக வரக்கூடாது என்பதற்காகவும் இதேபோன்று எண்ணெய் விலையை விழச் செய்தது. அதன்பிறகு 1998ல் இதே போன்று விலைவீழ்ச்சியை சவுதி ஏற்படுத்திய போது, ரசியா சந்தையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் default செய்யும் நிலையை அடைந்தது. இறுதியாக 2014ல் இப்படி தாக்கியபோது ரசியாவின் பொருளாதாரம் தரைமட்டமானது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை அறிவித்தன. அதாவது ரசியா இரட்டைத் தாக்குதலை சந்தித்தது. அதனால், அதன் நாணய மதிப்பு பாதிக்கும் கீழே சென்றது, பொருளாதார வளர்ச்சி பூஜ்யமாக ஆனது.

முதல் 1973 தாக்குதல் வேண்டுமானால் சவுதியின் சொந்த முடிவு என்று சொல்லலாம். ஆனால் மற்றைய தாக்குதல்களின் வருடத்தைக் கவனிக்கும் போது அது சவுதியை இயக்கும் அமெரிக்காவின் தாக்குதல் என்றுதான் சொல்ல வேண்டும். 1986 - சோவியத் ரசியா ஆப்கன் போரில் ஈடுபட்டிருந்த சமயம். 1990 - சோவியத் ரசியா உடைந்து உலகமே தலைகீழ் மாற்றம் கண்ட வருடம். 1998 -  பொருளாதார சீர்குலைவுகள், அரசியல் குழப்பங்களை ரசியா கண்டு 1999ல் புதின் ஆட்சிக்கு வந்தார். அதேசமயம் இவை எல்லாம் அதே காலகட்டங்களில் நடந்த பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டது என்றும் வாதிடலாம். ஆனால் 2014 ல் எந்தப் பொருளாதார நெருக்கடியும் இல்லையே. எனில், அது ரசியாவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்தானே.

சவுதி - ரசிய பகை காரணமா?

அப்படி என்றால் இந்தத் தாக்குதலும் அந்த வகைத் தாக்குதலா? என்றால் அப்படியும் கூறி விட முடியாது. 2016 முதல் உலகின் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்ற முறையில் இரு நாடுகளும் பேசி எண்ணெய் விலை விழாமல் இருக்க உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது என முடிவெடுத்து செயல்படுத்தி வந்திருக்கிறார்கள். 2017ல் தற்போதைய சவுதி இளவரசரும், அவரது தந்தை மன்னர் சல்மானும் அரச முறைப் பயணமாக சென்று வந்திருக்கிறார்கள். வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க ஆயுதங்கள் தவிர்த்து, ரசியாவின் ஆயுதங்கள் வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தற்போது கூட ஏற்கனவே இருக்கும்1.7 மில்லியன் பீப்பாய் / நாள் எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொள்வது என்ற முந்தைய ஒப்பந்தத்தை தொடர ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், சவுதி தற்போது கொரானா நுண்ணுயிரி தாக்குதல் காரணமாக உலகின் உற்பத்தியும், நுகர்வும் குறைந்து எண்ணெய் தேவை குறைந்திருக்கிறது. எனவே எண்ணெய் விலை வீழ்ச்சி அடையாமல் இருக்க மேலும் 1.5 மில்லியன்/நாள் அளவு உற்பத்தியைக் குறைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது. நாம் மேலும் மேலும் குறைத்துக் கொண்டிருக்க, அமெரிக்காவின் ஷேல் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். ஆதலால் மேலும் உற்பத்திக் குறைப்புக்கு தாங்கள் தயாராக இல்லை எனத் தெரிவித்ததை தொடர்ந்தே சவுதி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த வாதத்தில் தவறோ, சவுதியின் நோக்கத்திற்கு எதிராகவோ ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படி முறுக்கிக் கொண்டு போய் வீம்புக்கு தாக்குதல் தொடுக்க அவர்கள் என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா?

ரசியாவின் பதிலடியா?

