சென்னை தெற்கு போக் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஹாலிவுட் படத்தின் பிரம்மாண்டமான செட் போல் சிவாஜி கணேசனின் வீடு. அது தீப்பற்றி எரிந்தது. காரணம், மின்கசிவு. மின்கசிவிற்குக் காரணம் வீட்டில் எல்லா அறைகளும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டவையாகும். கழிவறை கூடவா என்பது தெரியவில்லை.

அந்த வீட்டின் சொந்தக்காரர்களில் ஒருவரும், நடிகருமான பிரபு இது பற்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில், “இந்த வீட்டை அப்பா ஆசையோடு வாங்கினார். வீட்டில் இருந்த மரப்படிக்கட்டுகள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஏறி, இறங்கிய படிக்கட்டுகள் எரிந்து போனது வருத்தமாக இருக்கிறது. (ஏறி இறங்கிய அப்பாவே எரிஞ்சி போயிட்டாரு. படிக்கட்டு போனதுதானா முக்கியம்? அவருடைய படம் எரியாமல் தப்பியது ஆச்சரியமாக இருக்கிறது” (இதிலென்ன ஆச்சரியம். அதுல தீ பத்தல. அதனால அது எரியலை.)

வீடு தீப்பிடித்து எரிந்தவுடன் கமலா அம்மாள், நடிகர் பிரபு, அவர் மனைவி மற்றும் குழந்தைகள் எல்லாரும் வெளியே ஓடி வந்துவிட்டனர். ஆனால் சிவாஜியின் தம்பி மகன் முரளியின் மனைவி மற்றும் குழந்தைகள் ஓர் அறையில் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் காப்பாற்றுமாறு குடும்பம் கூக்குரலிட்டிருக்கிறது. சினிமாவில் தீயில் புகுந்து பலபேரைக் காப்பாற்றிய நம் கதாநாயகன் பிரபுவும் “காப்பாற்றுங்கள்” என்று கூக்குரலிட்டிருக்கிறார். சினிமாவில் பிரபுவின் சாகசத்தைப் பார்த்துப் பிரமித்த ஆட்டோக்காரர் ஒருவர், பிரபுவின் கூக்குரலை கேட்டு தன் உயிரைப் பணயம் வைத்து கதாநாயகன் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் (இதற்கு முன் மற்ற நாட்களில் அந்த ஆட்டோ ஓட்டுநரை வீட்டுக்குள் சேர்த்திருப்பார்களா?) காப்பாற்றப்பட்ட பின் நம் சாகசக் கதாநாயகன் பிரபு சொல்லியிருக்கிறார். “அப்பா கடவுளாக வந்து எங்களைக் காப்பாற்றி இருக்கிறார்”

இதுதான் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பிரபு காட்டிய நன்றி. (கடவுளாக வந்து காப்பாற்றிய அப்பா எதற்கு தீ வைத்து வீட்டைக் கொளுத்துவானேன்?) ‘’காப்பாற்றுங்கள்’ என்ற பிரபு குடும்பத்தின் கோரஸ் கூவ்கூரல் கேட்டவுடன் ஆட்டோ ஓட்டுநர் தன் உயிரைப் பணயம் வைத்து சிவாஜியின் குடும்பத்தைக் காப்பாற்றியதற்குப் பதில், சிவாஜியின் உண்மை ரசிகனாக மட்டும் இருந்து ‘சிச்சுவேசனுக்கு’ப் பொருத்தமாக அந்தப் பிரமாண்ட ஹாலிவுட் படத்தின் செட் போன்ற வீட்டின் கேட்டருகில் நின்று, பிரபுவைப் பார்த்து இப்படிப் பாடி இருக்கலாம் ‘’போனால் போகட்டும் போடா! இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...’’

***

மேற்சொன்ன இந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுநர்களும் வெட்கப்படும்படியான ஒரு செயலைச் செய்திருக்கிறார். இன்னொரு ஆட்டோ ஓட்டுநர். அவர் பெயர் புதுவை இளவேனில்.

