1. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றால் என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியாவுக்குள் அல்லது இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களுடன் கூடிய பதிவேடாகும். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மாநிலக் குடிமக்கள் பதிவேடு, மாவட்டக் குடிமக்கள் பதிவேடு, துணை-மாவட்ட குடிமக்கள் பதிவேடு, மற்றும் வட்டாரக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை அடங்கும்.1

2. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) என்றால் என்ன?

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது இந்தியாவில் வசிக்கும் அனைவரின் (குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோர்) பெயர்களும் விவரங்களும் அடங்கிய பதிவேடாகும்.2

3. தேசிய குடிமக்கள் பதிவேடும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டவையா?

ஆம். முதலில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்படுகிறது, பின்னர் அதில் உள்ள விவரங்களின் உண்மைத் தன்மை சோதித்தறியப்பட்ட பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது.

stop caa4. மேலும் உதவக்கூடிய தகவல்

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பின்வரும் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்: (i) பெயர், (ii) தந்தையின் பெயர், (iii) தாயாரின் பெயர், (iv) பாலினம், (v) பிறந்த தேதி, (vi) பிறந்த இடம், (vii) முகவரி (நிரந்தர முகவரியும் தற்போதைய முகவரியும்), (viii) திருமணம் குறித்த தகவல், (ix) உடலில் கண்ணுக்குத் தெரியக் கூடிய அடையாளம், (x) தேசியப் பதிவேட்டில் பதிவு செய்து கொண்ட தேதி, (xi) குடிமக்களின் பதிவு எண், (xii) தேசிய அடையாள நிரூபணத்தின் எண். (இது 2003 இல் வகுக்கப்பட்ட விதியாகும். தேசிய குடிமக்கள் பதிவேடு இப்போது அந்த நபரின் உயிரி அளவியல் (biometric) உள்ளடங்கியிருக்கும்)3 மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மேற்கூறிய தகவல்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும்.4

குடும்பத் தலைவர் தனது சொந்த மற்றும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டு ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.5

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் அளிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து ஒரு நபரின் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஒரு நபர் தொடர்பான விவரங்கள் பொருந்திப் போகவில்லை என்றால் அந்த நபர் ‘சந்தேகத்துக்குரிய’ குடிமகனாக அறிவிக்கப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்.6

5. தேசிய குடிமக்கள் பதிவேடும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் எப்போது நடைமுறைக்கு வந்தது?

2003 இல், அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கம் 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த மாற்றம் அரசியல் சட்டம் பிரிவு 14 மூலமாகக் கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரிவு ஓர் அனைத்திந்திய குடிமக்கள் பதிவேடு குறித்து குறிப்பிட்டது. இந்தப் பிரிவின் அடிப்படையில், குடியுரிமை (குடிமக்கள் பதிவும் தேசிய அடையாள அட்டைப் பிரச்சனைகளும்) விதிகள் 2003, வகுக்கப்பட்டன. அவற்றில் தே.கு.பதிவேடு மற்றும் தே.ம.பதிவேடு பற்றிய விளக்கமான விவரிப்பு அடங்கியிருந்தது.

(இந்தச் சூழமைவில், ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமாகும். ஆனால் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே அரசாங்கம் ஒரு சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்கலாம், அத்தகைய விதிகள் ஏறத்தாழ பாராளுமன்றத்தில் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை.)

6. குடியுரிமை (திருத்தச்) சட்டம் (CAA) குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு (CAB) என்றால் என்ன?

இரண்டும் ஒரே விடயம்தான். ஒரு சட்டம் வரைவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் முன் வைக்கும்போது அது ஒரு சட்ட முன்வரைவு (BILL) ஆகிறது, அதுவே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றதும் சட்டமாகி விடுகிறது. குடியுரிமைச் சட்ட முன்வரைவு 2019 இல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகியது. இந்தச் சட்ட முன்வரைவு 2016 இல் முன்வைக்கப்பட்ட போது, அது பாராளுமன்றத்தின் மேலவையால் நிறைவேற்றப்படவில்லை, அது ஆய்வுக்காக பாராளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு (JPC) அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழு 2019 ஜனவரியில் ஓர் அறிக்கையை முன்வைத்தது. அதே சட்ட முன்வரைவு மீன்டும் 2019-இல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆகவே சட்ட முன்வரைவு சட்டமாகியது. இம்முறை இது எந்தக் குழுவுக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை.

7. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ன சொல்கிறது?

அது, 31.12.2014 அன்று அல்லது அதற்கு முன்பாக, மதத் துன்புறுத்தல் அல்லது மதத் துன்புறுத்தல் அச்சுறுத்தல் காரணமாக வங்க தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிலிருந்து வந்துள்ள இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்தவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.7 அவர்கள் இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தங்கியிருந்தாலும், அவர்கள் நமது அரசியல் சட்டத்தின் மூன்றாவது அட்டவணைப்படி தகுதி பெற்றிருந்தாலும், அவர்கள் “குடியுரிமை அளித்தல்” கோட்பாட்டின்படி இந்தியக் குடிமக்களாக அறிவிக்கப்படுவார்கள்.8 (இந்தியாவில் பின்வரும் வழிகளில் மக்கள் குடியுரிமை பெறலாம்: பிறப்பினால், வாரிசுரிமையால், குடியுரிமை அளித்தல் மூலம் அல்லது பதிவு செய்து கொள்வதன் மூலம்)

8. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்துத் தாங்கள் இன்னும் எதுவும் சிந்திக்கவில்லை என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இப்போது நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அரசாங்கம் சொல்லிக் கொன்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

முதலாவது 8 (I) கேள்விக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது, அரசாங்கம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது. நான்காவது கேள்விக்கு நாம் சொல்லி இருக்கிறோம், அதாவது, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்காக மத்திய அரசாங்கம் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதைக் குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) விதிகள் 2003 பிரிவு 3 (4) தெரிவிக்கிறது. பின்னர் மீண்டும் சிறப்பு அரசிதழ் அறிவிக்கை மூலமாக, ஏப்ரல் 2020-க்கும் செப்டம்பர் 2020-க்கும் இடையில் (அசாம் தவிர) நாடு முழுமைக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்படும் 2019 ஜூலை 31 அன்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட, 2020 ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக் கையேடு அதையே மீண்டும் திரும்பச் சொல்கிறது.9 சட்டத்தின்படி, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான முதலாவது நடவடிக்கையாகும். இதன் பொருள் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தொடங்கியதுமே தேசிய குடிமக்கள் பதிவேடும் தொடங்கி விடுகிறது. அதற்குச் சிறந்த நிரூபணம், “தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுமைக்கும் வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உள்துறை அமைச்சரே பாராளுமன்ற அவையில் கூறியுள்ளார்.10

இரண்டாவது 8 (II) கேள்விக்கான பதிலும் அரசாங்கம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதுதான். முன்னதாக மத்திய அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் அனைவரும் அவர்களுடைய வாக்குமூலங்களில் இரண்டையும் இணைத்திருந்தனர். யார் குடியுரிமைச் சட்டத்தைத் தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இணையத்தில் தேடுங்கள். அமித்சா அதைச் சொல்லியிருக்கிறார் - (http://scroll.in/article/947436/who-is-linking-citizenship-act-to-nrc-here-are-five-times-amit-shah-did-so) மேலும் “கவலைப்படாதீர்கள். உங்கள் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விட்டுப் போயிருந்தால், அதை குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாகச் சேர்த்துக் கொள்வோம்” என்று பா.ஜ.க. தலைவர்கள் மேற்கு வங்காளத்தில் இந்துக்களிடம் வீடு வீடாகச் சென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

9. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஒரு பெயர் ஏன் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது?

இதற்கு ஓரளவு விளக்கம் தேவைப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது நாம் ஏற்கெனவே கூறியபடி, குடிமக்கள் தொடர்பான பெயர்கள் மற்றும் பிற தகவல்களின் பதிவேடாகும். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு முதலில் தயாரிக்கப்படும் என்று 2003 விதிகள் தெர்விக்கின்றன. தேவைப்படும் தரவுகள் அனைத்தும் (மேலே 4 வது கேள்விக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டது போல) அரசாங்கம் கோரும் வேறு எந்தத் தகவலுடனும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் போக்கில் அந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பிறகே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள் பதிவு செய்யப்படும்.

மேலே கேள்வி 4க்கு அளித்த பதிலில் குறிப்பிட்ட 12 விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு இதற்கு முன்பு ஒருபோதும் தயாரிக்கப்பட்டதில்லை, ஆகவே இந்தப் பன்னிரெண்டு விவரங்களில் கடைசி மூன்று யாரிடமும் இருக்காது. இவையே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குடியுரிமைக்கான முதன்மையான நிரூபணமாகும், எஞ்சிய ஒன்பதில் ஏறத்தாழ அனைத்துமே ஆதார் அட்டையில் இருக்கும் (அவற்றில் சில வாக்காளர் அடையாள அட்டையிலும் இருக்கும்). ஆனால் ஆதார் அட்டையோ வாக்காளர் அட்டையோ குடியுரிமைக்கான நிரூபணம் அல்ல என்று அரசாங்கம் அவ்வப்போது சொல்லி வருகிறது.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆதார் அட்டை மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டை மூலமாகவும் குடியுரிமையைப் பதிவு செய்து கொள்ளும் என்று பல தலைவர்கள் சொல்லிக் கொண்டுள்ளனர். அப்படியானால் ஒருவரை எப்படி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்காமல் இருக்க முடியும்? இது முற்றிலும் ஒரு தவறான கருத்தாகும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஒருவர் தேசம் இந்தியர் என்று பதிவு செய்தாரானால், அது மட்டுமே அவரை இந்தியராக ஏற்றுக் கொள்ளாது, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஒருவர் தான் தெரிவிக்கும் அந்தத் தேசத்தையும் கூறிக் கொள்ளலாம், ஆனால் அது உங்களை இந்தியக் குடிமகன் என்று எடுத்துக் கொள்ளாது. என்பதை தேசிய மக்கள் தொகைப் பதிவுக் கையேடு 2020 தெளிவாகத் தெரிவிக்கிறது.11

வேறு சொற்களில் சொல்வதானால், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இருந்தாலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஒருவர் தனது தேசத்தைத் தனியாக நிரூபிக்க வேண்டும். குடியுரிமையை நிரூபிப்பதற்கு என்ன ஆதாரம் தேவைப்படும் என்பதைத் தீர்மானிப்பதற்கு தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்படுகிறது.

