காஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்? - 6

"சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. சிறப்பு சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்காக காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை, ஒரே நாடாக, ஒரே குடும்பமாக நமது அரசு எடுத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு பல தடைகள் இருந்தன. எங்கள் முயற்சிகள் அந்த தடைகளை நீக்கியுள்ளன" என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

kashmir lake"சட்டப்பிரிவு 35ஏ ஆதரவாளர்களே, பதில் கூறுங்கள். நிலம் வாங்க முடியாத, வாக்கு செலுத்த முடியாத காஷ்மீருக்கு, சிறந்த தனியார் மருத்துவர்கள் எப்படிச் செல்வார்கள்? சட்டப்பிரிவு 370 அமலில் இருந்ததால்தான், ஜம்மு-காஷ்மீருக்கு தனியார் கல்வி நிறுவனங்களோ சிறந்த கல்வியோ சென்று சேரவில்லை. எங்களுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள். ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சியில் மிகச் சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுகிறோம்" என்று நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

ஒரு நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசுகின்ற வார்த்தைகளில் உண்மை இருக்கும் என்று நம்பினால் நாம் ஏமாந்து போக வேண்டியது.

பா.ஜ.க. ஆள்கின்ற குசராத்தை விட எல்லா வகையிலும் காசுமீர் முன்னேற்றமடைந்தே இருக்கிறது என்பதை புள்ளி விவரத்தோடு நாம் பார்க்கலாம்.

கடந்த 2015-2016 காலகட்டத்தில் காஷ்மீரில் நிலவிய உயிர்வாழும் சராசரி வயது குசராத்தில் 69, காசுமீரில் 74.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணவிகிதம் குசராத்தில் 33, காசுமீரில் 26.

குழந்தைப்பேறு விகிதம் குசராத்தில் 2.2 காசுமீரில் 1.7

15-19 வயதுக்குட்பட்ட பெண்களில் எட்டாண்டுப் பள்ளிக் கல்வி முடித்த விகிதம் குசராத்தில் 75, காசுமீரில் 87.

குறை எடை கொண்ட குழந்தைகள் விகிதம் குசராத்தில் 39, காசுமீரில் 17.

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் விகிதம் குசராத்தில் 50, காசுமீரில் 75.

வயது வந்த பெண்களுக்கான உடல் நிறை அளவீடு குசராத்தில் 27, காசுமீரில் 12 இவற்றை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில், பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ் பேசியுள்ளார்.

2011- 12 காலகட்டத்திற்கான புள்ளிவிவர கணக்குப்படி, கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் விகிதம் குசராத்தில் 22 காசுமீரில் 12 மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான கூலி குசராத்தில் 116 காசுமீரில் 209 உள்ளன. இவற்றைக் காட்டி குசராத்தை விட காஷ்மீரில் முன்னேறிய நிலையே காணப்படுகிறது என்கிறார்.

இந்தியா முழுவதும் 6 சதவிகிதம் பேருக்கு பணியில்லை. ஜம்மு-காஷ்மீரில் 5.4சதவிகிதம் வேலையின்மை நீடிக்கிறது. இது, இந்திய சராசரியைவிடவும் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை விடவும் குறைவு.

இந்தியா முழுவதும் ஏறத்தாழ 22 சதவிகித மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். காஷ்மீர், தமிழ்நாடு முதலான மாநிலங்களில் வறுமையில் வாழ்பவர்கள் 8 சதவிகித மக்கள் மட்டுமே. இந்தி பேசும் மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம் முதலானவற்றில் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

1,000 பேருக்கு 1 மருத்துவர் இருக்க வேண்டும் என்பது வளர்ச்சிக்கான அறிகுறி என்கின்றன, உலக சுகாதார நிறுவனங்கள். இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருகிறது. காஷ்மீரும் இதில் விதிவிலக்கல்ல.

இந்தியா முழுவதும் ஏறத்தாழ 11 ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் மட்டுமே இருக்கிறார். மற்ற மாநிலங்களோடும், இந்திய சராசரியோடும் ஒப்பிட்டால், ஜம்மு-காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் மட்டுமே இருப்பது வளர்ச்சியையே குறிப்பதாக உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட குறைவு. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தைவிட அது அதிகம்.

உலக வங்கி ஆண்டுதோறும் கணக்கிடும் மனித வளர்ச்சிக் குறியீட்டில், ஜம்மு-காஷ்மீர் இந்திய சராசரியைவிட அதிகமாகப் பெற்றுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டிற்குப் பின் நிற்கிறது, ஜம்மு-காஷ்மீரின் மனித வளர்ச்சிக் குறியீடு.

இந்தப் புள்ளி விவரங்கள் காசுமீரின் வளர்ச்சியைத் தான் காட்டுகிறதே தவிர, மோடியும் அமித் ஷாவும் சொல்வது போல் வீழ்ச்சியைக் காட்டவில்லை.

"இந்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாய் விளங்கியது 1950-களில் முழுவீச்சில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தம்தான் காரணம். இந்த நிலச் சீர்திருத்தத்திற்கு சரத்து 370 அடித்தளமாய் அமைந்தது." என்கிறார் பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ். அந்த தற்சார்புத் தன்மையைத்தான் மோடி கும்பல் வளர்ச்சிக்குத் தடை என்கிறது.

பா.ஜ.க.அரசைப் பொருத்தவரை வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியல்ல, மாறாக கார்பரேட்டுகளின் வளர்ச்சி. அதனால் தான் அமித் ஷா தன்னுடைய பேச்சில் "தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் இல்லாமல் வளர்ச்சி எப்படி வரும்" என்கிறார். முதலாளிகளின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை. அதனால் தான் தனியார் முதலாளிகள் நிலம் வாங்கவும், முதலீடு போடவும் சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளார்கள்.

காசுமீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை காசுமீருக்கு அழைக்கின்றனர்.

(தொடர்வோம்)

- க.இரா.தமிழரசன்