வசதியான ஒரு வயதானவரை விதவிதமாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார். எடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் கண்றாவிகளை கண்காட்சி வைத்து வேறு காட்டியிருக்கிறார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தப் பெரியவர் யார்? அவர் வெறும் கதை எழுதுற ஓர் ஆசாமி. அவர் பெயர் சுந்தர ராமசாமி. அவரை எதுக்குப் புகைப்படம் எடுக்கணும்? எடுத்ததை வைச்சி எதுக்கு கண்காட்சி நடத்தணும்? இதோ புகைப்படம் எடுத்து புதுவை இளவேனில் சொல்கிறார். “ஓர் எழுத்தாளரின் எழுத்துக்கள் அவனை வாசகனிடம் முழுமையாகக் கொண்டு சேர்ப்பதில்லை. (எழுதுவதைத் தெளிவா எழுதணும்) என்னைக் கவர்ந்த எழுத்தாளரின் இயல்பை. இன்னொரு பக்கத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது ஒரு கலைஞனாகிய எனக்கு (அப்படிப் போடு...!) அவசியமாய்த் தோன்றியது. எனவே, சுந்தர ராமசாமியின் நிஜங்களை நிழற்படங்களாக கண்காட்சி ஆக்கியுள்ளேன்...” இதுதான் ரசிகனின் கலைமனமோ? இல்லை, கலைஞனின் ரசிக மனமோ?

நடிகனை விதவிதமாகப் புகைப்படம் எடுத்து, ரசிக மனோபாவத்திற்குத் தீனியாக ‘ப்ளோ-அப்’ போட்டு விற்பதை வாங்கிக் குவிக்கும் நடிகனின் ரசிகனுக்கும், சுந்தர ராமசாமியின் ரசிகரான இந்த புதுவை இளவேனிலுக்கும் என்ன வித்தியாசம்? சரி, புதுவை இளவேனில்தான் ‘’தலைவா, உங்க முகத்தை காமிச்சிட்டு போங்க தலைவா!” என்று ரஜினியின் வீட்டு வாசலில் நின்று கூக்குரல் இடுகிற ரசிகனின் மனோநிலையில் இருப்பதால் அவருக்கு எதுவும் புரியவாய்ப்பில்லை. ஆனால், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆயிற்றே சுந்தர ராமசாமி! அவருக்குக் கூடவா இது ஆபாசம் என்று தெரியவில்லை. எதைப் பற்றிக் கேட்டாலும் உலக ஞானம் தளும்பத் தளும்ப ஆலோசனை தருகிற, அறிவுரை சொல்லுகிற, எச்சரிக்கிற ‘சுரா’வை, ‘பு.இ.’ உங்களை விதவிதமாக போட்டோ எடுக்கணும்னு கேட்டப்பவே “வேண்டாம் தம்பி, இந்த பத்தாவெல்லாம் எனக்குப் பிடிக்காது. தனி மனிதர்களை ரசிக மனோபாவத்தோட அணுகக்கூடாது” அப்படின்னு சொல்லியிருக்கலாம். ஏன்னா, புனைப்பெயரே பந்தாவா இருக்கக்கூடாது. என்கிற எண்ணம் உள்ளவர்தான் சுந்தர ராமசாமி.

***

2003 ஜுன் மாத ‘தீராநதி’ இதழில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கிறார். இப்படி...

Sundara Ramasamy“கவிதைகளுக்கு பசுவய்யா என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டதற்கு விசேஷ காரணம் உண்டா?”டி.பி. கேசவமணி, திருப்பூர்-2.

