மாநாயக்கன் எனும் பெருஞ்செல்வரின் மகனான கோவலனுக்கும், மாசாத்துவனின் மகளுக்கும் ஊரே வியக்கும்படி திருமணம் நிகழ்கிறது. காலம் நகர்கிறது. இளவயதில், இளைஞர்கள் உலாவும் வீதியில் கோவலன் வருகின்றான். ஒரு பெண் இம்மாலை 1008 பொன் கழஞ்சு மதிப்புடையது. இதனை வாங்குபவர் மாதவிக்கு உரியவர் என கூறுகின்றாள். அவனும், விலைகொடுத்து வாங்கி மாதவியை அடைகிறான் எனில், அன்றைய சமூகச் சூழல் எப்படிப்பட்டது?

               ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழக் கூடிய கோவலன் 1008 – பொன் கழஞ்சு கொடுத்து அவளை அடைய முடியுமெனில் அச்சமூகச் சூழல் எத்தகையது? காப்பியத்தின் தலைவனாக வணிகரை நாம் நியமித்ததே வெற்றி என்றெல்லாம் கொண்டாடுகிறோம். இது ஒருபுறமிருக்க வணிகமாகவே அங்கு பெண்ணும் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறாளா? சமூகம் அதனை சட்டமாகவே பாவித்ததா? அல்லது கட்டாய விதியாக்கி இருந்ததா?

               தலைக்கோள் பட்டத்தைப் பெறுகின்ற அளவிற்கு தகுதிப் படைத்த மாதவி, ஆடல், பாடல், அழகு என எல்லா தகுதியையும், திறமையையும் உடைய மாதவிக்கு அரங்கேற்றம் முடிந்த பின்னர், அவள் புகழ் வெளிப்பட ‘தலைக்கோள்’ பட்டம் வழங்கப்படவும், அவளுக்கு மன்னன் அணிவிக்கும் மாலையை வாங்குபவனே அவனுக்கு உரியவன் என்கிற சூழல் எப்படிப்பட்டது? மாலையை வாங்கும் எவனும் மாதவிக்கு உரியவன் எனில், மாதவி குலத்துப் பெண்களின் நிலை என்ன? அவர்களுக்கான சமூகப் பழக்கவழக்கம் என்ன?

               அடுத்ததாக, ஒரு பெண்ணை விட்டுவிட்டு விலை கொடுத்து வாங்கப்பட்ட பெண்ணோடு தன் வாழ்க்கையை நகர்த்தி கொண்டு கண்ணகியை மொத்தமாக மறந்தானெனில், அவள் குடும்பத்தினர் முரண்பட்டு போய் ஏதேனும் கேட்கவேயில்லையா? அச்செய்திகள் மறைந்தே போய் விட்டதா? அல்லது கோவலன் செய்தது சரிதான் என அச்சமூகக் கட்டமைப்பு கண்டு கொள்ளவில்லையா?

               திருமணம் கண்ணகியோடு மகிழுதல் தொடங்கி, பின்னர் அனைத்துத் திறனும் உடைய தலைக்கோள் பட்டம் பெற்ற மாதவியை 1008 பொன் கழஞ்சு கொடுத்து வாங்கும் அளவிற்கு பெரும் பணக்காரன் கோவலன். மாதவியோடு இன்புற்றிருக்க, கண்ணகி துயருருகிறாள். பின்னர் வேறொரு ஆடவனை எண்ணி பாடல் பாடியதாக (கானல் வரி) எண்ணி மாதவியை விட்டு பிரிகிறான். அதன் பின்னர் கண்ணகி, கோவலன் கௌந்தியடிகளோடு புறஞ்சேரி பகுதிக்குச் சென்றதும், கௌசிகன் மூலம் மாதவியைப் பற்றி தெரிந்து கொண்டு கண்ணகியை மறந்து மாதவி மீது மோகம் கொண்டு பேசுவது என தந்தைவழிச் சமூகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த வணிககுல குடும்பத்தின் ஆண்களின் ஆதிக்க நிலையோடு கதை போக்கு நகர்கிறது.

