Mathimaran, Seeman and Ramakrishnan24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த 'வே. மதிமாறன் பதில்கள்' நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.

என் புத்தகங்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அறிமுகம் விழா நடத்துக்கிற என் அருமை அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களே, போர்குரலாய் முழுங்கி முடித்திருக்கிற சீமான் அவர்களே, அண்ணன் ஆறுச்சாமி மற்றும் பெரியர் திராவிடர் கழக தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்.

பெரியாரோட சிறப்பு அல்லது நுட்பம் என்பது, இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் கவனிச்சிக்கிட்டிருந்த ஒரு செய்தியை அதுவரையாரும் பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தது.

அதுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், குசேலன் கதையை சொல்லலாம். சமீபத்தில் வந்த குசேலன் கதையில்லை. ஒரிஜினல் குசேலன். ரஜினியின் குசேலன், படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்களில் இருந்து, திருட்டு வி.சி.டி போட்டவர்கள்வரை எல்லாரையும் குசேலனாக மாத்திடுச்சாம் இந்த குசேலன்.

ஆனால் அந்த குசேலன், 24 குழந்தைகளைப் பெற்றதால் வறுமையில் வாடுகிறான். அதனால் தன் நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி கேட்கப் போகிறான். கண்ணன் அவனுக்கு உதவி செய்கிறான் என்பது கதை.

24 குழந்தைகள் என்பது வறுமையைக் காட்டுவதற்காக புனையப்பட்ட திரைக்கதை. பெரியார் கேட்டார், "வருடத்திற்கு ஒரு பிள்ளை என்ற வீதம், பெற்றிருந்தாலும் நான்கு பிள்ளைகள் 20 வயதுக்கு மேல் இருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் யோக்கியதை என்ன? அவனுக்குப் பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? பார்ப்பனர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைத்து சாப்பிட மாட்டர்கள் என்பதற்கு இந்தக் கதையே சாட்சி"

இந்த சிந்தனை முறையை பெரியார்தான் துவக்கி வைக்கிறார். பல தமிழறிஞர்களுக்கும் ஒரு விஷயத்தை எப்படி பார்ப்பது? என்பதை பெரியார்தான் சொல்லிதருகிறார். ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை....

பொதுவாக பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனரல்லாதவர்கள் மத்தியில் எப்படி இருக்குன்னா?, ஒரு பார்ப்பனரோடு இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உறவு எப்படி இருக்கோ, அதைப் பொறுத்துதான் இருக்கு. பார்ப்பனரால் தனிப்பட்ட முறையில் லாபம் அடைந்தால், நம்பளப் பார்த்து அவுங்க கேக்கறது; "பாப்பான் ஒருத்தன்தான் கெட்டவனா? மத்தவங்க எல்லாம் யோக்கியமா?' அப்படின்னு.

பிறகு பார்ப்பனர்களோட தனிப்பட்ட முறையில் நஷ்டம் ஆயிட்டா உடனே, "இந்த பாப்பார பசங்களையே நம்பக் கூடாது." இதுதான் இன்றைய பார்ப்பன எதிர்ப்பின் அடிப்படையாக இருக்கு.

ஆனால் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு இப்படி தனிப்பட்ட லாப, நஷ்டங்களை உள்ளடக்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்கள் பெரியாரிடம் அளவுகடந்த அன்போடுதான் நடந்து கொண்டார்கள். அவர்களால் பெரியாருக்கு மிகப் பெரிய பதவிகளும் கிடைத்திருக்கிறது.

ஈரோடு சேர்மன் பதவியை ராஜினமா செய்து விட்டு காங்கிரசில் தந்தை பெரியார் சேரப் போகும் போது, சர்.பி. ராஜகோபால் ஆச்சாரியார் 'ராஜினமா பண்ண வேண்டாம்' என்று கெஞ்சுகிறார். (ராஜாஜி அல்ல)

இதைப் பற்றி தந்தை பெரியாரே எழுதியிருக்கிறார்.,

"சர்க்கர் நடத்தையைக் கண்டித்து சேர்மன், தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லா போர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபிசர் முதலிய பல கவுரவ வேலைகளை ஒரே காகிதத்தில் ராஜினமா கொடுத்தேன். 'சுதேசமித்திரன்', 'ஹிந்து' இரண்டும் தலையங்கம் எழுதி என்னைப் புகழ்ந்து பிரமாதப்படுத்திவிட்டன.