10. ஒருவர் இந்தியக் குடிமகன் என்பதை எப்படி நிரூபிப்பது?

இது மிகவும் சிக்கலானது. இந்தியக் குடிமக்கள் யார் என்று நமது அரசியல் சட்டத்தின் பிரிவு 5 இலிருந்து 8 வரை தெரிவிக்கிறது. இவற்றில் 5 உம் 6 உம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

• 5அ: இந்தியாவின் ஒரு நிரந்தரமாகக் குடியிருப்பவர் இங்கு பிறந்திருந்தால் அந்த நபர் இந்தியக் குடிமகனாக இருப்பார்.

• 5ஆ: இந்தியாவின் நிரந்தரமாக வசிக்கும் ஒருவரின் பெற்றோரில் ஒருவர் இங்கு பிறந்திருந்தால் அவர் இந்தியக் குடிமகனாக இருப்பார்.

• 5இ: அரசியல் சட்டம் ஏற்பளிக்கப்பட்டதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் வசித்து வந்தவர்கள் இந்தியக் குடிமக்களாக ஆகலாம்.

• 6: ஒரு நபர் பாகிஸ்தானுக்குள் (தற்போது பாகிஸ்தானும் வங்க தேசமும்) சேர்க்கப்பட்ட பகுதிகளுக்குள் வசித்து 1948 ஜூலை 19க்குள் இந்தியாவுக்குள் வந்திருந்தால் மற்றும் அந்த நபரின் பெற்றோர் அல்லது பாட்டன்மார் பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்திருந்தால் அந்த நபர் இந்தியக் குடிமகன் ஆவார்.

• 6இ: ஒரு நபர் 1948 ஜூலை 19க்குப் பிறகு இந்தியாவுக்குள் வந்து, இந்திய அரசாங்கத்திடம் குடியுரிமைக்கு மனு செய்து அரசியல் சட்டம் ஏற்பளிக்கப்படுவதற்கு முன்னதாக குடியுரிமை அளிக்கப்பட்டிருந்தால், அனைத்து விதிகளையும் பின்பற்றி அந்த நபர் ஒரு குடிமகனாகக் கருதப்படுவார். (அரசியல் சட்டம் ஏற்பளிக்கப்பட்ட பிறகு நாட்டிற்குள் நுழைந்தவர்கள் அரசியல் சட்டத்தின்படி குடியுரிமை அளிக்கப்படுவார்கள்.)

• நமது அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது, மேலும் குடியுரிமைச் சட்டம் 1955 இல் நிறைவேற்றப்பட்டது. அதனால் அரசியல் சட்டப்படியும் 1955 குடியுரிமைச் சட்டப்படியும் 1950 ஜனவரி 26 க்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பர்.

• ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1986 இல் இந்தச் சட்டத்தைத் திருத்தியது. இந்தச் சட்டத்தின் மூலம் ஒரு நபரின் பெற்றோரில் ஒருவர் 1957 ஜூலை 1க்குப் பிறகு இந்தியாவில் பிறந்திருந்தால் அந்த நபர் ஒரு குடிமகனாகக் கருதப்பட வேண்டும்.

• 2003 இல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தால் அந்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. பெற்றோரில் ஒருவர் ஒரு குடிமகனாக இருப்பதோடு மட்டுமின்றி இன்னொருவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது.

• இந்த மாற்றங்கள் அனைத்தும் 2003 இல் திருத்தப்பட்ட குடிமக்கள் சட்டத்தின் பிரிவு 3 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 1950 ஜனவரி 26 க்கும் 1987 ஜூலை 1 க்கும் இடையில் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியக் குடிமக்கள் ஆவர். 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 3 க்கும் இடையில் இந்தியாவில் பிறந்தவர்கள், அவர்களுடைய பெற்றோரில் ஒருவர் இந்த நாட்டின் குடிமகனாக இருந்தால் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் ஆவர். 1950 இலிருந்து டிசமபர் 3 இலிருந்து இன்றுவரை, பெற்றோரில் ஒருவர் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும் என்றால், இன்னொரு பெற்றோர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவராக இருக்கக் கூடாது.12

11. இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனையாகத் தெரிகிறதே?

உண்மைதான். ஏனென்றால் இதற்கு முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை வரைவு செய்வதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை, மக்களிடம் அதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லை. இப்போது 1987 க்கும் 2003 க்கும் இடையில் ஒருவர் பிறந்திருந்தால் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும், ஆனால் அதுவே அந்த நபர் இந்தியாவில் பிறந்தவராக நிரூபிக்க அது போதுமானதல்ல; அதற்கும் கூடுதலாக, அந்த நபரின் பெற்றோரில் ஒருவர் தகுதி வாய்ந்த இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், இந்தியக் குடிமகனாக அல்லாத இன்னொரு பெற்றோர் ஒரு சட்டவிரோதக் குடியேறி அல்ல என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும். அதாவது ஒருவர் பெற்றோரின் குடியுரிமையை நிரூபிக்கக் கூடிய ஒரு செயல்முறையின் மூலமாக ஒருவரின் குடியுரிமை அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு சராசரி நபருக்கு இந்தியாவில் ஒரு நிரந்தர வசிப்புக்கான விசாவைப் பெறுவது நடைமுறையில் சாத்தியமே இல்லை. மிகப் பெரிய பணத்தகுதி வாய்ந்த (18 மாதங்களில் 10 கோடி ரூபாய் அல்லது 36 மாதங்களில் 25 கோடி ரூபாய் முதலீடு செய்யக் கூடியவர்கள்) அயல்நாட்டவர் மட்டுமே இந்த வசதியை எளிதாகப் பெற முடியும்).

12. குடியுரிமையை நிரூபிப்பதற்கு என்ன ஆவணங்களை நான் காண்பிக்க வேண்டும்?

என்னென்ன ஆவணங்கள் தேவை என்று இந்திய அரசாங்கம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த நடவடிக்கையை அசாமில் 1200 கோடி ரூபாய் செலவழித்து நிகழ்த்தியுள்ளது. அசாமுக்கான ஒரு மாதிரித் தொகுப்பை இந்திய அரசாங்கம் தயாரித்துள்ளது. இந்தத் தொகுப்புக்கும் அனைத்திந்திய மாதிரித் தொகுப்புக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அசாம் மாதிரியிலிருந்து ஒருவர் ஒரு கருத்துக்கு வர முடியும்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்வதற்காக இரண்டு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அசாம் மாதிரியில் சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு தனித்தனிப் பட்டியல்கள் வரைவு செய்யபட்டுள்ளன.

• முதலாவது ஆவணம் பட்டியல் அ வில் உள்ள 14 ஆவணங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அசாம் நேர்வில் இந்த ஆவணங்கள் 1971 மார்ச் 24 க்கு முன்பாகத் தேதியிட்டதாக இருக்க வேண்டும். பிரதமர் ராஜிவ் காந்தி 1985 இல் அசாம் ஒப்பபந்தத்தில் கையெழுத்திட்டார், அந்த ஒப்பந்தம், அந்த மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, என்று கூறி, 1971 மார்ச் 24 க்குப் பிறகு குடியேறியவர்களைக் குடியுரிமையிலிருந்து விலக்கி வைத்தது. ஒருவர் இந்த 14 ஆவணங்களில் ஒன்றை அவரது சொந்தப் பெயரில் அல்லது அவரது முன்னோர்கள் பெயரில் காண்பிக்க வேண்டும்.

பட்டியல் அ:
1. 1951 குடியுரிமைப் பதிவு
2. 1971 க்கு முந்தைய வாக்காளர் பட்டியல்
3. நில உரிமை அல்லது குத்தகைச் சான்றிதழ்
4. குடியுரிமைச் சான்றிதழ்
5. நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ்
6. ஓர் அகதியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட சான்றிதழ்
7. கடவுச் சீட்டு
8. ஆயுள்காப்பீட்டுச் சான்றிதழ்
9. அரசாங்கம் அளித்த எந்த ஓர் உரிமம் அல்லது சான்றிதழ்
10. அரசாங்க ஊழியர் சான்றிதழ்
11. வங்கி அல்லது அஞ்சல் அலுவலகக் கணக்கு
12. பிறப்புச் சான்றிதழ்
13. கல்வி வாரிய அல்லது பல்கலைக்கழகச் சான்றிதழ்
14. நீதிமன்றச் சான்றிதழ்

இந்த 14 ஆவணங்கள் அல்லாது, இரண்டு பிற ஆவணங்களும் அனுமதிக்கப்படலாம். (அ) பெண்கள் திருமணத்திற்குப் பின்னிட்டு, ஊராட்சி மன்ற அல்லது வட்டார அதிகாரியிடமிருந்து பெற்ற முகவரி மாற்றச் சான்றிதழ்; (ஆ)1971 மார்ச் 24 க்கு முன்பு தேதியிட்ட குடும்ப அட்டை. ஆனால் பட்டியல் 'அ' வில் குறைந்தது ஓர் ஆவணத்தை அளித்த நபருக்கு மட்டுமே இந்த இரண்டு ஆவணங்களும் அனுமதிக்கப்படும்.

பட்டியல் ஆ:

ஒருவருடைய பெயர் பட்டியல் அ வில் சரிபார்க்கப்படவில்லை என்றால், ஆனால் ஒருவரின் முந்தைய தலைமுறையைச் சார்ந்தவரின் பட்டியல் அ ஆவணத்தைச் சரிபார்த்திருந்தால், பின்னர் அந்த நபர் பட்டியல் ஆ வில் உள்ள ஆவணங்கள் மூலம் அவருக்குள்ள உறவை நிரூபிக்க வேண்டும்.

1. பிறப்புச் சான்றிதழ்
2. பிறப்பு ஆவணம்
3. கல்வி வாரிய அல்லது பல்கலைக்கழகச் சான்றிதழ்
4. வங்கி, ஆயுள்காப்பீடு அல்லது அஞ்சலக சேமிப்பு சான்று
5. ஊராட்சி மன்ற அல்லது வட்டார அலுவலர் சான்றிதழ் (திருமணமான பெண்களின் நேர்வில்)
6. வாக்காளர் அடையாள அட்டை
7. குடும்ப அட்டை
8. பிற சட்டபூர்வமாக ஏற்கத்தக்க ஆவணங்கள்13

1951 இல் விளக்கமான தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமில் மட்டும் பயன்படுத்தப்பட்டது, அதனால் பட்டியல் அ வில் ஆவணம் 1 குறித்த கேள்வி எழவில்லை. இனம் 6 உம் அதில் இல்லை. ஏனென்றால் மேற்கு வங்காளத்தில் சிபிஐஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டும் தங்கள் வாக்கு வங்கிகளை அதிகரித்துக் கொள்வதற்காக வங்க தேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கி விட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவினர் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். ஒருவர் தமது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை என்றால், பின்னர் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை போலியாகப் பெறப்பட்டதாக கருதப்படும்.