               அது மட்டுமின்றி இறுதியாக கணவனை இழந்த பெண் துன்புற்று மதுரை நகரையே கொலுத்தியதாக சொல்லப்படும் செய்தி, கோவலன் இறந்ததைக் கேட்டு ‘மாதவி’ துன்புற்று இந்திர விழாவிற்கு செல்லாததும், மாதவி அவள் மகள் மணிமேகலை வேறு மதமே மாறி கணிகையர் குலத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது. ஆனாலும் ஆணாதிக்கத்தில் உதயகுமாரன் அவளை அடைய விரும்புவதென அவர்களின் கதை முழுவதும் பெண்மைக்கும், பெண்ணியத்திற்கும் இழைக்கப்படும் பாதிப்புகள். பெண்மைக்கெதிரான செயல்பாடுகளாய் முன் நிற்கிறது. இது அன்றைய சமூகத்தில் பெண்கள் வாழ்வுநிலைக்கான சாட்சிகளுள் ஒன்று.

               கற்பு ஒழுக்கக் கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டவளாய் கண்ணகி, கற்பு ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டவளாய் கருதப்படுகின்ற மாதவி, இருவருக்குமான முரண்கள் என்னென்ன? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். இரு பெண்கள் ஒருவர் மிகப்பெரிய மாசாத்துவான் எனும் வணிகனின் மகள். அவளுக்கு ஒத்த குலம், பொருளாதாரம் கொண்ட மாநாயக்கன் மகன் கோவலன். இருவருக்கும் சிறப்போடு திருமணம் நிகழ்கிறது.

               அதன் பின்னர் ‘மாதவி’க்கு அரங்கேற்றம் நிகழ்கிறது. மன்னர் அந்த அரங்கேற்றத்தைப் பார்க்கிறார். சிறந்த ஆடல், பாடல் என அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றதினால் “மாலை சூட்டி பட்டம் கொடுக்கிறான். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் பண்டைக் காலத்தில் வேத்தியல், பொதுவியல் எனும் இருவேறு கூத்துக்கள் இருந்துள்ளன. வேத்தியல் - மன்னர் காணும் நிகழ்வாகவும், பொதுவியல் - பிற மக்கள் காணும் நிகழ்வாகவும் இருந்துள்ளன.

               அப்படியெனில் அரங்கேற்றம் மூலம் வெற்றி பெற்ற மாதவி அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பதே நாம் காணும் செய்தி. அத்தகைய கணிகையர் குலப் பெண்கள் யார்? என ஆராய வேண்டியிருக்கின்றது. மேலும், அப்பெண்களை விலைகொடுத்து வாங்கும் சூழலை சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. திருமணம் செய்திருக்கின்ற ஆண் வேறொரு பெண்ணை விலைகொடுத்து வாங்கி தமது காம இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளும் பொருளாகவே மாறி இருப்பதை காண முடிகிறது.

சிலம்பில் மாதவி

               சிலம்பில் மிகச் சிறப்பான, ஆடல், பாடல், அழகுயென எவற்றிலும் குறைவிலாது விளங்கும் மாதவி, மணிமேகலையில் கணவனை இழந்ததால் தவ வாழ்வு வாழும் பெண்ணாக மாறிய சமூக சூழல் என்ன? அவள் மட்டுமின்றி, அவள் மகளான மணிமேகலையும் துறவறம் மேற்கொள்வதற்குரிய காரணி என்ன? சிலம்பில், 1008 பொன் கழஞ்சு கொடுத்து ‘மாதவியை’ அடையும் திருமணமான கோவலனின் நிலை என்ன? இச்சூழலை சமூகம் அங்கீகரித்ததா? அங்கீகரித்தது எனில், ஏன் அங்கீகரித்தது?

