சில நாட்களுக்கு முன் வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, திருநீறு பூசி அலங்கோலம் செய்து, தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக படம் வெளியிட்டு, திருவள்ளுவரை சங்கியாக்கும் முயற்சியை செய்திருந்தது. இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என சங்கி கும்பல் தொடர்ச்சியாக பல தகிடுதத்தங்களைச் செய்து வந்தாலும் அதனால் ஒருபோதும் அதன் கொண்டையை மறைக்க முடிந்ததில்லை. எந்த வேடமிட்டு வந்தாலும் அதை மிக எளிதாக கண்டுபிடித்துவிடும் அளவிற்கு சங்கி கும்பலின் செயல்பாடுகளை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதற்குக் காரணம் இந்த மண்ணில் இயல்பாக உள்ள பார்ப்பன எதிர்ப்பு மரபு. அந்த மரபுதான் ஒட்டுமொத்த இந்தியாவிலும் தமிழகத்தை மட்டும் தனித்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றது. இப்படி தான் என்ன செய்தாலும் தமிழக மக்கள் மிக எளிதாகக் கண்டுபிடித்து அசிங்கப்படுத்தி விடுகின்றார்களே என்ற ஆத்திரத்தில்தான் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில காலிகள் சாணியைப் பூசி அசிங்கப்படுத்தி இருக்கின்றார்கள்.

arjun sampath saffronising valluvarநிச்சயமாக இதை யார் செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தன்னுடைய வீட்டிற்குத் தானே பெட்ரோல் குண்டு போட்டுக் கொள்பவர்கள் யார்? மோடி படத்திற்கு செருப்பு மாலை போட்டு கலவரத்தைத் தூண்டப் பார்த்தவர்கள் யார்? கள்ளக்காதல், கந்துவட்டி, ரியல் எஸ்டேட் , கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் போன்ற பிரச்சினைகளால் கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் 'இந்து மதத்திற்காக உயிரைக் கொடுத்த இந்து மதக் காவலன்’ பட்டம் கொடுக்க முயற்சித்தவர்கள் யார்? என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால் வள்ளுவர் சிலையை அவமதித்த காலிகளையும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

பொய்களையும், மோசடிகளையும், அல்பத்தனத்தையும் மூலதனமாகக் கொண்டு என்னதான் வரலாற்றைத் திருத்திவிடலாம் என ஒவ்வொரு முறையும் காவிக்கும்பல் திட்டமிட்டு செயல்பட்டாலும், அதனால் நடந்தது என்னவோ, இந்த மக்கள் தாம் காலம் காலமாக உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த பொய்களை ஆராய்ந்து பார்க்கும் ஆர்வத்தையும், தேடலையும் ஏற்படுத்தியதுதான். அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இனி எந்தப் பொய்யையும் தொடர்ச்சியாக சொல்லி மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கும் சூழ்நிலையில் கூட, சனாதன சிந்தனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சங்கி கும்பல் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெட்க, மானமின்றி தன்னுடைய வழமையான புரட்டு வேலையை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

வள்ளுவரை சனாதன பார்ப்பனக் கருத்தியலை ஏற்றுக் கொண்டவர் என்றும், இன்னும் ஒருபடி மேலே சென்று அவரை இந்து என்றும் இந்த மானங்கெட்ட கும்பல் தற்போது பரப்புரை செய்யக் கிளம்பி இருக்கின்றது. ஆனால் வள்ளுவர் முன்வைக்கும் கருத்தியலும், பார்ப்பன இந்துமதம் முன்வைக்கும் கருத்தியலும் நேர் எதிரானது என்பது திருக்குறளைப் படித்த யாரும் எளிதில் அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என்றும், பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்றும், குரங்குகள் என்றும், அடிமைகள் என்றும் இழிவு செய்கின்றது மநு தர்மம். ஆனால் “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்கின்றார் வள்ளுவர்.

சூத்திரன் வேதம் படித்தாலோ, இல்லை அதைக் காதில் கேட்டாலோ அவன் நாக்கை அறுக்க வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என எழுதியது பார்ப்பன மநு. ஆனால் “மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு” என்று கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் கற்றவர்களைப் போலப் பெருமையுடையவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று சொன்னவர் வள்ளுவர்.

சூத்திரனுக்கு ஓமத்தில் மிஞ்சியதைக் கூட கொடுக்கக்கூடாது என்று மநு சொல்லுகின்றது. வள்ளுவரோ “இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்” என்று ஒருவர் தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் தாம் மட்டும் தனியாக இருந்து உண்ணுதல் என்பது, வறுமையால் இரத்தலைக் காட்டிலும் கொடிது என்கின்றார்.