ஒருவர் தமது பாட்டன் அல்லது பாட்டியின் பெயரை ஒரு வாக்காளர் பட்டியலில் ( ஊடுருவல்காரர்களைத் தவிர்ப்பதற்காக அதுவும் 1971 க்கு முன்னதாக இருக்க வேண்டும்) காண்பிக்க முடியுமானால், பின்னர் அவர் உண்மையாகவே பாட்டன் அல்லது பாட்டி என்பதற்கு ஆதாரமாக பட்டியல் ஆ வில் உள்ள ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

13. இந்திய அரசாங்கம் சில எளிய விதிகளை அறிமுகப்படுத்தினால் என்ன?

அரசாங்கம் இதை எப்படிச் செய்ய முடியும்? இது பின்னர் அனைத்து ஊடுருவல்காரர்களையும் சட்டப்பூர்வமாக்கி விடும். பாகிஸ்தான், வங்க தேசம், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிலிருந்து வராதவர்கள் கூட, குடியுரிமை பெறுவதற்கு பிறப்புச் சான்றினையும் இருப்புச் சான்றினையும் போலியாகத் தயாரிக்கலாம் அல்லவா? பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்று கூறிக் கொள்பவர்கள் இத்தகைய ஒரு விடயத்தைச் செய்ய மாட்டார்கள். அத்தோடு, கடுமையான குடியுரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அரசாங்கம் அந்தச் சட்டத்தை மீறும் விதிகளை வகுக்க முடியாது.

எனவே இதை நீங்கள் எந்த வழியில் பார்த்தாலும், உண்மையான பத்திரம், பெற்றோர் அல்லது பெற்றோரின் பெற்றோரின் நிரந்தரக் குடியிருப்புச் சான்று, அஞ்சலக அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம், அல்லது பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் போன்றவை இல்லாமல் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பட்டியலிடப்படுவது சாத்தியமில்லாமல் போகும்.

14. ஆனால் பெரும்பாலான மக்களிடம் அத்தகைய ஆவணங்கள் இருக்காதே!

உண்மைதான். இனம், மதம் கடந்து பெரும்பாலானவர்கள் மிகப்பெரிய இடர்ப்பாட்டை எதிர்கொள்வார்கள். ஏழைகள்தாம் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடிகள் மற்றும் பெண்கள் மிகப் பெரிய தடைகளை எதிர்கொள்வார்கள். பெரும்பாலான மக்களிடம் அசையாச் சொத்து எதுவும் இல்லை. இத்துடன், மக்களில் 25% கல்வியறிவு பெறாதவர்கள். நாட்டின் இளைஞர்களிடையே 6%க்கும் குறைவானவர்களே கல்லூரிக்குச் செல்கின்றனர். பெரும்பாலான பழங்குடி மக்களிடையே தனிச் சொத்துடமைக் கருத்தாக்கம் இன்னும் கூட புழக்கத்தில் இல்லை. அவர்களுக்கு ஆவணங்கள், பத்திரங்கள் பற்றியும் தெரியாது. அவர்கள் வாழ்கிற இடங்களில் 20-25 ஆண்டுகளுக்கும் மேல் இருப்பதில்லை. அது தகுதியாகாது. பெரும்பாலானவர்களுக்கு சேமிப்புக் கணக்கும் இல்லை.

1987க்கு முன்பு பிறந்தவர்கள் பெற்றோரின் குடியுரிமைக்கான நிரூபணத்தை அளிக்க வேண்டியதில்லை, ஆனால் 1987க்கு முன்பு பிறந்த ஏழை மக்கள் எத்தனை பேரிடம் பிறப்புச் சான்றிதழ் இருக்கப் போகிறது? கிராமப்புறப் பணக்காரர்களிடம் கூட அத்தகைய சான்றிதழ்கள் இருப்பது அரிது.

பெண்கள் தாம் மிகப்பெரிய இடர்ப்பாடுகளைச் சந்திப்பார்கள். பெண்களின் வசிப்பிடம் வழக்கமாக திருமணத்திற்குப் பிறகு மாறுகிறது. அவர்கள் இதை எப்படி நிரூபிப்பார்கள்? வயது முதிர்ந்த பெண்கள் வசிப்பிட மாற்றம் குறித்த சான்றினை எப்படிப் பெறுவார்கள்? அசாமில் இதற்கு ஊராட்சி மன்றச் சான்றிதழ்களைக் கேட்டுள்ளார்கள். முதியவர்களை விட்டு விடுவோம், எத்தனை இளம் மனைவியர் அத்தகைய சான்றிதழ்களை வைத்துள்ளனர்? எண்ணற்ற மக்கள் குடியுரிமை அந்தஸ்து மறுக்கப்படுவதால் கண்ணியம் இழப்பார்கள். அன்றாடக் கூலி வேலைக்குச் செல்பவர்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை பெறுவதற்கு அலைவதன் மூலம் எத்தனை நாட்கள் வேலையை இழக்க வேண்டியிருக்குமோ?

15. ஒருவரின் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பட்டியலிடப்படவில்லை என்றால் நடக்கும்?

ஒருவரின் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறவில்லை என்றால், அதன் பொருள் அவர் இந்தியக் குடிமகன் இல்லை என்பதாகும். ஒருவர் பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். அந்த நபர் தனது வசிப்பிடத்தை இழப்பார், வேலையை இழப்பார், வாக்களிக்கும் உரிமையை இழப்பார், குடும்ப அட்டையை இழப்பார், உண்மையில் அனைத்தையும் இழப்பார். ஒருவரின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும்.

இந்தச் சூழலில், ஒருவர் தனது உரிமைகளை மீட்பதற்கு அயல்நாட்டவர் தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்ய வேண்டியிருக்கும். இந்தத் தீர்ப்பாயங்கள் அரை-நீதிமன்ற அந்தஸ்து பெற்றவையாக இருக்கும். அத்தகைய தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களுக்கு எந்த சட்டரீதியான பயிற்சியும் தேவையில்லை. அசாம் அதிகார வர்க்கத்தில் பல இடங்களில் இந்தச் செயல்பாடு நிகழ்த்தப்பட்டது. விசாரணைகள் வெளிப்படையாக நடப்பதில்லை. பெரும்பாலான வழக்குகளில், முறையான தீர்ப்பு வழங்குவதற்கு இன்றியமையாத, சட்டப்பயிற்சி பெற்ற அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இல்லை. 15 இங்கு அவர்களுடைய வழக்குகளுக்கு நீதி வழங்கப்படும். அவர்களுடைய பெயர்கள் இந்தக் கட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு உத்தரவிடப்படவில்லை என்றால், அவர்களுக்குக் குடியுரிமை கோருவதற்கான கூடுதல் நிரூபண ஆவணங்கள் சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அந்தத் தீர்ப்பாயத்திற்கு அதுவும் திருப்தி அளிக்கவில்லை என்றால், அவர்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேல்முறையீடு செய்யாதவர்களும் தடுப்பு முகாமகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். (அத்தகைய முகாம்கள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடலாம்; நாஜி ஜெர்மனியில் தடுப்பு முகாமகளின் தன்மை எப்படி இருந்தது; எத்தனை பேர் இந்த முகாம்களில் இறந்துள்ளன; இன்னபிற பற்றித் தெரிந்து கொள்ளலாம்.)

16. அசாமில் எத்தனை பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை?

அசாமில் 19 லட்சம் மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவர்கள் இப்போது தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வழக்குகளில் சில செய்தித்தாள்களில் வெளிச்சத்துக்கு வந்தன. இவற்றிலிருந்து, இந்தப் பிரச்சனையின் பயங்கரத் தன்மை குறித்த ஒரு சந்தேகம் நமக்கு எழுகிறது. சரோஜினி ஹஜாங் என்ற தினக்கூலி உழைப்பாளரின் வழக்கு அப்படிப்பட்ட ஒன்றாகும், அது ஆனந்தபஜார் பத்திரிக்காவில் வெளியிடப்பட்டது. ஒரு தடுப்புக் காவல் முகாமில் கட்டிடத் தொழிலாளியாக அவர் தினக்கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவருடைய தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கவில்லை. அதனால் அவர் தனக்கான சிறையைத் தானே கட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. துலால் தாஸ் மற்றும் ஃபாலு பால் ஆகிய இருவரும் தடுப்புக் காவல் முகாமில் இறந்து போன செய்தியும் செய்தித்தாள்களில் வெளிவந்தது. அவர்களுடைய இறப்புக்குப் பிறகு, அவர்களுடைய குடும்பங்கள் அவர்களுடைய உடல்களைப் பெற்றுக் கொள்ள மறுத்தன. இதில் முரண்நகை என்னவென்றால், அவர்கள் இருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றிருந்தன. அவர்கள் ஊடுருவல்காரர்கள் என்றும் அவர்களுடைய உடல்கள் வங்க தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அவர்களுடைய குடும்பங்கள் கூறின.

இந்தச் சூழமைவில் ஓர் ஆர்வமூட்டும் தகவலைக் குறிப்பிடலாம். இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, 1901 மற்றும் 1971 க்கு இடையில் அசாமின் மக்கள் தொகைப் பெருக்க விகிதம் இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தைவிடக் கூடுதலாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் அசாமில் பெரிய அளவில் ஊடுவல் நடந்திருக்க வேண்டும் என்று ஒருவர் ஊகிக்கலாம். ஆனால் அசாம் ஒப்பந்தத்தின் மூலம் 1971 மார்ச் 24 வரை அசாமுக்குள் நுழைந்தவர்கள், அதிகாரிகளின் மனநிறைவுக்கு உட்பட்டு (அதைப் பெறுவதற்கு ஏற்கெனவே சுட்டிக் காட்டியதைப் போல அனைத்துப் பிரச்சனைகளையும் கடந்து), சட்டப்பூர்வ குடிமக்கள் ஆவர், 1971 க்கும் 2011 க்கும் இடையில் அசாமில் மக்கள் தொகைப் பெருக்க விகிதம் அனைத்திந்தியச் சராசரியைவிடக் குறைவாகவே இருந்தது என்பதை அதே ஆதாரம் காட்டுகிறது. இது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தின் சராசரியை விடவும் குறைவாகும். எனவே இந்தக் காலகட்டத்தில் குடியேற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கவில்லை என்பதை ஊகிக்கலாம்.16 அசாமியர் அல்லாதவருக்கு எதிரான இயக்கம் இந்தக் காலகட்டத்தில் தீவிரமாக இருந்திருக்கிறது, அதுவே குடியேற்றத்தைத் தடுத்திருக்கிறது எனலாம்.

