மனித வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்சனை உள்ளது. எல்லா மனிதர்களுக்கும் ஏதாவதொரு வகையில் கஷ்டம் இருக்கிறது. அன்றாட உணவுக்கும், பிழைப்புக்கும் வழியில்லாமல் தெருவோரங்களில் வீடின்றி வாழும் மனிதர்கள் நம் கண்முன்னே நடமாடுகின்றனர்.

நமது துயரத்துக்குக் காரணம் என்ன என்பதை யோசிப்பதைத் தவிர்த்து, கடவுளே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளை நகர்த்த ஒரு நம்பிக்கை தேவையாக இருக்கிறது.

kulasekara pattinamகடவுள் எங்கே இருக்கிறார் என்பதற்கு மார்க்சியத்தின் பதில் இதோ...

‘இரக்கமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாகவும், இதயமில்லாத இந்த உலகத்தின் இதயமாகவும், ஏதுமற்ற ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக கடவுள் இருக்கிறார்”.

கடவுளை பல தரப்பட்ட மக்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வழிமுறைகளில் வழிபட்டு வருகின்றனர்.

தினமும் உழைத்துக் களைத்த உழைக்கும் வர்க்கத்தினர் தன் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வந்தால், தம் மனபாரம் குறைந்ததாக நம்புகின்றனர். அவ்வழிபாட்டுக்கு தன் உழைப்பின் ஒரு பகுதியை செலவிடவும் செய்கின்றனர்.

உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பகுதியினரின் கடவுள் நம்பிக்கையை, அரசாங்கம் கோவில்களில் உண்டியல் வைத்தும், கட்டண தரிசனச் சீட்டு வழங்கியும் காசாக மாற்றுகிறது. இன்னும் சிலர் கடவுளை நன்றாக வெகுஜன மக்களிடம் மார்க்கெட்டிங் செய்து, கடவுளை காட்சிப்பொருளாக மாற்றி விட்டனர்.

மதவாதிகளோ கோவில் விழாக்களையும், விசேஷ நாட்களையும் கூட மத வெறுப்பை தூண்டுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர்.

மனிதன் தன் ஆள்மனதில் உள்ள பயத்தினால் மேற்கொண்ட மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகள் பல, அவற்றுள் சில.

இயற்கை வழிபாட்டு முறை, குலதெய்வ வழிபாட்டு முறை, சிறுதெய்வ வழிபாட்டுமுறை, பிரம்மாண்டத்தைக் காட்டி மக்களை ஓரிடத்தில் குவிக்கும் செவிலியர் வழிபாட்டுமுறை.

இயற்கையின் மீதுள்ள பயம் மற்றும் அறியாமையின் காரணமாக ஆதிமனிதன் இயற்கையை வழிபட்டு வந்தான். தன் முன்னோர் வழியில் நல்வாழ்வு, அற்ப ஆயுள் வாழ்ந்த முன்னோர்களை குலதெய்வமாக நினைத்து வழிபடத் துவங்கினான். பின்னர், மூடநம்பிக்கையின் காரணமாக பேய் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றக் கோரி ஊர்களில் பொதுவான கோவில் அமைத்து, சிறுதெய்வங்களை ஊர்காக்கும் கடவுளராக நம்பி வழிபடத் துவங்கினான்.

இவையெல்லாமே மனிதன் தன் ஆழ்மனத்தில் இருந்த பயத்தின் காரணமாக, தன்னை யாராவது காப்பாற்ற வேண்டும் என நினைத்து, மனிதன் படைத்த வழிபாட்டு முறைகள்.

நான்காவதாக, இன்றைய சமூகத்தில் மிக ஆழமாக ஊடுருவி, மக்களின் சிந்தனையை மழுங்கடித்து, பிரம்மாண்டத்தைக் காட்டி மக்களை ஓரிடத்தில் குவிக்கும் செவிலியர் வழிபாட்டு முறையின் தாக்கத்தை நாம் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் காலமிது.

செவிலியர் வழிபாட்டு முறைக்கு, ஆந்திராவின் திருப்பதியும், கேரளாவின் சபரிமலையும், தமிழகத்தின் மதுரை மீனாட்சியும், முருகனின் அறுபடை வீடுகளும் முக்கிய உதாரணங்கள். இங்கே பொதுமக்களின் நம்பிக்கையை உண்டியலை நிறைக்கும் பணமாக மாற்றப்படும் நிகழ்வு தடபுடலாக தினமும் நடக்கிறது. மேற்கண்ட கடவுள்கள் உண்டியலில் காசுபோடச் சொன்னதாய் எந்த புரட்டு புராணத்திலும் குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலும், குலசேகரன் பட்டின‌த்தில் நடைபெறும் தசரா விழாவும் (மைசூருக்கு அடுத்தபடியாக என்று விளம்பரம் செய்யப்படுகிறது) வெகுஜன மக்களின் நம்பிக்கையை ரிப்பேராக்கி அதாவது நன்றாகப் பயன்படுத்தி வணிகம் ஒன்றே பிரதானமாக கோவிலும் அதன் வளாகமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

1872 ஆம் ஆண்டில் திருச்செந்தூர் கோவிலில் நுழைந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரால் தீட்டுப்பட்டு விட்டதாய் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பில் கொடிமரம் வரை சென்றதால் தீட்டு ஆகாது என திருநெல்வேலி ஜில்லா மேஜிஸ்திரேட் தீர்ப்பு வழங்கியது வரலாறு.

