ஞாயிறு காலை முதல் நடந்த குண்டுவெடிப்புகள், அது பலிகொண்ட மக்கள், இதையெல்லாம் தாங்கிய செய்திகள் என உயிர்ப்பின் ஞாயிறு இரத்த பிசுபிசுப்பாக மாறியிருக்கிறது. அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கைகள் மனதை இன்னும் கனமாக்குகிறது. அந்த நிலம் இரத்தத்தில் நனைவது இன்னும் நிறுத்தப்படப் போவதில்லை என்பதையே இது எல்லாம் காட்டுகிறது.

நடந்த சம்பவங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கனமானவையோ அதைவிட இனி நடக்கவிருப்பவைதான் மிக மோசமானதாக இருக்கப் போகிறது. அவைகளை நாம் கருத்தில் கொள்ளாமல் வெறும் வேதனைகளில் சிக்குவது பயன் தரப்போவதில்லை.

srilanka blast 650"அனாமதேய குண்டுவெடிப்பு தாக்குதலால் பயன் பெறப் போவது நாட்டில் உள்ள வலதுசாரிகள் மற்றும் அரசே தவிர வேறு யாராக இருக்கப் போவது இல்லை. இது அவர்களின் எழுச்சிக்குக் கைகொடுக்கும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே தவிர வேறு யாரும் இல்லை. இனி தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி பெரிதாகக் கவனம் ஒன்றும் இருக்காது, நடந்த தாக்குதலை வைத்து அரசு, தான் செய்யப் போகும் விசயங்களில் தான் கவனம் இருக்கும். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?”

இலங்கை விசயத்தில் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

இந்தத் தாக்குதலைப் பொருத்த வரையில் முஸ்லீம்கள் கிருத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கட்டமைக்கப்படுகிறது. இலங்கையைப் பொருத்தவரையில் கிருத்தவர்களும், முஸ்லீம்களும் சிறுபான்மை இனம் தான். இதுவரை இந்த இருவரும் முரண்பட்டது இல்லை. ஆனால் 1883-ல் கிருத்தவர்களுக்கு எதிராகவும், 1915-ல் முஸ்லீம்களுக்கு எதிராகவும் சிங்கள பெளத்தர்களால் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த இருவரும் தங்களை ஒருவரை ஒருவர் ஒடுக்கியதாக எவ்விதமான தரவும் இல்லை. அப்படி இருக்கும் போது முஸ்லீம்களால் கிருத்தவர்கள் மீது நடத்தப்பட்டது எனபது பெரும் கேள்விக்குரிய விடயம் தான்.

இலங்கையில் முஸ்லீம் எதிர்ப்பு பல காலகட்டங்களில், பல்வேறு தன்மைகளில் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அரசியல் முழக்கம் அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை (அந்த மக்களிடம் கூட). அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பெரிய தாக்குதல் அவர்கள் சார்பாக நடைபெற்றது என்பது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

கண்டி, அம்பாரவில் ஏற்கனவே சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீது கலவரம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள். (பெரும்பாலும் தமிழர்களும் இந்த கலவரத்திற்கு ஆதரவு நிலை தான்).

இலங்கையில் சிங்களவர்களும், சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லீம்களுடன் முரண்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இலங்கையில் பயங்கரவாதச் சட்டம் இன்னமும் பெரிய அளவில் அமுலில் இருக்கிறது. இதை ஐரோப்பிய யூனியன் உட்பட பல சர்வதேச அமைப்புகள் போர் முடிந்த பிறகும் இச்சட்டத்தை அமுலில் வைத்திருப்பதன் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. இதில் பத்திரிக்கை தணிக்கை முறையைக் கொண்டுவர முயற்சிகளும் நடைபெற்றதாகத் தெரிகிறது. (சமீபத்தில் விடுதலைப் புலிகள் தளபதி பால்ராஜ் பற்றி தமிழ் தந்தியில் வந்த கட்டுரையின் ஆசிரியர் பற்றிய விவரங்கள் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்டுள்ளது).

இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் அங்கு நடைபெற உள்ளது.

இலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது (சுமார் 8.77 டிரிலியன்). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% சதவீதம் கடனுக்கே போகிறது. அரசின் மொத்த நிர்வாகமும் கடனில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் அவதிகளின் சிக்கி இருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வலுவான எதிரியை (தமிழர்கள், விடுதலைப் புலிகள்) மையமிட்ட அரசியலை இலங்கையில் நடத்தினார்கள். இப்போது அவர்கள் இல்லாததினால் அவர்களுக்குள்ளே தான் சண்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். (கடந்த ஐந்து மாதங்களில் பிரதமர் பதவிக்கு ரனில் விக்கிரமசிங்கேவும், ராஜபக்சேவும் போட்ட சண்டை இதன் எடுத்துக்காட்டு) இலங்கையில் மக்களிடம் என்ன சொல்லி அரசியல் செய்வது என்ற சிக்கலில் இலங்கை அரசியல் தலைவர்கள் சிக்கியுள்ளார்கள்.

ஒரு அரசின் கட்டற்ற செயல்பாட்டுக்கு வலுவான எதிரி தேவை. அதை அந்த அரசு கண்டிப்பாக கட்டமைக்கும். இலங்கைக்கும் அது தேவையாக உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை உலக அரசியலின் முக்கிய இடம். எனவே அங்கு நிலையில்லாத, குழப்பமான, முடிவெடுக்கும் தன்மையில்லாத ஆட்சியை உலக ஆளும் அரசுகள் விரும்பாது. அதற்கு ஒரு இறுகிய அமைப்பு முறை இருந்தால் அவைகளின் வாய்ப்புகள் மிகச் சுலபமாக கிடைக்கும்.

இப்படி இருக்கும் சூழலில் தான் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது. இங்கே கவனிக்கப் படக்கூடிய விசயம் என்னவென்றால் இது இலங்கை அரசால் அல்லது இலங்கை அரசு ஆதரவோடு தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ முடியும் என்பதாகும். ஏன் என்றால் சீன உளவுத்துறை, அமெரிக்க உளவுத் துறை, இந்திய உளவுத்துறை, இலங்கை உளவுத்துறை திரியும் இடமாகக் கொழும்பு உள்ளது. எதுவும் தெரியாமலோ அல்லது தெரிந்து நடவடிக்கை எடுப்பதிற்குள் நடந்துவிட்டது (இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவான் விஜேவர்தன கூற்று) என்பதெல்லாம் அரசின் அன்றாடப் பொய்யாகத் தான் இருக்கும்.

இனி

தாக்குதல் நடந்து முடிந்த சில மணிநேரத்திலேயே இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் தாக்குதலுக்குக் காரணம் மத அடிப்படைவாதிகள் என்ற கருத்தைக் கூறியிருந்தார். இது கண்டிப்பாக பௌத்த மத அடிப்படைவாதிகளை மனதில் நினைத்துச் சொன்னது அல்ல.

சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தான் இதைச் செய்தார்கள் எனச் சிங்கள, தமிழ் வலைதளவாசிகள் அந்த சில மணிநேரத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர். இப்போது தேசிய தவ்கீத் ஜமாத் என்ற பெயர் கூறுகிறாரகள். ISIS அமைப்பும் இதற்கான உரிமை கோரியுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆக மொத்தமாக முஸ்லீம்கள் மட்டும் தான் இதன் மொத்த குத்தகைக்காரர்களாக அறிவிப்பார்கள்.(குறிப்பிட்டுப் பார்க்க வேண்டும், இதைச் செய்தவர்களை குறிப்பிட மாட்டார்கள். வெகுசன தளத்தில் முஸ்லீம்கள் தான் இதைச் செய்தார்கள் என கட்டமைப்பார்கள் )

இலங்கை அரசின் அடுத்த எதிரியாக முஸ்லீம்கள் கட்டமைக்கப் படுவார்கள். அவர்கள் மீதான அரசு ஒடுக்குமுறை இனிமேல் கட்டவிழ்த்து விடப்படும். இதை உலக நாடுகள் ஒப்புதலோடு செய்வார்கள். ஏன் என்றால் தாக்குதல் நடத்தப்பட்டது கிருத்துவ தேவாலயங்களின் மீதும், கிருத்தவர்கள் மீதும் என்பதினால் அவர்களுக்கு அது சுலபமாக இருக்கும்.