“தமிழ்க் கவிஞர்கள் பொதுவாக ரொமான்டிஸிசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளுக்குச் சாதகமான உணர்வுகளும் கற்பனைகளும் உள்ளவர்கள். இவ்வியல்புகளைச் சட்டென நாம் கண்டு கொள்ள முடியாமல் நம்மைத் தடுப்பது அவர்களது வீராவேசமான போலி புரட்சிகரக் கோசங்களே. தமிழ்க் கவிஞர்களின் புனைப் பெயர்களின் பட்டியலை நீங்கள் தயாரித்தால் அவை கற்பனையும் மிகையும் கொண்ட படிமத்தை வற்புறுத்தி வாங்கிக் கொள்ளக் கூடியவையாகௌம் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கவிஞர்களின் கலாச்சாரத்தின் மீது மிகக் கடுமையான விமரிசனம் கொண்டவன் நான். ஆகவே, பந்தா இல்லாத ஓர் எளிமையான பெயர்தான் என்னைக் கவரக்கூடியதாக இருந்தது” என்று பதில் அளிப்பதின் மூலமாக திராவிட இயக்க, இடதுசாரிக் கவிஞர்களை கடுமையாகச் சாடிய இந்தப் பெரியவர், இளையவருக்கு அறிவுரை சொல்லி தவிர்த்திருக்க வேண்டாமா? ஆனால், இந்த ‘எளிமை விரும்பி’ என்ன செய்திருக்கிறார், தெரியுமா? இதோ அவரின் ரசிகர் புதுவை இளவேனில் அதை அன்போடு அம்பலப்படுத்துகிறார்.

“காரணம் தெரியாத இந்த ஆர்வத்தை பூர்த்தியாக்கிக் கொடுங்கள் என்று என் புதுச்சேரி நண்பர் ஒருவரிடம் (காலச்சுவடின் பாண்டிச்சேரி ‘ஏஜெண்டோ’) முறையிட்டபோது அந்த நபரோ, தொலைபேசியில் சுராவுக்கு உடனடியாகத் தகவலைத் தெரிவித்துப் பேசச் சொல்லி போன் ரீசிவரையும் கொடுத்தார். வாங்கிப் பேசினேன். “சொல்லுங்க... என்னை படம் எடுக்கனும்னு கேட்டேளாமே? படம் எல்லம் நல்லா எடுப்பேளா?” என்று கேட்க, தயங்கித் தயங்கிப் பதில் சொன்னேன். “சரியா எடுப்பேன் சார்!” “சரி, உடனே வாங்கோ” என்று சம்மதம் சொல்ல, ஊருக்குப் (நாகர்கோயில்) புறப்பட்டுப் போனேன். (குங்குமம், 16.7.2004.)

அடுத்தவரைக் கட்டிண்டிக்கிற இந்தப் பெரிய மனிதனின் யோக்கியதை எவ்வளவு கேவலமாக இருக்கிறது பார்த்தீர்களா? வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் கூட இவ்வளவு அருவெறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதில்லை இது மட்டரகமான நடிகனின் மனோபாவம்தான் என்பதை நிரூபிப்பதுபோல் இந்தக் கண்றாவிகளின் கண்காட்சியின் துவக்க விழாவில், நடிகர் நாசர் இப்படிச் சொல்லியிருக்கிறார். ‘’இந்தப் படங்களை எல்லாம் பார்க்கும்போது சுந்தர ராமசாமியை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.”

நாசர் சொன்னது உண்மைதான். சுந்தர ராமசாமி ஒரு கைதேர்ந்த நடிகர்தான். “லைட் எல்லம் அரேன்ஞ் பண்ணிட்டேன். சிந்திக்கிற மாதிரி ஒரு போஸ் கொடுங்கள்” என்று புதுவை இளவேனில் சொல்லியிருப்பார். சுந்தர ராமசாமி சிந்திப்பது மாதிரி தத்ரூபமா போஸ் கொடுத்திருப்பார்.

சிந்திப்பது மாதிரியான இந்த போஸ், புகைப்படத்திற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், அவர் எழுத்துக்களில் எப்போதும் தென்படுகிற ஒன்றுதான். இந்தப் போசைப் பார்த்துதான் பல அறிஞர்கள் வியந்து போகிறார்கள். சுந்தர ராமசாமியை மையமிட்டு, இந்த அறிவாளிகள் அடிக்கிற அட்டகாசங்களைப் பார்க்கும்போது இந்தப் பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. “கேணப்பய ஊருக்கு கிறுக்குப் பய நாட்டாமை!”

