ஆரியக் கூத்தாடினாலும் கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு சேவை செய்யும் காரியத்தில் மட்டும் மோடியைப் போலவே கண்ணாக இருக்கிறது அம்மா. பழனிச்சாமியின் அரசு! கடந்த ஜூலை மாதத்தில் “தமிழ்நாடு கால்நடைகள் இனவிருத்தி சட்டம்-2019” (Tamilnadu bovine breeding act), மற்றும் அக்டோபர் மாதத்தில் “வேளாண் விளைபொருள்கள் மற்றும் கால்நடைகள் ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் சட்டம்-2019” (Agricultural produce and livestock contract farming and services -promotion and faciliation- act) ஆகிய இரு புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு. எடப்பாடி-ஒபிஎஸ்-சின் வெளிநாட்டுப் பயணங்கள், டாக்டர் பட்டம், இடைத்தேர்தல் வெற்றி ஆகிய அலப்பறைகளின் பின்னணியில், இச்சட்டங்களின் அபாயங்கள் குறித்து பொதுமக்கள் கவனத்திற்கு சென்றுவிடாமல் மீடியாக்களால் ஊத்தி மூடப்பட்டு விட்டது.

“தமிழ்நாடு கால்நடைகள் இனவிருத்தி சட்டம், அதிக பால் கறக்கும் தரமான மாடுகளை பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. இதனால் பால்பொருள் தயாரிப்பி‌ல் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் ஊக்கமடைந்து தொழிலில் அதிக முதலீடு செய்யும். இதன்மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிக்கும்” என்று கூறுகிறார் தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன்.

“ஒப்பந்த விவசாயத்தில் முன்கூட்டியே விலை தீர்மானிக்கப்படுகிறது. எனவே அதிக மகசூல் காலங்களில் ஏற்படும் விலைக்குறைவு மற்றும் நட்டத்தை தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இச்சட்டம் முதன்முறையாக நிறைவேற்றப்படுகிறது” என ஒப்பந்த விவசாயச் சட்டம் பற்றி பெருமைப்படுகிறார் எடப்பாடியார்.

நொண்டி மாட்டை விற்கும் தரகன், மாட்டின் கண்ணைப் பார், கொம்பைப் பார், வாலைப் பார் என்று நம்மை திசை திருப்புவது போல, இவ்விரு சட்டங்களையும் பற்றி அமைச்சர்கள் பேசுகிறார்கள். இந்த ‘நொண்டி மாட்டின்’ உரிமையாளர் மோடியின் மத்திய அரசு என்பதை புரிந்து கொண்டால், இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். எனவே சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்குள் செல்வோம்.

புதிய சந்தை முறைக்கு இழுக்கும் ஒப்பந்த விவசாயம்?

சட்டங்கள் தனித்தனியாக இருந்தாலும் இரண்டையும் இணைக்கும் ஒரே சங்கிலி ‘ஒப்பந்த பண்ணையம் அல்லது விவசாயம்’ என்பதுதான். “முன்கூட்டியே விலை தீர்மானிக்கப்படுகிறது, இடைத்தரகர் கிடையாது” என்ற காரணத்தை மட்டுமே நம்மிடம் கூறி இதை நியாயப்படுத்துகின்றனர் ஆட்சியாளர்கள். ஆனால் ஒப்பந்த விவசாயத்தின் ஆழ-அகலங்களை ஆய்வு செய்து வரும் வேளாண் பொருளாதார நிபுணர்களோ, “கார்பரேட்டுகளின் மூலதனத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் அதிகரிக்கச் செய்யும் பொருளாதாரக் கோட்பாட்டின் ஓர் அங்கம்தான் ஒப்பந்த விவசாயம்” என்கிறார்கள்! அது எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, நமக்கு தெரிந்த விவரங்களிலிருந்தே தொடங்குவோம்.

