நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நீண்ட பட்ஜெட் உரையில் LIC நிறுவனத்தில் அரசுக்குள்ள பங்குகளில் குறிப்பிடத்தக்க அளவு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இருப்பதாகக் கூறியிருந்தார்.

அந்த தனியார்கள் எப்படிப்பட்ட யோக்கிய சிகாமணிகள் என்பதைப் பார்க்கும் முன் LIC பற்றி சில தகவல்கள்:

எல்.ஐ.சி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்குத் தந்த தொகை ரூ.2611 கோடிகள். 1956ல் வெறும் 5 கோடி அரசு முதலீட்டில் துவக்கப்பட்ட எல்.ஐ.சிக்கு அதற்குப் பின்னர் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை.

பங்குச் சந்தைக்கு இழுத்து வருவதற்காகவே சட்ட நுணுக்கங்களைக் காரணம் காட்டி ரூ.100 கோடியாக மூலதனத்தை உயர்த்தினார்கள். இந்தத் தொகையும் அரசு ஆண்டு தோறும் எல்.ஐ.சி இடமிருந்து பெறுகிற டிவிடென்டில் மிகச் சிறிய பகுதியேயாகும்.

11 வது ஐந்தாண்டுத் (2012 -17) திட்டத்திற்கு எல்.ஐ.சியின் பங்களிப்பு ரூ 14,23,055 கோடிகள். சராசரியாக ஆண்டிற்கு ரூ. 2,84,000 கோடிகள்.

12 வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே (2017-19) அரசுக்குத் தந்திருப்பது 7,01,483 கோடிகள். ஆண்டு சராசரி 3,50,000 கோடியாக உயர்ந்துள்ளது.

எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடிகள். ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ள தொகை ரூ 28,84,331கோடிகள்.

40 கோடி பாலிசிகளை இன்று எல்.ஐ.சி வைத்திருக்கிறது. இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ளே வந்த பன்னாட்டு நிறுவனங்கள் சில பத்தாண்டுகளில் இங்கேயிருந்து முதலீடுகளை எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார்கள். அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி ஆகியன உதாரணங்கள். 

சரி இனி ஒரே ஒரு இந்திய முதலாளியின் யோக்கியதையைப் பார்ப்போம்...!?

கார்ப்பரேட் கொள்ளை

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம் திவாலான நிறுவனமாக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அம்பானி குடும்பம் ரிலையன்சை ஒரே நிறுவனமாக நடத்திய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும் இது. பின்னர் இளைய அனில் அம்பானியின் நிறுவனமானது.

ambani brothersமுகேஷ் அம்பானி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தையும், இன்னும் சில நிறுவனங்களையும் தமது பங்கு நிறுவனமாக்கிக் கொண்டார். ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம் 2G தலைமுறையில் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்தது. அலைக்கற்றை உரிமங்களில் 2G, 3G, 4G உரிமங்களை நாடு முழுவதற்கும் கொண்டிருந்தது. கேபிள் வழி இணைய உரிமங்களும் நாடு முழுவதும் வைத்திருந்தது. தொலைத்தொடர்பு கோபுரங்கள் இதன் வசம் இருந்தன. ஏர்செல் போன்ற நிறுவனங்களை தன்னோடு இணைத்து ஏகபோக நிறுவனமாக இருந்தது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி தானும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அதற்கான வேலைகளைத் துவக்கினார்.  அந்த நிறுவனத்துக்கு ஜியோ என்று பெயர் வைத்தார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவன அலைக்கற்றை உரிமைகளை வைத்து நிறுவனத்தைத் துவக்கினார். 4G தொழில்நுட்பத்தில் VoLTE தொழில்நுட்பத்தில் ஆரம்பித்து இலவசமாக சேவைகளை வழங்கத் துவங்கினார். பெரிய அளவு சந்தாதாரர்களைக் கவர்ந்தார் . பெரிய நிறுவனமாக்கி விட்டார்.

