கல்வி என்பது அறிவோடு தொடர்புடையதைப் போல் தத்துவத்தோடும் சமூகத்தோடும் நெருங்கிய தொடர்புடையதாகும். மனிதர் தோன்றிய காலந்தொட்டே பாரம்பரியமாக அறிவின் தேடல் உருவாகியது. நெருப்பினைக் கண்டுப்பிடித்தல், சக்கரம் கண்டுபிடித்தல், விவசாயம் கண்டுபிடித்தல் முதலிய பாரம்பரிய கண்டுபிடிப்புகள் யாவுமே அறிவின் தோற்றமாகவே கொள்ள முடிகிறது. இவ்வாறு தோன்றிய அறிவின் தேடல் கூட்டு உணர்வாகவும், கூட்டுச் செயல்பாடாகவும், கூட்டு நடவடிக்கையாகவும் அறிவு பெறுவதிலிருந்தே கல்வி தோற்றம் கொள்கிறது. பாடம்-ஆசிரியர்-கற்கும் இடம்-கற்றல் கருவி ஆகிய தன்மைகளில் செயல்படக் கூடியதாகும். கல்வி வளர்ச்சிப்பயணத்தில் அறிவின் தேடலாக நீண்ட நெடிய பரப்புடையதாக காலந்தோறும் பல உருமாற்றங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. கல்வி சமூகநீதியை முதன்மைப்படுத்த வேண்டிய தன்மையிலேயே உருவாக வேண்டும் என்பதே கல்வியின் தலையாய நோக்கமாகும்.              

school kidsஆங்கிலேயரின் வருகையை ஒட்டியே கல்வித்தளத்திலும் நெறிமுறைப்படுத்தப்பட்ட காலனியக் கல்வி முறை இந்திய - தமிழகத்திற்குள் பரப்பப்பட்டது. காலனியக் கல்வி முறைக்கு முன்னதாகவே குருகுலக் கல்வி முறை தமிழகத்திலும் நடத்தப்பட்டது. காந்தியடிகள், அரவிந்தர், விவேகானந்தர், இராஜாஜி, வ.வே.சு முதலானவர்கள் இந்தியச் சூழலில் கல்விக்காக தங்களை அர்ப்பணித்தாலும் இக்கல்வி முறைகளில் வர்க்க முரண்பாடுகளும் சாதிய முரண்பாடுகளும் தவிர்க்க முடியாதவையாக இருந்தன. இவர்களின் கல்வி குறித்த சிந்தனை ஆன்மீகத்தை கல்வியோடு இணைக்கப்பட்டுப் போதிக்கப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. மேலும் காலனியக் கல்வி முறையில் மெக்காலே, ரூசோ, புரோபல், ஜான்டூயி முதலியவர்களின் கல்விக் கொள்கையை இந்திய தமிழ் சூழலில் பள்ளிகள்தோறும் பரவலாக்கம் செய்யப்பட்டன. ரூசோவினுடைய கல்விச்சிந்தனை ஆதிக்கச் சமூகத்தில் பெண்கள் நிலைப்பாடுகளை ஆண்களே தீர்மானிக்கும் தன்மையிலேயே அமைந்துள்ளது. இவருடைய எமீல் (Emile) எனும் நூல் கற்பனை வடிவிலான ஆண்குழந்தைக்குக் கல்வி கற்பித்தலை எடுத்துரைக்கிறது. ஆண்கள் அதிகாரம் படைத்தவர்களாகவே உருவாக வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. மேலும் இவரது சோஃபி (Sophie) எனும் படைப்பு கற்பனையான பெண்குழந்தைக்குக் கல்வி கற்பித்தலை எடுத்துக் கூறுகிறது. இதில் பெண்களுக்கான கற்பித்தல் ஆண்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவளாகவும், ஆணுக்கு மகிழ்ச்சி அளிப்பவளாகவும், குடும்பத்தைப் பேணிக் காப்பவளாகவும், அழகு, சமையல், உடல் இவைகளில் அக்கறை கொண்டவளாகவும் திகழ வேண்டுமென ரூசோவின் கல்விச் சிந்தனைவழி அறிய முடிகிறது. இச்சிந்தனை ஏனைய கல்விமுறைக்கு மாறுதலாகக் கொண்டு வந்தாலும் பெண்ணடிமைத்தனத்தை ஆழமாக வலியுறுத்தியது. இதனால் பெண்கள் அடிமை மனோபாவத்தை தாங்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