***

நின்று போன ‘காலச்சுவடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1994-ல் மீண்டும் வரப்போவதாகக் கேள்விப்பட்டவுடனே பல அறிஞர்கள் ‘சோம்பிக் கிடந்த மனதுக்குப் புத்துணர்ச்சி’ என்கிற பாணியில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அதில் ஒரு கடிதம் இலங்கை பேராதனையிலிருந்து. எழுதியவர் எம்.ஏ நுஃமான். “காலச்சுவடு மீண்டும் வருவது பெருமகிழ்ச்சி. எனது வியூகம் பேட்டியை அதில் மறு பிரசுரம் செய்ய விரும்புவது நீங்கள் எனக்குத் தரும் கௌரவம். (‘காலச்சுவடு’ மீண்டும் வருவதின் பெருமகிழ்ச்சிக்கான காரணம்) இத்துடன் இரு படங்கள் அனுப்புகிறேன்... “‘சுபமங்களா’ பேட்டிகளில் வருவதுபோல நடிகர்கள் மாதிரி செயற்கையான சூழலில் படம் பிடித்துப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது மிகவும் கூச்சமாக உள்ளது” என்று எழுதியிருக்கிறார். “காலச்சுவட்டில் எழுதுவது என்னைப் புதிதாகப் பிறப்பிக்கும்” என்று அந்தக் கடிதத்தின் முடிவில் குறிப்பிட்டிருக்கும் நுஃமான் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தகுதியை உயர்த்திக் கொண்டு காலச்சுவடுக்கே ஆலோசனை தரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். ஆம். இப்போது அவர் ஆலோசனைக் குழுவில் ஒருவர். இவராவது சுந்தர ராமசாமியிடம் “எதுக்கு இப்படி சினிமா நடிகன் மாதிரி வெட்கம் கெட்ட வேலை?” என்று கேட்டிருக்கலாம்? கேட்டாரோ, என்னவோ?

‘காலச்சுவடு’ 2004 ஆகஸ்டு மாத இதழில் இந்தக் கண்றாவிகளின் கண்காட்சியைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அந்தச் செய்தியின் பின்னணிப்பாக தேவிபாரதி என்கிற சுராவின் ரசிகர்-அல்ல பக்தர்- இப்படிச் சிலிர்த்திருக்கிறார்.

“உறங்கும் நதியின் சலனமின்மையும் ஆழியின் தீவிரமும் பின்னிப் படர்ந்த சுராவின் பேரு ஒரு குழந்தையின் பேதமையோடும், பூரிப்போடும் இளவேனிலின் புகைப்படச் சட்டங்களுள்ளாக நெகிழ்ந்து நிற்கும் தருணங்கள் வியப்பூட்டக்கூடியவை. இளவேனிலின் இப்புகைப்படங்களை சுராவைப் பற்றிய பல பரிமாணங்களைக் கொண்ட மிக நீண்டதொரு கவிதையை அல்லது குழந்தைகளுக்கான சித்திரக் கதையை, இருளையும், ஒளியையும் கொண்டு எழுத மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சியாகக் கூடப் பார்க்கலாம். ஒரு குழந்தையைப் போல அவரை இழுத்துக்கொண்டு கடல், காடு, கரை, வனாந்தரமெல்லாம் சுற்றித் திரிய முடிந்திருக்கிறது இளவேனிலுக்கு. கைப்பற்றி நடந்து, நிற்கச் சொன்ன இடத்தில் நின்று. உட்காரச் சொன்ன இடத்தில் உட்கார்ந்து... குழந்தை யார்? இளவேனிலா? சுந்தர ராமசாமியா?