சவுதி இப்படி செய்ததினால் ரசியாவின் பங்குச் சந்தை 10% வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அந்நாட்டின் எண்ணெய் நிறுவனங்களின் விலை 25% வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதால் சவுதியின் நோக்கம் பலித்திருக்கிறது என்று கூற முடியுமா? என்றால் அப்படியும் கூற முடியாது. மிக சமீபத்தில்தான் சவுதி தனது எண்ணெய் நிறுவனமான ஆரம்கோவின் பங்குகளை பல ஆண்டு இழுபறிக்குப் பின்னர் சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த உற்பத்திக் குறைப்பு நடவடிக்கை கூட அதன் மதிப்பை உயர்த்தவே எனக் கூறப்பட்டது. தற்போது அதன் மதிப்பும் 10% குறைந்திருக்கிறது. அதோடு, சவுதி தொடர்ந்து சந்தையை இழந்து வருவதால், அதன் வருவாய் குறைந்து கடந்த சில வருடங்களாக பற்றாக்குறை பட்ஜெட்டில் தான் அந்நாடு ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய எப்போதும் இல்லாத வகையில் சந்தையில் கடன் வாங்கி வருகிறது. மக்களின் மீதும் வரிவிதிக்க ஆரம்பித்திருக்கிறது. கூடவே பொருளாதராத்தைப் பெருக்க வீட்டில் இருக்கும் பெண்களை வெளியில் கொண்டு வந்து, உற்பத்தியில் ஈடுபடுத்தும் விதமாக, அவர்களின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தி சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சவுதி, கடனில்லாத பட்ஜெட் வேண்டுமெனில், எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு85 டாலர்கள் என்ற அளவில் விற்க வேண்டும் என்கிறார்கள். இனியும் எண்ணெய் விற்பனையை மட்டும் கொண்டு காலம் தள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்டு தான் தனது நாட்டின் மதிப்புமிக்க மகுடமாகத் திகழும் ஆரம்கோவின் பங்குளை சந்தையில் விற்று, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மாற்று பொருளாதாரத்தைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அப்படி என்றால், ரசியாவிடம் முறுக்கிக் கொண்டு போய், எண்ணெய் விலையை விழச் செய்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா? இல்லையில்லை இது ரசியாவின் மீதான சவுதியின் தாக்குதல் அல்ல, சவுதியின் இந்த மோசமான பொருளாதார சூழலை கணக்கில் கொண்டு, இக்கட்டான சூழலில் உற்பத்திக் குறைப்புக்கு ‘முடியாது’ என்று சொல்லி ரசியர்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள் என்கிறார்கள். அப்படி என்றால் ரசியாவின் நிதிநிலைமை நன்றாக இருக்கிறதா?

2014 ல் ரசியாவின் மீது நடத்தப்பட்ட நிதிமூலதனத் தாக்குதல்

2014 எண்ணெய் விலை வீழ்ச்சி, அதனை தொடர்ந்த பொருளாதாரத் தடை என்ற இரட்டைத் தாக்குதலினால் ரசியா கடும்பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதிலிருந்து மீண்டு வர அப்போது சீனா கரம் நீட்டியது. ஏனெனில், 2007க்குப் பிறகான சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்த, சீனாவிற்கு எண்ணெய் செல்லும் கடல்வழிப் பாதைகளை இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் துணையுடன் அமெரிக்கா சுற்றி வளைத்தது. இதற்குப் பதிலடியாக சீனா, தனது அண்டை நாடான ரசியாவுடன் பேசி தரைவழியாக குழாய் அமைத்து 270 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்பந்ததை ஏற்படுத்தி இருந்தது. ரசியாவின் வீழ்ச்சி, சீனா எரிபொருளுக்கு அமெரிக்காவை முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி அதன் காலடியில் சரணடையச் செய்யும். அதனால், சீனா ரசியாவின் பக்கம் நின்றது.

தனது எண்ணெய் சார்ந்த பொருளாதார பலவீனத்தை உணர்ந்த ரசியா, அது முதல் எரிபொருள் தவிர்த்த மற்றைய பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க ஆரம்பித்தது. அதோடு, ரசிய நாணயம் சரியக் காரணம், எண்ணெய் விலை வீழ்ச்சி மட்டுமல்ல, அமெரிக்க நிதி நிறுவனங்களின் தாக்குதலும் காரணம். அதுவரை டாலரிலேயே அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் சந்தையில் கடன் திரட்டி வந்தன. ரசியாவை மட்டுமல்ல எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை வழிக்கு கொண்டு வர, அமெரிக்க நிதி நிறுவனங்கள் இதுபோன்று தாக்குதலை நடத்தும். அதிலும் பணியவில்லை என்றால் அந்நாட்டுக்குச் செல்லும் டாலர் வர்த்தகங்கள் நடைபெற அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும். டாலரில் கடனை செலுத்த முடியாமல் நிறுவனங்கள் திண்டாடும். அதிலும் பணியவில்லை என்றால், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பணப்பரிமாற்று அமைப்பான swift-ல் இருந்தே விலக்குவார்கள். இப்படிதான் இரான் 2012ல் swift-ல் இருந்தே நீக்கி, உலகின் எவருடனும் வர்த்தகம் செய்யாமல் முடக்கியது. இது ராணுவ ரீதியான தாக்குதலைத் தொடுத்து ஒரு நாட்டை மண்டியிடச் செய்யாமல், நாடுகளை பொருளாதார ரீதியாக தாக்கிப் பணிய வைக்கும் நிதிமூலதனத் தாக்குதல் (financial warfare).

