தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகையாகப் பகுக்கப் பெற்றுள்ள நில எல்லை உலகளாவிய நிலைகளில் பொருந்திப் போகின்றது. மலையும் மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த பகுதியை முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த பகுதியை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும், மணலும் மணல் சார்ந்த பகுதியை பாலை என்றும் தமிழ் மரபில் வரையறை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதில் நானிலம் என்பது மாறி, குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை எனும் நிலம் உருவாகியுள்ளது. இவ்வாறே நில எல்லையை நானிலம் என்றும், ஐநிலம் என சூழலியல் மாறுதலுக்கு ஏற்ப இயற்கையின் இயல்பினைப் பார்க்க முடிகிறது.

forest fireநிலங்களின் தொழில் முறை இடம் சார்ந்தும், தட்ப வெட்பம் சார்ந்தும் மழைப் பொழிவு சார்ந்தும் இயற்கைச் சூழலைப் பொருத்தே ஐந்து நிலங்களின் தொழில் முறையும் நிலப்பரப்பு அதன் தன்மைக்கு ஏற்றவாறு வேறுபடக் கூடியதாகும். வேளாண்மைத் தொழிலின் மூலமாக கிடைக்கும் பொருள்களும் அந்தந்த நிலப் பகுதிகளுக்குள் வேறுபடக் கூடியதாகும். அந்தந்த இடங்களில் வாழும் மக்கள் அவ்விடத்திற்கு ஏற்ற தொழில்முறையை உருவாக்குவதோடு, உற்பத்தி, அது சார்ந்த உபரியை தன் வாழ்க்கைக்காக தன் உழைப்பின் விளைவால் உருவான உற்பத்திப் பண்டத்தைக் கொடுத்து, வேறு நிலத்தில் விளைவித்த பண்டத்தைப் பெறுவதுமான பண்டமாற்று நிலையே ஆரம்ப காலப் பொருளாதயமாக இருந்தது. பின்பே சந்தைப்படுத்துதலாக பொருளீட்டல் நிகழ்ந்தது.

நிலவுடைமைச் சமூகத்தில் உற்பத்தியின் பங்கு தொழிலாளிக்குக் கணிசமாகவே கிடைத்தாலும் தொழிலாளிகள் அடிமை நிலையிலேயே வழி நடத்தப்பட்டார்கள். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திக்கான மூலதனம், உழைப்பின் பங்கு, உபரியின் பரவலாக்கல், முதலீடு இவைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டிருந்த போதிலும், முதலாளித்துவ சுரண்டல் வலுப் பெறுகின்ற நிலை உருவாகி, அந்நிய முதலீடுகளின் வழியான லாபத்தினை தரகு முதலாளிகள் பங்கிட்டுக் கொள்ளல் என்கிற தன்மைகளில் நவீன சந்தைக் கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதுமான வன்குடியாதிக்க மனநிலையைக் கொண்டதாக இருக்கின்றது. வளரும் மூன்றாம் நாடுகளும் தன் சுயாதீனத்தை இழந்து ஏகாதிபத்தியத்திற்குக் கைக்கூலிகளாக முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரத்தின் கோரமுகமாக காட்சியளிக்கின்றன.

உழைப்பில் ஈடுபடும் உழைப்பாளிகள், உழைப்பின் மூலமாகக் கிடைக்கும் உபரியைப் பணமாக ஈட்டுவது என்பது, தான் வாழ்வதற்காக உருவாக்கப்படுவதே ஒழிய, உற்பத்தி மூலமாக கிடைக்கக்கூடிய உற்பத்திப் பொருள்களைப் பெரு லாபம் ஈட்டுதல் என்பது கடைமட்ட விவசாயத் தொழிலாளர்களிடத்தில் இருந்ததில்லை. ஏனெனில் அவர்களிடம் நிலம் சொந்தமாக இல்லாததும் ஒரு காரணமாகும். அன்றாடம் வாழ்வதற்கான தேவையைப் பூர்த்தி செய்வதே அவர்களின் நோக்கமாகக் கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள். சமூகத்தின் உற்பத்திமுறை அது சார்ந்த உபரி, நிலவுடமைச் சமூகம் சார்ந்து உற்பத்தியில் ஈடுபடக் கூடிய உழைப்பாளிகளின் தொழிற்பாடு வேளாண் சமூக உருவாக்கத்திலிருந்து மாறுபடக்கூடியதாகும். வேளாண் சமூகத்தில் கூட்டு உழைப்பு, கூட்டு மூலதனமாக இருந்தது. நிலவுடமைச் சமூக உற்பத்தியின்போது நிலத்தின் மூலமாகக் கிடைக்கக்கூடிய உபரிகள் அனைத்தும் முழுமையாக உழைப்பாளிகளுக்கு கிடைக்காமல் நிலவுடைமையாளர்களுக்கே முழுமையாக சேர்கிறது. இவ்வாறான உற்பத்தி, உற்பத்தி சார்ந்த தொழில்கள் காலந்தோறும் பல மாற்றங்களைக் கொண்டிருக்கின்றது.