காலனியக் கல்வி மானோபாவத்தில் ஆங்கிலக்கல்வி முறை குருகுல கல்விமுறைக்கு மாற்றாக அமைந்தாலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை உள்வாங்கியே அமைந்துள்ள போதிலும் கிறித்தவ கல்வி நிறுவனங்கள் சழுக ஏற்றத்தாழ்வுகளை ஓரளவிற்குக் களைத்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இருப்பினும் கல்வியில் தொடர்ச்சியாக பார்ப்பனிய மேலாதிக்க மனநிலையை மாற்றவும சமூகநீதியை மறுக்கக்கூடியதாக இருக்கின்ற காரணத்தாலும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மகாத்மா புலே போன்றவர்கள் கல்வியில் மாறுதல் கொண்டு வர எண்ணினார்கள். அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களுக்கு உதவித் தொகையும் இடஒதுக்கீடும் வழங்குதல் மூலமாக கல்வியின் வழியாக தன்னிறைவு பெறவும், இழிவுகளில் இருந்து விடுதலை அடையமுடியும் என தாழ்த்தப்பட்டோர்கான சட்டத்தை முன்வைத்ததோடு பிற்படுத்தபட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி-வேலை வாய்ப்புபெற அண்ணல் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி வேலை வாய்ப்புக்கான சட்டத்தினைப் புதிய கல்விக் கொள்கை முற்றிலும் மறுப்பது சட்ட விரோதச் செயலாகும்.

               புதிய கல்விக் கொள்கையின் வரைவு முழுக்க முழுக்க கார்ப்ரேட்டுக்கான முதலாளித்துவத் தன்மையை வலுவாகப் பின்பற்றக்கூடிய நிலையிலேயே அமைந்துள்ளது. இன்றைய சூழலில் தொழில் நுட்ப ரீதியான அறிவு இருப்பவர்களே சாதனை படைக்க முடியும் என்கிற நிலைக்கு மூன்றாம் உலக நாடுகளில் இக்கருத்து நிலவுகிறது. அறிவியல் தொழில்நுட்பக்கல்வி மேலும் மனிதர்களை இயந்திரத்தனமாகவும் மாற்றியும் உள்ளது. பள்ளிக் கல்வியை ஓரளவு பெற முடிந்தாலும் பட்டமேற்படிப்பு பெறுவது என்பது ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதே புதிய கல்விக்கொள்கையின் உள்ளீடாகப் பார்க்கமுடிகிறது. கல்வியின் மூலமாக சமநிலைநோக்கிய பாதையை முடக்குவதற்காகவும் அடித்தள மக்களுக்கான இடஒதுக்கீட்டை மறுதலிப்பதற்கான காரணத்தினையும் கல்விக் கொள்கை வரைவின்வழி அனுமானிக்கமுடிகிறது.

 இன்றைய கல்விமுறை (தொடக்கக்கல்வி முதல் மேனிலைக்கல்வி வரை) மாணவர்களை மேலும் ஒடுக்குகின்ற கருவியாக இருக்கின்ற சூழலில் கல்வி பயில் அமைப்புமுறையில் மாற்றம் கொண்டு வர நினைப்பது மேலும் உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு எதிரான கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இச்சூழலில் செயல்வழி கல்வியை உள்ளடக்கிய சமச்சீர் கல்வி எனும் புதிய கல்விக் கொள்கையாக, பரவலாக்கம் செய்யத்தவறுதலோடு மும்மொழியைத் திணித்தல் இளம்பருவத்தில் கொண்டு வர எண்ணுவது தேசிய இனம்சார்ந்த மொழிவழி அடையாளத்தை அழிக்க எண்ணுவதாகும்.

               கல்வி கற்று பட்டம் பெற்ற பின்னர் தகுதித்தேர்வு என்பது முதலாளிகள் நடத்தும் பயிற்சி நிறுவனங்களின் லாப நோக்கத்திற்கானதாகவே அமையக்கூடியதாகும். மேல்நிலைக் கல்வித்தகுதி பெற்ற மாணவர்கள் சூத்திரங்களையும் விதிமுறைகளையும் மனப்பாடம் செய்து மூளையில் நிரப்பி தகுதி பெறுதல் ஒழிய அதனை அன்றாட வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பில்லாமல் போகிறது. பாடங்களைப் படித்து மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் எப்பயனும் இல்லை என்பதையே புதிய கல்விக் கொள்கையின் வரைவு அமைந்துள்ளது. மேல்நிலைக்கல்விக்குப் பின்னே தேசியத் தகுதித்தேர்வு முகமை நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமே பட்டப் படிப்பு சாத்தியமாகும் என்று முன்மொழியும் நிலை என்பது மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு முக்கியம் என்பதால் கிராமப்புற சமச்சீர் கல்வியில் அதிக மதிப்பெண்களைப் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பில்லாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மனநிலையே மாணவர்களின் மத்தியில் ஏற்படும். இது வாழ்வின் மீதான விரக்தி மனநிலையையே உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.