ஒரு விவசாயி தனது விளைபொருளை, தான் விரும்பிய ஒரு கமிஷன் மண்டிக்கு அனுப்புகிறார். அங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, வியாபாரிகளால் தீர்மானிக்கப்படும் விலைக்கு விற்கப்படுகிறது. இங்கு கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை பிற நகர்புற சந்தைகளுக்கோ அல்லது சில்லறை வியாபாரிகளுக்கோ கொண்டு சென்று விற்கிறார்கள். அங்கிருந்து விளைபொருள்கள் இறுதியாக நுகர்வோரை சென்றடைகிறது. இதுதான் வழக்கத்தில் உள்ள இயல்பான சந்தை முறை. இதில் பொருளின் விலையை ‘தேவை – வழங்கல்’ என்ற விதிதான் பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

ஒப்பந்த விவசாயம் என்பதும் நமது விவசாயிகளுக்கு புதியதல்ல. சந்தை நிலவரங்களை நன்கு அறிந்த வியாபாரிகள், சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் காய்கறிகள், கிழங்கு, பழங்களை, விவசாயிகளிடம் ஒப்பந்த விலையில் பேசி முடித்து, மொத்தமாக கொள்முதல் செய்து கொள்ளும் வழக்கம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுதான். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையில், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில், எழுதப்படாத ஒப்பந்தமாக, இந்த சந்தை முறைக்குள்ளேயே இதுவும் நடந்து கொண்டுதான் உள்ளது. பின்தங்கிய, சிறுநிலவுடமையை அதிகமாகக் கொண்ட, நம்நாட்டு விவசாய முறைக்கு இத்தகைய எளிய சந்தை முறைதான் ஓரளவுக்கு வசதியாகவும் இருக்கிறது.

இதுதவிர, சமீப காலங்களில் சோற்றுக் கற்றாலை, காட்டாமணக்கு, கெர்கின்ஸ் வெள்ளரி, பேபிகார்ன், கண்வலிக் கிழங்கு, மரிக்கொழுந்து, செண்டுபூ (marigold) ஆகியவற்றை சில தனியார் நிறுவனங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்து கொடுத்த அனுபவமும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு!

ஆனால் தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த விவசாயச் சட்டமோ இதற்கு முற்றிலும் மாறுபட்ட, நேரெதிரான முனையில் நடைபெறும் பரிவர்த்தனையாகும்!

விவசாயிகளின் குடுமி கார்ப்பரேட்டுகள் கையில்! 

2007-ல் மத்திய அரசு தயாரித்த ஒரு மாதிரி சட்டத்தின் அடிப்படையில்தான், தமிழக அரசின் ஒப்பந்த விவசாயச் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை முழுமையாக கண்காணித்து செயல்படுத்துவதற்கு மத்திய ஆணையம் ஒன்று அமைக்கப்படும். இதன்கீழ் இயங்கும் வகையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட மாநில ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும். 1) தனியார் நிறுவனம் நேரடியாக விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்வது, 2) தனியார் நிறுவனம்- விவசாயி - வங்கி ஆகியோர் சேரும் முத்தரப்பு ஒப்பந்தம், 3) தனியார் - அரசு - விவசாயிகள்  – உர நிறுவனம் என பலரும் இணையும் கூட்டு ஒப்பந்தம், போன்று பலவகை ஒப்பந்த முறைகளை இச்சட்டம் பரிந்துரைக்கிறது. 1987-ல் நிறைவேற்றப்பட்ட வேளாண் பொருள் விற்பனைக் கமிட்டி சட்டத்தின்படியே இந்த சட்டம் ஒழுங்கமைக்கப்படுகிறது. மொத்தத்தில் இச்சட்டம் கூறும் விவரங்களிலிருந்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.