சர்.பி. ராஜகோபலாச்சாரியார், தன்னை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வந்து, அடுத்த நாள் காலையில் சந்திக்கும்படி சென்னையிலிருந்து தந்தியனுப்பினார். அப்போது, அவரை ரயிலில் போய் பார்த்தேன். பக்கத்தில் அவரது மலையாள மனைவி இருந்தார். அந்த அம்மையாரிடம் அடிக்கடி என்னைப்பற்றி அவர் பேசுவது வழக்கம். அந்த அம்மையாரும் என்னிடம் அன்பாய்ப் பேசுவார்கள்.
................................................................................................................................................................................................
அந்த அம்மையார் என்னைக் கண்டதும் அன்பாய் வவேற்று, தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொன்னார்; நான் உட்கார்ந்தேன். உடனே அவர் கணவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் நின்றுகொண்டார். அம்மையார், "நாய்க்கரே, நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டீர்களாம். நிஜமா? என்றார்.

நான் "ஆமாம்" என்றேன்.

"அது சரியல்ல, எங்கள் அய்யர் உங்களுக்கு ராவ்சாகிப் பட்டம் சிபார்சு பண்ணியிருக்கிறார்; அய்யருக்கு அவமானமாய்ப் போய்விடும். அய்யர் ரொம்ப வருத்தப்படுகிறார். உங்களுக்கு மேலும் உத்தியோகம் கொடுக்க வேணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் கண்டவங்க பேச்சைக் கேட்டு அப்படிச் செய்யாதீர்கள். அதை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.

"செய்து போட்டேன் அம்மா. இனி, வாபஸ் வாங்கினால் எனக்கு அவமானம். ஆபீஸிலும் நான் எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். ஊரிலும் கலெக்டர் முதல் கேட்டும் 'மாட்டேன்' என்று சொல்லிவிட்டேன். இனி, எப்படி வாபஸ் வாங்குவது? மன்னிக்கவேண்டும்." என்று கெஞ்சினேன்.

அய்யர் இதை ஜாடையாக பார்த்துக் கொண்டிருந்தார். 'முடியவில்லை' என்று அறிந்து, வந்து வண்டிக்குள் ஏறினார்."

பெரியாரே தன்னுடைய சுயசரிதையில் இதை குறிப்பிட்டு இருக்கிறார். இது காங்கிரசில் சேருவதற்கு முன் இருந்த நிலை. காங்கிரசிலும் பெரியாருக்கு நிரம்ப முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள், பார்ப்பனர்கள். ஆனால் பெரியார், தன் நலம் சார்ந்து அல்ல, பொதுநலம் சார்ந்து பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காகத்தான் பார்ப்பன எதிர்ப்பு என்கிற நிலைக்கு வருகிறார்.

ஆக பார்ப்பன எதிர்ப்பு என்பது ஒரு தத்துவம். எழுச்சிமிக்க அரசியல்.

***

பெரியார் மீது அல்லது திராவிட இயக்கத்தின் மீது சுமத்தப்படுகிற மிகப் பெரிய குற்றச்சாட்டு 'இலக்கியத்துக்கு ஒண்ணும் செய்யல' அப்படிங்கறது.

இது மிகப் பெரிய மோசடியான கேள்வி. சமூக மாற்றத்திற்கு பாடுபட்ட மிகப் பெரிய தலைவரை 'இலக்கியவாதியாக ஏன் இல்லை-?' அப்படின்னு கேள்வி கேட்கறதும், வெறும் இலக்கியவாதியாக இருந்த பார்ப்பன பாரதியை ஒரு பெரிய சமூக மாற்றத்திற்குப் பாடுபட்ட தலைவராக சித்தரிச்சி பிரச்சாரம் செய்யறதும் பார்ப்பனியத்தின் நவீன வடிவம்.

எந்த பொழிப்புரைகளும் தேவையற்று மக்களிடம் நேரடியாகப் பேசியவர் தலைவர் பெரியார். அவர் அறிவாளிகளை, இலக்கியவாதிகளை நம்பவில்லை. தடி தடி புத்தகங்களாலோ, அதைப் படிப்பவர்களாலோ சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை அப்படிங்கறது பெரியரோட எண்ணம்.