               கோவலன் வேறொரு பெண்ணின் கணவன், மாதவியோ அவன் விலை கொடுத்து வாங்கப்பட்டவள். இப்படியிருக்க, கோவலன் ஒரு பெண்ணை நினைத்து யாழை வாசிக்கின்றான் என்பது அறிந்து, பொய்யாக புனைந்து வேறொரு ஆடவனை எண்ணுவது போல பொய்யாக யாழினை வாசிக்க, வேறொரு ஆடவனை மாதவி நினைத்துவிட்டால் என, கோபம் கொண்டு அவளை விட்டுவிட்டு கண்ணகியை நோக்கி, வருவதன் சமூக பின்புலம் தான் என்ன? மாதவியின் மகள் துறவு கொண்ட பின்னரும் கூட உதயகுமரன் துரத்துவதன் சூழல் தான் என்ன? என பல கேள்விகள் எழுகின்றன நம்முன். ஆம், எல்லவாற்றிற்கும் காரணி உண்டு. அதனை பின்வரக் காண்போம்.

மாதவியின் தகுதி

               “பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை

               தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை

               ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்

               கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்

               ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில்

               சூழ்கழல் மன்னர்க்குக் காட்டல் வேண்டி

               இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து

               பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்

               பதினேர் ஆடலும் பாட்டும் கொட்டும்

               விழிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு” (சிலம்பு, அரங். 3 : 1 – 15)

என்ற பாடலில், “நடனம் ஆடுதல், பாடல் பாடுதல், தாளம் போடுதல் ஆகிய முறையில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் நடனம் செய்யும் போது நிகழ்த்தப்படும் முத்திரைகளான பிண்டி, பிணையம், எழிற்கை, தொழிற்கை ஆகிய ஞானம் கைவரப் பெற்றும், ஆடல் நிகழ்த்தும் போது இரட்டைக் கைகளைக் கொண்டு முத்திரை அமைத்தலும் மற்றும் வரிக்கூத்து, குரவைக் கூத்து ஆகியனவும் நடன அரங்கில் உள்ள ஆசிரியன் நன்கு அறிந்து வல்லமையுடையனாதல் வேண்டும். இத்தகைய ஆற்றலுடைய நடன ஆசான் மாதவியோடு அரங்கத்தில் வந்து ஏறினான்.” (சிலப்பதிகாரம், அ.ம. இராமவதனம், பக். 52) என்று அரங்கத்தில் ஏறுகின்ற போதே பல சிறப்போடு இருக்கின்றாள். ‘வேத்தியல்’ கூத்தில் அவையோர் பலர் இருக்க,

               “நாட்டிய நல்நூல் நன்கு கடைபிடித்து ஆடினள்” (சிலம்பு. அரங். பா. 158)

மாதவி கலையும், தலைக்கோள் பட்டமும்

               11 வகையான ஆடல்களான, 1. கொடுகொட்டி, 2. பாண்டரங்கம், 3. அல்லியம், 4. மல்லின் ஆடல், 5. துடி, 6. குடை, 7. குடம், 8. பேடி ஆடல், 9. மரக்கால் ஆடல், 10. பாவை, 11. கடையம் என்பனவாம். கடல் ஆடு காதையில் இப்பதினொரு வகையான நடனத்தை “இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்… அயிராணி மடந்தை ஆடிய கடையமும்” (சிலம்பு, கடலாடு : 2 : 43 – 63) என்ற அடிகளில் மாதவியின் நடனச் சிறப்பை ஆசிரியர் அழகுற பதிவு செய்கின்றார்.

               மாதவி நடனம் புரிந்த பின்னர் தலைக்கோல் பட்டம் வழங்கப்படுகின்றது. அத்தலைக்கோலுக்கே தனி தகுதி கூறப்படுகின்றது.

