கேள்விகள் ஏதும் கேட்காமல் அன்றாட வாழ்வில் நமது குடும்பத்தில் நடக்கும் சிறப்பு விசேஷங்களில், நாம் கடைபிடிக்க ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களிலும், நாம் சார்ந்த சாதீயத்தின் உட்கூறுகள் பல்லிளித்துக் கொண்டுதான் இருந்துக் கொண்டிருக்கின்றன. நமது சடங்குகளைக் கேள்விக்குட்படுத்தாது இருக்கும் வரை நமது சமூகத்தின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இடத்திலும் இந்த சாதீயக் கூறுகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கும் .

இதை ஏன் இப்படி செய்கிறோம்? இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்டுத் தெளிவு பெற வெகு சிலரால் மட்டுமே முடிந்திருக்கின்றது.

வளர்ந்து வரும் எந்த ஒரு விஞ்ஞானத் துறையில் வேலை செய்யும் ஆணோ , பெண்ணோ, ஜாதகம் பார்த்து, முகூர்த்தக் கால் ஊன்றி,பாலிகை போட்டு, கூரைப் புடவை கட்டி(கட்டச் செய்து), தாலி கட்டி, மந்திரம் ஓதி, வகிட்டில் குங்குமமிட்டு, காலில் மெட்டி போட்டு (மற்றும் போட்டுக் கொண்டு), அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, ஏழடி நடந்து,அக்கினியை வலம் வந்து, கணையாழியை எடுத்து , இன்ன பிற சடங்குகள் செய்துதான் திருமணம் செய்துக் கொள்கின்றனர். இதில் தமிழ் மட்டும் படித்தவர்களும் சரி, சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களும் சரி எவரும் விதி விலக்கல்ல.

இவற்றில் ஒவ்வொருவருக்கும் தான் சார்ந்துள்ள சாதியைப் பொறுத்து இந்த சடங்குகளும், வரிசை முறைகளும் மாறிக் கொண்டிருக்கும். தாலி ஒன்றிலேயே , சிறுதாலி, பெரு தாலி, முப்படைத் தாலி என்று அதே சாதியின் ஒவ்வொரு உட்பிரிவிலுமேயே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இது எல்லாவற்றுகும் மேலாக, தமது சமூக அமைப்பில் இப்படித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற பூதாகரமான அறிவுடன், எந்த ஒரு மணமக்களின் பெற்றோரும் இருப்பதாய்த் தெரியவில்லை. குறைந்தது இரண்டு தலைமுறைகளைப் பார்த்த அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூத்தவர் மேடையில் கட்டளைகள் பிறப்பிக்க மேற்குறிப்பிட்ட காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும்.

பெரிதாய் ஒரு குற்ற உணர்ச்சியோ அல்லது ஏன் இப்படி செய்ய வேண்டும் என்ற கேள்வியை யாரும் கேட்க முன் வராததற்குக் காரணம் நாம் இதை எல்லாம் பார்த்துப் பார்த்தே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் அவ்வப் போது நடக்கும் சுய மரியாதை திருமணங்களையே நாம் ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்க்கின்றோம். என் அப்பா இப்படித்தான் கல்யாணம் செய்து கொண்டார். எனது தாத்தா இப்படித்தான், இத்தனை சடங்குகள் செய்துதான் திருமணம் செய்து கொண்டார். அவரது அப்பாவும் அப்படியேத்தான். ஆகையால் இத்தனை சடங்குகளை செய்ய நான் ஏன் யோசிக்க வேண்டும் என்ற எண்ணமே நம் எல்லோருக்குள்ளும் மேலோங்கி நிற்கின்றது. கேள்விகளும் எழும்ப மறுக்கின்றது.

திருமணம், காது குத்தல், மொட்டையடித்தல் ,சீமந்தம், கருமாதி என்று நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியின் சடங்குகளும், சாதியப் பொறுத்தே அமைவதால்தான் கவுண்டர் சாதியில் பிறந்தவர்கள் கவுண்டர் சாதியிலேயும், முதலியார் சாதியிலே பிறந்தவர்கள் முதலியார் சாதியிலேயே மணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். இதற்கு எந்த சாதியினரும் விதி விலக்கல்ல.

இவை எவற்றிற்குமே தீர்வு காணாமல், நம் சமூகத்தில் புரையோடிப் போய்விட்ட இந்த சாதீயக் கூறுகளை ஒழிக்க முடியாது.

1938ல் நடைபெற்ற தமிழர் திருமண மாநாட்டில் முதன் முதலாக கலாச்சாரம் என்ற பெயரில் நடை பெறும் இத்தகைய திருமண அமைப்புகள் கேள்விக்குட்படுத்தப் பட்டன. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த மாநாடும் அதற்குப் பின்பு அதைக் கேள்விக்குட்படுத்தியவர்களும் புரோகிதர் எதிர்ப்பு மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு என்று தன் வட்டத்தைச் சுருக்கிக் கொண்டார்கள். இன்ன பிற சடங்குகள் தமிழனின் கலாச்சாரங்களாகக் கற்பிக்கப்பட்டு, அவை தேவைகளுக்கேற்ப கூடவோ, குறைச்சலாகவோ அந்த காலகட்டத்தில் அடக்கி வாசிக்கப்பட்டன்.

