"இவுங்க ஆளுக்காளு கொடுக்குற நிவாரணத் தொகையை பார்த்தா... நம்மளையும் ஆழ்துளைக்குள்ள போட்டுருவாங்களோ" என்று ஒரு குழந்தை பயப்படும்படியாக மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்...

இதன் உள்ளர்த்தம் தெரியாமல் சில தாய்மார்களே அதனைத் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்...

sujith motherஉண்மையில் இதுதான் பாசிச வலதுசாரிகளின் பொய்யான பரப்புரையின் வீரியம்... ஏழை எளியவர்களையும், அவர்களின் குழந்தைகளையும் எவ்வளவு கீழ்த்தரமாகவும் நாம் விமர்சிக்கலாம்... அதற்கு எந்த எதிர்வினையுமே நிகழாது, மாறாக நமது சிந்தனைகளை அப்படியே அதன் உள்ளர்த்தம் தெரியாமல் பரப்புவார்கள் என்று பார்ப்பனர்கள் மிகவும் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்... இவ்விதமாக நாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் விசயம், மெல்ல மெல்ல நம் மனதை அந்தப் பணத்தையும், அதற்கான நோக்கத்தையும் கொச்சைப்படுத்தத் தோன்றும் எண்ணத்தை விதைக்கும்.

அரசின் அலட்சியத்தால் மரணம் அடைந்த சுஜீத்தின் பெற்றோருக்கு இந்தப் பணம் அனைத்து வலிகளையும் தீர்த்து, மகிழ்ச்சி அளிக்கும் என்று எண்ணுவதைக் காட்டிலும் கொடூர மனம் இருக்க முடியாது...

குழந்தையைப் பார்த்துக் கொள்ளத் தவறிய அந்தத் தாய்க்கு நிவாரணம் ஒரு கேடா? என்ற ரீதியிலும் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு முன்னர் நிகழ்ந்த ஆழ்குழாய் கிணறு மரணங்கள் நமக்கு படிப்பினைகளை அளித்திருக்கின்றன. அதன்பொருட்டுதான் பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அந்த வாரியத்தின் பணி மாவட்டங்கள், அந்த மாவட்டங்களின் கீழ வரும் கிராமங்களில் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் மூட வேண்டும்... இத்தனை நாளைக்குள் மூடியிருக்க வேண்டும்... அப்படி ஆழ்குழாய்க் கிணறுகளை மூடாதோருக்கு தண்டனையும் அபராதமும் விதித்திருக்க வேண்டும்...

அந்தப் பணிகளை செய்யாமல் மெத்தனமாக விட்டதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பதை கள்ளத்தனமாய் மறைத்துவிட்டு, தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் மீது குற்றம் சுமத்தும் வலதுசாரி சிந்தனையாளர்கள் அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மகனை இழந்த தாய்மீது இவ்விதம் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

சாலையில் ஒரு பள்ளம் இருந்தால் அதனைச் சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. தரமான சாலைகளைப் போட வேண்டியது அரசின் கடமை... இப்படி இருக்கையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அந்தப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார், "சாலையில்தான் பள்ளம் கிடக்கிறதே... பார்த்துப் போயிருக்க வேண்டாமா? இதற்கெல்லாம் அரசை குறை கூறுவதா?" என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?

அதே கோபம் குழந்தை சுஜித் இறந்த விவகாரத்தில் அரசைக் குறை கூறுவதை விடுத்து அவனின் பெற்றோரை குறைசொல்லுவதும் அந்த ரகம்தான்.

கடந்த சில மாதத்திற்கு முன் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மங்கை உயிரிழந்தார். அவர் ஹெல்மெட் போடவில்லை என்றும்... அவர் இறந்தது அவரின் தலைவிதி என்றும் தேமுதிகவின் பிரேமலதா சொன்னார்.

பிரேமலதா சொன்னதைவிடவும் அதிக காழ்ப்பு நிறைந்தது சுஜித்தின் தாய் மீதான கேவலமான விமர்சனங்கள்...

நகைச்சுவை என்ற பெயரால் ஒரு தாயின் வேதனையோடு விளையாடாதீர்கள்...

- சஞ்சய் சங்கையா