முறையற்ற புணர்ச்சிக்காகவும், பார்ப்பனர்களைக் காப்பாற்றவும் ஒருவன் பொய் சொன்னால் குற்றமில்லை என்கின்றது மநு. வள்ளுவரோ “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்று ஒருவன் எப்பொழுதும் பொய் சொல்லாமல் இருந்தால் அவன் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை, அதுவே எல்லா அறங்களின் பயனையும் தரும் என்கின்றார்.

வேள்வி மூலமும், சிரார்த்தத்திலும் கிடைக்கும் பசுக்களை பார்ப்பனர்கள் உண்ணலாம் என்கின்றது மநு. வள்ளுவரோ “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று” என்று உயிர்களைக் கொன்றும், நெய் முதலிய பொருள்களைச் சொரிந்தும் ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட, ஓர் உயிரைப் போக்கி, அதன் ஊனை உண்ணாமல் இருப்பது நல்லது என்கின்றார்.

வேதத்தையும், சுமிருதிகளையும் ஏற்றுக் கொள்ளாமல், அதை ஆராய்ச்சி செய்து மறுப்பவனை நாத்திகன் என்கின்றது மநு. ஆனால் வள்ளுவரோ "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கின்றார்.

பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்றும், ஆனால் சூத்திரனின் பொருளை பார்ப்பனன் அவன் விருப்பப்படி கொள்ளையிடலாம் என்றும், பார்ப்பனன் எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அவனை தூக்கில் போடும்படியான நிர்பந்தம் ஏற்பட்டாலும் அவன் தலையை மட்டும் மொட்டை அடித்து விட்டுவிட வேண்டும் என்றும் சாதிக்கொரு நீதியை கற்பிக்கின்றான் மநு. வள்ளுவரோ "ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை" என்று குற்றம் இன்னதென்று ஆராய்ந்து பார்த்து, யார் பக்கமும் சாயாமல் நடு நிலைமை பொருந்துமாறு நின்று, யாரிடத்திலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து நீதி வழங்குவதே செங்கோல் முறையாகும் என்கின்றது.

இப்படி சமதர்மத்தையும், மனித விழுமியங்களையும், ஒழுக்க நெறிகளையும், வாழும் முறையையும் தூக்கிப் பிடிக்கும் திருக்குறளுக்கும், அடிமைத்தனத்தையும், விபச்சாரத்தனத்தையும், ஒழுக்கம் கெட்ட தனத்தையும் தூக்கிப் பிடிக்கும் மநு முதலிய பார்ப்பனிய நூல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பது மணம் வீசும் மலர்களுக்கும், மலத்துக்கும் உள்ள வித்தியாசமாகும். ஆனால் மலத்தில் ஊறும் இழிந்த புழுவினும் கீழான வாழ்க்கையை வாழும் இழிபிறவிகள், தமிழர்கள் தன்மானமற்று, சுயமரியாதையற்று பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட அடிமைகளாய், பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாய் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழனத் துரோகிகளாய் மாறி, திருவள்ளுவருக்கு இந்து சாயம் பூசத் துடிக்கின்றார்கள். தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தெய்வப்புலவன் என்கின்றனர்.

வள்ளுவர் எந்த இடத்திலும் எந்த ஒரு பார்ப்பனக் கடவுள் பற்றியோ, வழிபாட்டு முறைகள் பற்றியோ எழுதவில்லை என்பதை நோக்கும்போது, வள்ளுவர் அதை எல்லாம் துச்சமாக ஒதுக்கி தள்ளியதைப் பார்க்க முடிகின்றது. மேலும், திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகளை வைத்து, வள்ளுவர் பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக் கொண்டவர் என்று சில பார்ப்பன அடிமைகள் இட்டுக் கட்டி எழுதுகின்றார்கள். பார்ப்பன உரையாசிரியர்களும், சூத்திர பார்ப்பன அடிமைகளும் எழுதிய உரைகளை வைத்துக் கொண்டுதான் இந்தக் கும்பல் தைரியமாக இந்தப் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் பகுத்தறிவுவாதிகளால் குறிப்பாக டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், கலைஞர் போன்றோரின் உரைகள் பார்ப்பன கபடத்தனத்தை அம்பலப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. பார்ப்பனியத்தை குறிப்பதாக சங்கிகள் சொல்லும் சில வார்தைகளுக்கு பகுத்தறிவுவாதிகளால் எழுதப்பட அர்த்தத்தைப் பார்த்தாலே யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்று நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஆதிபகவன் – ஆசிரியன்

அறிவன், வாலறிவன் –தூய்மையான அறிவுபடைத்த அறிவன்

மலர்மிசை ஏகினான் – உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் அறிவன் அல்லது சான்றோன்

இறைவன் – அரசன், தலைவன், மூத்த அறிவன்

பொறிவாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு செவி என்ற ஐம்பொறிகள் வாயிலாகச் செல்லும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்ற ஐம்புலன்களையும் அடக்கிய அறிவாற்றலில் சிறந்த அறிவன் அல்லது சான்றோன்

தனக்கு உவமை இல்லாதான் – தனக்கு ஓப்புமையாக வேறு எவரையும் கொண்டிருக்காத அறிவாற்றலில் சிறந்த அறிவன் அல்லது சான்றோர்.