companies in contract farmingபுதிய ஒப்பந்த விவசாய சட்டத்தின்படி, கார்பரேட் முதலாளிகளும், அவர்களது ஏஜெண்டுகளும்தான் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறார்கள்! இந்த நிறுவனங்கள், நம் உள்ளூர் வியாபாரிகள் போல ஓரிடத்தில் வாங்கிய பொருளை, அப்படியே மற்றொரு இடத்தில் கைமாற்றி விற்றுவிட்டுப் போகும் சாதாரண வியாபாரிகள் கிடையாது. இவர்கள் கொள்முதல் செய்த விளைபொருள்களை சேமித்து, பதப்படுத்தி, அதனை பிற நாடுகளின் மக்கள் விரும்பும் உணவு வகைகளாக தயாரித்து, டப்பா புட்டியில் அடைத்து, உலகச் சந்தையில் விற்பனை செய்து வரும் (பெப்சிகோ, கான்அக்ரோ, யுனிலீவர் போன்றவை) பெரும் வேளாண் வணிக நிறுவனங்கள்!

நாம் வழக்கமாக விளைவிக்கும் காய்கறி - பழங்களை இவர்கள் கொள்முதல் செய்யப் போவதில்லை. அவர்களின் உலக சந்தை வர்த்தகத்திற்கு எது தேவையோ அதுதான் இவர்களுக்குத் தேவை!. அத்தகைய வணிகப் பயிர்களை நமது நிலத்தில் விளைவித்து கொடுப்பதற்குத்தான் நம்மிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் விரும்பும் பயிர்களின் விதைகள், தேவையான உரம், பூச்சிமருந்துகள், மற்றும் தொழில்நுட்பங்கள் என அனைத்தையும் அவர்களே நமக்கு கொடுப்பார்கள். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு சிறிது நிதியுதவியும் கூட செய்வார்கள். இறுதியில், அறுவடை செய்த பொருள்களை பல பிரிவுகளாக தரம் பிரிப்பார்கள். (உருளைக்கிழங்கு 45 மி.மீ. பருமனாகவும், 50 கிராம் எடைக்கு குறையாமலும் இருக்க வேண்டும்! முருங்கைக்காய் இத்தனை செ.மீ நீளம் வேண்டும் போன்ற நிபந்தனைகள் உண்டு!) இதில் மூன்று அல்லது நான்கு தரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை கழிவாக நம் தலையில் கட்டி விடுவார்கள். (உருளைக் கிழங்காக இருந்தால் உள்ளூர் சந்தையில்கூட விற்று விடலாம். பேபிகார்ன் – கெர்கின்ஸ் - கொக்கோ-வாக இருந்தால் அதைக் குப்பையில்தான் போட முடியும்.) ஒவ்வொரு தரத்திற்கும் குறிப்பிட்ட விலையை அவர்களே தீர்மானித்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு விடுவார்கள்.

ஒப்பந்த விலையைவிட அதிக விலை கிடைக்கிறது என்று வெளிச்சந்தையில் நீங்கள் விற்றாலோ, இது நமக்கு கட்டுபடியாகாது என்று விவசாயத்தை இடையில் கைவிட்டாலோ ஒப்பந்த நிறுவனம், விவசாயிகளிடம் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர முடியும்! ஆனால் அதே சமயம், ஒப்பந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் கொள்முதல் செய்யாமல், விளைபொருள் வீணாகி நமக்கு நட்டம் ஏற்பட்டால், இதற்கென உள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குறை தீர்க்கும் அமைப்பில்தான் விவசாயிகள் முறையிட முடியும்! அங்கும் பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது... “வெறும் தண்ணி பாய்ச்சுன உனக்கே இவ்வளவு வலிக்குதுனா.... எல்லா முதலீடும் போட்ட கம்பெனிக்காரனுக்கு எவ்வளவு வலிக்கும்... போயா போயி அடுத்த வேலையப் பாரு” என்கிற ரீதியில்தான் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கும்! சுருக்கமாக சொன்னால் விவசாயிகளின் உச்சிக் குடுமி எவனோ ஒரு கார்பரேட் முதலாளிகளின் கையில் சிக்கியிருக்கும்! இதுதான் எடப்பாடி அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த விவசாயச் சட்டத்தின் லட்சணம்!

