இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தவும் அதிலிருந்து அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான ஆரோக்கியமான உரையாடல் களத்தை உருவாக்கவும் அதற்கான சுழலை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட அமைதிக்கான ஒரு பயணம் இது.

இன்றைய போர்ச்சூழல், இலங்கையின் இனப் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் தீர்க்கும் என்பதற்கான ;எந்தவிதமான நம்பிக்கையையும் தருவதாக இல்லை. மாறாக அழிவையும் ஆரோக்கியமற்ற சூழலையும் பகைமை உணர்வையும் ஆழமான வடுக்களையும் வன்மத்தையுமே விளைவாகத் தருகின்றது. மேலும் நிகழ்கால, எதிர்கால சந்ததியினரை வன்முறையாளர்களாக ஆயுதபாணிகளாக உருவாக்குவதுடன் அவர்களை உடல், ஊளவியல் அடிப்படையில் நோயாளிகளாகவும் மாற்றுகின்றது.

இந்தப் போக்கானது இம்மனிதர்களிடமிருந்து இவற்றை அகற்றமுடியாதவாறு ஆழமான உடல் உள பாதிப்பை நீண்டகாலத்திற்கு ஏற்படுத்தக் கூடியது. மேலும் இயற்கை வளங்களும் பயன்படுத்த முடியாதவாறு மாசடைவதுடன் அழிவுக்கும் உள்ளாகின்றது. இது மனித வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதல்ல. மேலும் எதிர்காலம் தொடர்பான எந்தவிதமான நம்பிக்கையையும் இந்த அழிவுகள் தரவில்லை. ஆகவே தற்பொழுது நடைபெறும் போரும் ஆயுத வழிப் போரட்டமும் வன்முறை நடைவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான ஆரோக்கியமான சுழலை உருவாக்கவேண்டும்.

அமைதியான ஒரு சுழலிலையே பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் ஆரோக்கியமான முடிவுகளையும் தீர்வுகளையும் இனங்காணவோ முன்வைக்கவோ முடியும். ஆகவே, அமைதியான சமாதான சூழலை இலங்கையில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நான்கு முனைகளிலும் தளங்களிலும் கோரிக்கைகளை முன்வைத்து நமது செயற்பாடுகளையும் பயணத்தையும் ஆரம்பிக்க வேண்டும். அதாவது, இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் மற்றும் சிங்கள கட்சிகளுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்களுக்கும், இலங்கையுடன் தொடர்புடைய பிற நாடுகளின் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும். மற்றும் கஸ்டப்பட்டு ஆனால் பாதுகாப்பாக புலம் பெயர்ந்து வாழும் இலங்கை மக்களையும் நோக்கி பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த அமைதிக்கான பயணம் நடைபெறுகின்றது.

இலங்கை அரசிடம் மற்றும் சிறிலங்காவின் அனைத்து கட்சிகளிடமும் போரை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைப்பது. மேலும் இலங்கை அரசிடம் இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் படியும் வேண்டுகோள் விடுவது.

விடுதலைப் புலிகளிடமும் மற்றும் அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களிடமும் வன்முறை பாதையை கைவிட்டு தமது உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிமுறைகளில் ஆரோக்கியமான போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுவது.

அமெரிக்க ஆசிய ஐரோப்பிய நாட்டு தலைவர்களிடமும் சர்வதே சமூகத்திடம் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை இன முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆதரவை அளிக்கும்படி கோருவது. மேலும் இலங்கை அரசு போரை நிறுத்துவதற்கும் விடுதலைப் புலிகளையும் பிற தமிழ் ஆயுதக் குழுக்களையும் வன்முறையற்ற பாதைக்கு கொண்டு வருவதற்கும் நிர்ப்பந்திக்கக் கோருவது.

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கை (தமிழ் சிங்கள மொழி பேசும்) மக்களை வன்முறை பாதைக்கு ஆதரவளிக்காது அமைதிக்கும் சமாதானத்திற்கும் ஆதரவளிக்கக் கோருவதுடன் தாம் வாழும் நாடுகளிலுள்ள அரசிடம் இலங்கை இனப் பிரச்சனையை முரண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தொடர்ச்சியான அழுத்தங் கொடுக்க வேண்டுகோள் விடுவது. மேலும் இந்நாடுகளிலுள்ள இலங்கை துர்துவராலயங்களின் முன்னால் அமைதியான முறையில் தொடர்ச்சியாக செயற்பாடுகளை போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தும் சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்குவதற்கும் தீர்வு ஒன்றினை முன்வைக்கவும் வலியுறுத்துவது.