அப்படியானால் இந்த 19 லட்சம் மக்கள் யார்? சந்தேகத்துக்கிடமின்றி, ஒப்பந்த்ததின் நிபந்தனைகளின் படி, அவர்கள் அசாமில் சட்டப்பூர்வமாக வசிப்பவர்கள்தாம், ஆனால் 1971க்கு முன்பிருந்து குடியிருந்ததற்கான ஆதாரம் என்று கருதப்படும் ஆவணங்களை அவர்களால் அளிக்க முடியவில்லை.17 இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே தெரிவித்த காரணங்களால், பொருளாதார ரீதியாக விளிம்புநிலையில் உள்ளவர்கள், பெண்கள், மற்றும் பழங்குடிகளாக இருப்பார்கள்.

17. ஆனால் விலக்கி வைக்கப்பட்ட இந்துக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் திரும்பத் திரும்ப அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று?

அப்படிப்பட்ட நேர்வில் மியான்மரிலிருந்து வந்த மக்கள் கூட போலி ஆவணங்கள் மூலம் நிலைப்படுத்தப்படலாம். இது எளிதான விடயம் அல்ல. முதலாவதாக, 2019 குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2016 குடியுரிமைத் திருத்த சட்ட முன்வரைவை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.18 இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதனால், (2016 குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வரைவினை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட) பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் 438 பக்க அறிக்கையில் இடம் பெற்றிருந்த கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் 2019 ஜனவரியில் பராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குப் பொருந்தும் என்று ஒருவர் ஊகித்துக் கொள்ளலாம். இந்தப் பிரச்சனையில் இந்த அறிக்கை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

தாங்கள் மதரீதியான துன்புறுத்தல் அச்சம் காரணமாக பாகிஸ்தான் அல்லது வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் குடியேறியதாக கூறிக் கொண்ட அல்லது கூறிக் கொள்ளப் போகும் மக்களின் கோரிக்கையின் உண்மைத் தன்மையை எப்படி சரிபார்ப்பது என்று அந்தக் குழு கேட்டது.

• பல பத்தாண்டுகளுக்கு முன்பாக, குறிப்பாக பிரிவினைக்குப் பிறகு உடனடியாக, தேவையான ஆவணங்கள் இல்லாதவர்கள் நேர்வில், அவர்களுடைய கோரிக்கைகளை சரிபார்ப்பது கடினாமாகும் என்று அதற்கான பதிலாக புலனாய்வுத் துறை தெரிவித்தது. பழைய மனுதாரர்கள் நேர்வில், அவர்கள் எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்களா என்பது குறித்து மேற்கொண்டு விசாரணைகள் புலனாய்வுத் துறையாலும் உள்ளூர் தானாக்களாலும் நடத்தப்படும் என்று பதிவு செய்யப்பட்டது.19 இவற்றோடு சேர்த்து, பிற அனைவரும் புதிய மனுதரர்களாவர்.

• தங்கள் நாட்டில் மதரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகக் கூறிக்கொண்ட புதிய மனுதாரர்கள் நேர்வில், குடியுரிமை அளிப்பதற்கு முன்னதாக, அவர்களுடைய கோரிக்கைகள் உரிய செயல்முறைகளின் மூலம் முறையான விசாரணை நடத்தப்படும். அத்தகைய கோரிக்கைகளை சரிபார்ப்பதற்காக உள்துறை அமைச்சகம் நிலையான செயல்பாட்டு நடைமுறையை வரைவு செய்து கொண்டிருந்தததாக புலனாய்வுத் துறை இந்த விடயத்தில் கூறியது. அத்தகைய கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஆவணங்கள் கோரப்படும், அந்த நபர் விளக்கமான விசாரணை நடைமுறைப்படி விசாரிக்கப்படுவார். இந்த விசாரணை பிராந்திய அயல்நாட்டவர் பதிவு அலுவலகம் அல்லது அயல்நாட்டவர் பதிவு அலுவலகத்தால் நடத்தப்படும்.

ஒரு மனுதாரரால் தான் 2014 டிசம்பர் 31 க்கு முன்பாக நாட்டிற்குள் நுழைந்திருந்தார் என்பதை, ஒரு நபர் மேலே குறிப்பிட்ட ஆறு மதங்களில் ஒன்றைச் சார்ந்தவர் என்பதை, மதரீதியான துன்புறுத்தலோ மதரீதியாகத் துன்புறுத்தபடும் அச்சுறுத்தலோ காரணமாக மேலே குறிப்பிட்ட நாடுகள் ஒன்றிலிருந்து குடியேறியதை அயல்நாட்டவர் பதிவு அலவலகத்திலோ, பிராந்திய அயல்நாட்டவர் பதிவு அலுவலகத்திலோ பதிவு செய்துள்ளார் என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றால், பின்னர் அந்த வழக்கு அரை-சட்டரீதியான அயல்நாட்டவர் தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைக்கப்படும், அந்தத் தீர்ப்பாயம் அனைத்துக் கோரிக்கைகளையும் அயல்நாட்டவர் (தீர்ப்பாயம்) ஆணை 1968 இன்படி ஆய்வு செய்யும்.20

பின்னர் அந்தக் குழு இந்த வரைவுச் சட்டம் மூலமாக எத்தனை மக்கள் குடியுரிமை அந்தஸ்தைப் பெறுவார்கள் என்று ஆய்வு செய்தது. அதாவது மதரீதியான துன்புறுத்தல் அல்லது மதரீதியாகத் துன்புறுத்தப்படும் அச்சுறுத்தல் காரணமாக குடியுரிமை கோரி இதுவரை எத்தனை பேர் மனு செய்துள்ளார்கள் என்று ஆய்வு செய்தது. இந்தக் காரணங்கள் அடிப்படையில் 31,313 பேர் (25,447 இந்துக்கள், 5807 சீக்கியர்கள், 55 கிறித்தவர்கள், 2 பௌத்தர்கள், 2 பார்சிக்கள்) மனுச் செய்துள்ளதாக புலனாய்வுத் துறை பதிலளித்துள்ளது.21

மதரீதியான துன்புறுத்தல் அல்லது துன்புறுத்தப்படும் அச்சுறுத்தல் காரணமாக மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு, ஆனால் அதைத் தெரிவிக்காமல் அல்லது அந்த அடிப்படையில் குடியுரிமைக்கு மனு செய்யாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று அந்தக் குழு பின்னர் விசாரித்தது. “அவர்கள் மதரீதியான துன்புறுத்தல் காரணமாகத்தான் இந்தியாவுக்குள் வந்தார்கள் என்பதை அவர்கள் வந்து சேர்ந்த நேரத்தில் அறிவித்திருக்காவிட்டால், அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும்” என்று புலனாய்வுத் துறை திட்டவட்டமாக பதிலில் தெரிவித்தது. இப்போது அல்லது எதிர்காலத்தில் அத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டிருந்தால், அந்தக் கோரிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்படும் என்றும் அதன் பிறகுதான் எந்த முடிவும் எடுக்கப்படும் என ஊர் புலனாய்வுத் துறை மேலும் தெரிவித்தது.22

18. அப்படியானால், இதன் பொருள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறுவதற்கு, ஒருவர் 2014 டிசம்பர் 31 க்கு முன்பு இந்தியாவுக்கு வந்ததையும், மேலே குறிப்பிட்ட ஆறு மதங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதையும், மதரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளார்கள் அல்லது அதுபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதையும், மேலே குறிப்பிட்ட நாடுகளில் ஒன்றிலிருந்து குடியேறியிருப்பதையும் நிரூபிக்க வேண்டும், மேலும் புலனாய்வுத் துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு மற்றும் காவல் துறை ஆகியவை இந்தக் கோரிக்கைகளை சரிபார்க்க வேண்டும் என்பதா?

ஆம். அது சரிதான். முன்னதாக மனு செய்திருந்த 31,313 பேரும் கூட, அவர்கள் தங்கியிருந்த காலத்தில் ஏதாவது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரா என்பதைச் சரிபார்ப்பதற்கு இந்த முகாமைகளால் ஆய்வு செய்யப்படும்.23 இதன் பிறகு, அந்தக் குழு இது பற்றி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் கருத்துரைகளைக் கேட்டபோது, நாட்டின் எதிரிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு குடியுரிமையைப் பெற்றுவிடக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்வதுதான் அவர்களுடைய முதன்மையான கவலை என்று அது கூறியது.24

19. அப்படியானால் அதன் பொருள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி குடியுரிமையைப் பெறுவது உண்மையில் சாத்தியமே இல்லை என்பதா?

அது சரிதான். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி குடியுரிமை பெறுவதற்காக, முதலில் ஒருவர் மதரீதியான துன்புறுத்தல் அல்லது துன்புறுத்தப்படும் அச்சம் காரணமாக 31-12.2014 க்கு முன்பாக, பாகிஸ்தான், வங்க தேசம், அல்லது ஆப்கானிஸ்தானம் ஆகியவற்றிலிருந்து இந்தியாவுக்கு வந்ததாவும், தாம் இந்து, சீக்கியர், ஜைனர், பார்சி அல்லது கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் மனு செய்ய வேண்டும். பின்னர் அயல்நாட்டவர் பதிவு அலுவலகம் அல்லது அயல்நாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆவணச் சான்றுகளுடன் தமது கோரிக்கையை நிரூபிக்க வேண்டும். அந்த அலுவலகங்கள் திருப்தி அடையவில்லை என்றால், ஒருவர் தனது கோரிக்கையை அயல்நாட்டவர் தீர்ப்பாயத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் காலகட்டம் முழுவதும் அவர் ‘ரா’ மற்றும் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து வருவார்.