               “தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி

               விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு

               ஒரு முறையாகப் பெற்றனள்…” (சிலம்பு. அரங். 161 – 163)

என்று தொடர்கின்றது பாடல் அடிகள். அதாவது,

               “அரசனிடமிருந்து அருமையுடைய பசும்பொன் மாலையை பரிசாக மாதவி பெற்றனள். அதன் மதிப்பு ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் ஆகும். இம்மாலையை ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் கொடுத்து வாங்கி மாதவிக்கு அணிபவர், அவளுக்கு உரிய மணாளன் ஆவார் எனச் சாற்றி ஒரு கூனியின் வாயிலாகக் கொடுத்தனுப்பினர். அக்கூனி இளைஞர்கள் நடமாடும் தெருவிலியே சென்று விலை கூறினாள். கோவலன் அப்பொன் மாலையை வாங்கி கூனியின் பின்னே சென்று மாதவியின் மனையை நண்ணி அவளுக்கு அணிவித்தான். பின்னர் அவளிடமிருந்து நீங்காதவனாய் மயக்கம் கொண்டு அயர்ந்தனன். அத்தகைய மயக்கத்திலிருந்து விடுபடாதவனாய்க் குற்றப் பாங்கு சிறிதும் இல்லாது சிறப்பின் மிக்கவளாய்த் திகழும் கண்ணகியை மறந்தனன்.” (சிலம்பு. வ.த. இராமசுப்பிரமணியம், பக். 64).

               தலைக்கோல் என்பது பிற மன்னர்களை வெற்றிக் கொண்டு, அவர்களிடம் பறிக்கப்பட்ட வெண்கொற்றக்குடையை நவமணிகளால் அழகுபடுத்தி அரசி வீதியில் முரசு பிற வாத்தியங்கள் முழங்க அதனை காட்டி உலாவந்த பின்பே ஆடல் அரங்கின் மேடையில் வைப்பராம். அத்தகு சிறப்பு மிகுந்த பரிசை பெறுபவள் மாதவி. தலைமகனாய் இருக்கக் கூடியவன் மனைவியுடன் வாழ்வது மட்டுமன்றி, பல காலம் பரத்தையோடு வாழ்ந்த நிலையை அறிய முடிகிறது. பரத்தையர் எவரும் திருமணம் செய்து கொள்வதேயில்லை. மாறாக, வாழ்நாள் முழுவதும் ஒருவனையே சார்ந்து வாழ்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் மனைவிக்குரிய இடத்தில் வைக்கப்படவில்லை. இழிவாகவும், தாழ்வானவர்களாகவும் கருதப்பட்டனர் என்பதை தெளிவாக அறிகின்றோம்.

               “கோவலனைச் சார்ந்து வாழ்ந்திருந்த மாதவியைப் பற்றி சிலம்பும் மேகலையும் விளக்குகின்றன. சங்க கால இலக்கியங்களில் ஆண்களின் பாலியல் நுகர்வுகள் பெருமளவில் இருந்தன என்பதை அறியலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது இலக்கியங்களில் மட்டுமே வலியுறுத்தப்பட்டது.”

                                                                           (தொல். தமிழர் வரலாறு, ம.சோ. விக்டர். பக். 65)

என்ற கருத்தும் பண்டை சமூகச் சூழலை வெளிக் கொணர்கின்றது.

               சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் கூட, தன் ஆட்சியை விரிவுபடுத்தும் நோக்கிலும், பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு எதிரியை வீழ்த்தியும், நாட்டைக் கைப்பற்றுதலுக்கும் மன்னர்கள் பல திருமணங்களை செய்து கொண்டு வாழ்ந்தனர். இதனை தேவநேயப் பாவாணர், “பண்டையரசரும் பெருஞ்செல்வமும் பெரும்பாலும் சிற்றின்பவுணர்ச்சி சிறந்து, பல தேவியரையும் காமக்கிழத்தி, இற்பரத்தை, காதற்பரத்தை முதலியோரையும் கொண்டிருந்தமையால் ஓருயிரும், ஈருடலுமான இருதலைக் காம இன்ப வாழ்க்கை, பூதப்பாண்டியனும் அவன் தேவியும் போன்ற ஒருசில அரசக் குடும்பங்களிடையும், உழவரும் இடையரும் போன்ற பொதுமக்களிடையும், புல மக்களிடையும் தாம் பெரும்பாலும் இருந்து வந்தது.”       (பண்டைத் தமிழர் நாகரீகமும், பண்பாடும், தேவநேயர், பக். 74)