இந்த நோக்கங்களுடன் உடன்பாடு உள்ளவர்களும் இலங்கையில் அமைதியை உருவாக்கி சமாதானத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் இன பிரச்சனைக்கான முரண்பாடுகளுக்கு தீர்வைக் காண ஆரோக்கியமான சுழலை உருவாக்கலாம் என நம்பிக்கை உள்ளவர்களும் இணைந்து செயற்படுவதற்கான அழைப்புபிதழ் இது.

நண்பர்களே! இப்பயணம் எதிர்வரும் 20ம் திகதி மே மாதம் டொரோன்டோவிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன் ஆரம்பமாகி பின் 22ம் திகதி குயின்ஸ் பாக்கிலுள்ள ஒன்டாறியோ பாராளுமன்றத்திற்கு முன்பும் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவிலுள்ள உலகத் தமிழர் இயக்க காரியாலயத்திற்கு முன்பாகவும் மற்றும் ஒட்டோவாவிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பாகவும், கனடிய பாராளுமன்றத்திற்கு முன்பாகவும் அடுத்த நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. இதில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் தியானம் மற்றும் உண்ணாவிரதம் என்பன அனுஷ்ட்டிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மேலும் இச்செயற்பாட்டிற்கு அனைவரினதும் ஆதரவு கிடைக்குமாயின் இப்பயணத்தை கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கும் பின்பு ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஐர்மனி, சுவிஸ், நோர்வே மற்றும் ஆசிய நாடுகளான யப்பான் சீனா போன்ற நாடுகளின் தலைநகரங்களிலுள்ள இலங்கை தூதுவராலயங்களிற்கு முன்பாகவும் அந் நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு முன்பாகவும் மற்றும் இந்திய நாட்டில் டெல்லியிலும் சென்னையிலும் இறுதியாக இலங்கையின் பிரதான நகரங்களிலும், போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கான தீர்வைக் காணுமாறு கோரி அமைதிக்கான சமாதானத்தற்கான செயற்பாட்டை நோக்கமாகக் கொண்டு இப் பயணத்தை முன்னெடுக்கலாம் .

இச் சந்தர்ப்பங்களில் பின்வரும் கடிதங்களை இலங்கை துர்தவர்களிடமும் அந்நாடுகளின் தலைவர்களிடமும் ஒப்படைக்கப்படும். இக்கடிதங்களில் உங்களது கருத்துக்களும் இடம் பெறவேண்டுமாயின் தொடர்பு கொள்க.

நன்றி

மதிப்புக்குரிய இலங்கை ஐனாதிபதி அவர்களுக்கு,

இலங்கை ஒரு அழகான நாடு. புல்வேறு வளங்களையும் தன்னகத்தே கொண்ட சிறந்த நாடு. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெறும் போரும் வன்முறையும் இந்த அழகான நாட்டையும் அதன் வளங்களையும் அழிக்கின்றது என்பது நீங்கள் அறிந்ததே. இந்த அழிவை நிறுத்தவும் இதன் வளங்களை பாதுகாக்கவும் மக்களின் ஆதரவுடன் தங்களால் நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் அவ்வாறு செய்யாது நீங்களும் இந்த போரை முன்னெடுப்பது கவலைக்கிடமானது.

கடந்த கால இலங்கை தலைவர்களும் உங்களைப்போல இனப் பிரச்சனைக்கான தீர்வாகப் போரையே முன்மொழிந்து வழி நடாத்தி தோல்வியையே தழுவினர் என்பது நாம் அனைவரும் அறிந்த யதார்த்தமான ஒரு உண்மை. இதுவரை நடந்த போரில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி நடைபெற்ற அல்லது நடைபெறுகின்ற ஒன்று. ஆனால் பிரச்சனைக்கான தீர்வு மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. மாறாக மக்களுக்கு துன்பமும் துயரமுமே கிடைத்தன. உயிர்கள் எந்தவிதமான மதிப்புமின்றி அழிக்கப்பட்டன. இந்த அழிவுகளிலிருந்தும் எந்தவிதமான முடிவுகளும் இனப் பிரச்சனைக்கு கிடைக்கவில்லை. ஆனால் அழிவு மட்டும் இரு பகுதிகளிலும் தொடர்கின்றது.

