நீட் தேர்வாகட்டும், இன்ன பிற தேர்வுகளாகட்டும் அதில் தேர்வாகவில்லை எனில் உயிரையே மாய்த்துக் கொள்ளும் மன நிலை எங்கிருந்து வருகிறது?

student suicideகல்வி என்பது உலகையும், சமூக இயக்கத்தையும் புரிந்துகொண்டு அதோடு இணைந்து வாழக் கற்றுக் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கல்வி உடல் உழைப்பை இழிவானதாக மதிப்பீடு செய்கிறது. அதன் தொடர்ச்சியாக உடல் உழைப்பாளிகளை இழிவானவர்களாக இந்தக் கல்வி பயிற்றுவிக்கிறது. (இதையே தான் மனு தர்மமும் சொல்கிறது)

எனவே தான் அதிக மதிப்பெண் பெறுகிற மாணவர்கள் ஐ.ஏ.எஸ் ஆகியோ அல்லது ம‌ருத்துவர், பொறிஞர் ஆகியோ மக்களுக்குத் தொண்டு செய்வதாக ஊடகங்களில் பேசுவார்கள்.

யாரும் நான் தொழிலாளி ஆகியோ, விவசாயி ஆகியோ மக்களுக்குத் தொண்டு செய்வேன் எனக் கூறுவதில்லை.

ஒரு சமூக அமைப்பில் பெரும்பான்மை மக்கள் உழவர்களாக, தொழிலாளர்களாக கடும் உழைப்பால் உணவையும், பொருட்களையும் படைத்துத் தருகின்றனர்.

இந்த ஆட்சியரோ, காவல்துறை அதிகாரியோ அல்லது மருத்துவர் போன்றவர்களோ உற்பத்தி நடைபெற சேவை செய்கின்றனர்.

எப்பொழுதும் சேவைப் பிரிவு மொத்த சமூகத்தில் ஒரு சிறு விழுக்காடாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த சந்தை உலகம் சேவைப் பிரிவில் உயர் வருமானம் வரும் சில வேலைகளை மட்டுமே கனவாக்கி குழந்தைகளை, பெற்றோர்களை இயக்குகிறது. இந்தக் கனவை காசாக்க கல்விக் கடைகளை பெரும் முதலாளிகள் விரித்து வைத்துள்ளனர்.

இந்தக் கல்வி முதலாளிகள் நேரடியாகவே அரசியலில் பெரும் பொறுப்புகளில் உள்ளனர் அல்லது அரசைக் கட்டுப்படுத்தும் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளன‌ர். இந்தக் கல்வி முதலாளிகள் இயல்பாகவே தமிழ்மொழிக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்"

என்ற தமிழ் சமூக அறநெறியை இந்த பார்ப்பனிய, முதலாளிய மதிப்பீடுகள் புறந்தள்ளி விட்டன.

இந்தப் பின்னணியில்தான் கல்வி பயிலும் மாணவர்கள் மீது உடைமை வர்க்க மதிப்பீடுகளும் கண்ணோட்டங்களும் திணிக்கப்படுகிறது.

மருத்துவரானால்தான் வாழ்வு பொருளுள்ளது என மாற்றப்படுகின்றனர். ஒரு சமூகத்தில் எல்லோருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்காது என்ற எளிய உண்மை கூடத் தெரியாமல் ஒரு மாய வலையில் சிக்குண்டு விடுகின்றனர். எனவே அது தனக்குக் கிடைக்காதபோது வாழ்வையே முடித்துக் கொள்கின்றனர்.

இந்த சாவிற்கான ஊற்றுக்கண் இன்றைய சந்தைக் கல்வி முறையும், சந்தைக் கல்வியை ஊட்டி வளர்க்கும் முதலாளிய பார்ப்பனிய சமூக அமைப்புமேயாகும்.

உழவர்களும், தொழிலாளர்களும் தான் சமூகத்தின் இயங்கு சக்தி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உழைப்போருக்குப் பாதுகாப்பான வாழ்க்கையைத் தரும் சோசலிச சமூக அமைப்பை நோக்கிய அரசியல், கலை இலக்கிய வளர்ச்சி மட்டுமே மாணவர்களை புதிய சமூகத்தைப் படைக்கும் சிற்பிகளாக மாற்றும்.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் மருத்துவர் ஆனதாலோ, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாலோ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. மாறாக சமூத்திலுள்ள உழைக்கும் மக்கள் பக்கம் நின்றார்கள்.

இந்த மனப்பாங்கை உருவாக்காத வரை இந்தக் கல்வி முறை ஒரு கொலைகாரக் கல்வி முறையே!

சந்தைக்கான கல்வி அல்ல, சமூகத்திற்கான கல்வியே தேவை என்பதை உரக்கச் சொல்வோம். இந்தக் கொலைகாரக் கல்வி முறைக்கு முடிவு கட்டுவோம்!

- கி.வே.பொன்னையன்