"சாதி வாரியாக பிரிந்து கிடக்கிறீர்கள்... தாழ்ந்து கிடக்கிறீர்கள்... கல்வியிலும் பொருளாதார ரீதியிலும் பின் தங்கிக் கிடக்கிறீர்கள்... வாருங்கள் அதற்கான உரிமைகளை பெறுவோம்..."

trishul rssஇப்படியாக அந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் நாம் அனைவரும் மகிழ்ந்திருப்போம்.

ஆனால் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று பார்ப்பனர்களுக்குத் தோன்றும் போதெல்லாம், தங்களுக்கான உரிமையை இழக்கும் போதெல்லாம் அவர்கள் துணைக்கு "இந்துக்களே ஒன்று சேருங்கள்" என்று அழைப்பார்கள்.

சமீபத்தில் ஒரு பிரச்சனைக்காக அழைத்தார்கள்...

"கோவில் நிர்வாகம் அனைத்தும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதனைப் பறிப்போம்... இந்துக்களின் சொத்துக்கள் இந்துக்களுக்கே சேர வேண்டும்... அதன் மூலமாக கிடைக்கும் செல்வங்கள் இந்துக்களுக்கே வழங்க வேண்டும்" என்று ஒரு முழக்கம் கேட்டது.

இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்னவென்றால் கோவில் நிலங்களையும், உடைமைகளையும் குறிப்பிட்ட ஒரு சாதியினர் வைத்துக் கொண்டு மன்னர்களுக்கு விபூதி அடித்தார்களே... அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை நிலைமைக்கு போகத் துடிக்கிறார்கள்...

அவ்வளவுதான்...

இதற்குத்தான் 'இந்துக்களே ஒன்று சேருங்கள்' என்றார்கள்...

அடுத்து பெரியார் சிலை உடைப்பின்போதும் இதே முழக்கத்தை எழுப்பினார்கள்.

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையைப் படிக்காமலேயே வெகுண்டெழுந்தார்கள்... அப்போதும் இதே முழக்கத்தை எழுப்பினார்கள்...

இதற்கெல்லாம் ஆத்திரப்பட்ட சூத்திர இந்துக்கள், தங்களை எல்லாம் கோவிலுக்குள் அழைத்துச் சென்றவரும், தங்களை எல்லாம் கல்வி நிலையங்களுக்கு அழைத்துச் சென்றவருமான தந்தை பெரியாரின் மேன்மை தெரியாமல் அவரது சிலைகளை உடைத்தார்கள்.

இதில் சிலர் கைது செய்யப்பட்டார்கள்... அவர்களில் யாருமே பார்ப்பனர்கள் கிடையாது. அவர்கள் எய்துவிட்டு போய் விடுவார்கள்... இவர்கள் அம்புக்கு தண்டனை வழங்குவார்கள்...

இப்படித்தான் டில்லியில் மாபெரும் போராட்டங்கள் அமைதியாக நடந்து வந்த வேளையில், இடையில் புகுந்து, அதாவது ஆதரவு ஆர்ப்பாட்டம் என்ற பெயரால் புகுந்து குழப்பம் விளைவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிப்போனது. கல்வீச்சு சம்பவங்கள், மண்டை உடைப்புகள், அடித்தே கொலை செய்யும் சம்பவங்கள், மசூதியில் ஏறி நின்று ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள், மசூதியை தீவைத்து எரிக்கும் சம்பவங்கள் அரங்கேறின.

இந்த கொடூரங்களால் சிதைக்கப்பட்டு 37 அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன.

இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக காவல்துறை பலரைக் கைது செய்திருக்கிறது. இதில் பெரும்பான்மையானவர்கள் மிகவும் பின்தங்கிய வகுப்பினர்கள்தான். ஒருவர்கூட பார்ப்பனர் இல்லை... ஒருவர்கூட பனியா இல்லை...

கொஞ்சம் பின்னோக்கிப் போவாம்...

2002 குஜராத் கலவரத்தில் சாதி வாரியாக கைது செய்யப்பட்டவர்களில், பார்ப்பனர்கள் 2 பேர், பனியாக்கள் 2 பேர், பட்டேல் இனத்தார் 9 பேர், தலித்துகள் 747 பேர், இதர பின்தங்கிய வகுப்பினர் 797 பேர் என பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அதில் அனைவருமே பார்ப்பனர்களும் பனியாக்களும்தான். மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள்மீது இன்னும் வழக்கு நிலுவையில்தான் இருக்கிறது.

அன்றைய மாநில அரசின் முதல்வராக இருந்தவரும், தற்போதைய பிரதமருமான மோடி இந்த வழக்கில் எந்த குற்றமும் செய்யவில்லை என்று ஆணையம் பாராட்டுப் பத்திரம் வழங்கி விட்டதெல்லாம் தனிக்கதை.

இதில் விஷயம் என்னவென்றால், அவர்கள் அதாவது பார்ப்பனர்கள் தூண்டிமட்டும்தான் விடுவார்கள்... சிக்கி கேஸ் வாங்கிக் கொண்டிருப்பது அப்பாவி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர்தான்.

இவர்களின் 'இந்துக்களே ஒன்றுகூடுங்கள்' என்ற மாய வார்த்தையில் மயங்கி கலவரத்தில் சிக்காதீர்கள்...

உங்கள் உரிமைகளுக்காக, இழந்த கல்விக்காக, பெற வேண்டிய வேலை வாய்ப்புக்காக அரசை வலியுறுத்துங்கள்... ஒன்று சேருங்கள்...

இதுபோன்ற பார்ப்பன ஆதிக்கம் நிறைந்தவர்கள் அழைக்கும் மாய வலைக்குள் விழுந்து விடாதீர்கள்... அப்படி விழுந்தால் அவர்கள் பிள்ளைகள் மேல்நாட்டுக் கல்வி பயில, உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரிமாண்ட், கோர்ட், கேஸ், வாய்தா, ஆயுள் உள்ளிட்ட வார்த்தைகளுடன் வாழ வேண்டி வரும்.

- சஞ்சய் சங்கையா