ஒரு மனுதாரர் தனது கோரிக்கையை நிரூபிக்க முடியவில்லை என்றால், அவருக்கு எந்த உரிமையும் இருக்காது. சொத்து, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, அவருடைய கோரிக்கைகள் உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பே அவற்றைத் திரும்பப் பெற முடியும். அதனால் தான் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு கருத்துரைத்தார்: “ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு எதுவும் மாறவில்லை. அவர் அயல்நாட்டவர் தீர்ப்பாயத்துக்குத் தான் வர வேண்டும்; ஒரே வேறுபாடு, இம்முறை வங்க தேசக் குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்.” 25

20. அப்போதும் கூட பா.ஜ.க. தலைவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, மோசடியான முறையில் இந்துக்களின் பெயர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்து விட்டால்?

இதன் பொருள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட முஸ்லிம்கள் பெயர்கள் எந்த வகையிலும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதாகும். இது தேசியவாதிகள் கனவு கண்ட, இந்த தேசத்தின் மிகவும் முக்கியமான அடிப்படையாக விளங்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்டின் அடிப்படைப் பண்புக்கு எதிரானதாகும்.

ஆனால் பா.ஜ.க. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோசடியாக விலக்கி வைக்கப்பட்ட இந்துக்களைச் சேர்த்துக் கொள்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த நேர்வில், மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தமது உளவுத் துறை ஆட்களை துன்புறுத்தப்பட்ட இந்துக்கள் என்ற போர்வையில் அனுப்பி வைக்கும் சாத்தியம் இருக்கிறது. பாராளுமன்றக் கூட்டுக் குழுவிடம் “ரா” தெரிவித்தது போல, “நம் மீது பகைமை கொண்ட முகாமைகளுக்கு, நமது சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தமது சொந்த ஆட்களை நமது சொந்த நாடுக்குள் ஊடுருவச் செய்யக்கூடிய ஒரு சட்டபூர்வ வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது,” இந்தச் சூழலை ‘ரா” ஒப்புக் கொள்ளாமல் போகலாம். (காண்க குறிப்பு 23 மேலும் இணைப்பு 1)

இது இரண்டு விடயங்கள் நடப்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது. முதலாவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு மனு செய்திருப்போர் மீது ‘ரா’ வும் பிற புலனாய்வு முகாமைகளும் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும். அந்த நபர் எங்கே போகிறார், யாரைச் சந்திக்கிறார் என்பது தொடர்ந்து வேவு பார்க்கப்படும். இந்த அடிப்படையில், சந்தேகத்துக்கு இடமற்றவர்கள் பட்டியலை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு அந்த முகாமைகள் அறிக்கையாக அனுப்பும். பின்னர் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் அத்தகைய நபர்களை குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலமாக மோசடியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யும். ஆனால் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் திருப்தியடையவில்லை என்றால் அந்த நபர்களூக்கு உரிமைகள் எதுவும் கிடைக்காது.

இவையனைத்தின் உட்பொருள், மக்களின் மீது கண்காணிப்புப் பொறியமைவு ‘ரா’ போன்ற உளவு அமைப்புக்களால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலமாக மோசடியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு முய்ற்சி செய்வோர் பா.ஜ.க. தலைவர்களுக்கு அடிபணிந்திருக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மோசடியாகப் பயன்படுத்துவது ‘ரா’ கவலை தெரிவித்தது போல உண்மையில் ஊடுருவலுக்கு இடமளிப்பதாக ஆகிவிடும். பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் போல, பா.ஜ.க. தலைவர்களும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிக்கும் உளவுப் பொறியமைவுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு ஜனநாயக நாடுகளுக்கு உரியதல்ல, மாறாக பாசிச சர்வாதிகார நாடுகளுக்கு உரியதாகும்.

21. ஆனால் இது பாசிச சர்வாதிகாரத்தின் வருகைக்கு ஆதரவாக இருக்கிறதே!

ஆம், இது தெளிவாகவே பாசிச சர்வாதிகாரப் போக்காகும் முதலில் முஸ்லிம்கள் இலக்காக ஆக்கப்படுகிறார்கள். பின்னர் இந்துக்கள் விலக்கி வைக்கப்பட்டு உளவு முகாமைகள் மற்றும் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் கீழ் இடையறாத அச்சுறுத்தலில் இருப்பார்கள். கட்சிக்கும் உளவு முகாமைகள் / காவல்துறை மற்றும் தீர்ப்பாயங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த நெருக்கமான பிணைப்பு காரணமாக கட்சித் தலைவர்களைப் பின்பற்றாதவர்களுக்கு அசாமில் பெருந்துன்பம் ஏற்பட்டது. (விவரங்களுக்கு காண்க இணைப்பு 2)

22. அப்படியானால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்துக்களுக்கும் அபாயகரமானதா?

ஆம். தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் சேர்த்து வாசிக்கும்போது அது உண்மையிலேயே அபாயகரமானதுதான். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஒருவர் பின்வருவனவற்றை நிரூபிப்பதற்கு ஆவணச் சான்றுகளை அளிக்க வேண்டும்:

(i) அந்த நபர் மதரீதியான துன்புறுத்தல் காரணமாக அல்லது துன்புறுத்தப்படும் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்.
(ii) அந்த நபர் 31.12.2014 க்கு முன்பாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும்.
(iii) அந்த நபர் பாகிஸ்தான். வங்கதேசம், அல்லது ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்திருக்க வேண்டும்.
(iv) அந்த நபர் இந்து, பௌத்தம், சீக்கியம், ஜைனம், பார்சீ, அல்லது கிறித்தவ சமூகங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
(v) அவருக்குக் குடியுரிமையளித்தல் என்பது 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் மூன்றாவது பட்டியலின் விதிமுறைகளை மீறவில்லை.26
(vi) அந்த நபர் ஐந்தாண்டுகள் இந்தியாவில் வசித்து வருகிறார்.

இவற்றை நிறுவ முடியாதவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலமாகத் தகுதி பெற மாட்டார்கள். இந்த விதிமுறைகள் இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோசடியாக இந்துக்கள் அனைவருக்கும் குடியுரிமை அளிப்போம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறர்கள் என்றால், நாம் ஏற்கெனவே விளக்கியது போல, இப்போது உள்ளது போன்ற ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக பாசிச சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். அதனால், இந்துக்கள் இந்த வாக்குறுதிகளை உத்தரவாதமாக எடுத்துக் கொள்வார்களானால், இந்த சட்ட விரோதப் பாதுகாப்பை அவர்கள் என்ன விலை கொடுத்து பெறப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியில் எந்த உரிமைகளுமின்றி வாழ்வதற்கு ஒப்புக் கொள்வதை விலையாகக் கொடுக்க வேண்டும்.

23. குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019, அரசியல் சாசனத்திற்கு எதிரானதா?

அப்படித்தான் தெரிகிறது. அது அரசியல் சட்டப் பிரிவு 14 ஐ அப்பட்டமாக மீறுகிறது. பிரிவு 14 தெரிவிப்பதாவது: “இந்திய ஆட்சிப்பரப்புக்குள் எந்த ஒரு நபருக்கும் சட்டத்திற்கு முன்பு சமத்துவத்தை அல்லது சட்டங்களின் சமமான பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது” (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது). இது இது குடிமக்களுக்கு மட்டும் என்று குறிப்பிடவில்லை என்பது தெளிவு, இதற்கு அடுத்த பிரிவு 15 “குடிமக்களுக்கு” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. ‘நபர்கள்’ என்ற சொல் இந்தியாவில் வாழும் அயல்நாட்டவரையும் கூடக் குறிக்கும் என்று நீதிமன்றங்கள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஐந்து மதங்களை மட்டுமே குறிப்பிடுகிறது. அது இஸ்லாம் உட்பட வேறு பல மதங்களை விலக்கி வைக்கிறது. இப்போது இந்து அல்லது முஸ்லிம் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இருவரும் சம அளவில் அயல்நாட்டவர்களே. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ், மதத் துன்புறுத்தல் அடிப்படையில் ஒரு இந்து குடியுரிமைக்கு மனு செய்யலாம். முஸ்லிம் மனு செய்ய முடியாது. ஆனால் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14 இன்படி இந்திய அரசாங்கம் மதம், சாதி, இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் அடிப்படையில் இரண்டு அயல்நாட்டவரிடையில் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 அதைச் செய்கிறது.

சட்டத்தில் ‘நியாயமான வகைப்படுத்தல்’ அனுமதிக்கத்தக்கதே என்று பா.ஜ.க. வும் இந்திய அரசாங்கமும் வாதிடுகின்றன. இந்த விளக்கம் 1952 இல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இந்த விளக்கம் கொடுக்கப்படுகிறது. நீதிமன்றம் உண்மையில் கூறியது என்னவென்றால், “இயற்றப்படுகிற சட்டம் ஒவ்வொன்றும் அனைத்துந்தழுவிய வகையில் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பிரிவு 14 வலியுறுத்தவில்லை, மேலும் சட்டமியற்றும் நோக்கத்துக்காக நபர்களை வகைப்படுத்தும் அதிகாரத்தை அரசிடமிருந்து எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் அந்த வகைப்படுத்தல் பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும், இந்தச் சோதனையை நிறைவு செய்வதற்காக (i) அந்த வகைப்படுத்தல் புரிந்து கொள்ளக்கூடிய வேறுபாட்டை, அதாவது பிறரிடமிருந்து ஒரு குழுவாக்கம் செய்யப்படுபவர்களை வேறுபடுத்திக் காட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் (ii) அந்த வேறுபாடு அந்தச் சட்டத்தால் அடையக்கூடிய குறிக்கோளுடன் பகுத்தறிவு சார்ந்த வகையில் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.” (அழுத்தம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) இந்தச் சட்டம் இந்த இரண்டு அடிப்படைகளிலும் தோல்வி அடைகிறது. அது மத அடிப்படையில் குறிப்பிட்ட சில சட்டவிரோதக் குடியேறிகளைத் தெரிவு செய்கிறது. அரசுடனான தொடர்பில் அவர்கள் ஒட்டு மொத்தமாக ‘சட்டவிரோதக் குடியேறி’ களாக இருப்பதுதான் இங்கு குறிப்பிடப்படுவதாகும். அப்படியானால் குடிமக்கள் அல்லாதவர்களை எந்த அடிப்படையில் நீங்கள் வேறுபடுத்திக் காட்டுவீர்கள்? இந்த வேறுபடுத்தலுக்கு எந்தச் சட்ட அடிப்படையும் இல்லை. ஒரு நபர் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவராக இருக்கிறாரா இல்லையா. இந்தச் சட்டப் பிரிவின் படி எந்த அடிப்படையிலும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரிடையே நீங்கள் பாகுபாடு காட்ட முடியாது.