பயங்கரவாத சட்டத்தை முழு அளவில் அமுல்படுத்துவார்கள். 2009-க்கு முன்பிருந்த நிலைக்கு இலங்கையைக் கொண்டு வருவார்கள் (பத்திரிக்கை தணிக்கை நிலை வரை போவார்கள்).

ஒரு இறுகிய அரசுப் பொறிமுறை உருவாகும், போர்க் காலகட்டத்திலிருந்தது போல. இப்போதே போர்க்காலத்தில் இருந்ததைப் போல சந்தேகப்படுபவர்களை கைது செய்யவும், காவலில் வைக்கவும் இராணுவத்திற்கு அதிகாரம் கொடுத்துள்ளார்கள். (உள்நாட்டுப் போர் முடிந்ததும் இந்த அதிகாரம் திருப்பப் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது) அடிப்படைப் பிரச்சனைகளுக்காக கூட யாரும் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப இயலாது. தமிழர்கள் நடத்தும் 800-வது நாளை நோக்கிய காணாமல் போனவர்கள் போராட்டம் கூட இனி கஷ்டம். தமிழ் ஆளும் வர்க்கத்திற்கு வேண்டுமானால் இது சாதகமாக இருக்கலாம்.

முஸ்லீம் சமூகத்திலும் சரி, மற்ற சமூகங்களிலும் சரி கைது, காணாமல் போவது என்பது பழைய வழக்கமாக தொடரும். குறிப்பாகச் சொல்லப் போனால் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தை இனி இந்தியா போல் தீவிரவாதச் சமூகமாக கட்டமைப்பார்கள்.

இறந்தவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். இதைக் கொண்டு தமிழ் ஆளும் வர்க்கங்கள், தமிழ் வலதுசாரிக் குழுக்கள் தமிழ், முஸ்லீம் முரண்பாடுகளை இன்னும் கூர்மையாக்குவார்கள். தமிழ்ப் பகுதிகளில் தற்போது உருவாகிவரும் இந்துமயப் போக்கினால் இதனை தீவிரமாக முன்னெடுப்பார்கள்.

தேசியவாதத்தை வைத்து கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் போல் முஸ்லீம்கள் மீதும் கும்பல் வன்முறைகள் (Mob attacks) மிகச் சாதாரனமாக கட்டவிழ்த்து விடப்படும்.

முஸ்லீம் சமூகத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளால் தன்னை ஒரு விலக்கப்பட்ட சமூகமாக உணரும் வாய்ப்பு அதிகமாகும். அந்த சமூக இளைஞர்கள் இந்த காரணத்தைக் கொண்டு இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களுடன் இணையும் வாய்ப்புகள் அதிகமாகும்.

சிங்கள பொது சமூகத்தை மீண்டும் செயற்கையான பயத்திற்குள் ஆட்ப்படுத்துவார்கள். அதைப் பயன்படுத்தி அவர்களின் ஒப்புதளோடு இலங்கை அரசியலின் முக்கிய கருத்துநிலையாக முஸ்லீம் எதிர்ப்பு மாற்றப்படும். இதைக் கொண்டே சிங்களவர்களும் தங்களை ஆளும் வர்க்கம் சுரண்ட அனுமதிப்பார்கள்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் எல்லாம் இந்த குண்டு வெடிப்பில் சர்வதேச கவனத்தில் இருந்து விடைபெற்றுவிடும்.

பழையபடி இலங்கையை போரியல் பொருளாதார முறைக்குக் கொண்டு வருவார்கள்.

இலங்கையில் தேசிய வெறி தூண்டப்படும். அதை யாரால் அறுவடை செய்ய முடியுமோ அவர்கள் ஆட்சிப் பீடத்தை அலங்கரிப்பார்கள். ஒட்டுமொத்த இலங்கையின் பாதுகாப்பும் அவர்கள் கையில் கொடுக்கப்படும் என்ற போர்வையில் அனைத்து அதிகாரமும் ஒரு இடத்தில் குவிக்கப்படும்.

நாம் என்ன செய்வது

அரசியல் என்ற நிலையில் மிக கீழ்த்தரமான அரசியலை இலங்கை ஆளும் வர்க்கங்கள் முன்னெடுத்து வருகிறார்கள். இது மிக மோசமான நிலை. இந்த முறை உலகிற்கு ஒன்றும் புதிதில்லை. அமெரிக்கா ஆரம்பித்து இந்தியாவின் புல்வாமா தாக்குதல் வரை (இது புஸ்வானம் ஆனது) தொடரும் உலக வழக்கம். அதை அவர்கள் இலங்கைக்கு ஏற்றவாறு செய்யப் போகிறார்கள். இதில் சிங்கள, தமிழ் ஆளும் வர்க்கங்கள் கூட்டாக இருக்கும்.