நீங்கள் பிற இலங்கை தலைவர்களிலிருந்து வேறுபட்டவர். காரணம் மக்களின் பிரச்சனைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர். மக்களுடன் மக்களாக இருந்து செயற்பட்டு நாட்டின் தலைவரானவர். ஆகவே மக்களின் பிரச்சனைகளை வேதனைகளை உங்களுக்கு விபரிக்கத் தேவையில்லை. உங்களால் அவற்றை உணர முடியும். புரிந்து கொள்ள முடியும். இலங்கையின் தெற்குப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அதே பிரச்சனைகளையே வடக்கு கிழக்கு மக்களும் எதிர் கொள்கின்றனர். மேலும் தெற்குப் பகுதி மக்களைவிட வடக்கு கிழக்கு மக்கள் இன அடிப்படையில் இதுவரை காலமும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர் என்பது கடந்தகால நிகழ்கால வரலாறு. இந்த வரலாறு தொடராது நிறுத்தப்படவேண்டிய பொறுப்பு நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களுடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் நீங்களும் தொடர்ந்தும் போரை முன்னெடுத்துச் செல்வதால் இங்கு மீண்டும் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

இன்று இரு பகுதி மக்களும் ஒருவர் மீது மற்றவர்கள் நம்பிக்கை அற்று சந்தேகப் பார்வை கொண்டு வாழ்கின்றனர். இந்த சந்தேக பார்வையை அகற்றி மக்களுக்கு இடையில் மீண்டும் நம்பிக்கையை வளரச்செய்ய வேண்டியது நாட்டின் தலைவர் என்றடிப்டையில் உங்களின் பொறுப்பு. இதுவே இலங்கையில் அமைதியும் சமாதானமும் நிலவுவதற்கு வழிவகுக்கும்.

புல்வேறு நாடுகளின் நடைபெற்ற உள்நாட்டு போராக இருந்தால் என்ன நாடுகளுக்கு இடையிலான போராக இருந்தால் என்ன அனைத்தும் இறுதியாக பேச்சுவார்த்தைகள் மூலமும் பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமுமே தீர்க்கப்பட்டன. போரினாலும் வன்முறையினாலும் தீர்வு காணப்பட்ட நாடுகளில் தொடர்ந்தும் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பதிலாக பதட்டமும் அமைதியின்மையுமே காணப்படுகின்றன. ஆகவே, நீங்களும் இந்த இனப் பிரச்சனைக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வைக் காண, போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்கி ஆரோக்கியமான திறந்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு நியாயமான தீர்வை முன்வைத்து சிறந்த இலங்கை தலைவர் என்ற பெயரை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நீங்கள் போரை வன்முறை பாதையை முன்னெடுப்பதானது நீங்கள் பின்பற்றும் புத்தரின் போதனைகளுக்கு எதிரானது என்பது நீங்கள் அறிந்ததே. புத்தரின் போதனைகளை இலங்கையில் நிலைநாட்டுவதற்கு போரை நிறுத்தி அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதே புத்தருக்கு செய்யும் மரியாதை மட்டுமல்ல அவரை புரிந்து கொண்டதற்கும் அடையாளமாகும். முhறாக போரை முன்னெடுப்பது புத்தருக்கு செய்யும் துரோகம் என்றால் மிகையல்ல. மனித வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய புத்தரின் போதனைகளை பரப்புவதற்கு அவரது வழிகாட்டலின் படி வாழ்வதும் செயற்படுவதுமே சிறந்த வழி.

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் தங்களுடைய கடந்த கால தவறுகளை மன்னித்து உங்கைள சிறந்த தலைவராக போற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. போரை நிறுத்துக்கள்! புpரச்சனைக்கு நியாயமான தீர்வை முன்வையுங்கள்! அமைதியை உருவாக்கி சமாதானத்தை கட்டி எழுப்புங்கள்.

நம்பிக்கையுடன்
அமைதியையும் சமாதானத்தையும் நேசிப்பவர்கள் சார்பாக,

மதிப்புக்குரிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு,

தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காக விடுதலைக்காக கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயுத வழி போரட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்தி செல்கின்றீர்கள். உங்களது உறுதியில் திறமையில் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பெருமையும் கொள்கி;றனர். மேலும் சர்வதேசமும் உங்களைப் பார்த்து வியக்கின்றது.