கால்நடைகள் இனவிருத்தி சட்டம்-2019

ஒப்பந்த விவசாய சட்டம் போலவே, இந்த சட்டத்திற்கும், ஒரு மத்திய ஆணையமும், மாநில ஆணையமும் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இதன் கிளை உறுப்புகளும் செயல்படும்.

சினை ஊசி போடுவது, இனவிருத்தி செய்வது, பால் மாடுகளைப் பராமரிப்பது ஆகியவற்றுக்கு இச்சட்டம் புதிய வரையறைகளை கூறுகிறது. இதன்படி இனவிருத்திக்கான காளைகள் மற்றும் பால் மாடுகள் வளர்ப்போர் அனைவரும் இந்த ஆணையத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும், “மாடுகளுக்கு ‘நோய் தாக்குதல் இல்லை. முறையாக தடுப்பூசி போடப்பட்டது’ என்பதற்கான சான்றிதழ் பெற வேண்டும். அதையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும்” என்று கூறுகிறது! ஆணைய அதிகாரிகள் நேரடியாக மாடு வளரும் இடங்களில் பரிசோதனை நடத்தவும், நோய் அறிகுறிகள் தென்பட்டால் சான்றிதழை ரத்து செய்யவும் இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.

இயற்கையான கருத்தரித்தலுக்குப் பயன்படுத்தும் காளைகளுக்கு ஆணையத்தின் சான்றிதழ் இல்லாவிட்டால் அந்த காளைகளை பறிமுதல் செய்யவும், காளையின் உரிமையாளருக்கு 50,000 ரூபாய் அபதாரமும், 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்று இந்த சட்டம் விவசாயிகளை மிரட்டுகிறது!

அதேசமயம், கலப்பின மாடுகளிலிருந்து செயற்கை கருத்தரித்தலுக்கு பயன்படும் விந்தணுக்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களை விரிவாக்க இச்சட்டம் முன்னுரிமை கொடுக்கிறது. இதன் மூலம் பெண் கன்றுகளை மட்டுமே ஈனும் விந்தணுக்களை அறிமுகம் செய்யப் போவதாக கூறுகிறார் தமிழக கால்நடைகள் பராமரிப்புத் துறை இயக்குனர் ஞானசேகரன்! இன்று 40 ரூபாய்க்கு போடப்படும் சினை ஊசி, நாளை 2000, 3000 வரை உயர்வதற்கு இது வழிவகுக்கும்!

மேலும், கறிக்கோழி, முட்டைக்கோழி என தனித்தனி கோழிகள் வளர்க்கப்படுவதைப் போல, இனி பால் மாடு, இறைச்சிக்கான மாடு என தனிவகை மாடுகளும், அதனை ஒப்பந்த அடிப்படையில் வளர்க்கும் நவீன மாட்டுப் பண்ணைகளும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது!!

மொத்தத்தில், நலிந்து வரும் விவசாய சூழலில், கிராமப்புற மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் மாடுவளர்ப்பு தொழிலையும் கார்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்ப்பதுதான் கால்நடை இனவிருத்திச் சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

இதுவெல்லாம் வெளிப்படையாக நடக்கும் பிரச்சனைகள். ஆனால் ஒப்பந்த விவசாயத்தின் பின்னணியில், நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ரசவாதம்தான் நாம் கவனிக்க வேண்டிய விசயமாகும்.

farmingஉலகச் சந்தையின் பிடியில் விவசாயம்!

'கார்பரேட் நிறுவனங்கள் நினைத்தால் நம் விளைநிலங்களையே விலைக்கு வாங்கி, அவர்களே நேரடியாக நவீன விவசாயம் செய்ய முடியுமே. அப்படி செய்யாமல், ஏன் இந்த ஒப்பந்த விவசாய முறையை கையில் எடுக்கிறார்கள்?' என்ற கேள்விக்கு விடை தேடினால், ஒப்பந்த விவசாயத்தின் முழுப் பரிமாணமும் நம்மை வேறு ஒரு புதிய திசைக்கு அழைத்துச் செல்கிறது.

