காஷ்மீர் எங்களது உள்நாட்டு விவகாரம். இதில் மற்ற நாடுகள் தலையிட அனுமதிக்கமாட்டோம்’ என இந்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது.

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் அறிவிக்கிறார்.

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அதில் பாகிஸ்தான் உள்பட எந்த வெளிநாடும் தலையிட அனுமதி இல்லை. மத்திய அரசுடன் எனக்கு பல்வேறு வி‌ஷயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தில் எனது நிலைப்பாடு இதுதான் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

nehru and kashmir king harisingh

(காஷ்மீர் மன்னர் ஹரிசிங் உடன் நேரு)

உண்மையில் காசுமீர் உள்நாட்டு விவகாரமா? அல்லது இரு நாட்டு விவகாரமா? சர்வதேச விவகாரமா? என்பதை வரலாற்றில் என்ன நடந்துள்ளது என்பதிலிருந்து முடிவுக்கு வரலாம்'

1946இல், டோக்ரா மன்னராட்சிக்கு எதிராக ‘டோக்ரா ராஜாவே, காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்னும் போராட்டம் வெடித்தது. ‘சுதந்திரக் காஷ்மீர் எங்கள் பிறப்புரிமை’ என்னும் முழக்கம் காசுமீர் முழுக்க ஒலிக்கத் தொடங்கி போராட்டங்கள் நடக்கத் தொடங்கிய வரலாற்றுப் பின்னணியோடு தொடங்கலாம்.

தமது நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகளை ஆங்கிலேயர் 1947இல் இந்தியா-பாகிஸ்தான் என உருவாக்கிச் சுதந்திரம் வழங்கினர். அதே சமயம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக் கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர். அப்போது மன்னர் அரிசிங் யாருடனும் இணையாமல் தனித்திருக்கவே விரும்பினார்.

இந்நிலையில் 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு எல்லை மாகாணத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பாகிஸ்தான் பழங்குடி மக்களைக் கொண்ட படை காஷ்மீருக்குள் நுழைந்தது. காசுமீர் பள்ளத்தாக்கில் நுழைந்தவுடன் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறையில் இறங்கியது.

அப்படிப்பட்ட சூழலில், அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அரி சிங்கின் அதிகாரிகள் ஜம்முப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். நிர்வாகம் நிலைகுலைந்தது. இந்தக் கொடூரமான தாக்குதலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இந்தியாவின் உதவியை அரிசிங் நாடினார்.

காஷ்மீருடன் ஒப்பந்தம் எதுவும் போடப்படாமல், அங்கு ராணுவத்தை அனுப்ப இயலாது' என நேரு கை விரித்துவிட்டார். இந்திய அரசாங்கத்துடன் தன் மாகாணத்தை இணைக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் இந்தியாவின் உதவி கிடைக்காது என்பதை உணர்ந்த அரிசிங் அக்டோபர் 26, 1947 அன்று நிபந்தனையுடன் கூடிய தற்காலிக இணைப்புச் சாசனத்தில் கையெழுத்திட்டார்.

பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவற்றை இந்தியாவின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். அதை ஏற்ற இந்திய அரசு மறுநாள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சட்டம், ஒழுங்கு சீரடைந்தவுடன், ஜம்மு-காஷ்மீர் மக்களின் சம்மதத்தை அறிந்து இந்தியாவுடனான இணைப்பு முடிவு செய்யப்படும்’ என அறிவித்தது. அந்த இணைப்புச் சாசனத்தில் கையெழுத்திட்ட மவுன்ட் பேட்டனும் இணைப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்றால், அந்த மக்களின் சம்மதத்தையும் கேட்ட பின்னரே செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையோடு இணைப்பு தற்காலிகமானதுதான் என்ற நிலையில் அதனை ஏற்றார்.

இந்த தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் காசுமீர் மீது ஆக்கிரமித்த படையெடுப்பாளர்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. பாகிஸ்தானும் முறையான இராணுவத் தாக்குதலில் இறங்கியது. இறுதியில் 1948 டிசம்பர் 31 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் ஐ.நா.தலையீட்டலின் காரணமாக ஏற்பட்டது.

பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிய பகுதியை “ஆசாத் காஷ்மீர்” என்ற பெயரில் இன்றுவரை பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் அதை ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று சொல்கிறோம்.

இந்தப் போருக்கு நடுவே, 1947 நவம்பர் இரண்டாம் நாள் இந்திய வானொலியில் ஆற்றிய உரையில் நேரு ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அம்மக்களே தீர்மானிப்பார்கள்’ என்று கூறினார். மேலும், இது காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல. முழு உலகிற்கும் நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியாகும்” என்றார்.

பின்பு, 31 டிசம்பர் 1947இல், இந்தியா ஐ.நா. சபைக்குக் கொடுத்த ஒரு புகாரிலும் "ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை அரசியல் அறுவடை செய்து கொள்ள இந்திய அரசு பயன்படுத்துகிறது என்ற தவறான கருத்தை அகற்ற பின் வரும் செய்தியை இந்திய அரசு தெளிவாக முன் வைக்கிறது. அதாவது, படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டு இயல்புநிலை நிலை நாட்டப்பட்ட உடனேயே அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 'பொதுவாக்கெடுப்பு அல்லது நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக வழிமுறைகள் மூலம் மக்களின் விருப்பம் முடிவு செய்யப்படும். சுதந்திரமான, நியாயமான நேரடி வாக்கெடுப்பிற்கு ஐ.நா. சபையின் மேற்பார்வை அவசியப்படும்." என்று உறுதியளித்திருந்தது.

அந்த மாநில மக்களின் கருத்தை அறிய, ஐ.நா. சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்தது. அதைத்தான் இப்போது உள்நாட்டுப் பிரச்சினை என்கிறது.

1948 ஏப்ரல் 22 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட அய்.நா. தீர்மானம் நேரடி வாக்கெடுப்பு என்ற பிரச்சினையை தனது தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இரு நாடுகளும் விரும்புவதை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதாவது "ஜம்மு-காஷ்மீர், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற பிரச்சினையை சுதந்திரமான பாகுபாடற்ற நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக வழிமுறை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்புவது" ஒரு நிறைவு தரும் விசயம் எனத் தீர்மானம் குறிப்பிட்டிருந்தது.

மேலும் "இணைப்புப் பிரச்சினையின் மீது அம்மாநில மக்கள் வாக்களிப்பதற்குத் தேவையான முழுச் சுதந்திரத்தையும் சூழ்நிலையையும் இருநாட்டு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும். நியாயமான சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐ.நா. சபை நியமிக்கும் தேர்தல் கண்காணிப்பாளருக்கு அவசியப்படும் அனைத்து அதிகாரங்களையும் இந்திய அரசாங்கம் செய்து தர வேண்டும்." என்றது.

1948 ஏப்ரல் 21 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு ஆகஸ்ட் 13 ஆம் தேதியிட்ட தீர்மானம் வடிவத்தைக் கொண்டு வந்தது. அதில் இந்தியா ஜம்முப் பகுதியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறிவிட வேண்டும் என்றும் தான் மட்டும் அப்பகுதியில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நேரடி வாக்கெடுப்பைத் தானே நடத்தித் தர அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்த்தது. இதனால் பாகிஸ்தான் இத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தது.

பிறகு 1949 சனவரி 5 தேதியன்று ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் இரு நாட்டுப் படைகளையும் பயன்படுத்திக் கொள்வது குறித்த அதிகாரம் நேரடி வாக்கெடுப்பைக் கண்காணிக்கும் அதிகாரியிடத்தில் இருக்கும். ஆகவே நேரடி வாக்கெடுப்பை நடத்துவதில் கண்காணிப்பாளருக்கு உள்ளூர் நிர்வாகம் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றது. பாகிஸ்தான் அரசாங்கம் இத்தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்திய அரசாங்கமோ இத்தீர்மானத்தை ஏற்க மறுத்து விட்டது.