இது காலவரையான ஆயுத வழி வன்முறை போரட்ட வழி முறைகளால் சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களின் மீதான சிறிலங்கா அரசின் அடக்கு முறைகளையும் உரிமைகள் மறுக்கப்பட்டதையும் தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. இன்று சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக கவனம் கொள்கின்றது. இந்த நிலை உருவாகுவதற்கு உங்களின் முக்கியமான பங்கு உண்டு என்பது மறுக்கப்பட முடியாதது.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதிலும் இன முரண்பாட்டை தீர்ப்பதிலும் ஆயுதப் போரட்ட வழி ஊடாக எதுவரை வந்துள்ளீர்கள் எவற்றை பெற்றுள்ளீர்கள் என திரும்பிப் பாhக்கும் பொழுது நம்பிக்கையின்மையே தெரிகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மேலும் கடந்த கால வன்முறை போரட்ட வழி முறைகளில் ஏற்பட்ட தவறுகளான ஐனநாயகமின்மையும், முக்கியமான அரசியல் தலைவர்களைக் கொலை செய்ததும் மற்றும் சகோதரப் படுகொலைகளும் விடுதலைப் போராட்டத்தை சிதையடையவே செய்துள்ளமை அனைவரும் அறிந்த ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை. இதனால் தவறுகளே செய்யாது செயற்பட முடியும் என யாரும் நம்பவில்லை. ஆனால் ஒரு தவறை மீள மீள செய்வது தவறானதே. இது முன்னேற்றகரமானதல்ல.

இனப் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்காது போகுமாயின், ஆயுதப்போராட்டத்திற்காக இதுவரை அர்ப்பணிக்கப்பட்ட அர்ப்பணிக்கப்படும் மனித வளங்களும் செலவு செய்யப்படும் பொருட்களும் பணமும் இறுதியில் அர்த்தமின்றி சென்றுவிடலாம். ஏனெனில் இந்த வன்முறை பாதையால் பெரும் பயன் அடைபவர்கள் ஆயுத வியாபாரிகளும் இடைத் தரகர்களுமே. இவர்களுக்கு இலங்கையின் இன பிரச்சனை மட்டுமல்ல பிற நாடுகளில் நடைபெறும் வன்முறை செயற்பாடுகளும் ஆயுத போராட்ட வழிமுறைகளும் ஒரு முடிவுக்கு வருவதில் அல்லது தீர்வு ஒன்றை நோக்கிச் செல்வதில் ஆர்வமோ அக்கறையோ இல்லாதவர்கள். அவர்களது ஒதே நோக்கம் இந்த சுழலைப் பயன்படுத்தி பணம் உழைப்பதே. இது நீங்கள் உட்பட நாம் அனைவரும் அறிந்த ஒரு உண்மை.

இதனால் தொடர்ந்தும் விடுதலைக்காக உரிமைகளுக்காக ஆயுத வழி போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம் என்றால் மிகையல்ல. ஏனெனில் ஆயுத வழி போரட்ட முறைமைகள் புதிய மிலேனியத்தில் தடம் மாறி செல்கின்ற ஒன்றாகவே இருக்கின்றது. ஆகவே உரிமைகளுக்கான விடுதலைக்கான போராட்ட பாதைகள் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ் விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல சர்வதேசமும் நிற்கின்றது. இதுவரை நீங்கள் பார்க்கத் தவறிய ஒரு பாதை உண்டு. அதாவது, தமிழ் விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பலவீனம் மக்களின் பங்களிப்பின்மையும் அரசியல் மயப்படுத்தப்படாமையுமே என்றால் மிகையல்ல. வன்முறையற்ற ஒரு புதிய பாதையில், மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டு, தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கி செல்வதே தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கும் விடுதலையடைவதற்கும் வழிவகுக்கும். இதேவேளை, சிங்கள மக்களின் ஆதரவு இன்றி பிரச்சனை நியாயமான வழியில் தீர்க்க முடியாது. ஆகவே சிங்க மக்களின் நம்பிக்யைப் பெறுவதிலும் கவனம் செலுத்தவேண்டி உள்ளது.