இளைய அம்பானி நட்டத்தில் இயங்கிய போதும் பிற நிறுவனங்களை இணைப்பதில் ஆர்வமாக ஈடுபட்டார். சொத்துக்கள் நிறைந்த, ஆனால் நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக தனது நிறுவனத்தை ஆக்கினார். நிறுவனத்தை நட்டப்படுத்தியது அண்ணணின் நிறுவனத்தை வாழ வைக்கவே...

நட்டமடைந்த நிறுவனம் என்று தெரிந்தவுடன் அந்நிறுவனத்துக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் கடனை கேட்டு நெருக்கத் துவங்கின. இதைக் காரணம் காட்டி நிறுவன கடனைக் கட்ட சொத்துக்களை விற்று கடனை அடைப்பதாக ஒப்புக் கொண்டார். ஏற்கனவே தனது நிறுன சொத்துக்களான அலைக்கற்றை உரிமங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், கேபிள் இணையத் தொடர்புகள் எல்லாவற்றையும் அண்ணனுக்கு விற்க ஒப்பந்தம் போட்டார்.

ரிலையன்ஸ் இன்போகாம் என்ற பெயரைத் தவிர மற்ற அனைத்து அசையும், அசையா சொத்துக்களையும் ஜியோ நிறுவனத்துக்குக் கொடுத்து விட்டு ரிலையன்ஸ் இன்போகாம் என்ற நிறுவனப் பெயரில் திரட்டிய மூலதனத்தையும்,  கடன்களையும் கைப்பற்றிக் கொண்டு சொத்துக்களற்ற பொம்மை நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்க இருக்கிறார் இளைய அம்பானி.

கடன் கொடுத்தவர்களும் ரிலையன்ஸ் என்ற பெரிய நிறுவனத்தின் துணை நிறுவனத்தை நம்பி முதலீடு செய்திருந்த நிறுவனங்களும், மக்களும் இரண்டு அம்பானிகள், விளம்பரத் தூதர் மோடி இவர்களின் கூட்டு களவாணித்தனத்தால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இன்று வெற்றிகரமாக செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் நேற்று ரிலையன்ஸ் இன்போகாம் சொத்துக்களாக இருந்தவையே.

தோலிருக்க சுளையைத் தின்று விட்டார்கள் அம்பானிகள். இவ்வளவுதான் இவர்களின் தொழில் நேர்மை.

நாளை மற்றொரு நிறுவனத்தை இளைய அம்பானி ஆரம்பிப்பார். நட்டத்தில் இயங்கும் சொத்துக்களை லாபகரமான புதிய நிறுவனமாக்குவார். இன்னொரு பெயர்ப் பலகையை கீழே போடுவார். இதற்குப் பெயர்தான் கார்ப்பரேட் மோசடி.

வாராக்கடன்கள் இப்படித்தான் உருவாகின்றன. புதிய நிறுவனங்கள் முளைப்பதும் இவ்வாறே.

இவர்கள் கொள்ளையடிக்கும் பணமெல்லாம் பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களது பணமுமாகும். இவை மக்களின் சேமிப்புப் பணமே.

இவர்களின் தற்போதைய நேரடித் தரகர் தான் மோடி. முன்பு மன்மோகன்.

இப்போது சொல்லுங்கள் அம்பானிகள், அதானிகள் மேலும் மேலும் பணக்காரர்களாவது இப்படிப்பட்ட மோசடிகளால்தான். இவர்களிடம் எல்.ஐ.சி. போன்ற பொதுத் துறை நிறுவனங்களைக் கொடுத்தால், மக்களின் பணத்திற்கு யார் உத்திரவாதம் கொடுப்பது?

இவர்களுடைய, இவர்களைப் போன்ற மற்ற முதலாளிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதே மக்களின் செல்வத்தைக் காக்கும் வழி.

- தருமர், திருப்பூர்