 இன்றைய சூழலில் ஆசிரியர் மாணவர்களுக்கு சமகாலச் சூழலோடு கல்வியைப் பொருத்திப் பார்ப்பதற்கு வழிகாட்டுவதில்லை. காரணகாரிய தர்க்கரீதியான உரையாடல் ஆசிரியர்- மாணவர், மாணவர் – ஆசிரியர், பெற்றோர்-மாணவர், ஆசிரியர்-பெற்றோர் மத்தியில் நிகழ்வதில்லை. கற்பித்தலின் வழியாக நுட்பங்களைத் கற்றுத் தருகிறார்களொழிய அதனால் சமூகத்திற்கு சாதக, பாதகமான விளைவு என்ன என்பதை விளக்கப்படாமலேயே இருக்கிறது. அணுக்கரு கொள்கை, அணுக்கரு விளைவுடன் அணு இணைவு, அணு சிதைவு, அறிவியல் ஆய்வு என நுண்மான் நுழைபுலம் கொண்டு அணுகுகிறோம். அதன் கண்டுபிடிப்பின் உச்சத்தில் மனித இருப்பும் மனித வாழ்வாதாரமும் இல்லாமல் போகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் வல்லரசாக மாற்றினாலும் அங்கு சமூகவிருத்தி, மனித ஆற்றலின் முக்கியத்துவம் பேணப்பட வேண்டும் என்பதை இன்றைய அறிவியல் ஆய்வுமுறைக் கல்வியில் கற்பிக்கப்படுவதில்லை.

எவனோ ஒருவன் குளிர் தாங்குவதற்கு எவனோ ஒருவன் உள்ளன் ஆடை தயாரிப்பது போல் எவனோ ஒருவன் பயன் பெற நம் மண்ணில் யுரேனியம் தயாரிக்க அணு உலை, ஸ்டெரிலைட் ஆலை உருவாக்குகிறோம். உள்ளன் தயாரித்தல் என்பது தொழில் நுட்பம் தான். அணு உலையின் மூலம் யுரேனியம் தயாரிப்பதும், ஸ்டெரிலைட் தயாரிப்பதும், கைட்ரோ கார்பன் எடுப்பதும் தொழில் நுட்பம் தான். இவை இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. உள்ளன் ஆடை மனிதர்களுக்கு இயற்கையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றார் போல உடம்பிற்கு சீர் செய்யும் ஓர் ஆடை, ஆனால் அணு உலை, கைட்ரோ கார்பன் எடுத்தல் என அரசின் செயல்பாடு, சமூக இயற்கை வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடியது. இயற்கையையும், மனித சமூகத்தையும் காவுவாங்க காத்திருக்கக்கூடியதாகும். இவ்வாறு சமூக நடவடிக்கையையும், அரசியல் செயல்பாடுகளையும் காரணகாரியத்தோடு அணுகி இது சரி. இது தவறு, இதற்கு மாற்று இருக்கிறதா? ஏனப் பகுத்தாய்ந்து சமூக வளமைக்கான, விடுதலைக்கான சூழலை உருவாக்க மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள கல்வி வழிகாட்டத் தவறுகிறது.

மும்மொழிக் கொள்கைக்கு மூன்றாம் வகுப்பிலேயே முக்கியத்துவம் கொடுக்கின்ற இக்கொள்கை சுழ்நிலையியல் கல்வி, வரலாறு இப்பாடங்களைப் புறக்கணிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. மனித வளமைக்கு தாய்மொழி எவ்வளவு அவசியமோ அதனைப்போன்று சுற்றுச்சூழல் மிகமுக்கியமானது என்பதை சிறுவயதிலிருந்தே அறிந்து கொள்ளும் மாணவர்களால் இயற்கைக்கு எதிரான அரசுநடவடிக்கைகளை ஒவ்வொருவரும் கல்விவழியாக அறிய முடியும். அதன்வழியாக மனிதவளமைக்கானது எது என்பதை அறிய முடியும்.

 இன்றைய சூழலில் புதிய கல்விக்கொள்கையில் மாணவர்களின் சமூக உணர்ச்சியை கட்டுப்படுத்த நினைப்பதும், மாணவர்களைக் கண்காணிப்பதற்கு குழு அமைக்க வலியுறுத்துவதும் பின்தங்கிய மாணவர்களுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்பதும் குலத்தொழிலை வழிமொழிவதாகவும் சமூகநீதிக்கு எதிரான முதலாளித்துவ தாராளமய உலகமய வலைக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகும் என்பதே என் எண்ணம்.

  புத்தகச் சுமை, பாடச்சுமை மாணவர்களுக்கு சோர்வைத் தருகின்றது என்கிற காரணங்களால் பள்ளி மாணவர்களுக்கு பருவமுறை அடிப்படையில் பாடம் கற்பித்தல். தேர்வு நடத்துதல் என்பது சிறந்த முறையாக இருந்தாலும் அது தொடர்செயல்பாட்டுக்கானதாக மாணவர்களைத் தயார் செய்தல் வேண்டும். இச்சூழலில் புத்தகத்தை சோர்வு தரக்கூடிய பொருளாகவே பார்க்கும் வழக்கம் நடைமுறையிலுள்ளது. இருப்பினும் மாணவர்களின் குடும்பச் சூழல் காரணமாகும். மேலும் டிஜிட்டல் வழிக் கற்றலும் கற்பித்தல் என்பது ஏழை எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு எவ்வாறு சாத்தியமாகும்?அடிப்படை வசதியில்லாத பள்ளிகளே தமிழகத்தில் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் மாணவர்களுக்கு டிஜிட்டல் கற்பித்தல் எவ்வாறு சாத்தியப்படும். டிஜிட்டல் வழிக் கற்றல் ஆசிரியர்-மாணவர்களிடம் ஆரோக்கியமான தொடர்ச்சியான நல்லுறவிற்கான உரையால் இல்லாமல் ஆக்குவதோடு அச்சுவழியான வாசிப்புமுறையை நீர்த்துப் போகச் செய்யக்கூடும். ஆகவே முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்வியல், பொருளாதாரச் சூழலுக்கு இம்முறை ஒவ்வாததாகும்.