               இது அடிப்படையில் மிகப் பெரிய சமூகச் சிக்கலை உருவாக்கியிருக்கின்றது. மாதவி மறுப்பதற்கு புறச்சூழலும், மதமும் அடிப்படைக் காரணமாயிருந்துள்ளது. ஏனெனில் அவள் கணிகையர் குலத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள போராடியிருக்கின்றாள். தனது மகளும் அத்தொழிலில் ஈடுபட்டுவிடக் கூடாது என போராடியிருக்கின்றாள். அதன் விளைவே மணிமேகலை காப்பியம்.              

             தூய்மையாய் ஒருவனோடு வாழ்ந்த புரட்சிப் பெண்மணியாய் கணிகையர் குல தேவதை பரிணமித்திருக்கின்றாள்.

             கணிகையர் குல செயல்கள் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கின்றன. அதனை எதிர்த்து பெரும் போராட்டத்தையே நிகழ்த்தியிருக்கின்றாள்.

             இதன் விளைவே திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களுள் பரத்தமை எதிர்ப்பு என்கிற கருத்துக்கள் வலம் வந்துள்ளன.

             சங்க காலம் அதை சரியென்றது. சங்க மருவிய காலம் அதை தவறென்றது. மாதவி போன்றோரால் அவ்வாழ்வு தவறென சுட்டப்பட்டது.

             அதன் விளைவால் தன் மகள் ‘மணிமேகலை’யை திருமணம் செய்வித்து விரும்பாமையும், மன்னனிடத்து உறவைத் தவிர்த்தல் சூழலும் நிகழ்ந்திருக்கிறது.

             ஆணாதிக்கத்தின் உச்சமோ? அன்பின் உச்சமோ? எனினும் தேடித்தேடி அலைந்தாலும் உதயகுமரன் அவளை அடையவில்லை. இல்லை அவள் இவனை விரும்பவேயில்லை. அக்கதையில் உதயகுமரன் மீது மோகம் கொள்கின்ற சூழலும் நிகழ்கின்றது. எனினும் ‘மதத்திற்குள் அகப்பட்டு சிக்குண்டு கிடக்கிறாள். அச்சிக்கலுக்கு காரணம் அவள் இனம் ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்ததே ஆகும்.

             ஆக, ‘இல்லறம்’ என்ற நிலையையும் கடந்து, இல்லறம் எனும் ஆண், பெண் உறவுக்குள் சிக்கலை உருவாக்கியவர்களாகவே கணிகையர் இருந்துள்ளனர். பொருள் பெற்று கொண்ட நிலையில் அவர் வாழ்வு இருந்த பொழுதும், மனிதத் தன்மையோடு அவர்கள் பார்க்கப்படவேயில்லை. பண்டைய ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட சிலர் பெண்களை பொருளாகவே பாவித்து, அதனை நடைமுறைப்படுத்தியும் இருந்தனர்.

             “விலைபேசி பெறக் கூடியவளாய் பெண்களுள் சிலர் நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

             அவர்களை அக்குடும்பத்தினரே பலவந்தப்படுத்தியுள்ளனர்.

             அவர்கள் கோயில்களில் ஆடல், பாடல்களில் பங்கு பெறுபவர்களாக வாழ்ந்திருக்கின்ற வரலாறும் சிலப்பதிகாரத்தில் தெரிய வருகிறது.

             குறிப்பாக மாதவியை திருமணத்திற்குப் பின்னரும் இந்திர விழாவில் ஆட அழைத்த நிகழ்வும், அவள் அச்சமூகத்திற்கு எதிராக மறுத்த நிகழ்வும் மணிமேகலை காப்பியத்துள் வெளிப்படுகிறது.

- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306