இதே போல் நேரடி வாக்கெடுப்பை நடத்துவதற்கான வழிவகை குறித்து ஐ.நா. சபை பல தொடர் முயற்சிகளை எடுத்தது. இம்மாதிரியான முயற்சிகள் குறித்து மீண்டும் மீண்டும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, (1948 சூன் 3, 1950 மார்ச் 14, 1951 மார்ச் 30, 1951 நவம்பர் 10, 1952 டிசம்பர் 23, 1957 சனவரி 24, 1957 பிப்ரவரி 21, 1957 டிசம்பர் 2) இந்த அனைத்துத் தீர்மானங்களுமே 1948 ஏப்ரல் 21. 1949 சனவரி 5 ஆகிய இரு தீர்மானங்களை நினைவுபடுத்தி இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் வைத்தது.

காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜனவரி 3, 1948 தொடங்கி டிசம்பர் 2, 1957 வரை 11 தீர்மானங்கள் ஐ.நா.வில் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் ஐ.நா. முன்னெடுத்தது . காஷ்மீரில் ஐ.நா நிர்வாகத்தால் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி செஸ்டர்நிமிட்ஸ் என்பவரை வாக்கெடுப்பு அதிகாரியாகவும் நியமித்து ஐ.நா. தீர்மானம் போட்டது. வருடத்திற்கு 45,000 டாலர் ஊதியமும் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நா வின் இந்த முடிவை இந்தியா ஏற்க மறுத்தது.

1950 மார்ச் 14ல் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் மற்றொரு தீர்மானம் போட்டது. அதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க சர் ஓவன் டிக்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியத் தூதராக செயல்பட்டுவந்தார். 1950 மே 27 டிக்சன் இந்தியா வந்தார். இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களுடன் விவாதித்துவிட்டு 1950 செப்டம்பர் 15 தனது அறிக்கையை ஐ.நா.விற்கு அளித்தார். டிக்சன் ஐ.நாவிற்கு கொடுத்த அறிக்கை இதுதான்;

1.காஷ்மீர் சமஸ்தானம் முழுதும் வாக்கெடுப்பு நடத்தாமல், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது. அதன்படி முடிவெடுப்பது.

2.காஷ்மீரின் வடபகுதியும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியும் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும். இந்த ஆலோசனையை பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒரு நிபந்தனையுடன் ஏற்றார்.

இந்த ஆலோசனைகளையும் இந்தியா ஒட்டுமொத்தமாக நிராகரித்தது.

1951 - இந்திய நிர்வாகத்தில் இருந்த ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில், இந்தியாவுடன் இணைந்ததற்கு ஆதரவு கிடைத்தது. இதனால் பொது வாக்கெடுப்பு தேவையற்றதாகிவிட்டது என்று இந்தியா கூறத் தொடங்கியது.

இந்தியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஐ.நா. சபையின் கண்காணிப்பில் நடக்கவில்லை; மேலும் அது இணைப்பு பற்றிய வாக்கெடுப்பும் அல்ல என்பதை இந்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

1955 ஜூலை 7 அன்று ஸ்ரீநகரில் இந்திய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த வல்லப பந்த். “காஷ்மீருடைய இணைப்பு என்பது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது. இனி அதை மாற்ற முடியாது. ஏனெனில் அரசியல் நிர்ணய சபையில் உள்ள தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவுடன் இருப்பதென காஷ்மீர் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்” (நுராணி. ஏ.ஜி. The Kashmir Question, P.69)

பக்ஷிகுலாம் முகமது தலைமையில் இயங்கிய ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1956 நவம்பர் 17 அன்று இயற்றிய தீர்மானம் கீழ்வருமாறு கூறியது. ‘ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. இனிமேலும் இருக்கும்’.