24. இந்திய அரசாங்கமும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிக் கொள்கின்றன. அது உண்மையா?

இல்லை, உறுதியாக உண்மை இல்லை, அது ஓர் அப்பட்டமான பொய். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மத்திய அரசாங்கம் (1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ்) 2003 இல் வகுத்தளித்த விதிகளை அடிப்படையாகக் கொண்டது. அது குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) விதிகள் 2003 என்று அழைக்கப்படுகிறது. இந்த விதிகள் தாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு சட்டரீதியான உருவாக்கத்தை அளித்துள்ளன. 2003 விதிகளை மேலோட்டமாக வாசித்தாலே தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அடிப்படையாக இருப்பதைக் காண முடியும். இது விதி 3 (5) இலிருந்து தெளிவாகிறது, அது “மக்கள் தொகைப் பதிவேட்டிலிருந்து உரிய வகையில் சரிபார்த்த பிறகே இந்தியக் குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் நபர்களின் விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும்.”

25. ஆனால் இந்திய அரசாங்கமும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் தயாரிப்பதற்கான ஒரு செயல்பாடுதான் என்று கூறிக் கொள்கின்றனவே?

இதுவும் ஓர் அப்பட்டமான பொய்யே. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் 1948 இன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு. அது ஒரு நபர் தானாக முன்வந்து அளிக்கும் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டது, அது சரிபார்க்கப்படுவதில்லை.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது 2003 குடியுரிமை விதிகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. இந்த விதிகளின் கீழ் ஒரு நபர் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிப்பதற்கான புள்ளி விவரத் தரவுகளைப் பகிர்ந்து கொள்வது கட்டாயமாகும். ஆகையால் இந்த விதிகள் பலாத்காரமானவையாகும்.

தற்போது அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் பின்னால் உள்ள உள்நோக்கம், ஒருவர் 2015-16 இல் வெளியிடப்பட்ட கேள்விகளுடன் (அவை 2010 இல் கேட்கப்பட்ட அதே கேள்விகளாகும்) இப்போதைய கேள்விகளை ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்தால் தெளிவாகும்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு 2010 க்கான கேள்விகளின் பட்டியல்

1. முழு முகவரியுடன் நபரின் பெயர்
2. தே.ம.பதிவேட்டில் இடம்பெற வேண்டிய பெயர்
3. தலைவருடனான உறவு
4. பாலினம்
5. பிறந்த தேதி
6. திருமண அந்தஸ்து
7. கல்வித் தகுதிகள்
8. தொழில்/நடவடிக்கை
9. தந்தை, தாய், மற்றும் இணையரின் பெயர்
10. பிறந்த இடம்
11. அறிவிக்கப்பட்ட தேசிய இனம்
12. வழக்கமான இருப்பிடத்தின் தற்போதைய முகவரி
13. தற்போதைய இருப்பிடத்தில் தங்கியுள்ள காலம் (முழு ஆண்டுகளில்)
14. நிரந்தர வசிப்பிட முகவரி

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு 2020 க்கான கேள்விகளின் பட்டியல்

பகுதி - அ

1. நபரின் முழுப் பெயர்
2. குடும்பத் தலைவருடனான உறவு
3. பாலினம்
4. திருமண அந்தஸ்து
5. பிறந்த தேதி
6. பிறந்த இடம்
7. தேசிய இனம் (அறிவித்தபடி)
(கேள்வி – 7 (ii) கடவுச் சீட்டு எண்: ஒரு நபர் தான் இந்தியர் என்று
தெரிவிப்பாரானால், அவரிடம் கடவுச்சீட்டு இருக்குமானால் எண்.கேட்கவும்)
8. கல்வித் தகுதிகள்
9. தொழில்/நடவடிக்கை
10. தாய்மொழியின் பெயரை முழுமையாக எழுதவும் (பட்டியலில் உள்ள குறியீட்டு எண்ணை கொடுக்கவும்)

பகுதி - ஆ

11. நிரந்தர வசிப்பிட முகவரி
12. கடைசியாகத் தங்கியிருந்த இடமும் காலமும்
13. தந்தை, தயார், இணையர் பற்றிய விவரங்கள்
14. (i) ஆதார் எண் (ii) கைபேசி எண் (iii) வாக்காளர் அடையாள அட்டை எண்.
(iv) ஓட்டுனர் உரிமம் எண்.

இந்தக் கேள்விகளைக் காணும்போது, முந்தையதில் தந்தை / தாய் / அல்லது இணையர் பெயர் மட்டுமே கேட்கப்பட்டது, இப்போது இந்த நபர்களின் விவரங்களும் கோரப்படுகின்றன. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக் கையேடு (2020 பக்கம் 23) இந்தக் கேள்வியின் கீழ், தந்தை / தாய் மற்றும் இணையர் ஆகியோரின் பிறப்பிடம் மற்றும் பிற விவரங்களும் சேகரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்த விவரங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை வகுப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்பது தெளிவு. ஆனால் இதன் பொருள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் கூறிக் கொள்ளும் தேசிய இனம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். அந்தக் கூற்று மேலே கேள்வி 12 க்கான பதிலில் விளக்கமாக ஆவணச் சான்று மூலமாக சரிபார்க்கப்படும்.

இதுவனைத்திலிருந்தும் தேசிய மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் வகுப்புவாதத் தன்மை கொண்டது. இணைப்பு 5 இல் தே.ம.பதிவேடு 2010 தேசியப் பண்டிகைகளை பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலில் எந்த முஸ்லிம் பண்டிகையும் இடம்பெறவில்லை.

26. அப்படியானால் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுடன் சேர்ந்து அரசின் பண்பில் ஓர் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது! தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள சட்டத்தில் வேறு ஏதாவது அடிப்படை மாற்றங்கள் இருக்கின்றனவா?

ஆம். தற்போது அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்தில் ஒரு சில அடிப்படை மாற்றங்கள் இருக்கின்றன. தொழிலாளர் சட்டங்களில் உள்ள மாற்றங்கள் தாம் இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை. பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் இந்திய அரசாங்கம் 44 தொழிலாளர் சட்டங்களை நீக்கம் செய்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக 4 தொகுப்பாகத் தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை, கூலிச் சட்டம், தொழில் பாதுகாப்புச் சட்டம், உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் தொழில் உறவு சட்டம். இந்த மாற்றங்களின் விளைவாக, வேலை நேரம், கூடுதல் நேர வேலை, வேலைப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் உடல்நல வேலைச் சூழல் ஆகியவற்றிற்கான சட்டப்பூர்வ மற்றும் தெளிவான கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் குறித்த விதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே கேள்வி 5க்கான பதிலில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு சட்டத்தை நிறைவற்றுவதற்கு அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவை, ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் விதிகளை வகுப்பதற்குப் பாராளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை.

எடுத்துக்காட்டு 1: தொழிற்சாலைச் சட்டம் 1948 இன்படி, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்யுமாறு ஒரு தொழிலாளரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் தொழிலாளர் சட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் பிரிவு 6 வேலை நேரத்தை 9 மணிநேரமாக அதிகரித்துள்ளது. கூடுதல் நேர உழைப்பு வரம்பை அகற்றி விட்டது.

எடுத்துக்காட்டு 2: முன்பு, 1948 சட்டத்தின் கீழ் தற்காலிக வேலை நீக்கத்தை அறிவிப்பதற்கு பல்வேறு தடைகள் இருந்தன. இப்போது, தொழில் துறைச் சட்டத்தின் கீழ் ‘குறிப்பிட்ட காலத்துக்கான வேலையாள்’ என்ற பெயரில் ஒரு புதிய வகைத் தொழிலாளர் பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விதிமுறையின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அந்தக் காலம் முடிந்ததும் எந்தத் தடங்கலுமின்றி வேலையிலிருந்து நீக்கப்படலாம்.

27. மொத்தத்தில் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாட்டைக் குறித்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

சட்டங்களிலும் சட்டத் தொகுப்புக்களிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் சிலவற்றை நாம் விவாதித்துள்ளோம். இதிலிருந்து காவல் துறை, உளவுத் துறை, மத்திய அரசாங்கம் மற்றும் ஆளும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றிடையே மிகப் பெரிய ஒருங்கிணைப்பை நோக்கிய போக்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மதச் சார்பின்மைக் கோட்பாடுகளிலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மதப் பாகுபாட்டுக்கு மாறிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. இவை அனைத்தும் நமது அரசியல் அமைப்பின் அடிப்படையான நவீன ஜனநாயகத்தின் நெறிமுறைகள் படிப்படியாக அரிக்கப்பட்டு ஒரு பாசிச சர்வாதிகார அரசைக் கொண்டு வரும் திசையில் செல்வதைக் காட்டுகின்றன. இது பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் எதிர்ப்புக்கள் கொடூரமாக நசுக்கப்படுவதிலிருந்து மேலும் நிரூபணமாகிறது. 2020 ஜனவரியில் வெளிவந்த தி எகனாமிஸ்ட் பத்திரிக்கையின் ஜனநாயக அட்டவணையில், இந்தியாவின் வரிசை 10 நிலைகள் கீழே இறங்கியுள்ளது. அந்த அட்டவணை 7.23 இலிருந்து 6.9 க்கு இறங்கிவிட்டது.

இந்த மாற்றங்கள் சமுதாயத்தை மதவாத வழிகளில் பிளவுபடுத்தி பொருளாதார முனையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வீழ்ச்சியிலிருந்து திசை திருப்பி வருகின்றன. நமது வேலையின்மைப் பிரச்சனை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களில் விலையேற்ற விகிதம் டிசம்பரில் 12% ஆக இருந்துள்ளது, காய்கறிகளில் இந்த விகிதம் 60% ஆக இருந்துள்ளது. 24 இலிருந்து 34 வரையிலான வயதுகளில் இருப்பவர்களில் ஒவ்வொரு 100 இந்தியர்களிலும் 40 பேர் பள்ளிக்குச் சென்றதில்லை. அண்டை நாடான பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் இந்த வயதுகளில் உள்ளவர்களில் பள்ளிக்குச் செல்லாதவர்கள் 30 பேர் தான்.