2014 தாக்குதலில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட ரசியா

இதனை முடிவுக்குக் கொண்டுவர, தனது எண்ணெய் எரிவாயு விற்பனையை டாலர் தவிர்த்த, சொந்த நாணயமான ருபிள் (ruble), சீனாவின் யுயன் (yuan), ஐரோப்பாவின் யுரோ (euro) ஆகியவற்றில் ரசியா மேற்கொள்ள ஆரம்பித்தது. நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பரிமாற்றத்திற்கு தனது சொந்த பணப்பரிமாற்று அமைப்பை நிறுவியது. அதோடு தன்னிடமுள்ள அமெரிக்க கடன் பத்திரங்களை எல்லாம் விற்றுவிட்டு, தனது சேமிப்பை (reserve) எல்லாம் தங்கத்திலும், மற்ற நாணயங்களிலும் வைத்துக் கொண்டது. கூடவே, வரும் காலத்தில் எண்ணெய் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ளும் வகையில் soverign wealth fund-ஐ உருவாக்கி, தற்போது 150 பில்லியன் டாலர் அளவுக்கு கையில் வைத்திருக்கிறது. அதோடு மிகக் குறைந்த அளவே சந்தையில் கடன் வாங்கி இருக்கிறது. மேலும் தற்போது ரசியா, பீப்பாய் ஒன்றுக்கு 45 டாலர்கள் விற்றால் வரும் வருமானத்தைக் கணக்கில் கொண்டே தனது பட்ஜெட்டை நடத்தி வருகிறது. அப்படி என்றால் இந்த விலை வீழ்ச்சி அதன் பொருளாதாரத்தைக் குறைந்த அளவே பாதிக்கும். இப்படி எல்லா வகையிலும் தயார் நிலையில் இருப்பதாலேயே ரசியா முடியாது என்று சொன்னதா? என்றால் அப்படியும் சொல்ல முடியாது.

இந்த எண்ணெய்க்கான சந்தைப் போரில், எல்லா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பங்குச் சந்தைகளும், எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்தாலும், இதில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது அமெரிக்க பங்குச் சந்தையே. அது கிட்டத்தட்ட 20% வீழ்ச்சியைச் சந்தித்து, 11 ஆண்டுகளாக காளையாக திமிறி ஓடிக் கொண்டிருந்த அதன் பங்குச் சந்தை (bull market), இன்று அடிபட்ட கரடியாக கடும் உரசல் சத்தத்துடன் சரிந்து விழுந்து (bear market) கொண்டிருக்கிறது. சவுதியின் சந்தைப் போர் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே அமெரிக்க பங்குச் சந்தை 10% (2000 புள்ளிகள்), கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் டாலர் மதிப்பை இழந்தது.

சவுதி மற்றும் ரசிய நாடுகளும் தலா 10% இழப்புகளை சந்தித்தன என்றாலும், உலகின் மிகப் பெரும் பொருளாதாரமான அமெரிக்காவின் இழப்பு மதிப்பில் மிக அதிகம். போர் என்றால் இழப்பு இருவருக்குமானது. அதிக இழப்பை சந்தித்து, திருப்பித் தாக்க இயலாத நாடு தோல்வியைத் தழுவியதாக அர்த்தம். எனில் இது சவுதியும், ரசியாவும் இணைந்து அமெரிக்காவின் மீது நடத்திய தாக்குதலா? என்ற கேள்வி எழுகிறது. இதுவரையிலான சவுதி - ரசிய உற்பத்திக் குறைப்பு உடன்பாடு, இருவரும் ஒத்த குரலில் சந்தையைக் கைப்பற்ற மேலும் மேலும் உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக அறிவிப்பது, இது கணக்கிடப்பட்ட எதிர்பார்த்த ஒன்றுதான் என ரசிய அமைச்சரின் பேட்டி ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது அதற்கும் முகாந்திரம் இருக்கிறது. ஆனால் சவுதி அமெரிக்காவின் உற்ற தோழன் ஆயிற்றே! அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு பெரும் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டார்கள்? எனில் சவுதி-அமெரிக்கா இடையே ஏதும் உரசலா?

(தொடரும்)

- சூறாவளி