               மாணவர், ஆசிரியர் உறவு நிலையில் விரிசல் இருவருக்குமான உறவு நிலை நெருங்கிய தொடர்பு, தோழமை உணர்வு இல்லாததால் ஆசிரியர் மேல் மாணவரும், மாணவரின் மேல் ஆசிரியர்களும் வன்மத்தை கைக்கொள்பவர்களாக உருவாகிறார்கள். இவை மாற வேண்டும், ஆசிரியர் மாணவர்களின் மேல் அக்கறை கொள்ளும் மாற்றுக் கல்வி சிந்தனையாளர் பாவ்லோ ப்ரைரெ வழியுறுத்தும் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களிடம் விடுதலைக் கல்வியை வலியுறுத்துவதை இன்றைய சூழலில் கவனம் கொள்ளத் தேவையாக உள்ளது. வங்கியில் பணத்தை டெபாஸிட் செய்வதைப் போல் ஆசிரியர் மாணவர்களின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு கல்வி முறையை ப்ரைரெ கடுமையாக சாடுகிறார்.

மாணவர்களிடம் ஆசிரியர் சொற்பொழிவினை நிகழ்த்துவதையும் மாணவர்களை இறுக்கப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைக்காமலும் அவர்களை மௌனமாக்காமலும் ஆற்றலோடு செயல்பாட்டினில் ஈடுபட வைக்க வேண்டும். மாணவர்களை சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும். வாழ்க்கை அனுபவங்களையும் குடும்பப் பிரச்சனைகளைப் பகிர்தல், ஒவ்வொரு முறையும் கற்கும் போது சமூக இயங்கியல் குறித்த திறனாய்வுப் பார்வை மாணவர்களுக்கு வேண்டும். இவைகளை உள்ளடக்கிய கல்வி முறையே சமூக மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியதாக இருக்கும். இவ்வாறான சூழலை இன்றைய கல்வி முறையின் கொள்கையாக கடைப்பிடிக்கப் வேண்டும். கல்வி முறையில் பல மாற்றங்கள் கொண்டிருந்தாலும் ஆசிரியர் மாணவர் எனும் உறவு முறையிலும் பாடம் நடத்தும் முறையிலும் ஒடுக்கு முறையையும் ஏற்றத்தாழ்வினை ஆசிரியர் கையாள்வதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. மேலும் மாணவர்களின் கல்வித்தர முன்னேற்றத்தை ஆரோக்கியமாக வளர்த்துச் செல்வதில்லை. இடைநிலை கடைநிலை மாணவர்களை புழுக்களுக்கும் கீழாய் அணுகுவது மேலும் மாணவர்களை ஒடுக்குமுறைக்கு இட்டுச் செல்கிறது. இவை மாற்றப் படவேண்டும். மாணவர்களை தங்கு தடையின்றி பய உணர்வின்றி இயங்கவும் சமத்துவத்தை நிலைநாட்ட உரையாடவும் முன்னேற்றப் பாதையை நோக்கியே பயணிக்க வைக்கும் கல்வியே தேவையாக உள்ளது.

               மாற்றுக் கல்வியின் நோக்கமாக முதலில் முன்வைப்பது சமூக விடுதலைக்கானதாக இருக்க வேண்டும். ஆனால் இவை புதிய கல்விக்கொள்கையில் இல்லை. மேலும் சமூக வளர்ச்சி சார்ந்தும் மக்கள் வாழ்வாதாரம் சார்ந்தும் புதிய கல்விக் கொள்கை அமையவேண்டும். கல்வி-ஆசிரியர்-மாணவர்-சமூகம் என கூட்டுறவைப் பேணும் வகையில் சமூக விடுதலையை மையப்படுத்தியே சமூக அக்கறையோடு பொதுநலம் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும். வெறுமனே சேமிப்புக் கிடங்குபோல் அறிவாளிகளை சேமித்து வைப்பதை விட்டு விட்டு அவ்வறிவாளியை சமூக விடுதலைக்காகவும் சமூக விருத்திக்காகவும் பயன்பெறும் வகையில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். பார்ப்பனமயமாதல்-குலவழிக் கல்வி, வீட்டுப் பள்ளி எனும் சனாதன வலைக்குள் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அமைந்துள்ளது. இதிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்தை முன்மொழியும் கல்வியாக, படைப்பாக்கத் திறனை வளர்க்கக் கூடிய, கலைகளில் மாணவர்கள் கற்பதற்கு கல்வியோடு இணைக்க வேண்டும்.