அதற்குப் பின்பு வெகு காலங்களுக்குப் பிறகே, நாம் ஓதும் மந்திரங்களிலும், சடங்குகளிலும் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட பிற்போக்குத் தனங்களையும், பெண்ணடிமைத் தனங்களையும், முழுமையாகப் புறம் தள்ளி விட்டு ஒரு முழுமையான, சமத்துவம் நிரம்பிய, பெண்ணடிமைத் தனம் இல்லாத, சுயமரியாதைத் திருமண அமைப்பு முறை பெரியாரால் முன் மொழியப்பட்டது.

தமிழர் திருமண மாநாட்டில் முன் வைத்த, புரோகிதரற்ற, சமஸ்கிருத மந்திரங்கள் இல்லாத, ஆனால் பிற்போக்கு மற்றும் பென்ணடிமைத்தனங்கள் நிறைந்த சடங்குகள் நிறைந்த திருமண அமைப்புகளுக்கு மாற்றாக பாவேந்தர் பாரதிதாசன் "திராவிடர் புரட்சித் திருமணம்" என்ற புதிய வடிவத்தைக் கொணர்ந்தார். அதில்தான் தாலி கட்டும் முறைக்கு எதிராக மோதிரம் மாற்றும் முறையைக் கொணர்ந்தார். ஆனால், "கணவன் விரும்பும் பெண்ணாக இரு " என்று அறிவுரைகளனைத்தும் மணப்பெண்ணை நோக்கியே அமைந்துள்ளதும், கணையாழி மாற்றுதல் போன்ற அவர் மேற்கொண்ட இன்ன பிற சமரசங்களும் தான் ஒரு முழு சுயமரியாதைத் திருமணத்தை பெரியார் வடிவமைக்க காரணமாயிருந்தது.

28.05.1928 ல் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் பெரியாரால் நடத்தி வைக்கப்பட்டது.

1953ல் சென்னை உயர்நீதிமன்றம், தெய்வானை ஆச்சி -சிதம்பரம் செட்டியார் பாகப்பிரிவினை வழக்கில் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. நெருப்பை ஏழுமுறை சுற்றிவரும்- சப்தபதிச் சடங்கு நடக்காத திருமணத்தை வழக்கமான திருமணமாக அங்கீகரிக்க மறுத்தது நீதிமன்றம். இதன் மூலம் எவ்வளவு உயர் பதவியிலிருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே உறவு முறையை நிர்ண்யிக்கின்றன என்ற கருத்துக்கள் நம் அடி மனதில் எவ்வளவு ஆழமாய் ஆணி அடித்து ஏற்றப் பட்டிருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும்.

1954இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தனித்திருமணச் சட்டத்தின் மூலம் சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் 1967இல் அண்ணா அவர்கள் கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டத்தின் மூலமே சுயமரியாதைத் திருமணத்துக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்தது. சரி இவை யாவும் 50 வருடங்களுக்கு முன்பு. நடந்தவை. ஆனால் தற்போது????

எனக்குத் தெரிந்த வரை (அல்லது என் அனுபவத்தைப் பொறுத்த வரை) தற்போது சுய மரியாதைத் திருமணங்கள் ஆட்களைப் பொறுத்து சில சமரசங்களுடனும், சில சடங்குகளுடனும் இணைந்தே நடை பெற்று வருகின்றது.

ஆனால் அவற்றை விட மோசமான ஒன்று மக்களின் மனதில் கற்பிக்கப் ப்ட்டு விட்டிருக்கின்றது. "அது இத்தகைய திருமண முறை தனக்கு சம்பந்தமற்றது. இது கறுப்புச் சட்டைக்காரர்களின் திருமண முறைதானேயொழிய, மந்திரம் ஓதி, தாலி கட்டி, தனது சாதியின் உட்பிரிவின் கீழ் வரும், எல்லாவித சடங்குகளையும் (அவை பிற்போக்குத்தனங்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி) முறையாகக் கொண்டு செய்து கொள்ளும் திருமணங்கள்தான் தமிழர் திருமண முறை. அவைதான் நாம் கடைபிடிக்க வேண்டியவை. அவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை என்பதே."

இவற்றை நாம் கேள்விகளுக்குட்படுத்தாமல் இருக்கும் வரை, இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், இன்ன சாதியில் இந்த உட்பிரிவைச் சேர்ந்த மாதம் இத்தனை லகரங்கள் சம்பாதிக்கும், தற்போது அமெரிக்காவில் ஆன்சைட்டில் இருக்கும், இந்த மணமகனுக்கு, வேலைக்குப் போகும், குடும்பப் பாங்கான, அதே சாதியில், அதே உட்பிரிவைச் சேர்ந்த சேர்ந்த மணப்பெண் தேவை எனும் விளம்பரங்கள் ஹிந்து பேப்பரிலும், மேட்ரிமோனியல் தளங்களிலும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும் . 

- நந்தா