விவசாயம் என்பது, இன்னமும் பழைய காலங்களைப் போல முகூர்த்த நாட்கள், திருவிழா காலம், நகர சந்தை ஆகியவற்றை சார்ந்த தொழிலாக மட்டும் இல்லை. இன்றைய நவீன காலத்தில், விவசாயம் என்பது பெரும் தொழில்துறையை சார்ந்த ஓர் உற்பத்தி துறையாக வளர்ந்து வருகிறது! ஒரு நாட்டுக்குள் நடக்கும் சந்தைக்கான உற்பத்தி என்பதாக இல்லாமல், உலகச் சந்தைக்கான உற்பத்தியாக விரிவடைந்து வருகிறது.

உலக நாடுகளில் பொதுமக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் பெருத்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நேரடி உணவுப் பழக்கம் என்பது படிப்படியாக குறைந்து தயார்நிலை உணவாகவும், அதையும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் - ருசிகளில் உண்ணும் பழக்கமும் அதிகரித்து விட்டது. சில எளிய உள்நாட்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் நாம் 50 பைசாவுக்கு வாங்கித் தின்ற குச்சி ஐஸ், இன்று வெணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெரி சுவைகளுடன் 25 ரூபாய்க்கு விற்கிறது! நாம் சாம்பாருக்கு பயன்படுத்தும் உருளைக் கிழங்கு, இன்று ஏழுவித சுவைகளில் நொறுக்குத் தீனியாக, கலர்கலராக, கடைகளில் தொங்குகிறது! மைதாமாவை மூலப்பொருளாகக் கொண்ட பேக்கரிகள் சிறுநகரங்கள் வரை பெருகி விட்டது! குழந்தைகளின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடும் வழக்கம் குக்கிராமங்கள் வரை பரவி வருகிறது!

இத்தொழில்கள் அனைத்தும் தொடர வேண்டுமானால், வெணிலா, கொக்கோ, கோதுமை, கடலைப் பயறு, சமையல் எண்ணை - குறிப்பாக பாமாயில், கோதுமை ஆகியவற்றை விவசாயத்தில் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு நம் உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், இறுதியில் விவசாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவதில் வந்து முடிகிறது.!

இதுபோல, உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. சாதாரண டீயை விட, இஞ்சி டீ, லெமன் டீ உடலுக்கு நல்லதாக உணர்கிறோம். செக்கில் ஆட்டிய எண்ணையும், ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயப் பொருள்களும்தான் சுகாதாரமானது என்று தேடிப் பிடித்து வாங்குகிறோம். இருதய நோயாளிகளுக்கு மீன் சிறந்த உணவு என்கிறார்கள் மருத்துவர்கள். பக்க விளைவுகள் இல்லாத மருத்துவத்திற்கு சித்தா - ஹோமியோ மருந்துகளை நாடுகிறோம்.

இந்த நிலைமைகளை தக்க வைக்க வேண்டுமானால் மூலிகைப் பயிர்கள், இயற்கை விவசாயம், நவதானிய உற்பத்தி, இதுதொடர்பான தொழில்நுட்பங்கள், ஆகியவை விவசாயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன!

இவையெல்லாம் நம் கண்முன்னே நடக்கும் சில மாற்றங்கள். இதுபோல உலக நாடுகளின் மக்களிடம் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. உலகச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வேளாண் வணிக நிறுவனங்களுக்கு, நுகர்வோரின் மேற்கண்ட புதிய தேவைகள் - விருப்பங்களை நிறைவேற்றுவது அவசியமாக இருக்கிறது. எனவே உலக சந்தையின் தேவைக்கு ஏற்ப விவசாயத்தின் உற்பத்தியை மாற்றியமைக்க வேண்டியது கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ளது.

(தொடரும்)

- தேனி மாறன்