அது நாள்வரை கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள வெளிப்பிரகாரத்தில் உள்ள சுவரின் வட்ட வடிவ ஓட்டை வழியாக (இன்றளவும் உள்ளது) தரிசனம் செய்தவர்கள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியதற்காக மேற்கண்ட வழக்கு நடைபெற்றுள்ளது.

அக்காலத்தில், கோவிலுக்கு வெளிப்பிரகாரத்தில் சில சாதியினர், கொடிமரம் வரை சில சாதியினர் என்று பாகுபாடு பார்த்து தம் மக்களுக்கு அருள் வழங்கியவர் திருச்செந்தூர் முருகன்.

ஆனால், அதே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் பொருளாதார நிலையிலும், அரசியலிலும் முன்னேற்றம் கண்டதும் இன்று, ஆகம விதிகளைத் தளர்த்தி அக்கோவிலின் கடவுளின் பெயரில் போலி ஆன்மிகவாதிகளான ஆசாமிகள், கோவிலின் வணிகத்தைப் பெருக்கும் பொருட்டு அனைத்து சாதி மக்களையும் கட்டண தரிசனத்தில் அரவணைத்துக் கொண்டனர்.

திருச்செந்தூரிலும், குலசேகரன்பட்டின‌த்திலும் கோவிலைச் சுற்றிலும் வணிக ரீதியிலான கோவில் பிரசாத ஸ்டால்கள் என்ற பெயரில், தேங்காய் பழத்தைக்கூட அநியாய விலைக்கு விற்று அற்ப லாபம் சம்பாதிக்கின்றனர் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெருமுதலாளிகள். சிறுவியாபாரிகளுக்கு கோவில் பிரகாரம் கூட தினசரி போராட்டக்களம்தான்.

ஆள் உயர உண்டியல்களையும், தட்சணை பறிக்கும் ஆசாமிகளையும் பெருமுதலாளிகளின் முதலைவாய்க் கடைகளையும் தாண்டி, கோவிலுக்கு வரும் குடும்பங்கள் மன அமைதியைப் பெறுவது லேசுப்பட்ட காரியமல்ல.

மாதா மாதம் வரும் சாதாரண தினங்களைக்கூட மாதாந்திர செவ்வாய், வெள்ளி என்றும், கந்தசஷ்டி, தசரா (நவராத்திரி விழா) என்றும், விதவிதமாய் விசேஷங்கள் என பெயர் வைத்து, வருடத்தின் 90 சதவீதம் நாட்களை வெகுஜன மக்கள் கோவில்களைத் தேடிவந்து தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் பொருட்டு செய்துவிடும் கூட்டம் ஊரெங்கும் பரவியிருக்கிறது.

கடன் தீர பணம் வேண்டும். அதற்கு உழைக்க வேண்டும். ஆனால் உழைத்து சேமித்த பணத்தைக் கொண்டு, விதவிதமாய் மாலை வாங்கி, கோவிலில் உள்ள சாமிக்கு போட்டால் கடன் தீரும் என்று ஆசாமிகள் கூறும் முழுமுதல் மூடநம்பிக்கையை வளர்த்து, கோவில்களின் வருமானத்தைப் பெருக்கி, உழைக்கும் மக்களின் சேமிப்பினைப் பிடுங்கிவிட்டு, அரசியல்வாதிகளுக்கு சிறப்பு தரிசனம், மணியடி தரிசனம் காட்டி, மாலை மரியாதை அளிக்கும் மதியற்ற வணிக வழிபாட்டு முறையை இன்றைய போலி ஆன்மிகவாதிகள் கூட்டம் பக்குவமாய் செய்து பழக்கப்படுத்தி வருகிறது.

குறிப்பாக குலசேகரன்பட்டின‌ம் தசரா திருவிழாவை, மைசூருக்கு அடுத்தபடியாக பெரிய விழா என்று விளம்பரப்படுத்தும் செவிலியர் வழிபாட்டின் தூதுவர்கள், மக்களின் வேண்டுதல்களை முதலீடாக்கி குறிப்பிட்ட 10 தினங்களில் பல இலட்சம் ரூபாய்களை கோவில்களை நோக்கி குவிக்க செய்துவிடும் உபாயத்தை அறிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டி பெரும்பான்மையான மாவட்டங்களிலிருந்து, 10 நாள் தசரா விழாவிற்கு சொந்த கிராமங்களுக்கு வருகை தரும் பெரும்பாலான உழைக்கும் மக்கள், தங்கள் சேமிப்பை முடிந்த மட்டும் செலவு செய்யும் முறையை, வழிபாட்டு முறையாக மாற்றி அமைத்துள்ளது இன்றைய அரசாங்கமும், மக்களின் மூடநம்பிக்கையும்.