தொடக்கக் கல்வியிலிருந்தே நிகழ்த்துதலோடு கல்வி கற்றுத்தர வேண்டும். அதுவும் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தர வேண்டும். மொழி உணர்வையும், தமிழின உணர்வையும் மேம்படுத்தும் வகையில் கல்வி அமைய வேண்டும். பெண் - ஆண் முரண்பாடுகளை முன்வைக்கும் தன்மையிலிருந்து விடுபட்டு கல்வியின் வழி சமத்துவத்தையும், தோழமையையும் கொண்டு வரவேண்டும். இவைகளை புதிய கல்விக் கொள்கையில் இல்லாமல் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மொழிப்பாடம் கற்றுத்தருவது குறித்துப்பேசும் போது மொழிவழி கல்வியை வலியுறுத்துவதுபோல கூறிவிட்டு பின்னர் பொதுமொழியில் கற்றலாம் என்று கூறுவது தாய்மொழிக்கல்வி வழங்குவது அவசியமில்லை என்பதான தொனி வெளிப்பட்டுள்ளது. மேலும் தகுதிவாய்ந்த மொழியாசிரியர் இல்லையென்றால் ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பயன்படுத்துக் கொள்ளலாம் என்பது இளம்தலைமுறை படித்தோர்க்கு எதிரானதாகும்.

  இக்கல்விக் கொள்கைக்கு முன்னதாக “1985இல் கல்வி : ஓர் அறைகூவல் நுனரஉயவழைn : யு நஒஉநடடநnஉந எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கல்விக் கொள்கைக்கான ஆவணத்தை வெளியிட்டு அதன் பின் நாடு தழுவிய அளவில் 1986இல் புதிய கல்விக் கொள்கையை வெளியிடப்பட்டது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கப் போகும் இந்திய திருநாட்டை பொருளாதாரப் பாதையிலும் அறிவியல் பாதையிலும் வளம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கை புகுத்தப்படுகிறது என்று அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி புதிய கல்விக் கொள்கை குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறார். ”(கோகிலாதங்கசாமி, 2012) இக்கொள்கையில் அனைவருக்கும் கல்வி, கரும்பலகை இயக்கம், மாதிரிப்பள்ளிகள், முன்னோடி பள்ளிகள், மதிப்பு உணர்வு கல்வி;, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்கிற தன்மையில் புதிய கல்விக் கொள்கை (1986) திட்டம் அமைந்தது. இதன் சாராம் இந்தியா என்கிற ஓர் மனம் என மதிப்பை உருவாக்க நினைத்து இருப்பதைப் பார்க்க முடிகிறது பார்க்க முடிகிறது.” எனும் நோக்கத்ததைப் போன்றே “அனைவருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தை ஒருங்கிணைந்த மற்றும் துடிப்பான அறிவு மிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு நேரடியாக பங்கு அளிக்கும் விதமாக இந்தியாவை மையம் கொண்ட கல்வி முறையாக தேசிய கல்வி கொள்கை 2019 வரைவு கருதப்படுகிறது” புதிய கல்விக் கொள்கையின் குறிக்கோள் அமைந்துள்ளது. இந்தக் குறிக்கோள் நாடு தழுவிய கல்வியைக் கல்விக் கொள்கையாகக் கொண்டு வர நினைப்பது என்பது பன்முகப்பட்ட தேசிய இனங்களைக் கொண்டுள்ள இந்தியாவில் சாத்தியமற்றதாகும்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டம் கல்வி மாநிலக்கட்டுப்பாட்டிற்குள் இருப்பதே சரியானதாகச் செயல்பட முடியும் என்று கூறுகிறது. புதிய கல்விக் கொள்கை நாடு தழுவிய ஒரே கல்வி என மத்திய அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைப்பது மாநிலங்களின் சுயாட்சியைப் பறித்துவிட்டு கல்வியை இந்தியா எனும் போர்வைக்குள் கொண்டுவருவது தவறானதாகும்.

  புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கின்ற யுஜிசி நிர்வாக அமைப்பை காரணமின்றி நிராகரிக்கின்றது. கல்லூரி, பல்கலைக்கழகங்களை யுஜிசி எனும் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைமையிலேயே அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. இதன் தலைவராக ஒருவரும், ஒரு துணைத்தலைவரும் கொண்ட 10 உறுப்பினர்களை இவ்வாணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் இந்திய அரசால் நியமனம் செய்யப்பட்டாலும் நடுவண் அரசு மாநில அரசு பணிகளில் இல்லாத ஒருவரை இதன் தலைவராக நியமிக்கப்படுவதுண்டு. மொத்தமுள்ள 10 உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்களும் மாநிலவாரியான பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களைத் தேர்வு செய்யப்படுவர். துறைசார்ந்த ஆற்றல் மிகுந்த கல்வியாளர்கள் என மீதமுள்ள நான்கு பேரை தேர்ந்தெடுக்கப்படுவர் . இதில் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியாற்றுவர். துணைத்தலைவர் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியாற்றலாம் ஏனைய உறுப்பினர்கள் மூன்றாண்டுகள் பணியாற்றலாம். ஒருவரே இரண்டு முறை தலைவராக ஒரு துணை தலைவராகவும் நியமனம் செய்யலாம் என்கிற விதிமுறையை கொண்டு யுஜிசி நிர்வாக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக அமைப்பினை புதிய கல்விக் கொள்கையை நிராகரித்து ஏற்கனவே இருந்த கட்டுமானத்தை உடைத்து உயர் கல்வி ஆணையம் எனும் புதுக்கட்டுமானத்தை உருவாக்குவதன் தேவை என்ன என்பதை நன்கு விளக்கப்படாமலே உயர் கல்வி ஆணையம் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