அறவழி அந்தணன் – அறக்கடலாக விளங்கும் செந்தண்மையை உடைய அறிவாற்றலில் சிறந்தவானாகிய அறிவன் அல்லது சான்றோன்

எண் குணத்தான் - மதிப்பு நிறைந்த பண்புகளை உடையவனாகிய அறிவன்

தெய்வம் – உயர்ந்தோர், மேலோர், இயற்கை ஆற்றல், இயற்கை சூழ்நிலை

தேவர் – மேலானவர், சிறப்புக்குரியவர், பெருமைக்குரியவர்

வானோர் – மேலவர்

புத்தேள் – புதுமை, புதியவர்

இந்திரன் – இனிய திறமையுடையவன் (இந்திறன் என்ற சொல் ‘இந்திரன்’ என்று திரிபுற்றதற்கு, ‘ற’ கர, ‘ர’கரப் போலி என்று கூறுவர்)

செய்யவள் – இளையவள், செல்வ மகள்

தாமரையினாள்- திருமகள்

தவ்வை- மூத்தவள்

மூதேவி, முகடி- மூதேவி, வறுமையாள், பாழ்படுத்துபவள்

பேய் மற்றும் அலகை – அறிவின்மை, தீய பண்பினைக் குறிக்கும் சொல்

கூற்று மற்றும் கூற்றம்- சாவு, இதை ஆண்பாலாக உருவகப்படுத்தி கூற்றுவன் என்றும் கூறுவார்கள்

காமன் – காதல் வேட்கையின் போது பெண்பாலை வருத்துகின்ற ஆண்பால் தன்மையைக் காமன் என்று உருவகப்படுத்திச் சொல்வது நூல் வழக்கம்.

அணங்கு- காதல் வேட்கையின் போது ஆண்பாலை வருத்துகின்ற பெண்பால் தன்மையை அணங்கு என்று உருவகப்படுத்திச் சொல்வது நூல் வழக்கு.

ஊழ்- உள்ளிருந்து இயற்கையாகத் தானே வெளிப்படும் இயற்கைப் பண்பறிவு

வினை- செயல், தொழில், போர், முயற்சி, துன்பம்

அளறு- ஆழ்தல்

ஒருமை;இருமை;எழுமை - ஒரு தன்மை, இரு தன்மை, ஏழ்தன்மை அதாவது ஏழ் தலைமுறை என்று பொருள்படும்

இன்மை; மறுமை- இன்மை என்பது இந்த நிலை இந்த வாழ்வு என்று பொருள் படும். மறுமை என்பது மறுநிலை, மறுவாழ்வு, புது வாழ்வு என்று பொருள் படும்.

ஏழு பிறப்பு- பல தோற்றங்கள்

தென்புலத்தார்- தென் புலத்தைச் சேர்ந்த அறிவாளர்களைக் குறிக்கும் சொல். (திருக்குறள் தெளிவுரை: டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்)

இதுதான் உண்மை நிலை. இதை எடுத்துச் சொல்லாமல் விட்டுவிட்டால் அம்பேத்கரை, பகத்சிங்கை காவிமயப்படுத்த முயன்றதுபோல இந்தச் சங்கி கும்பல் வள்ளுவரையும் காவி மயப்படுத்தி விடுவார்கள். இவர்களின் நோக்கமே தமிழர்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது, பார்ப்பனர்கள் தான் தமிழர்களுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத் தந்தவர்கள் என்று தமிழர்களைக் கொச்சைப்படுத்துவதுதான். கீழடியில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தார்கள், ஆனால் கீழடி பார்ப்பன வரலாற்றுப் புரட்டர்களுக்கு பலத்த அடியைக் கொடுத்து விட்டது. அதனால் உலகமே தமிழர்களின் சிந்தனைத் திறத்தை பார்த்து வியக்கும் வகையில் உலகத்துக்கே பொதுவான ஒழுக்க நெறிகளை வகுத்தளித்த வள்ளுவரை தன்வயப்படுத்த இழிவான பார்ப்பனியம் துடித்துக் கொண்டிருக்கின்றது. இதைத் தமிழினத்தின் மீது பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிமைகள் தொடுக்கும் கருத்தியல் போராக எண்ணி களமாடவிட்டால், தமிழர்கள் தன்னுடைய சுய அடையாளங்களை எல்லாம் இழந்து பார்ப்பனப் புரட்டுகளையே தன்னுடைய உண்மையான வரலாறு என்று கருதும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.

- செ.கார்கி