காப்புக்கட்டி, வேஷமிட்டு, வேண்டுதலை நிறைவேற்ற வரும் மக்களின் சேமிப்பைக் கரைப்பதிலும், திருவிழா வசூல் என்ற பெயரில் மக்களிடமிருந்து பணத்தை கரந்து விடுவதிலும் கந்து வட்டிக்காரர்களை மிஞ்சி நிற்கிறது இந்த தசரா திருவிழா.

தவில், நாதஸ்வரம், கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம் என்று போய்க் கொண்டிருந்த கிராம தசரா குழுக்கள் நடத்தும் கிராமிய கலாச்சாரமிக்க நிகழ்ச்சிகள், இன்று டிஸ்கோ, ஆபாச நடனம் என்று தவறான பரிணாம வளர்ச்சி பெற்று, மக்களிடம் வசூலிக்கப்படும் பல இலட்சம் ரூபாய்களை ஆபாசத்திற்கென வாரி சுருட்டி விடுகிறது.

மேலும், தசரா குழு நடத்துபவர்கள் குறிப்பிட்ட தங்கள் சாதி பெயரைக் குறிப்பிட்டு குழுவின் பெயரை அமைப்பது, பேனர்கள் வைப்பது என சாதியத்தை கொழுந்துவிட்டு எறியச் செய்து, சமூகத்தில் வேற்றுமையை வளர்க்கும் விஷமிகளுக்கு ஆதரவாகவும் இத்திருவிழாவை பயன்படுத்துகின்றனர்.

இந்தக் கொண்டாட்டங்களின் நடுவில் தான் வாழும் கிராமத்தின் அடிப்படைப் பிரச்சனைகளையும், தன் குடும்பத்தின் வறுமை நிலையையும் மறந்துவிடும் மயக்க நிலைக்கு தள்ளப்படுகின்றனர் உழைக்கும் மக்கள்.

திருவிழாக் காலம் முடிந்து, மீண்டும் தம் பிழைப்பைத் தேடி வேறு மாவட்டங்களுக்குச் சென்றதும், தன் ஊர் முன்னேறாத நிலை பற்றிய கவலையும், குடும்ப சூழ்நிலையும் அடுத்த வேண்டுதலுக்கு தயாராகச் சொல்லி மூடநம்பிக்கை வருடத்தின் இதர நாட்களை இருள் சூழ்ந்ததாக்கி விடுகிறது.

தசரா நாட்களில் மட்டும் குலசேகரன்பட்டின‌ம் சுற்றுவட்டார கிராமங்களில், பல இலட்சம் ரூபாய் அளவிற்கு வசூல் மற்றும் கடைகளில் வணிகம் நடைபெறுகிறது. முறையான போக்குவரத்து வசதிகள் செய்யப்படாத சூழலில், பெரும் லாரிகளில் மக்கள் வந்து செல்வதால், போக்குவரத்து தடைபடுவதும், மின்பகிர்மான கழகத்தின் அனுமதியில்லாமல் பல இடங்களில் மின்சாரம் திருடப்படுவதால் மின்வாரியத்திற்கு இழப்பும், விழா முடிந்த சில வாரங்களுக்கு சுற்று வட்டார கிராமங்களில் மின்தடையும் வருடாந்திர வழக்கமாகிவிட்டது.

தண்ணீர், போக்குவரத்து, கல்வி போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ள குலசேகரன்பட்டின‌ம் சுற்றுவட்டார கிராமங்களில் அரசாங்கம் கோவில்களால் எத்தனை கோடி வருமானம் வந்தாலும் வாரி சுருட்டிக் கொண்டு, கிராம மேம்பாடு என்பதில் என்றும் அலட்சியப் போக்குடனே நடந்து கொள்வதால், அடிப்படைப் பிரச்சனைகள் தீராப் பிரச்சனையாக உள்ளன.

இக்கிராமம் சார்ந்த வெளியூர்வாழ் மக்களும், விழா மற்றும் கேளிக்கைக்காக மட்;டுமே ஊருக்கு வந்து செல்லாமல், சமூக அக்கறையோடு செயல்பட்டால், மாற்றங்கள் உண்டாவது உறுதி.

குலசேகரன்பட்டின‌ம் போன்ற வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுமைக்கும் வழிபாட்டை வணிகம் சூழ்ந்துவிட்டது. ஒரு நாளைக்கு இத்தனை கோடி வசூல் என்று பெருமை பேசுவதிலேயே அனைத்து தரப்பும் மும்முரமாக உள்ளனர்.

இத்தகைய மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் மீண்டு வந்து தம் மீது நம்பிக்கை கொண்டால் மட்டுமே, வளமான வாழ்க்கையினை தம் சந்ததிகள் உட்பட அனைவருக்கும் வழங்க முடியும் என்பது வணிகம் சூழ் உலகில் வாழும் அறிவார்ந்த சமூகத்திற்குப் புரியாத உண்மை.

- சுதேசி தோழன்