மேலும் ராஷ்ட்ரிய சிக்சா அயோக் எனும் கொள்கை பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் மாநிலங்களின் தலைமைத்துவத்தை சுயாதீனத்தைப் பறித்து இந்தியப்பிரதமரின் கீழ் இயங்கும் குழுவே கல்வித்துறையை கல்வி சார்ந்த நிறுவனத்தை கண்காணிக்கும் அதிகாரம் பெறக்கூடியதாக இருக்கும் என்பது பாசிச தன்மையானதாகும. ; இதனால் மாநிலங்களின் பிரதிநித்துவம் இழக்கநேரிடும். அரசு சார்ந்த பள்ளிகளையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தனியாரிடம் தாரைவார்க்க பார்க்கக்கூடியதாக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அமைந்துள்ளது. நேஷனல் டெஸ்டிங் அகடமி மூலமாக மாணவர்களுக்கு தகுதித்தேர்வு வழங்கிய பின்னரே அந்தத் தேர்வின் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு வழங்கப்படும் என்பது பிற்போக்குத்தனமானதாகும். பாடத்திட்டம் சார்ந்த கல்வி கற்ற பின்னர் தகுதித்தேர்வு வைத்தே ஒரு மாணவனைத் தகுதியானவன் என்று கூறுவது மாணவர்களின் சுய அறிவுயை, சுய சிந்தனையை, சுய செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக அமையும். மாணவர் விரும்பும் பாடத்தை படிக்க முடியாமல் தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு பட்டப்படிப்பு தீர்மானிக்கப்படும் என்பது மாணவர் விருப்ப அடிப்படை பாடத்தை தேர்ந்தெடுப்பது முடியாமல் போகிறது.

புதிய கல்விக் கொள்கை 2025, 2030 ஆம் ஆண்டு தரமான உள் கட்டமைப்பு கொண்ட கலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்றால் இன்றைய தேவை எதுவென அறிந்து அதனை இப்பொழுதே உட்கட்டமைப்பு ஆசிரியர் தகுதி மாணவர்களின் கல்வி மாணவ்களின்விருப்பம் இவைகளை இப்பொழுதே உணர்ந்து மாநில ரீதியான சுயாதீன செயல்பாட்டிற்கு அடித்தளமிடாமல் இந்தியா என்கிற ஒற்றைப் பண்பாட்டை உருவாக்குவது என்பது பன்முக மொழி ரீதியான பண்பாட்டைக் கொண்ட இந்தியாவிற்கு பொருத்தமானது இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே வாழ்வியல் என்பது எவ்வாறு சாத்தியமாகும். சமூக இயங்கியலுக்கு இது முரணானதாகும். பன்முகம் கொண்ட மொழி வழியான அடையாளத்தை மீட்டெடுக்கவும் மொழி வழியான பண்பாட்டை அடையாளப்படுத்தவும் மொழிவழிக் கல்வியே சிறந்தது என்பதை புதிய கல்விக் கொள்கை வரைவில் பல திருத்தங்கள் கொண்டுவந்து அதனை நடைமுறைப்படுத்துவதே மக்களுக்கான, சமூகநீதி முன்வைக்கக்கூடிய புதிய கல்விக் கொள்கையாக இருக்கமுடியும். ஏற்கனவே நிலவுகின்ற போதாமையைப் போக்காமல் அடிப்படையை சீர் செய்யாமல், சமூக முரண்களை கவனம் கொள்ளாமல் பிற்போக்குத்தனத்தை மாற்றமால் புதியகல்விக் கொள்கை தினையளவும் சாத்தியமிலலை.

 தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் முதல் தலைமுறைப் பட்டதாரி என்பது முழுமையாக ஒழிக்கப்படாத சூழல் ஒருபுறமிருக்க, புதிய கல்விக் கொள்கையால் மேலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய சூழல் ஏற்படும் அபாயம் நம் கண்முன்னே இருக்கின்றது. மூன்றாம் வகுப்பு முதல் மேல்நிலைக்கல்வி வரை பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவ்கள் கல்வி பயில்வதில் பின்னடைவு ஏற்படும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. மேலும் பின்தங்கிய மாணவர்களை என்டிபி, ஆர்ஐஏபி (National Tutors Programme, Remedial Institute Aides Programme) எனும் அமைப்புகள் கண்காணிக்க கூடியவர்களாக இருப்பார்கள் என்று கூறுவதும் பின்தங்கிய இடை நின்ற மாணவர்களுக்கு சந்தைக்கு தேவையான தொழிற்கல்வியைப் பயிற்றுவிப்பது என்பது பொருத்தமானதாக இருக்கமுடியாது. ஒரு மாணவன் கல்வியில் இடைநிறுத்தம் ஆகிறான் என்றால் அம்மாணவனின் சூழல், பொருளாதாரப் பின்னணி, சமூகப் பின்னணி, மாணவனின் மனநிலை இவைகளை ஆய்ந்தறிந்து நிறுத்ததிலிருந்து விடுவித்து தொடர்ந்து கல்வி வழங்க வாய்ப்புகளை வழங்குவது என்பது சாத்தியப்படுத்த பள்ளி முன்வேண்டுமேயொழிய அதைவிட்டுவிட்டு இடைநின்ற மாணவனுக்கு தொழிற்கல்வி சார்ந்து படிக்க செய்வது என்பது சரியானதாக இல்லை. ஒரு மாணவன் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் போனதற்கு அவனுக்கு வாய்ப்பாக தொழிற்கல்வி அளிப்போம் என்பது பிற்போக்குத்தனமானதாகும்.

  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவைகளை வழிநடத்துவதும் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் பரிந்துரைகளை ஏற்று கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இயங்கும் தன்மையில் இருக்கும் நிலையினை புதிய கல்வி கொள்கை மாற்றம் உண்டு பண்ணுகிறது. பல்கலைக்கழக மானியக் குழு என்கிற அமைப்பு மனிதவள மேம்பாட்டுத்துறையோடு இணைந்து இருந்தாலும் அது அறிவு சார்ந்த முனைவர் ஆக திகழும் ஒருவரை தலைவராகக் கொண்டு நடுநிலையோடு சுயாதீனமாகச் செயல்படும் ஓர் அமைப்பே யுஜிசி எனும் அமைப்பாகும். பல்கலைக்கழக மானியக்குழு செயல்பட்டு வருவதை புதிய கல்வி கொள்கை வரைவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. யுஜிசி எனும் அமைப்பை மாற்றியமைத்து National education commission என்கிற புது அமைப்பினை உருவாக்குவதன் தேவை என்னவாக இருக்க முடியும்? இதன் தலைவராக இந்தியப் பிரதமரையும் இந்தியாவின் மிகப்பெரிய முதலாளி வர்க்கத்தினரே இக்குழுவில் இருப்பார்கள் என்பதான நிலை உருவாக்கின்ற தன்மையைப் பார்க்க முடிகிறது.

கல்வியாளர்களைக் கொண்ட யுஜிசி என்கிற அமைப்பு சுதந்திரமாக செயல்பட்ட தன்மை மாறி ஆளும்வர்க்கத்தின் மூலம் ஒரு சார்பாக மத்திய அரசின் கீழ் செயல்பட நேரடி கவனத்திற்கு கொண்டு வந்துள்ள, இச்செயல்பாடு மக்களின் வளர்ச்சிக்கான தாகவும் சமூக நீதிக்கான தாகவும் இல்லாமல் பாசிசத்திற்கு ஆளான நிலைக்கு தள்ளப்பட்டது மிகவும் மோசமானதாகும். மூன்றாம் வகுப்பில் தொடங்கும் பொதுத்தேர்வு 8 பொதுத் தேர்வாக நடத்துவதன் மூலமாக இந்தியா வல்லரசு ஆக முடியுமா? ஒரு குழந்தை தேர்ச்சி அடையவில்லை என்றால் மீண்டும் மூன்றாம் வகுப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்படும். இதனால்; வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தை மூன்றாம் வகுப்பிலேயே இடைநீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்பொழுது பள்ளியின் உள்கட்டமைப்பு, கற்பிக்கும் கருவி, மேம்பாட்டுக்கான கல்வி முறை சார்ந்த கட்டமைப்பைக் கொண்டு வராமல் அடிப்படைத் தேவையான தண்ணீர், பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத உள்கட்டுமானத்தை கொண்ட இன்றைய சூழலில் முன்னோக்கு பார்வையை கொண்டதாக புதிய கல்விக்கொள்கை இருக்கின்றது.