இத்தகைய நெருக்கடியான பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டுள்ள அரசாங்கமும் பொதுத் துறையும் இந்த அளவுக்கு வேலைவாய்ப்பைக் குறைத்தது வரலாற்றிலேயே இல்லை. அரசாங்கம் பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் கொள்கையை மிகவும் விரைவாகப் பின்பற்றி வருகிறது. பாரத் பெட்ரோலியம் போன்ற இலாபம் தரும் நிறுவனங்களை விற்பதற்குத் திட்டமிட்டு வருகிறது. இது முதலாளிகளை கொழுக்கச் செய்து, வேலைவாய்ப்பில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சில நேர்வுகளில் வேலை உத்தரவாதம் ஓராண்டுக்கு மட்டுமே என்று பேரம் பேசப்பட்டு வருகிறது. இது ஏற்கெனவே குறைவான தொழிலாளர்களைக் கொண்ட பொதுத் துறையில் தொழிலாளர்கள் வேலையிழப்புக்கான சாத்தியம் இந்த நிறுவனங்களில் பல முதலாளிகளால் மூடப்பட்டு விடும், அவற்றை அவர்கள் மலிவான விலைக்குப் பெற்று, விற்பனை செய்வதற்கான சொத்துக்களாக மாற்றி விடுவதற்கான அறிகுறியாகும்.

28. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் தன்மையை முடிந்தவரை எளிமையாக அனைவருக்கும் விளக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் பேரழிவூட்டும் உள்ளடக்கம் கொண்டவை என்பதை மக்கள் நம்பும்படியாகச் செய்ய வேண்டும்.

பா.ஜ.க. மாநிலங்களில் அதிகாரத்துக்கு வராமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அது தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு அல்லது குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதுவாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது வட்டார வளர்ச்சி அதிகாரி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் மாநிலக் காவல்துறை ஆகியோரின் கரங்களில்தான் இருக்கிறது. அவர்கள் தமது சொந்த வேலைவாய்ப்புக்கு மாநில அரசாங்கத்தின் கட்டளையைத் தான் ஏற்றுச் செயல்பட வேண்டும். ஆகவே இந்த நடவடிக்கைகளை உண்மையாக எதிர்க்கும் கட்சியை தேர்ந்தெடுத்து, மாநிலத்தில் ஆட்சிக்கு வரக்கூடிய அந்தக் கட்சியின் ஆற்றலையும் தீர்மானிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைக் கட்டியமைத்துத் தொடரச் செய்ய வேண்டும், ஏனென்றால் வாக்கு வங்கி அரசியல் அடிப்படையில் தமது மூல உத்திகளைத் தீர்மானிக்கும் பாராளுமன்றக் கட்சிகள் இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவதை உறுதியாக எதிர்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை உத்தரவாதப் படுத்துவதற்கான வழியாகும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுப் பணி 2020 ஏப்ரலிலிருந்து 2020 செப்டம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அரசிதழில் அறிவிக்கை செய்துள்ளது. நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மக்களையும் எச்சரிக்க வேண்டும், அதன் மூலம் தேவையானால், தகவல் சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆட்களுடன் நாமும் சேர்ந்து வீடு வீடாகச் சென்று, எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம் என்று மக்களிடம் வலியுறுத்த வேண்டும். காகிதத்தைக் காட்டாதே என்று கூறினால் மட்டும் போதாது; நாம் எந்தத் தகவலையும் அளிக்கக்கூடாது.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்ப்பதில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியமானதாகும். கடந்த காலத்தில், 2003 இல், யார் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பதற்கான நேரம் இதுவல்ல. வாக்கு வங்கி அரசியலில் ஆர்வம் கொண்ட கட்சிகள் அற்ப விடயங்களுக்காக அடித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் மக்களுக்கு இது நமது நாட்டை மீட்கும் பிரச்சனையாகும். அதனால் தான் நாம் தேசியக் கொடியுடன் நாம் அணிவகுத்துச் செல்கிறோம், மக்கள் கூட்டங்களில் தேசிய கீதம் பாடுகிறோம், அரசியல் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கிறோம்: “இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒர் இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதியாகத் தீர்மானிக்கிறோம்…”
_____________________________________________________
குறிப்புக்கள்

i. பிரிவு 2.கே; குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல்) விதிகள், 2003; https://ruralindiaonline.org/library/resource/the-citizenship-rules-2003/
ii. பிரிவு 2.எல்; மேற்குறிப்பிட்ட அதே மேற்கோள்
iii. பிரிவு 3 (3); அதே மேற்கோள்
iv. பிரிவு 3 (4); அதே மேற்கோள்
v. பிரிவு 7 (2); அதே மேற்கோள்
vi. பிரிவு 4 (3) & பிரிவு 4 (4); அதே மேற்கோள்
vii. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ‘மதரீதியான துன்புறுத்தல் அல்லது துன்புறுத்தப்படும் அச்சம் காரணமாக’ என்ற பிரிவு குறிப்பிடப்படாததால் ஆறு மதங்களின் உறுப்பினர்களும் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளிலிருந்து வந்திருந்தால் குடியுரிமைப் பெறுவார்கள் என்று பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்கிறது. இது ஒரு பொய்ப் பிரச்சாரம். அவர்கள் சட்டத்தை மறைத்து பொதுமக்களைத் தவறாக நடத்திச் செல்கிறார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 2 தெரிவிப்பதாவது:

2. 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் (இதன் பிறகு முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 2 இல் உட்பிரிவு (எல்) இல், பிரிவு (பி) இல் பின்வரும் விதிமுறை சேர்த்துக் கொள்ளப்படும்):-

“2014 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அல்லது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கியம், பௌத்தம், ஜைன், பார்சி அல்லது கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எந்த நபரும், 1920 ஆம் ஆண்டுக் கடவுச் சீட்டுச் சட்டம் பிரிவு 3 இல், உட்பிரிவு (2) இல், பிரிவு (சி) யின் கீழ், அல்லது 1946 ஆம் ஆண்டு அயல்நாட்டவர் சட்டத்தின் விதிமுறைகளைப் பயன்படுத்துவதிலிருந்து, அல்லது அவற்றின் கீழ் வகுக்கப்பட்ட எந்த விதி அல்லது ஆணையின்படி மத்திய அரசால் விலக்களிக்கப்பட்டவர் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சட்டவிரோதக் குடியேறியாக நடத்தப்பட மாட்டார்.”

1920 ஆம் ஆண்டுக் கடவுச் சீட்டுச் சட்டம் பிரிவு 3 இல், உட்பிரிவு (2) இல், பிரிவு (சி) தெரிவிப்பதாவது – அத்தகைய விதிகள் – “அத்தகைய விதிகளின் எந்த விதிமுறைகளிலிருந்தும் எந்த ஒரு நபர் அல்லது வர்க்கத்தினரின் முழுமையாக அல்லது எந்த நிபந்தனைக்கும் விதிவிலக்கு அளிக்கிறது.

பிரிவு 3 இன் கீழ், இந்திய அரசாங்கம் 2015 இலும் 2016 இலும் இரண்டு அரசிதழ் 07-09-2015 மற்றும் 18.07.2016 நாட்களில்) அறிவிக்கைகளை வெளியிட்டது. 2015 ஆம் ஆண்டின் (கடவுச் சீட்டு தொடர்பானது, இந்தியவுக்குள் நுழைவுச் சட்டம்) அறிவிக்கை தெரிவிப்பதாவது:

G.S.R. 685 (E) – கடவுச் சீட்டுச் சட்டம் (1920 இன் 34 வது சட்டம்) பிரிவு 3 அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசாங்கம் 1950 ஆம் ஆண்டின் கடவுச் சீட்டு (இந்தியாவுக்குள் நுழைவது) விதிகளில் பின்வரும் திருத்தங்களைச் செய்கிறது: அதாவது,

1. (1) இந்த விதிகள் கடவுச் சீட்டு திருத்த விதிகள் 2015 என்று அழைக்கப்படலாம்.

(2) அவை அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

2. 1950 ஆம் ஆண்டின் கடவுச் சீட்டு விதிகள், விதி 4 இல், துணை விதி (1) இல், பிரிவு (h) க்குப் பிறகு, பின்வரும் பிரிவு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்:

“வங்க தேசத்திலும் பாகிஸ்தானிலும் மதரீதியான துன்புறுத்தல் அல்லது மதரீதியாகத் துன்புறுத்தடும் அச்சம் காரணமாக இந்தியாவுக்குள் புகலிடம் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, 2014 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்பாக இந்தியாவுக்குள் நுழைந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள், அதாவது, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிக்கள், மற்றும் கிறித்தவர்கள் –

(i) கடவுச் சீட்டு, அல்லது பிற பயண ஆவணங்கள் உள்ளிட்ட செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாமல்; அல்லது

(ii) கடவுச் சீட்டு, அல்லது பிற பயண ஆவணங்கள் உள்ளிட்ட செல்லத்தக்க ஆவணங்கள் ஆகியவற்றுடன், அத்தகைய ஆவணங்களின் காலக்கெடு முடிந்து விட்ட

இந்த வகைப் பிரிவு இந்த அறிவிக்கை அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.”