வுன்முறை பாதைக்கு முற்றிப்புள்ளி வைத்து மக்களின் மீது நம்பிக்கை வைத்து வன்முறையற்ற பாதையில் போராட்டத்தை முன்னெடுப்பீர்களாயின் கடந்த கால தவறுகள் எவ்வளவு பெரிதாயினும் தமிழ் மக்களும் சர்வதேசமும் உங்களைப் புரிந்து மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு என்ற நம்பிக்கை அனைவருக்குமு; உண்டு. தமிழ் மக்களினது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சர்வதேச மக்களினதும் மதிப்பை பெற்ற ஒரு முன்மாதிரியான தலைவராக உங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆயுதப் போராட்ட வழிமுறையை நிறுத்துங்கள். திறந்த பேச்சு வார்த்தையை முன்னெடுங்கள். பேச்சு வார்ததைகள் தோற்றுப் போனாலும் மீண்டும் பேச்சு வார்த்தையே வன்முறையல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்துங்கள். அமைதியை சமாதானத்தை கட்டி எழுப்பவதன் மூலம் பிரச்சனைக்கான முரண்பாடுகளுக்கான தீர்வுகாளைக் காண தங்களது ஆற்றல்களைப் பயன்படுத்த முன்வராருங்கள். மக்களை ஒன்றினைத்து ஐனநாயக வழியில் தலைமை தாங்கிச் செல்லுங்கள். இதனால் அனைத்து மக்களும் உரிமைகள் பெற்று சுதந்திரமாக வாழும் அதேவேளை தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் சிறந்த காலம் ஒன்று நிச்சயமாக உருவாகும். இதற்கான புதிய விதையை விதைக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கின்றோம்.

நம்பிக்கையுடன்

அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் மனிதர்கள் சார்பாக

புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சிங்கள மொழி பேசும் மனிதர்களே!

இலங்கையில் நடைபெறும் போரிலிருந்து தப்பி வந்து போரைப் பயன்படுத்தி அகதி அந்தஸ்து பெற்று புலம் பெயர்ந்த நாடுகளில் கடந்த கால வடுக்களுடனும் ரணங்களுடனும் ஆனால் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் வாழ்கின்றோம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. நமது குழந்தைகள் தொடர்பான கவலையின்றி வாழ்கின்றோம். ஏனெனில் அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பும் கல்வியையும் வாழ்க்கையையும் புலம் பெயர்ந்ததன் மூலம் வழங்கியிருக்கின்றோம் என்ற பெருமையும் நம்பிக்கையும் நமக்கு உண்டு.

இந்த நிலைமை இலங்கையில் வாழும் மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. இவர்களது வாழ்க்கையை அதன் தரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களுடையது என்றால் மிகையல்ல. ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த புலம் பெயர் நாடுகளிலிருந்து கொண்டு வன்முறை அல்லது போருக்கு அதரவு அளிப்பது மனசாட்சி இல்லாத ஒரு செயற்பாடு. ஏனெனில் இந்த வன்முறை பாதையும் போரும் இந்த மனிதர்களின் உரிமைகளையும் சுநத்திரத்தையும் மேலும் மேலும் மறுக்கின்றமையும் மற்றும் குழந்தைகள் உடல் உள நோய்க்கு உள்ளாவதையுமே விளைவாக கிடைக்கின்ற யாதார்த்தமான ஒரு உண்மை. ஆகவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் வன்முறைக்கோ போருக்கோ ஆதரவளிக்காது இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதன் மூலம் இன பிரச்சனைக்கு தீர்வு ஒன்றினைக் காண உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்பமுடியும்.

புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை எழுத்துரிமை அதற்காக போராடும் உரிமைகளை குறைந்தளவிலாவது ;அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி அதன் வரையறைகளுக்குள் இருந்து நமது சமாதானத்தை அமைதியை தீர்வை நோக்கிய செயற்பாடுகளை முன்னேடுக்கலாம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வாழும் மனிதர்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் தமது வாழ்வின் மீதான பொறுப்புக்களை குறைந்த அளவிலாவது நிறைவேற்றலாம். இதற்கு மாறாக வன்முறை பாதைக்கும் போருக்கும் ஆதரவு அளிப்பது நமது குற்ற உணர்வுகளும் பழி தீர்க்கும் செயற்பாடுளுமே. இது ஆரோக்கியமான வாழ்வல்ல. இவ்வாறன வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து சுய பிரக்ஞையில் சுயமாக செயற்படுவதன் மூலம் நமக்கும் இலங்கை வாழ் மனிதர்களுக்கும் வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வழி காட்டலாம்.

நமது இன சாதிய மொழி மற்றும் இயக்க சார்புகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒன்றினைந்து இலங்கையில் போரையும் வன்முறையையும் நிறுத்துவதற்கும் அங்கு வாழும் மனிதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் அமைதியான ஆனந்தமான வாழ்வுக்கும் நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் செயற்படுவற்கான அழைப்பிதழ் இது.

நன்றி

இலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் சமாதானத்தை அமைதியை விரும்பும் மனிதர்கள் சார்பாக 

. - மீராபாரதி