சிந்தனையின் ஊற்றுக் கண்களைத் திறக்கும் நீண்ட உரையாடல்களினூடாக வெளிப்படும் அவரது உடல் மொழி, அவரது விழிகளின் அசைவிலும், அசைவின்மையிலும் தென்படும் குறிப்புகள். அவரது புன்னகை, உரத்த சிரிப்பு, கவலை, கோபம், வெறுப்பு, என அவரது ஆளுமையின் பல பரிமாணங்களைத் தமது நினைவின் பக்கங்களில் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்கண்காட்சி முற்றிலும் அந்தரங்கமான நெகிழ்வூட்டும் ஓர் அனுபவமாக இருக்கக்கூடும்.”

இப்படிப் புல்லரித்துப் போகும் இந்த பக்தர், கடவுளிடம் (சு.ரா) என்ன வேண்டியிருப்பார்? மேற்கண்ட ஆராதனையின் உள்ளார்த்தம் இதுதான். “பகவானே, என் எழுத்துக்கள் தொடர்ந்து காலச்சுவட்டில் வருவதற்கு நீ அருள் புரியவேண்டும். அப்படி எழுதியவற்றைத் தொகுத்து ‘காலச்சுவடு’ பதிப்பகம் புத்தகமாக வெளியிட நீ துணை புரிய வேண்டும். இவை இரண்டைத் தவிர ஏழை எழுத்தாளன் எனக்கு வேறு என்ன வேண்டும்?”

இந்த உள்ளுணர்வு தேவிபாரதிக்கு மட்டுமல்ல, சு.ரா.வின் அடியார்கள் (எழுத்தாளர்கள்) அனைவரின் உள்ளுணர்வும் இதுதான் “அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன்” என்பது போல சு.ரா.வைப் புகைப்படம் எடுத்துக் கண்காட்சி வைத்ததுபோல் “இனி யாரையும் எடுக்க மாட்டேன்” என்று அறிவித்து, மற்ற எழுத்தாளர்களை ஏமாற்றிவிட்ட ‘கேமரா மேதை’ இளவேனிலின் உள்ளுணர்வும் இதுதான். இது ‘அறிவாளி’களின் திட்டமிட்ட அறியாமை.

ஒருவகையில் புகைப்படம் எடுத்த புதுவை இளவேனிலுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நன்றி அவர் எடுத்த படத்திற்காக அல்ல. எடுக்காமல் விட்ட படத்திற்காக.

‘ஆம்! சுந்தர ராமசாமி மலம் கழிப்பதுபோலப் படமொன்று எடுத்து கண்காட்சியில் வைத்திருந்தால் அறிவாளிகள் இப்படிக்கூட சிலாகித்து இருப்பார்கள் “என்ன ஒரு மேதமை! உறங்கும் நதியின் சலனமின்மையும், ஆழியின் தீவிரமும் பேளும்போது அந்தக் கலைஞனின் முகத்தில் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்”

ஜெயலலிதா, ரஜினிகாந்த் இவர்கள் தங்களை விதவிதமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. அவர்களின் புகைப்படங்கள் லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படுகிறது. அது அவர்களின் வியாபார அரசியல் முறைக்கு உகந்தது.

ஆனால், சுந்தர ராமசாமியின் புகைப்பட விருப்பம் சுயபோதையாக இருக்கிறது. தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துக் காமுறுகிற மனநோயாளியைப்போல். இது பிழைப்புவாதிகளின் பந்தாவான மனநிலையைவிட ஆபாசமானதாக இருக்கிறது. ஒருவேளை சுயபோதை பிடித்த சுந்தர ராமசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டால் பிறகு ஜெயலலிதா தலைமையில்தான் சு.ரா. அரசை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

(பின்குறிப்பு: புதுவை இளவேனிலுக்கு வேண்டுகோளோடு: நீங்கள் உங்களை கவிஞன், எழுத்தாளன், மகா கலைஞன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இதெல்லாம் உங்களுக்குப் பெருமையாக இருக்கும். தயவு செய்து ஆட்டோ ஓட்டுநர் என்று மட்டும் சொல்லாதீர்கள். அது ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பெருமையாக இருக்காது.)

(நன்றி: புதிய கலாச்சாரம் செப்டம்பர்-2004)