இதன் பொருள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் குறிப்பின்படி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை அளிக்கப்படுவதற்கு அப்படிக் குடியேறியவர் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டதை நிரூபிக்க வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் -> கடவுச் சீட்டு (இந்தியாவுக்குள் நுழைவதற்கு) சட்டம், 1920 -> 2015 மற்றும் 2016 (07.09.2015 மற்றும் 18.07.2016) இரட்டை அரசிதழ் அறிவிக்கை -> கடவுச் சீட்டு விதிகள் -> மதரீதியான துன்புறுத்தல் நிரூபிக்கப்படுதல்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் வெளிப்படையாகக் குறிப்பிடுகிற கடவுச் சீட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நாம் நிரூபிக்கிறோம். இதை அயல்நாட்டவர் சட்டம், மற்றும் அயல்நாட்டவர் குறித்த ஆணை அடிப்படையிலும் நிரூபிக்கலாம்.

viii Bill text https://prsindia.org/sites/default/files/bill_files/Citizenship%202019%20Bill%20Text.pdf

ix NPR Manual, 2020 Text https://pmil.in/wp-content/uploads/2020/01/NPR-Manual.pdf

x "NRC aane wala hai": Amit Shah makes his intention clear https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/nrc-aane-wala-hai-amit-shah-makes-his-intention-clear/videoshow/72454609 . One can also see: Was at meeting where Amit Shah talked about all-India NRC, surprised at PM's remark, says Sharad Pawar https://www.indiatoday.in/india/story/was-at-meeting-where-amit-shah-talked-about-all-india-nrc-sharad-pawar-1630904-2019-12-23

xi P 19 NPR manual,2020 https://pmil.in/wp-content/uploads/2020/01/NPR-Manual.pdf

xii Citizenship Act,1955 Text https://www.refworld.org/pdfid/410520784.pdf

xiii Paragraph 2.19, page 39, REPORT OF THE JOINT COMMITTEE ON THE CITIZENSHIP (AMENDMENT) BILL, 2016 https://prsindia.org/sites/default/files/bill_files/Joint%20committee%20report%20on%20citizenship%20(A)%20bill.pdf এবং Aadhaar Card, Voter ID & Passport Not Proof Of Citizenship, Claim Government Officials; “These (Aadhar, Voter ID card and Passport) are either travel documents or documents to show residency in India.” https://www.scoopwhoop.com/news/aadhaar-card-voter-id-passport-not-proof-of-citizenship-claim-government-officials/

xiv WHAT IS THE LIST OF ADMISSIBLE DOCUMENTS? http://www.nrcassam.nic.in/admin-documents.html

xv 'What’s Going On Is Really Unfair': Inside The Foreigners Tribunals In Assam; Rohini Mohan https://www.huffingtonpost.in/2018/08/05/what-s-going-on-is-really-unfair-inside-the-foreigners-tribunals-in-assam_a_23496313/?guccounter=1 এবং The Highs & Lows of Foreigners Tribunals that affects Justice Delivery: Assam; Sanchita Kadam https://www.sabrangindia.in/article/highs-lows-foreigners-tribunals-affects-justice-delivery-assam

xvi Census data say hardly any post-1971 foreigners in Assam: Rights group ; Rahul Karmakar https://www.thehindu.com/news/national/other-states/census-data-say-hardly-any-post-1971-foreigners-in-assam-rights-group/article29286848.ece

xvii Foreigners In Assam A Blast From The Past; Suhas Chakma, Director, RRAG; http://www.rightsrisks.org/by-country/foreigners-in-assam-a-blast-from-the-past/

xviii CAA : 12 Key points to remember; Press Information Bureau (PIB), Government of India https://pibindia.wordpress.com/2019/12/19/caa-12-key-points-to-remember/

xix Paragraph 2.21, page 40, Report of the JPC on Citizenship Amendment Bill (2016).

xx Paragraph 2.14, page 34, Report of the JPC on Citizenship Amendment Bill (2016).

xxi Paragraph 2.17, page 39, Report of the JPC on Citizenship Amendment Bill (2016).

xxii Paragraph 2.18, page 39, Report of the JPC on Citizenship Amendment Bill (2016).

xxiii Paragraph 2.21, page 40, Report of the JPC on Citizenship Amendment Bill (2016).

xxiv Paragraph 2.22 page 40, Report of the JPC on Citizenship Amendment Bill (2016).

xxv Page 111, of the Report of the JPC on Citizenship Amendment Bill (2016).

xxviPage 18, Citizenship Act, 1955. https://indiacode.nic.in/bitstream/123456789/4210/1/Citizenship_Act_1955.pdf
_________________________________________________________________________

இணைப்பு 1

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் நாட்டை மதவாத வன்முறையின் இருண்ட காலத்திற்குள் தள்ளிவிட முயற்சி. செய்து கொண்டிருக்கும் சூழலில், பெரும்பான்மை சமூகத்தின் துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்கு, வங்க தேசத்திலிருந்து என்று வைத்துக் கொள்வோம், ஒர் ஆண் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அவர் சுன்னத் செய்திருக்கிறாரா இல்லையா என்பதை கால்சட்டையைக் கழட்டிக் காட்ட வேண்டியிருக்கும். இதைப் பற்றிய சதாத் ஹுசைன் மாண்டோவின் துயரமிக்க கதை இங்கு பொருத்தமாக இருக்கும்.

தவறு நீக்கப்பட்டது

‘யார் நீ?’

‘நீ யார்?’

‘ஹரஹர மகாதேவ்! ஹரஹர மகாதேவ்!’

‘ஹரஹர மகாதேவ்!’

‘நீ சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது!’

‘ஆதாரமா? என் பெயர் தரம் சந்த், இது ஒரு இந்துப் பெயர்’

‘இது ஒன்றும் ஆதாரமல்ல’

‘நல்லது. எனக்கு வேதங்கள் அனைத்தும் மனப்பாடம்,வேண்டுமானால் சோதனை செய்து கொள்ளுங்கள்!’

‘வேதமெல்லாம் எங்களுக்குத் தெரியாது, ஆதாரம் வேண்டும்’

‘என்ன?’

‘கால் சட்டையைக் கழட்டு’

அவனுடைய கால் சட்டைகள் கழற்றப்பட்ட போது கலவர ஒலி எழுந்தது

‘கொல்லு! அவனைக் கொல்லு!’

‘பொறுங்கள், தயவு செய்து பொறுங்கள் … நான் உங்கள் சகோதரன் .. கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன் நான் உங்கள் சகோதரன் தான்!’

‘அப்படியானால் ஏன் சுன்னத் செய்து கொண்டிருக்கிறாய்?’

‘நான் கடந்து வந்த வழி எதிரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆகவே முன்னெச்சரிக்கையாக என்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இப்படிச் செய்து கொண்டேன், தவறு தான், மற்றபடி நான் உங்கள் ஆள்தான்’

‘அப்படியானால் அந்தத் தவறை நீக்கு’

அந்தத் தவறு நீக்கப்பட்டது … அத்தோடு தரம்சந்தும் நீக்கப்பட்டான்.

------- சாதத் ஹசன் மான்டோ

இணைப்பு – 2

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சிப் போக்கில், உள்ளூர் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக் கொள்ளலாம். பாசிசத் தலைவர்கள் அவர்களுடைய நாட்டில் செய்ததைப் போல, ஒரு அதிகாரமிக்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தலைவர் புலனாய்வு முகாமைகளையும் காவல் துறையையும் எவர் ஒருவருக்கும் எதிராக, மதம், கட்சிப் பாகுபாடின்றி பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்திய ஒரே மாநிலம் அசாம் தான். அங்கு அரசியல் தலைவர்கள் இப்படி பழிவாங்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேடு மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டதில் இவ்வளவு பழிவாங்கல்கள் நிகழ்ந்துள்ளன என்றால் நாடு முழுக்கவும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் நிறைவேற்றப்பட்டால் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அல்லது அவர்களுடைய உள்ளூர்த் தலைவர்கள் என்ன வகையான பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இடப் பற்றாக்குறைக் காரணமாக அத்தகைய பழிவாங்கல் நிகழ்வில் ஒன்றை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்:

“திலிப் பிஸ்வாஸ்

இங்கு, திலிப் பிஸ்வாஸ், அவரது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் வழக்கைப் பற்றிக் காண்போம். பிஸ்வாஸ் மயோங்க் கிராமத்தில், ஒரு சிறிய கடை வைத்து பிஸ்கட்டுகள், தேனீர், பூரி-சப்ஜி ஆகியவற்றை விற்றுக் கொண்டிருந்தார். அவரது கிராமத்தின் தலைவர் அடிக்கடி அவருடைய கடைக்கு வந்து, சாப்பிட்டுவிட்டு காசு எதுவும் கொடுக்காமல் சென்று கொண்டிருந்தார். எரிச்சலடைந்த பிஸ்வாஸ் ஒரு நாள் இலவசமாக எதையும் கொடுக்க முடியாது என்று மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

பழிவாங்கும் வகையில் அந்தக் கிராமத் தலைவர், எல்லைப் பகுதி காவல் நிலைய ஆய்வாளரை அணுகி, ஒரு விசாரணை ஆணையைப் பெற்று, பிஸ்வாஸுக்கு எதிராக ஒரு விசாரணை அறிக்கையைத் தயார் செய்து சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, பிஸ்வாஸுக்கு எதிராக மோரிகவானில் உள்ள அயல்நாட்டவர் தீர்ப்பாயத்திற்கு குறிப்பு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்ப்பாயம் பிஸ்வாஸுக்கு மட்டும் அறிவிப்பு அனுப்புவதற்குப் பதிலாக அவருக்கும், அவருடைய மனைவி, குழந்தைகளுக்கும் சேர்த்து அனுப்பி வைத்தது. அந்த அறிவிப்பு அவர்கள் முன்நிற்க வேண்டிய நாளுக்கு பல நாட்கள் கழித்தே கிடைத்தது.

பிஸ்வாஸும் அவருடைய குடும்பமும் தீர்ப்பாயத்திற்குச் சென்ற போது, அவர்களுக்கு எதிராக தோன்றாத் தரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் பிஸ்வாஸ் ஒரு வழக்கறிஞரைப் பிடித்து, உயர்நீதிமன்றத்துக்கு மனு செய்து, அந்த உத்தரவை நீக்கறவு ஆணை பெற்று மீண்டும் தீர்ப்பாயத்தின் முன்பு தோன்றினார். அதே வழக்கறிஞர் இங்கும் அவர்களுக்காக வாதாடி தோற்றுப் போனார். என்னைப் பொறுத்தவரை, அந்தத் தீர்ப்பு தவறானது, அந்த வழக்கறிஞர் சரியாக வாதாடவில்லை. ஆனால் அந்த வழ்ககறிஞர் தனது சேவைக்கு பிஸ்வாஸிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.

பிஸ்வாஸ் தனது நிலத்தையும் தனது சகோதரரின் நிலத்தில் ஒரு பகுதியையும் விற்று அந்தத் தொகையைச் செலுத்தினார். முடிவாக, அவரும் அவருடைய குடும்பமும் தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 2011 இலிருந்து அங்கு இருந்து வருகிறார்கள். பிஸ்வாஸ் கோல்பாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதே நேரத்தில், அவரது மனைவியும் குழந்தைகளும் கொக்ராஜ்கார் சிறையில் அடைக்கப்பட்டனர். எப்படியோ பிஸ்வாஸின் சகோதரர் மனித உரிமைகள் சட்ட அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, 2017 இல் அவர்களை அணுகினார். அந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து கௌகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இன்னும் சிறையிலேயே தான் இருக்கின்றனர். முதல் நாளில் பிணை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை, அந்த வழக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை.”

ஆதாரம்: ஸௌரதீப் தே: அசாம் அயல்நாட்டவர் தீர்ப்பாயங்களில் அன்றாட வாழ்க்கை

http://www.raiot.in/everyday-life-of-assams-foreigners-tribunals/

- நிழல்வண்ணன்