 பள்ளிகளைச் சீர்படுத்தவும் உள்கட்டமைப்பை வளமானதாகவும் அரசுப் பள்ளிகளை உயர்தரமானதாகவும் பள்ளிகளை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லவும், மாணவர்களின் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அதிகமாக இருப்பதை குறைக்கவும் அரசு பள்ளிகளில் சேருவதற்கு ஊக்குவிக்கவும் இளம் பருவக் கல்வி முதல் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு இவைகள் அனைத்திலும் அந்தந்த மொழிவாரியான மாநிலங்களின் சுயாதீனதோடு தாய்மொழிக் கல்வியை வழங்குவது என்பது ஒரு நாட்டின் வளர்ச்சி சார்ந்ததாகும். இதனை கவனத்தில் கொண்டு மாநில அரசு மொழிவழிப் பண்பாட்டை அடையாளப்படுத்தி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கல்விவழி வளர்ச்சிப்பாதை அமைத்துத்தர எண்ணவேண்டும். தாய்மொழி வழிக்கல்வியை வழங்க வேண்டும் என்கிற தன்மையை புதிய கல்விக் கொள்கை முற்றிலும் புறக்கணிக்கிறது. விருப்பப்பாடமாக சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை கற்பிக்க வைப்பது என்பது கொள்ளாத வாயில் கொழுக்கட்டையை திணிப்பது போன்றதாகும். தாய்மொழியை அதன் வழியான கல்வி பயிலுதல் என்பது ஒரு மாணவருக்கு உகந்ததாக இருக்கும். இதை வழங்குவது என்பது ஒரு நாட்டின் கடமையும் கூட. தாய்மொழி வழி பாண்டித்தியம் பெறுவதற்கும் வழிவகை செய்தை விடுத்து மும்மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கை இன்னும் பிற மொழியை கற்று தேர்தல் இதன் திறன் மேம்பாடு என்பது வலிந்து திணிப்பதாகும். தானே முன் வந்து படிக்க விரும்பினால் மட்டுமே கற்பிக்க வழிவகை செய்ய வேண்டும். தாய்மொழிக் கல்வி வழியாக மருத்துவம், தொழில்நுட்பக் கல்விகளாவும் இலவசக்கல்வியாக வழங்குவது என்பது மிக அவசியமான ஒன்றாகும். ஆனால் உலகமயச் சூழலில் சந்தை கலாச்சார உலகில் அனைத்தும் வணிக நோக்காக ஆகிவிட்டதால் கல்வியையும் கார்ப்பரேட் கையில் ஒப்படைத்து வணிக சந்தைப் பொருளாக கல்வி மாற்றப்படும் அவலம் இனி வரும் காலங்களில் நிகழக்கூடும். இன்றைய சூழலில் இனி வரும் காலங்களிலும்; தண்ணீரை எவ்வாறு பொதுமை வெளியிலிருந்து அப்புறப்படுத்தி வணிக நோக்கில் ஆக்கப்பட்டது போன்றே கல்வியை மனிதனின் உரிமை கல்வியின் மூலமாக சமூக நீதி அடைய முடியும் என்கிற அண்ணலின் குரலுக்கு மாறாக முதலாளி கைகளில் கல்வி கடைச்சரக்காக்கி ஆகிவிடும் தருணத்திலேயே ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை அவதானிக்க முடிகிறது.

 உயர்கல்விப் படிப்பினை தரமான தாராளமயம் நோக்கிய கல்வியாக வழங்க வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையான முதலாளிகளுக்கானதாகும். இக் கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிராக இல்லாமல் சமூகநீதியை உருவாக்குமானால் கல்விக் கொள்கை எல்லோரும் ஆதரிப்போம். ஆனால் புதிய கல்விக் கொள்கை குருகுல கல்வியை ஆதரிப்பதும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதும், தனியார் கல்வி நிறுவனங்களை வளர்த்து விடுவதுமான செயலை கொண்டதாக இக்கொள்கையின் சாரத்தை உணர முடிகிறது. புதிய கல்விக் கொள்கையில் பஞ்சதந்திரம், ஜாதகம், கீதை உபதேசம் முதலிய கதைகளை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று கூறுவது கருத்து முதல்வாதத்தையும் பிற்போக்குத்தனத்தையும் மூடப்பழக்கங்களையும் மாணவர்களின் மத்தியில் விதைப்பதாகும். அறிவார்ந்து செயல்படக்கூடிய தன்மையை விட்டு தெய்வீகத்தோடு இந்துத்துவத்தோடு இணைக்கும் கல்விக் கொள்கை மேலும் மாணவர்களை கல்வியின் மூலமாக பகுத்தறிவற்ற மூடத்தன மிகுதிப்பாட்டை பெற வழிவகை செய்யும்.

புதிய கல்விக் கொள்கை தற்பொழுது கல்வியாளர்கள் மத்தியிலும் முற்போக்கு இயக்கங்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் சாதக-பாதகத்தை அறிந்து வினையாற்றுவது என்பது மிக அவசியமானதாகும். தேசிய இனம் சார்ந்த மொழிவழி அடையாளத்தையும் பண்பாட்டையும் முன் மொழியாமல் இந்தி, சமஸ்கிருத மொழிகளை முன்னிலைப்படுத்தி இந்தியா என்கிற ஒற்றைப் பண்பாட்டுத்தளத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அமைத்திருப்பது பிற்போக்குத்தனமானதாகும். இதில் பல திருத்தங்களை அறிந்து நடைமுறைப்படுத்துவதே சிறந்ததாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் தன்மையில் அமையும் கருத்துநிலை அடிப்படையில் ஒரே கல்வி என்ற ஓர்மைக்குள் கொண்டுவர நினைப்பது சரியானதாக இருக்க முடியாது.

-              ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர். 625 514