வேளாண் சமூகத்தில் இருந்த கூட்டுச் செயல்பாடு, கூட்டு உற்பத்தி, கூட்டு உபரியின் பயன்பாடு என்கிற தன்மை சிதைந்து, நிலவுடைமைச் சமூகத்தில் மாற்றம் பெறுகிறது. இம்மாற்றம் முதலாளியைச் சார்ந்த சமூகத்தை நோக்கி நகரும் பொழுது, நிலவுடைமை சமூகத்தின் உற்பத்தி, அது சார்ந்த தொழில் முறைகள் முற்றிலும் மாறுபட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி முடக்கமாகி, குறிப்பிட்ட தரகு முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பெறுவதற்காகவே நாட்டின் நிதிக் கொள்கையும், செலவினங்களும் அமைகின்றன. இச்சூழலில் தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது. மேலும் உழைப்பிற்கான களமாக விளங்கும் நிலங்களும், உழைப்பாளிகளிடமிருந்து அந்நியமாகி வருவதோடு, புதிய புதிய வரிவிதிப்புகள் தரகு முதலாளிகளிடம் வசூலிப்பதை விட்டுவிட்டு உழைக்கும் மக்கள்களின் மேல் சுமத்தப்பட்டு வருகிறது.

நவீன முதலாளித்துவம் பூர்வீக உழைப்பாளிகளையும், அவர்களின் இருப்பிடத்தில் இருந்து அந்நியப்படுத்தப் பார்க்கிறது. குறிப்பாக மலை சார்ந்த வாழ்வியலைக் கொண்ட உழைப்பாளிகளை மலையிலிருந்து அப்புறப்படுத்துவதும், அம்மலையினை லாபம் ஈட்டுவதற்கான களமாக ஆக்குவதும், அம்மலையின் கிடைக்கின்ற அனைத்து வித பொருட்களையும் சந்தைப்படுத்துகின்ற சூழ்நிலையும் இன்றைய முதலாளித்துவத்தின் போக்காக நிலவுகிறது. சிறு முதலாளித்துவ நாடுகள் மலைகளையும், வனங்களையும் சுரண்டுவதும், பெரு முதலாளித்துவ நாடுகள் வளரும் நாடுகளின் தொழில் வளத்தை உயர்த்துவதற்காக நவீனத் தொழிலுக்கு ஆதரவு அளிப்பதும், தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதுமான ஏகாதிபத்திய போக்கின் விளைவே வளங்களைச் சூறையாடுவதும், இயற்கை எழிலை சிதைப்பதும், மலைகளை வெட்டி எடுப்பதும், இயற்கையை சந்தைப்படுத்த நினைப்பதும் இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இயற்கை சீற்றத்தால் மனிதர்களுக்குத் தீங்குகள் ஏற்படக் கூடிய தன்மை இருந்தபோதிலும் இயற்கையைப் பாதுகாத்தல், இயற்கையைப் பேணுதல் என்பதே பழங்குடி மனோபாவம். ஆனால், முதலாளித்துவச் சந்தைப் பொருள் ஆதாய நோக்கில் இயற்கையை அழித்தல், இயற்கையை வாணிபம் ஆக்குதல், உலக சந்தையில் ஒரு நாட்டின் வளங்களை வேட்டையாடுதலே நவீன சந்தைக் கலாச்சாரத்தின் நோக்கமாக இருக்கிறது. சிறு சிறு நாடுகளின் வளர்ச்சியைச் சிதைப்பது என்பது ஏகாதிபத்திய நாட்டின் குணமாக இருந்து வருகிறது. அந்த வகையில்தான் அமேசான் காடுகள் அழிப்பு நிகழ்வினைப் பார்க் கமுடிகின்றது.

உலக அளவிலான பூமியின் நுரையீரல் என்று சொல்லக்கூடிய அமேசான் காடுகள் உலக சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பதை உலகமயச் சூழலில் பொருளாதார முதலாளித்துவ நாடுகளின் பார்வைக்குள் அகப்படுவதும், வனங்களின் மூலமாக கிடைக்கும் மாந்த வாழ்வியலுக்குத் தேவையான மருத்துவப் பொருள்கள், மரபுசார்ந்த உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஒரு நாட்டின் பாரம்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடிகள் இவைகளை அழிப்பதன் மூலமாக நவீன வாழ்விற்குத் தேவையான உலகச் சந்தை மருத்துவத்தையும் மருந்தினையும் எல்லோரும் வாங்குவதற்கான ஏதுவை உருவாக்குவதே இதுபோன்ற வனங்களை அழிப்பதன் நோக்கமாக இருக்கக்கூடும்.