இலங்கை இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் இந்த சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் இங்கே முக்கியமானது.

பெரும்பாலும் தேசிய எழுச்சி, நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாதத் தாக்குதல் என்றால் எதிர்ப்பு அரசியலை என அரசின் நிலைப்பாட்டோடு சேர்ந்து கண்டனத்தை, துக்கத்தைப் பதிவு செய்வது அல்லது அரசோடு சேர்ந்து நின்று எதிர்ப்பு பதிவு செய்வது இது தான் பெரும்பாலும் நடைமுறையாக உள்ளது.

தேசிய எழுச்சி, நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாதத் தாக்குதல் என்ற பதங்களை நாம் எதிர்கொண்டு அரசியல் முன்னெடுப்புகளை நகர்த்த இன்னும் கைக்கொள்ளவில்லை என்பது தான் எதார்த்தம். இனி அவைகளை எதிர்கொண்டு அரசியல் செய்ய வேண்டும். இன்றைய நவ காலனிய உலகில் இவைகளை எதிர்கொண்டு பழகினால் மட்டுமே அரசியலில் நிலைத்திருக்க முடியும்.

இவ்வாறான தாக்குதல்களை அரசு தரும் தகவல்களைக் கொண்டு அணுகக் கூடாது. நமதளவில் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறியமைவு ஒன்று உருவாக்கி, நடந்த சம்பவங்கள் பற்றிய சரியான தகவல்களை மக்கள் முன் கொண்டு வரவேண்டும். அவற்றைக் கொண்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை அரசின் விசாரணை நோக்கம் முழுக்க முழுக்க அதன் தேவையான 'முஸ்லீம்கள் செய்தது, தீவிரவாதம், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்' என்ற நோக்கத்தில் தான் இருக்கும். இம்மாதிரியான தாக்குதல் தொடர்பான உலக பாடமும் அது தான்.

தேசிய எழுச்சி, தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் நடத்தப்படும் நடவடிக்கைகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டுமானால், அதற்கான சரியான தகவல்களை நாம் கொண்டிருக்க வேண்டும். அரசு தரும் தகவல்களில் இருக்கும் ஓட்டைகளைக் கொண்டு மட்டும் அரசியல் பேசினால், அதற்கான லாஜிக் பதில்களும் பல பகுதிகளிலிருந்து வந்து குழப்பும். நாம் நமது சொந்தத் தரவுகளின் அடிப்படையில் இதை அணுக வேண்டும். உண்மையில் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.

இன்னும் முக்கியமாக இப்படியொரு மோசமான தாக்குதலை நடத்திய, நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த இலங்கை அரசை நேரடியாக கை காட்டி, இதை நடத்தியவர்கள் அவர்கள் தான் என்பதை மிகத் தெளிவாகக் கூற வேண்டும்.

தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களிடையே ஏற்படக்கூடிய முரண்களை மிகத் தெளிவாக ஆராய்ந்து செயல்பட வேண்டும். இனி நடைபெறக்கூடிய இனங்களிடையேயான முரண்களை எப்படித் தடுக்கப் போகிறோம் எனத் தெளிவான திட்டமிடலில் இது இருக்க வேண்டும். மக்களை அரசுக்கு எதிரான ஒரு மாற்று அரசியல் கட்டமைவுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும்.

போரியல் பொருளாதார முறை, பயங்கரவாதச் சட்ட முறை போன்ற இறுகிய அரசுமுறைச் செயல்பாடுகளை உறுதியாக எதிர்க்க வேண்டும்.

இறுகிய பொறியமைவை நோக்கிப் போகும் அரசை எதிர்த்துச் செயல்படுவது என்பது பெரும் சிக்கலாகத் தான் இருக்கும். ஆனால் இலங்கையில் வரலாறு அந்த வழியைத் தான் திறந்து வைத்துள்ளது. 

- அ.சி.விஜிதரன்