அதை உண்மை என்று நிரூபித்தார்கள் பெரியார் காலத்தில் வாழ்ந்த கம்பராமாயணம், பெரியபுராணம் போன்றவற்றில் கவிழ்ந்து இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டிருந்த தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள்.

* புரட்சிக்கு முந்தைய சோவியத்தில் ‘ஸ்னேனியெ’ என்கிற புகழ்பெற்ற பதிப்பகம் மூடப்பட்டது. மேற்கத்திய இலக்கியம், ருஷ்ய இலக்கியம், பண்பாட்டின் வரலாறு இவை பற்றியெல்லாம் நிறையப் புத்தகங்கள் கொண்டு வந்த பதிப்பகம் அது. அந்தப் பதிப்பகம் மூடப்பட்டதில் மாக்சீம் கோர்க்கிக்கு மிகுந்த மனவருத்தம். மீண்டும் அதுபோல் ஒரு பதிப்பகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கோர்க்கிக்கு.

“ஸ்னேனியெ” பதிப்பகம் மூடப்பட்டது குறித்தும், புது பதிப்பகத்தின் தேவைக் குறித்தும் வலியுறுத்தி, தலைவர் லெனினிடம் மாக்சீம் கோர்க்கி முறையிடுகிறார். அதற்குத் தலைவர் லெனின்:

“இலக்கியத்தில் நல்ல எதார்த்தவாதியாக இருக்கிறீர்கள். மக்களைப் பற்றிய மதிப்பீட்டில் கற்பனாவாதியாக விளங்குகிறீர்கள். பருத்தப் புத்தகங்களை வெளியிட இது சமயம் அல்ல. பருத்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் அறிவுஜீவிகள்தாம். அவர்களோ சோஷலிசத்திலிருந்து பின்வாங்கி மிதவாதத்தை நோக்கிச் செல்வதைக் காண்கிறோம். அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்ட பாதையிலிருந்து அவர்களை நம்மால் அகற்ற முடியாது. நமக்குத் தேவையானைவை செய்திதாளும், துண்டு பிரசுரங்களும்தான்”

1925ல் ஆரம்பித்து 1973 வரை பெரியார் - 25 பைசவிற்கு, 50 பைசாவிற்கு, ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கு என்று நிறைய மலிவுப் பதிப்பில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய எளிய மக்களின் உயர்வுக்காக அந்த மக்களின் மொழி நடையினிலேயே புத்தகங்களை வெளியிட்டார். குடியரசு, விடுதலை, உண்மை என்று பத்திரிகைகளை நடத்தினார். பெரியாரின் இயல்பு லெனின் சொன்னதற்கு பொருத்தமாக இருந்தது.

* 'கம்பராமாயணத்தில் உள்ள அழகியலை அதிலுள்ள அறிவியல் கருத்துகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பெரியார் அதை கண்மூடித்தனமாக எதிர்த்தார்' அப்படிங்கறது இன்னொரு இலக்கிய அவதூறு.

சமீபத்தில், என்னுடைய வலைப்பதிவுக்கு இது சம்பந்தமாக ஒரு கேள்வி;

‘மாணவர்களுக்கு கம்பராமாயணத்தில் உள்ள அறிவியல் கருத்துகளை சொல்லிக் கொடுங்கள்’ என்று பெரியார் உடன் இருந்து அரசியலுக்கு வந்த ஆர்.எம். வீரப்பன் சொல்லியிருக்கிறாரே? இதுதான் பெரியார் சீடர்களின் யோக்கியதையா?

பெரியார் உடன் நாய், பூனை எல்லாம்தான் இருந்தது. அதெல்லாம் பகுத்தறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான் பகுத்தறிவா?

‘அறிவியல் கருத்துக்கள் வேண்டும் என்றால் அறிவியல் நூலைப் படியுங்கள். மத நூல்களில் அறிவியலைத் தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது’ என்று பெரியாரே இதுபோன்ற மோசடி அறிஞர்களின் கருத்துகளைக் கண்டித்திருக்கிறார். ஆர்.எம். வீரப்பன் என்ற ‘விஞ்ஞானியின்’ ஆலோசனையைக் கேட்டு நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்குவது என்றால் போய் பொறுக்குங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்று எழுதியிருந்தேன்.

(தொடரும்)

- வே.மதிமாறன்