குசும் நாயர் எழுதி 1961ம் ஆண்டில் வெளியான வெளியான 'புழுதியில் மலர்ந்த மலர்கள்' என்ற புத்தகம் இந்தியாவின் முன்னேற்றத்தை கணிப்பதற்கான ஓர் அளவுகோலாக அமைந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அம்மக்களுடன் உரையாடியதன் அடிப்படையில் இப்புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். நவீன முறையில் உற்பத்தி நடைபெறுவதால் மட்டும் கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருதக்கூடாது என்பதையும், மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படுவதே உண்மையான வளர்ச்சிக்கான காரணியாக இருக்க முடியும் என்பதையும் இந்தப்புத்தகத்தில் முடிவாக அவர் கூறியிருந்தார்.

பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் பன்முகத்தன்மையை கணக்கில் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.

சமூகமாற்றத்துக்கான முக்கியமான கருவியாக கல்வி பயன்படும் என அவர் நம்பினார். அவருடைய இந்த நம்பிக்கை மீது அறுபதுகளில் வாழ்ந்த பல சமூகவிஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு உடன்பாடு இருந்தது.

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க கல்வியில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சாதி மற்றும் பாலின வேறுபாடுகளின் அடிப்படைக் கட்டுமானம் உடல் உழைப்பைச் சார்ந்து இருக்கிறது. இந்தக் கட்டுமானங்கள் கல்வி மூலம் ஓரளவு தகர்க்கப்பட்டிருந்தாலும், இந்த மாற்றங்கள் பரவலாக ஏற்படவில்லை. சாதி வேறுபாட்டைக் காட்டிலும் பாலின வேறுபாட்டில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

காலனிய ஆட்சியில் இருந்ததற்கு மாறாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுயசார்புத்தன்மையுடனும், பயமில்லாமலும் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கல்விபெற்ற பெண்களுக்கு சமூகஅங்கீகாரம் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. பெண்களின் கல்விக்கான தேடல்கள் அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சினைகளும் வலுவாக அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றன. இதற்கான காரணம் என்னவென்றால், பெண்கள் கல்வி மூலம் ஒரு புதிய உலகை தரிசிக்கும் போதிலும், அதற்குத் தகுந்தாற்போல் ஆண்கள் சமூக ரீதியாக தங்களை தயார்செய்து கொள்ளாததுதான். பெண்களிடம் ஆண்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் அப்படியே இருப்பதால், பெண்கள் மீது சுமத்தப்படும் பல்வேறு வன்முறைகளில் இருந்து விடுதலை கிடைக்காத நிலையே தொடர்கிறது. கல்வித் திட்டத்தில் இத்தகைய பிரச்சினைகளுக்கு எந்த இடமும் இல்லாதது இந்நிலைக்கு முக்கிய காரணம்.

சாதிப் பிரச்சினையை பொருத்தவரை, சமூகத்தில் சாதி அமைப்பை உறுதிப்படுத்தும் விஷயங்களை மாற்றுவது குறித்து கல்வித் திட்டகூறுகள் அமையவில்லை. எழுத்தறிவு பெறுதல், தேர்வில் தேர்ச்சி பெறுதல் போன்றவற்றின் மூலம் சாதியின் தளைகள் தானாகவே, மாயாஜாலமாக பலவீனமாகிவிடும் என்ற யூகமும் உள்ளது.

பாடத்திட்டத்தில் மாற்றங்கள் வராமல் இருப்பதற்கு, ஆசிரியர் பயிற்சியை உதாசீனப்படுத்தும் போக்கே முக்கிய காரணம். குழந்தைகளின் பள்ளி சார்ந்த அனுபவங்களை வெளிக்கொணர்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. படிப்பறிவற்ற பெற்றோர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் மூலம், ஒரு சிந்திக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் உள்ளது. ஆனால், அக்குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேசிய இயக்கங்களில் ஆசிரியர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் ஆசிரியர்களை ஆழமான சமூக பிரக்ஞை கொண்டவர்களாக மாற்றுவதற்கு வழிசெய்யத் தவறிவிட்டோம்.

1983ம் ஆண்டில் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சட்டோபாத்யாய கமிஷன், ''ஒரு சராசரி ஆசிரியரின் பங்கு மிகக் குறுகியதாகவும், தங்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக மட்டுமே உள்ளது,'' என்று கூறியிருந்தது. ஆசிரியர்கள் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருக்க வேண்டும் என்று அந்த கமிஷனின் அறிக்கை வலியுறுத்தியது. ஆனால் அப்போதிருந்த நிலைமையைவிட 90களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியுள்ளது. வேறு எந்தத் துறையிலும் பணி கிடைக்காத நிலையில், கடைசியாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் போக்கு இன்று நிலவுகிறது.

அரசியல் சாசனத்தில் ஆரம்பக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவிப்பதில் கருத்தொற்றுமை இல்லாமல் போனதன் விளைவாக நாம் ஒரு பெரும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம். இந்தத் தவறு சரி செய்யப்பட்டது. ஆனால், தொடக்கக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவித்து அரசியல் சாசனம் திருத்தப்பட்டதே அன்றி, அதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை.

பெரும்பாலான மாநிலங்களில் கல்விக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் சரியாக இல்லை. மேலும் கல்வி சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை அந்தந்த மாநிலங்களே எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகுவதும், மாநிலங்களுக்கு போதிய நிதி அளிக்காததும் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள். கல்வி தொடர்பாக பொறுப்பேற்றுக் கொள்வதில், காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே மத்திய அரசு மெத்தனப் போக்கை வெளிப்படுத்தி வந்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் கல்வி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது இருக்கும் ஒரே அமைப்பு 'மத்திய கல்வி ஆலோசனை மையம்' மட்டுமே. இந்த அமைப்பிற்கும் முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் இல்லை.

''விடுதலை பெற்று 60 ஆண்டுகளில் நமது பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் நாம், அடிப்படைத் தேவையான தொடக்கக் கல்விக்கு மிகக் குறைவான தொகையை ஒதுக்குவது ஏன்?'' என்று சமீபத்தில் மகசேசே விருது பெற்ற இதழாளர் பி. சாய்நாத் தனது கட்டுரை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி குறித்த எந்தச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தாலும், ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளை ஒரு விசேஷமான பிரிவைச் சேர்ந்தவர்களாக நாம் கருத வேண்டும். ஏன் என்றால், அவர்களது உரிமையை அவர்களாலேயே பாதுகாத்துக் கொள்ள முடியாது. குழந்தைகளை அரசு அன்பாக அரவணைத்து, அவர்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஊட்டச்சத்துக்குறைவு, எழுத்தறிவின்மை, குழந்தைகளை நிந்திப்பது, ஹீமோகுளோபின் அளவு குறைவது, அடிக்கடி ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் (குறிப்பாக பெண் குழந்தைகளிடம்) போன்றவற்றை சரி செய்யாவிட்டால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மனித வளத்தை இழந்துவிடுவோம்.

குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வது அரசின் முக்கிய பணி. இதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும். இது எளிதான வேலையில்லை என்றாலும், நம்மிடம் உள்ள மிகப் பெரிய மனித வளத்தை பாதுகாக்கும் பொருட்டு குழந்தைகளை மையப்படுத்தும் வகையில் அரசு நிர்வாக செயல்பாட்டு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கல்வித் திட்டங்கள் இந்தத் திசையில் அமைய வேண்டும்.

(பேராசிரியர் கிருஷ்ணகுமார் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்.சி.இ.ஆர்.டி.) இயக்குநர்)

நன்றி: இந்து நாளிதழ்

- தமிழில்: ஹரீஷ்