காஷ்மீர் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றிய, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்னும் தீர்மானத்தை வைத்துக் கொண்டு தேர்தல் நடத்தத் தேவையில்லை என்று இந்தியா பேசத் தொடங்கியது. ஆனால் இந்த அறிவிப்பை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்து 1957 ஜனவரி 24 அன்று இயற்றப்பட்ட தீர்மானம், ‘ஐ.நா. தீர்மானத்திற்கு இணங்க செய்யப்படாத இவ்வறிவிப்பு அதாவது கருத்து வாக்கெடுப்பின் வழி செய்யப்படாத இந்த முடிவு செல்லத் தக்கதல்ல’ என்று கூறியது.

ஜனநாயக வேடமிட்ட நேருவும் தன் குரலை வெளிப்படையாக மாற்றிக் கொண்டு, “காஷ்மீரானது அய்யத்திற்கிடமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்ட மூலமாகவும் இந்தியாவின் ஒரு பகுதியே” என்று 1957 ஜூலை நவம்பர் இந்தோ ஜப்பானிய இதழில் வந்த பேட்டியில் கூறினார்.

ஐ.நா.சபையின் பாதுகாப்புக் குழுவில் 1964 இல் இந்தியாவின் பிரதிநிதி சக்லா அவர்கள் பின்வருமாறு துணிவுடன் பேசினார். "எந்தச் சூழ்நிலையிலும் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்பதை எனது அரசாங்கத்தின் சார்பாகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கியது.

இதையொட்டி பல்வேறு கண்டனங்களை பாகிஸ்தான் ஐ.நா.விடம் முறையிட்டது. மூன்றாம் நாட்டின் தலையீட்டில் காசுமீர் குறித்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இந்தியாவை அழைத்த போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது.

காசுமீர் சிக்கலையொட்டி 1965 - இலும் 1971 இலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சிறிய போரும் நடைபெற்றுள்ளது. எல்லை தாண்டிய தாக்குதலும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போது 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பிறகு, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா.வுக்கு தீர்மானம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒரு கடிதம் எழுதியுள்ளார் - அந்தக் கடிதத்தில்

"ஐ.நா. மேற்பார்வையில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தும்போது அதன் முடிவுகளைப் பாதிக்கும் என்பதால், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள்தொகை தன்மையை மாற்றியமைக்கும் எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எதிர்த்து வந்துள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுகிற செயல்களாகும். குறிப்பாக, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான பகுதியை இது மீறுகிறது. இந்தியாவின் இந்த பழைய சதித் திட்டம் குறித்து 27 ஏப்ரல் 2017 அன்று ஒரு கடிதம் மூலம் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தது பாகிஸ்தான்.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும், தொடர்புடைய ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம், 'சுதந்திரமான, சார்பற்ற முறையில் ஐ.நா. மேற்பார்வையில் நடத்தப்படுகிற கருத்து வாக்கெடுப்பின் மூலம் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்பவே ஜம்மு காஷ்மீர் விவகாரம் இறுதியாகத் தீர்க்கப்படும்' என்கிறது" என்று குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

காசுமீர் இந்தியாவுக்கும் சொந்தமில்லை, பாகிஸ்தானுக்கும் சொந்தமில்லை. காசுமீர் மக்களுக்கே சொந்தமானது. இதை ஐ.நா.வும் ஒப்புக் கொண்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, ஐ.நா.அவையில் போடப்பட்ட ஒப்பந்தத்தையே மீறி இது உள்நாட்டுப் பிரச்சினை என்று ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சியும் ஒரே குரலில் பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம்.

இங்கு ஒரு விசித்திரமான சம்பவத்தையும் பார்க்கலாம்.

இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ்தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோடும்,49 சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன. அவை 1.ஜுனாகட் சமஸ்தானம் 2.ஹைதராபாத் சமஸ்தானம் 3.காஷ்மீர் சமஸ்தானம்

இதில் ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறிவித்தார். ஜூனா கட் சமஸ்தானத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர் . இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. இங்கு மக்களின் கருத்தை கேட்டு இந்தியாவுடன் இணைத்தவர்கள், காசுமீரில் மட்டும் நடத்த மறுக்கிறார்கள்.

(தொடர்வோம் )

- க.இரா.தமிழரசன்