ஒரு வனத்தை அழிப்பது என்பது அந்நாட்டின் வளத்தை அழிப்பதற்குச் சமமாகும். இயற்கைச் சீற்றத்தால் அழிவது ஒருபுறம் இருக்க, இயற்கைச் சீற்றத்தை காரணங்கள் காட்டி அதை அழிக்க நினைக்கும் போக்கே வனங்களின் அழித்தொழிப்பாகும். பழங்குடிச் சமூகத்தில் வனம் எரிப்பு என்பது சிறிதளவே நிகழ்ந்திருக்கிறது. அது அவர்களின் சிறு வாழ்க்கைக்குத் தேவையானதாவே இருக்கும். ஆனால் வனங்களை சந்தைப்படுத்தவும், லாபமாக்கவும் நினைக்கும் முதவாளித்துவத்தின் கோரத் தீயே அமேசான் போன்ற வன அழித்தொழிப்பிற்குக் காரணகர்த்தாவாகும். ஒரு புறம் தீ மூலமாக மலையை அழிப்பதும், நியூட்ரினோ ஆய்வின் வழி மலையை அழித்தொழிப்பதும் உலக சந்தைக் கலாச்சாரத்தின் விளைவே ஆகும்.

வனத்தைச் சுற்றி வாழுகின்ற மனிதர்களை வன அழிவிற்குக் காரணம் காட்டுவதும், மாடுகள் வளர்ப்பு போன்ற தொழில் முறையை சந்தைப்படுத்துவதும், அதனை புவி வெப்பமயமாதலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் முட்டாள்தனமாகப் படுகிறது. மாட்டுச் சாணத்தின் வழியாக வருகின்ற மீத்தேன் வாயு அது சார்ந்த அழிவு என்பது மிகையாக்கப்படுகின்றது.

இயற்கைப் பொருட்களை உலகச் சந்தைக்கு ஏற்றவாறு பெருக்க வேண்டும் என்கிற ஏகாதிபத்தியச் சிந்தனையே இயற்கை வளங்கள் அழிவிற்கு ஆதிபுள்ளியாக இருந்து வருகிறது. இச்சூழலில் பன்னாட்டுத் தொழில்களால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்பது நாட்டின் பிற்போக்குத்தனமாகும்.

சங்க காலத்தில் ஒரு சிற்றரசின் நிலங்களை, பகைநாட்டு சிற்றரசன் அழிப்பதும், நிலங்களைப் பாழ்படுத்துவதும், வேளாண் தொழிலுக்கு ஏற்ற நிலங்களை வேளாண்மைத் தொழில் செய்ய முடியாத அளவிற்கு பாழ்படுத்துவதுமான நிலவுடமைச் சிந்தனையின் தொடர்ச்சியாகவே, இன்றைய ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே நடக்கும் இயற்கை வள அழிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமென்றால் அந்நாட்டின் இயற்கை வளங்களையும், உற்பத்தி முறைகளையும் அழித்துவிட்டால் நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளி விடலாம்.

தமிழகச் சூழலில் விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச் சாலை அமைப்பதும், தஞ்சை டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுத்தலும், விவசாய நிலங்களில் ஆழ்குழாய் அமைப்பதும், ஸ்டெர்லைட் ஆலை போன்ற நாசகார ஆலைகளை அமைப்பதும் நவீன முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரத்தின் பகுதியாகும்.

தரகு முதலாளிகளை வளர வைத்து விட்டு இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சிக்குத் தள்ளியதற்கு ஆட்சியாளர்களே மூலகாரணமாகும்.

வளரும் மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சிப் பாதையை நோக்கிய செயலாக அணு உலை அமைப்பது, ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதுமான திட்டங்கள் முழுவதும் சமூக வளர்ச்சிக்கானதாக இல்லாமல் சமூக அழிவிற்கானதாக இருக்கின்றது. ஒரு நாட்டை அழிப்பதற்கும், நாட்டினை பரிசோதனைக் கூடமாக ஆக்குவதற்கும், நாட்டின் வளங்களை அழிப்பதும், வனங்களை சந்தைப் படுத்துவதும் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய நாட்டின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கிறது.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி என்பது மனித சமூகத்தின் அறிவார்ந்த தன்மையைக் கொண்ட வளர்ச்சியாக இருக்க வேண்டுமேயொழிய, மனித சமூகத்தின் அழிவுக்கான வளர்ச்சியாக ஒருபோதும் இருக்கக் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலம், பன்னாட்டுக் கம்பெனிகளின் பரவலாக்கம், தாராளமயச் சூழல், உலக வர்த்தக அமைப்பு இவைகள் அனைத்துமே இயற்கை வளங்களையும், இயற்கை விவசாயத்தையும் அழிக்கும் செயலைச் செய்து வருகின்றன.

சர்வதேச தரத்தில் சாலைகள் அமைப்பதற்கும், தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், மின் ஆலை அமைப்பதற்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுத்தப்பட்டு வருகிறது. மனித சமூகத்தை சூனியமாக்குகின்ற அதிகாரப் போக்கு இன்றைய காலகட்டங்களில் நிலவுகின்றது. இந்த அதிகாரப் போக்கினை மாற்ற ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ கூட்டுச் சதியை உலகளாவிய தன்மையில் மனிதர்கள் உணரும்பொழுது தான், ஒவ்வொரு நாட்டின் வனங்களையும், இயற்கை வளங்களையும் அழித்தொழிப்பிற்கான அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும்

- ம.கருணாநிதி